இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 மார்ச், 2019

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை






தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்றிலும் சோழர்கள் சிறந்து விளங்கினர். அவற்றை ஆவணப்படுத்தவும் செய்தனர். அதனாலேயே பிற்காலச்சோழர்களின் வரலாற்றை நம்மால் விரிவாக கட்டமைக்க முடிகிறது. சோழர்களின் வீரம்,அரசியல் இவை சார்ந்து பல புதினங்களும்  வெளிவந்து உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றோடு சுவாரஸ்யமான சம்பவங்களைப் புனைந்து வாசகரின் கவனத்தை ஈர்ப்பவை.
வரலாறு என்பதே சம்பவங்களின் தொகுப்பு தானே. ஆனால் நல்ல இலக்கியம் சம்பவங்களைப் பார்ப்பதில்லை. அவை நிகழ்ந்த அல்லது நிகழ்த்திய மனிதர்களைத் தான் தேடும். ஒரு பெருங்கோவிலைக் கட்டியவனின் பெயரை வரலாறு பதிவு செய்யும். ஆனால் இலக்கியமோ அப்பெருங்கோவிலை கட்டியவனின் மனதில் அன்று சுழித்தோடிய கவலைகள் ,உவகைகள், ஐயங்கள் இவற்றைப் பதிவு செய்யும்.
கோவிலைக் கட்டியவன் என்றால் மன்னனை மட்டுமல்ல, உளி தட்டிய சிற்பியையும்,சிற்பமாய் உறைந்த ஆடல் நங்கையையும் சேர்த்து தான்.
கங்காபுரம் புதினம் ,அவ்வாறே சோழமன்னன் ராஜேந்திரனின் அகவெளியை பதிவு செய்ய முயல்கிறது. தனிமையும், வெறுமையும்,கைவிடப்படலும் சாமானியனைப் போலவே மாமன்னனையும் அலைக்கழிக்கும் என அது நினைவுறுத்துகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சில வருடங்கள் முன் நான் சென்ற போது எனக்கு முதலில் தோன்றியது இது தான்..”ஏன்?” தஞ்சையைப் போல ஏன்? சற்று சிறியதாய் ஏன்?   இன்னொரு தலைநகரம் ஏன்? தஞ்சை போல இங்கு பெருநகரம் இல்லையே ஏன்? தஞ்சைக்கு ஈடாயும் அதை விஞ்சும் சிற்பங்களையும் பாராட்ட மக்கள் இல்லையே ஏன்?

இது போல நூராயிரம் கேள்விகள் அந்த மாமன்னனின் மனதிலும் தனைமையில் ஓடியிருக்கும். ”தஞ்சையைப் போல” “தந்தையன்ன” என்று உவம உருபுகள் அவனைக் குத்திக் கிழித்திருக்கும். அந்தக் கேள்விகளையும், வலியையும் தான் ஆ.வெண்ணிலா தன் புதினத்தில் நம் முன் வைக்கிறார்.
நாம் மனதில் பெரும் பிம்பமாய் நினைக்கும் எவரையும் சராசரித் தளத்தில் வைத்து பொருத்திப் பார்ப்பதில்லை. பிம்பங்களை வழிபடுகிறோம், எதிர்க்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம்.  ஆனால் பிம்பங்களும் மனிதர்கள் என்பதை மறந்து விடுகிறோம். ஆயிரம் சிடுக்குகள் கொண்ட அவர்கள் மனத்தில் நுழைந்து அம்மனத்தை புரிந்து,அங்கீகரிக்க சராசரி மனம் அல்ல கவி மனம் வேண்டும். கங்காபுரத்தில், ஆயிரம் ஆண்டுகளாய் அலைக்கழியும் ஆற்றாமையை எழுத்தில் வடிக்கிறார் வெண்ணிலா. காலத்தின் துகள்களாய் அந்த அகத்தனிமை நம் மேல் மோதுகிறது.
இரு பெரும் சோழமன்னர்கள்,தந்தை மகனாய் எதிர் எதிரே நிற்கிறார்கள். ராஜராஜன் தன்னை ஒரு பீடத்தில் ஏற்றி கீழ்நோக்கிப் பார்க்கிறான். மதுராந்தகனோ பீடம் விட்டு இறங்கி பார்வையை சமமாக்குகிறான். மக்களின் மன்னனாக தன்னை அறிய விழைகிறான். விழைவதெல்லாம் அரசன் என்றாலும் கைக்கொண்டு விடுமா என்ன? தாமதமாய்  வந்த அரியணை யை  அவன் கடமையாய் ஏற்கிறான். கடமை மட்டுமே எஞ்சினால் உட்புகும் வெறுமை என்பது காதலும்,கலையும் வெற்றியும் போட்டுக் கொட்டினாலும் நிரம்பாத வெறுமை. “தந்தையைப் போல” என்ற அடைமொழி பெய்கீர்த்தியாய் அவன் சிதை வரை சுடுகிறது.

