சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எங்கள் நூல்களை எரியுங்கள்




(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) 

எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படுகிறது. பேசுபவர்களின் நாக்கு, எழுதுபவனின் கை, எழுதிய பக்கங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.
நிறம், மொழி, இனம்,கலாசாரம்,மதம் என எதேதோ சொல்லி அடக்குமுறை நிகழும் போதெல்லாம் அமைதியாய் அடி வாங்கும் ஊமை சனம் பின் காலத்தின் மற்றுமொரு புள்ளியில் மெல்ல சேர்ந்து திரண்டு, பிரவாகமாகி, பதிலடி தருகிறது.  நாக்குகளும் கைகளும் பக்கங்களும் வெட்ட வெட்ட குறையாமல் பெருகிப் பெருகி வெட்டுபவனை விழுங்குகின்றன.
இதை  சரித்திரம் மீண்டும் மீண்டும் நமக்கு சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.

எரிந்த புத்தகங்களின் பக்கங்கள் சாம்பலாகிவிடுவதில்லை. அவை மீண்டும் வேறு வேறு  உருக் கொள்ளவே செய்யும். எழுத்திற்க்கு எழுத்தாளன் வெறும் கருவி. மானுடத்தின் சிந்தனையை ஓரிரு பக்கங்களை எரிப்பதாலோ அல்லது சில கைகளை துண்டிப்பதாலோ நிறுத்திவிட முடியாது.


இந்த யுகம் தொழில்நுட்ப யுகம். சிந்தனைகள் பைட்டுகளாக மாறிய பின் எதை அழிப்பது? சிந்தனைகள் தரவாக மாறிவிட்டபின் அழிவற்ற வடிவம் கொண்டு
நிலைபெறுகிறது. எனது 500 ஜி.பி டிஸ்க்கில் வெறும் அவதார் படமும், எந்திரன் பாடல்களும் மட்டும் தானா இருக்கின்றன?
அதில்
சைபீரிய சிறையில் தாஸ்தவெஸ்கி இருக்கிறான்
நெரூடாவின் ரத்தம் தோய்ந்த வரிகள் இருக்கின்றன
உ.சேரனின் யுத்த ஓலமிடும் கவிதைகள் இருக்கின்றன
ஷோபா சக்தி ‘ம்’ மிடுகிறான்
காந்தி அம்பேத்கர் உரசல்கள் இருக்கின்றன
அ.ராயின் நக்சலைட் கட்டுரை அவுட்லுக்கிலிருந்து இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது

எனது டிஸ்க்கிலிருந்து என் நண்பன் டிஸ்கிற்கு செல்லும்; அங்கிருந்து ஃபேஸ்புக் செல்லும்; ட்விட்டர் செல்லும்  அங்கிருந்து கன்னியாகுமரியும் செல்லலாம்; அண்டார்டிக்காவும் செல்லலாம்.
இனி எழுதும் கைகள், பேசும் வார்தைகள், அச்சிடும் மை எல்லாம் தரவாகும் (Data) .
தரவு எல்லாரிடமும் பேசும். ஆயிரம் வருடம் தாண்டி எரிந்த நூலகங்கள் பற்றியும் சிதைந்த மக்கள் பற்றியும்..

ஆதலால் வலியவர்களே
தாராளமாய் எங்கள் நூல்களை எரியுங்கள்.

(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) 

புதன், 22 செப்டம்பர், 2010

கமலஹாசன் என்றொரு கலைஞன் இருந்தான்.



கமலின் திரைப்படங்கள் பல உலக திரைப்படங்களின் தழுவல் என சாடும் பதிவை பார்த்தேன் (http://www.karundhel.com/2010/09/blog-post.html). பொதுவாகவே இது தமிழில் கமல் முதற்கொண்டு நிறைய பேர் செய்து வரும் விஷயம். எந்த கதையும் ,படைப்பும் முழுக்க முழுக்க தனித்து நிற்க முடியாது. எதேனும் ஒரு கதையை நினைவு படுத்துவது மிக இயல்பு. ஆனால் தனிச்சையான ஒத்துபோதலை  மீறி கட்டமைக்கப்பட்ட தழுவலாக அது நிகழும் போது மூலம் பற்றி குறிப்பிடுவதே அடிப்படை நாகரீகம். இது குறித்த எனது சிந்தனைகளை அந்த  பதிவில் கருத்துரை இட்டேன். கருத்துரை தனி பதிவாகக் கூடிய சாத்தியம் கொண்டிருந்ததால் இங்கு பதிவிடிகிறேன்.

---------------------------------------

நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.

உதாரணமாக ‘planes automobiles..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம்.  ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்)  இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை  மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.

 ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு  அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை  ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.

தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை.   இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு  தெரிந்தது  சாகெத் ராம் அல்ல  பெரும்பாலும் கமல் மட்டுமே )
கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல்.  உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.

நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும்  கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.


------------------------------------------

சனி, 24 ஏப்ரல், 2010

அருந்ததி ராய்,ஜிந்தால்,கம்ரேடுகள், இன்ன பிற சொற்கள்....

சில நாட்களாக நிறைய குழப்பங்கள்.  எது சரி எது தவறு. நான் எங்கு இருக்கிறேன்..யாருக்கு சார்பாய் நான் இருக்க வேண்டும்? என் சக மனிதன் எப்படி இருக்கிறான்? நான் அவனுக்காக கவலை பட்டு என்ன ஆகும்? படும் கவலை, என் தயக்கம் என் பயம் இவற்றை தாண்டி எங்கு செல்லும்?
அருந்ததி ராயின் மாவோயிஸ்ட்கள் பற்றிய கட்டுரையை அவுட்லுக்கில் படித்த பிறகு தெளிவற்ற சிந்தனைகள். ராயின் கட்டுரை மிகுந்த பக்க சார்பு உள்ளது. உணர்ந்தே அவர் அதை செய்துள்ளார். ஏனெனில் இரு தரப்பில் ஒரு தரப்பை மட்டுமே ஊடகமும், அரசும் முன்னிறுத்துவதால்.  அவர்களது பக்கம் நமக்கு தெரிய வேண்டும்.. ஏன் இந்த போராட்டம்.. இந்த போரட்டத்தின் வன்முறை எதன் அடிப்படையில் நியாயப்படுத்தப் படுகிறது? இவர்கள் நிஜமாகவே நம் நாட்டின் 'அதிமுக்கியமான் பாதுகாப்பபிற்க்கு ஊறு தரும் பிரச்சனை'யா?? ஏன் இவ்வளவு பெரிதாய் வளர்ந்தார்கள்? அவர்கள் பெரும் தீவிரவாத கும்பலா அல்லது எளிய  பழங்குடியினரா?. எளிமையான கிராம மக்கள். ஏன் ஒரு அரசாங்கத்தை எதிர்க்கும் குழுவாகினர்? பெண்கள், குழந்தைகள் எல்லார் கையிலும் ஏன் துப்பாக்கி? இந்த கேள்விகள் இரு தரப்பு பற்றியும் தெரிந்து கொண்ட பிறகே அலசப்பட வேண்டியவை. தரப்புகள் குறித்து எத்தனை படித்தாலும் உண்மை அதில் ரத்தமும் துப்பாக்கியுமாய் போராடுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.  உண்மை எதுவாகவே இருந்தாலும் ஒரு எளிய பழங்குடி மக்கள் துப்பாக்கி ஏந்தி இந்த அளவு பெரும் இயக்கமாய் வளர சும்மா ‘ஒரு மணி நேர மின்சாரம் போச்சே’ பிரச்னையாக இருக்க போவதில்லை. அவர்கள் வாழ்வாதார பிரச்னையாக தான் இருக்க போகிறது.  ஏன் இது அதிகம் விவாதிக்க படவில்லை. மலையின் கனிம வளம் வன வளம் பாரம்பரியம் குறித்த பற்று அந்த பழங்குடியனருக்கு இருப்பதில் ஒரு சதவிகிதமாவது நம் அரசாங்கத்திடம் இருக்கிறதா? நம் கணிமங்கள் ரெட்டி சகோதரர்களுக்கும், வேதந்தா, ஜிண்டால் போன்ற பெரு நிறுவனங்களால் பங்கு கொடுக்க பட்டு அழிக்கப்பட்டு வருகிறதா? அடித்தட்டு மக்களின் குடிசைகளும், பெண்களின் கற்பும்,  உணவும், சொத்தும் முதலாளிகளால், ஆளுவோரால், காக்கும் படையினரால், சூரையாடப்படும் போது அவர்கள் அரிவாளோடு, துப்பாக்கியும் ஏந்துவது சரியா தவறா?
ஒரு சார்பை ஹீரோவாகவும் ஒரு சார்பை வில்லனாகவும் பார்த்து பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். உயிர் விட்ட படையினரின் சொற்ப உதவித்தொகை குறித்து கோபம் கொண்ட விகடனாரின் தலையங்கம் ஏன் சிவப்பு துணி கட்டியவர்களின் மரணத்திற்க்கு மவுனம் கொண்டு இருந்தது ஏன்? வெளிப்படையாகவே அசாம், மெகாலயா போன்ற மாநிலங்கள் பற்றி மத்திய அரசு வருடக்கணக்காக மெத்தனம் காட்டுவதும் பின் அவர்கள் கோபம் கொண்டால் தேசத்தின் பாதுகாப்பிற்க்கு ஊறாக நினைப்பது ஏன்?
பொதுவாகவே நாம் காரணங்கள் குறித்து யோசிப்பதில்லை. ஒரு கோபத்தின் நியாயத்தை அது வருடகணக்காக ஆறாமல் பொங்கி கொண்டு இருப்பதன் காரணத்தை விவாதிப்பதில்லை. வன்முறை அதற்க்கு பதிலடி பின் மேலும் வளரும் வன்முறை என ஒரு தொடர் நிகழ்வாக நீங்காத பெரும் பிரச்னையாக மாற்றிக் கொள்கிறோம்.

