புதன், 25 செப்டம்பர், 2019

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)



தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள்.
பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் திரைப்படம் பார்த்திருந்த அயர்ச்சி அல்லது எரிச்சலில் இது நாள் வரை அப்படைப்பை தவிர்த்து வந்தேன்.
சில மாதங்கள் முன்பு தான் எடுத்து படித்து முடித்தேன்.
படித்து முடித்த பின்பு அதன் தித்திப்பில் மூழ்கித் திளைத்தேன். கிட்டத்தட்ட அதுவரை நான் ரசித்திராத ஒரு நடை தி.ஜா வுடையது. போதை தரும் நடை அவருடையது.ஆனால் படிக்கும் போதே ஒரு குழப்பம் இருந்தது. நாவலின் ஆரம்பத்தில் வரும் பாபுவின் நண்பன் ராஜமின் பெண்கள் குறித்த கண்ணோட்டம் எனக்கு உவப்பாய் இல்லை. பின் இறுதியில் பாபுவிற்கு தன்னைத் தரும் யமுனா ( !) அதுவும் நெருடியது. நாவலின் கண்ணியம் குறையாத அழகியல் இந்த நெருடலை தவிர்க்க வைத்தது. நான் இது போல இரட்டை நிலை தரும் படைப்புகளை சற்று கவனமாக அணுகுவேன். அதனாலேயே நாவல் குறித்த என் விமர்சனத்தை எனக்குள்ளே மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்தேன்.
சமூக வலை விவாதத்தில் என் அலுவலக தோழி ஒருவர் மோகமுள்ளை முன்வைத்து தமிழ் இலக்கியமே பெண்களை , முதிர்வின்றி அணுகுவதாய் தோன்றுகிறது என்றார். சுருக் என்றது. எனக்கு தெரிந்த வரையில் நான் பதில் தந்தாலும் அது ஆராயப்பட வேண்டிய ஒன்று தான் எனத் தோன்றுகிறது. குறைந்த பட்சம் மோகமுள்ளில் அவரது கூற்று உண்மையே எனவும் படுகிறது
மோகமுள்ளின் அடிநாதம் பாபுவின் ஊமைக்காமம். நாவலே இந்த பெண் உடல் சார்ந்த ஊமைக்காமத்தை புனிதப்படுத்துகிறது.  காமத்தின் படியில் ஏறியே பக்தியை தொட முடிகிறது என்னால் என்கிறான் பாபு . பெண் மோகத்தில் திளைக்கும் ராஜம் தன் அனுபவத்தால்   பெண்ணை தெய்வத்தன்மையோடு பார்க்கத் தொடங்குகிறான். யமுனா பாபுவிற்காக தன்னை தந்து அவனிடம் உயிரற்ற தன்னை அவனது காதல்/காமத்தால் உயிர்ப்பிக்க முடியுமா பாரேன் என்கிறாள். காமத்தை எப்படி அணுகுவது என்று தெரியாத ஒரு முதிரா ஆணின் குழம்பிய மனநிலையே நாவல் முழுதும் தெரிகிறது. பெண்ணை காமத்தின் பருவடிவமாய் அல்லது தெய்வீகமா அல்லது அந்த படிகளில் ஏறும் கருவியா அவள் எனும் குழப்பம். பெண்ணை சக மனுஷியாய் பார்க்காமல் ஒரு குறிக்கோளாக அல்லது அதற்கான கருவியாகவே தி.ஜா முன்னிறுத்துகிறார்.  பல இடங்களில் காமத்தின் நுண்தளங்களை நிறுவ மறுக்கிறார். யமுனாவின் பார்வையில் அது நிகழ்வதே இல்லை. தங்கம்ம்மாவின் மன அலைகழிப்பும் ஒரு கட்டத்தில் முடிந்து பாபுவின் தன்னிரக்கத்திற்கான தூண்டுதலுக்காக பிர்யோஜனப்படுகிறது.
அடைத்து வைக்கப்பட்ட மனதின் அதி உணர்ச்சி மயக்க நிலை அக்கால தமிழ் குடும்ப சூழல் இறுக்கத்தாலும் இருக்கலாம். இலக்கியம் மன இருளையும் அலைச்சலையும் இதில் சமூகத்தின் பங்கையும் கீறி வெளளிப்படுத்த வேண்டும் (ஜி . நாகராஜன் படைப்புகள் அனேகம் அதைத்தான் செய்கிறது).ஆனால் மோகமுள் கீறாமல் அதன் போக்கிலேயே போகிறது. அதுவும் கூட நுண் தளங்களை அதிகமும் தொடாமல் மேலோட்டமாக.
இன்னும் எளிமையாய் சொன்னால் குழம்பிய குட்டையில் இருந்து மீன் பிடிக்காமல் குழம்பிய குட்டையாய் மட்டுமே இருப்பதாக ஐயப்படுகிறேன்.

1 கருத்து:

  1. பாபுவின் காமமும் அவனது சித்தாந்தமும் ஏதோ புதியவிடயங்களாக நாவலில் காட்டப்பட்டாலும், இளமைத்தாகத்தாலும், விரகத்தாலும் உந்தப்பட்டு பாபுவை உறவுக்கு அழைக்கும் பெண்ணை உந்தி அப்பால்த் தள்ளிவிட்டு ஜமுனாவிடம் மட்டும் தன் காமத்துக்கான சாந்திகிடைக்குமென ஒருவன் நம்புவானெனின் அது absolute Utopianism அன்றி வேறென்ன? இந்நாவலை ஒரு வேளை ஜி.நாகராஜன் எழுத நேர்ந்திருந்தால் வேறுவிதமான treatment ஐக் கொடுத்திருப்பார்

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...