சதுரத்தடிகளாய்   நாவலின் இறுதியில் ஊழ் பேசுகிறது..

“தகுதி இருந்தாலும் சிலருக்கு புகழ் வளராது. அந்தப் புகழில் பங்கெடுக்க யார் யாரோ வருவார்கள். நீ அப்படியொரு துயரத்தின் அடையாளம்..
நீ தப்பித்துக் கொள்ள தலைநகர் மாற்றலாம்,கோயில் கட்டலாம், கங்கையைக் கொண்டு வந்து புனித ஏரி வெட்டலாம். ஆனால் எதுவும் உன் துயர் போக்காது” 

கங்காபுரத்தின் ஒவ்வொரு பக்கமும் இந்த இறுதி வார்த்தைகளை நோக்கித்தான் நகர்கின்றது. வரலாற்று புதினம், ஒரு ஒற்றைப் புள்ளியை நோக்கிக் குவிதல் அத்தனை எளிதல்ல. 



விலகல்களும் உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. சில இடங்களில் வரலாற்றுத் தரவுகளை முன் வைப்பதற்காகவே உரையாடல்களும், சம்பவங்களும் நிகழ்வது போலத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. அதே போல ஆசிரியர் சோழர்கள் மீது வழிபாட்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு பிரமிப்பு மனநிலையில் இருப்பதாய் உணர்ந்தேன். படைப்புக்கு வெளியே அந்த மனநிலை சரி. படைப்பினுள் அது சமநிலையில் விலகல் ஏற்படுத்தும்.  சதுரத்தடிகளின் கட்டுடைக்கும் வார்த்தைகள், வீரமாதேவி போன்றோர் அவ்வப்போது முன்வைக்கும் கூரான விமர்சனங்கள் இவையனைத்தையும் தாண்டி அந்த சமநிலை விலகலை உணர முடிகிறது.

 மற்றொன்று,நாவலில் பெண்களின் பங்கு,மன்னனின் பிம்பத்தை/மன அமைப்பை கட்டியெழுப்பதற்காகவே இருப்பதாய் தோன்றுகிறது. நாவலின் குவிமையம் வேறாய் இருக்கும் போது இதை குறையாய் முன் வைக்க இயலாது. வைக்கவும் முடியாது. என் தனிப்பட்ட ஆதங்கமாய் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

எது எப்படியென்றாலும், புறமல்ல வரலாற்றை செதுக்குவது,அகம் தான் அதை நெய்கிறது என அழுத்தமாய் பதிவு செய்யும் கங்காபுரம் தமிழின் முக்கியமான படைப்பு. 

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இரவுக்கு ஆயிரம் கண்கள்-- ( எஸ்.ராமகிருஷ்ணனின் - யாமம் )

”கிராமத்தில் உள்ள வீடுகளில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் சுடர்கள் இரவில் மக்கள் உறங்க துவங்கிய பிறகு யாவும் தனியே ஒரு இடத்தில் ஒன்று கூடுகின்றன ..அவை அந்தந்த வீட்டில் வாழும் மனிதர்களின் அன்றாட செயல்களை ,கோபதாபங்களை பகிர்ந்து கொண்டுவிட்டு இருட்டில் மறைந்துவிடுகின்றன ”எஸ்.ரா யாமம் முன்னுரையில்

எஸ். ராவின் யாமம் நாவல் குறித்து படித்தது முதலே எழுத வேண்டும் என்ற எண்ணம். இப்போது தான் எழுதுகிறேன்.

தமிழின் இந்த தலைமுறை முதன்மை படைப்பாளியாக நான் கருதும் எஸ்.ராவின் சமீபத்திய நாவல் யாமம் (2007).

யாமம் என்பது மிக ரகசியமான பொழுது. எஸ்.ரா கூறுவது போல மனிதன் தூங்கும் வேளையில் தான் அவனது கதைகள் வெளியே அலைகின்றன. மனிதர்கள் எல்லாருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். நறுமணம் போல காற்றில் கலைவது தான் மனிதர்கள் வாழ்க்கையும்.
 
இரவின் சுகந்தத்தை அத்தராக வடிக்க கற்ற ஒரு வம்சாவளி. ஒரு சுஃபி ஞானியின் அருளுடன் அவர்கள் வழி வழியாக இத்தொழிலை செய்து வருகிறார்கள். இந்த அத்தரின் பெயர் ‘யாமம்’.

மதராப்பட்டிணத்தின் சரித்திர பிண்ணனியுடன் ஆரம்பிக்கும் நாவல், அந்த நகரத்தின் சின்ன சின்ன சந்துகளான  கதைகளில் அலைகிறது. (நகரம் சுமக்கும் கதைகள் மீது எஸ்.ராவிற்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு) . பின்னிப் பிணையும் இந்த கதைகளில் மைய சரடு, எல்லா பேரிலக்கியங்களும் வியக்கும் பெரு மானுடத்தின் ஒட்டு மொத்த இயக்கம் குறித்த அளவிலா வியப்பும், அந்த சமுத்திரத்தின்  ஆர்பரிக்கும் அலைகள் மீண்டு சமுத்திரத்திற்க்கே சென்று விடுவதும் பின் மீண்டும்  வேறொரு நீர்த் தொகுப்பாகி பிரிதொரு அலையாகி விடுவதும் என முடிவில்லாமல் சுழலும் ஒரு அமைப்பை காட்சிப்படுத்த முயலுவதும் தான்.

அத்தர் தயாரிக்கும் கரீம் சூதில் நாட்டம் கொண்டு வீடு விட்டு வெளியேறுகிறான்.  அவனது மனைவிகள் அவனில்லாமல் வாழ்க்கையை தனித்து ஓட்ட, கடைசியில் வாழ்க்கையின் அழுத்தும் சுமையை இறக்க முடியாமல் அவர்கள் தத்தம் வழியில் பிரிந்து செல்கிறார்கள்.  கரீமின் மூன்றாம் மனைவி வெறுமனே காலத்தின் பழைய நினைவுகளுடன் அந்த இடிபாடான  அத்தர் தயாரிப்பு சாலையை பிரயோஜனமற்றுப் பார்க்கிறாள் . பரம்பரை பரம்பரையாக இரவின் சுகந்தத்தை வடித்தவர்கள் சுவடில்லாமல் காற்றில் கரைகிறார்கள்.

பத்ரகிரி-விசாலம் குடும்பம்; அவனது தம்பி திருச்சிற்றம்பலம்- மனைவி தையல். திருசிற்றம்பலம் படிப்பிற்க்காக லண்டன் செல்கிறான். தம்பிக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பத்ரகிரி மெல்ல தையலிடம் விருப்பம் கொள்கிறான். இருவருக்கும் நிகழும் காமத்தின் பரிமளம் தையலின் நோயால் மெல்ல மறைகிறது.
லண்டன் செல்லும் சிற்றம்பலத்தின் தோழன் சற்குணம் லண்டனை போகத்த்டன் சுகிக்க வருகிறான். போகத்தை முழுமையாய் சுகிக்கும் அவன் லண்டனின் மற்றொரு பக்கம் தெரியும் போது அதை முழுமையாய் வெறுத்து அந்த மாநகரத்திற்க்கு எதிராய் ஒற்றையாய் சீறுகிறான்.

திருசிற்றம்பலம் தன் படிப்பை முடித்து கணித யந்திர கண்டுபிடிப்பிற்க்கான சாதனையின் பெருமையுடன் ஊர் திரும்பும் போது அவன் முகத்தில் அறைவது சிதறுண்ட அவன் குடும்ப நிலை.

தன்  பங்கு சொத்திற்க்காக  கோர்ட்டிற்க்கு அலையும் கிருஷ்ணப்பா , எலிசபெத் என்னும் ஆங்கிலோ-இந்திய பெண்ணின் மீது உள்ள காமத்தால் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். ஒரு சுயநல ஒப்பந்தமாக ஆரம்பிக்கும் அவர்கள் உறவு அவர்கள் வாழும் மலையின் அமைதியில் மெல்ல ஆழம் கூடிக் கொள்கிறது. வாழ்க்கையின் அர்த்தம் அதன் எளிமையில் உள்ளது என ஏதோ ஒரு கணத்தில் உணரும் கிருஷ்ணப்பா தன் சொத்துக்களை புறந்தள்ளி மலையில் தன் பிரிய எலிசபெத்துடம் வாழ்கிறார். மலையின் தேயிலை தோடத்தில் வருமானம் வருகிறது. எலிசபெத் லண்டன் பார்த்து வர ஆசைப்படுகிறாள். திரும்பி வந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவளை அனுப்பி வைக்கிறார். அவளும் அதற்க்கு உட்பட்டே செல்கிறாள். ஆனால் அவர்களது மலை விரைவில் தேயிலை வியாபரிகளின் விளைநிலமாகிவிடும் என குறிப்புடன் இந்த கதையும் முடிவுக்கு வருகிறது.

எல்லாக் கதைகளுமே கால நதி அடித்து செல்லும் திசையெல்லாம் முட்டி மோதி பின் எங்கோ யாரும் யூகிக்கா மூலையில் கரை ஒதுங்குகின்றன.
நாவல் முடியும் போது வாழ்க்கை குறித்த நம்பிக்கை தோன்றுவதில்லை. அதன் அர்த்தமின்மை குறித்த அபத்தமே தொங்கிக் கொண்டிருக்கிறது. அலையும் வாழ்க்கையின் அகத்தைஒன்றோடு ஒன்று முட்டி மோதும்  புறவயமான நிகழ்வுகள் கட்டமைக்கிறதா அல்லது புறத்தே நிகழும் சம்பவங்களும் சரித்திரமும் அகத்தின் எண்ணிலடங்கா உள்மடிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறதா  எனும் பதிலற்ற கேள்வியின் அனுபவத்தை தன் ஒவ்வொரு பக்கத்திலும் கொண்டிருக்கிறது யாமம் நாவல்.
ஆனாலும்  என் அனுபவத்தில் சில இடறுகளும் உண்டு. எஸ்.ராவின் நெடுங்குருதியில் வெயிலின் தகிப்பை உணர்ந்தது போல இன்நாவலில் இர்வின் ரகசியம் ஒரு படிமமாக என்னை எல்லாக் கணத்திலும் பின் தொடரவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாய யதார்த்ததிற்க்குள் (magical realism) புகுந்து விடக்கூடிய பரப்பு கொண்ட நாவல்.; ஆனாலும் சுஃபி ஞானியின் பகுதிகளில் மட்டுமே கொஞ்சமாய் சென்று விட்டு மீண்டுவிடுகிறது. இது படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும் இத்தனை விரிவான நாவலின் பரப்பு  மேலும் அகழப்பட்டிருக்கும் என்பது என் ஆதங்கம். பின் அந்த பண்டாரத்தின் கதை. சட்டென ஜெமோவின் நாவலுக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு. கதையின் மைய சரடு சராசரிகள் வாழ்க்கையின் கூட்டியக்கமாக இருக்கும் போது சதாசிவப் பண்டாரம் ஒரு விடுபடல் (exception)  போல வருகிறார். எஸ்.ரா ஆரம்பத்தில் ‘இந்தியாவில் சாமியாராகாமல் இருந்தால் தான் அதிசயம்’ என்று பண்டார வாழ்க்கையும் சம்சார வாழ்க்கை போல சமூகத்தின் ஒரு கூறே என குறிப்புணர்த்தினாலும் எனக்கு இக்கதை ஒட்டாமலே போகிறது கடைசிவரை.
மேலும் எஸ்.ராவின் படிமங்களும் உருவகங்களும் ஒரு வித மாதிரித்தன்மையை (template) பெற்றுவிட்டனவோ எனத் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.
குறைகளாகத் தோன்றிய இவை எல்லாமே நாவல் தரும் ஒரு முழு அனுபவத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் போகின்றன. தமிழின் முக்கிய நாவல்களுல் ஒன்றாக சொல்லக்கூடிய யாமம் இலக்கியத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது.

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...