பாதுகாப்பு ஊறு.

இப்படி யோசனைகள் இந்த வாரம் முழுவதும் இருக்க, இதே சமயத்தில் குஜராத்தில் காந்திதாம் என்ற இடத்திற்க்கு  நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன் அங்கு இரும்பு உருக்கு ஆலை ஒன்றில் தர கட்டுப்பாடு சான்று தர சென்று இருந்தான். காலையில் அந்த ஆலை இருந்த இடம் தெரியவே இல்லை. காற்று முழுதும் கருப்பு துகள்கள். இரும்பு துகள்கள் மலை மலையாய். ஆலையின் உள்ளே உருக்கும் சூடு. இரும்பு தகதகத்து உருகி ஓடுகிறது. 5 அடி அருகில் பணியாள்ர்கள் சிரித்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்.  பல பேர் 12 மணி நேர ஷிப்டில் வேலை என நண்பன் சொன்னான். சில நாள் முன்னால் அவர்களது பதுகாப்பு குறித்தெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். சில நாள் முன்னால் கிரேனில் இருந்து இரும்பு குழாய்கள் நழுவி விழுந்ததாகவும் நல்ல வேளையாக யாரும் கீழே இல்லை எனவும் நண்பன் சொன்னான். ஜிந்தாலில்  *(அல்லது ஏதோ ஒரு பெரு நிறுவனத்தில்) எங்கோ ஒரு சுரஙத்தில் மண் சரிந்து சில பணியாளர்கள் இறந்ததாகவும்  அது வெறுமனே வட்டார செய்தித்தாளில் ஒரு சிறிய பெட்டி செய்தியாக வந்ததாகவும் சொன்னான். இரண்டு நாள் முன்னால் தினகரன் பெங்களூரு பதிப்பில் சில வருடங்கள் முன் வான்வழி தூவப்பட்ட Endosulfan  பூச்சிகொல்லிகளால் கிரமத்து மக்கள் பலரும் பக்கவாதம், ஆண்மைக்குறைவு போல் பிரச்சனைகளால் பாதிக்கபட்டு இருப்பதாக பகிரங்கமாக அரசு ஒப்புக்கொண்டதாகவும் குடும்பத்திற்க்கு நஷ்ட ஈடு தர ஒப்புகொண்டதாகவும் படித்தேன். துண்டு துண்டான இந்த செய்திகளால்  நாட்டின் பாதுகாப்பு ஊறு யார் என்ற கேள்வி மீண்டும் என்னுள் எழுந்தது.

காசர்கோட்டில் Endosulfanஆல் பாதிக்கபட்டவர்


ஆனாலும் விதர்பா தற்கொலைகள், மாவோயிஸ்ட் பிரச்சனைகள், போலி மருந்துகள் போன்றவையோடு நித்யானந்தர்-ரஞ்சிதா, ஐ.பி.எல் இறுதி போட்டிகள், விஜய் அரசியல் என எல்லாம் தாங்கி நம் ஊடகங்கள் சொற்களை மக்கள் விருப்பிற்கேற்ப உற்பத்தி செய்து சந்தையில் தள்ளுகின்றன. குவிந்து கிடக்கும் சொற்களில் நாமும் கொஞ்ச நேரம் மாவோயிஸ்டுகள், காம்ரேடுகள், நித்யா, டெண்டுல்கர், சுறா, சஷி தரூர்ர் எல்லாம் பேசி முடித்து விடுவோம். கவலை படாதீர்கள் அடுத்த சீசனிலும் கொஞ்சம் கம்ரேடுகளோ - போலிசோ இறப்பார்கள், கொஞ்சம் விவசாயிகள் தற்கொலை செய்வார்கள், அதை விட முக்கியமாய் 20-20 உலக கோப்பை நடைபெறும், ரஞ்சிதா பேட்டியை எதோ ஒரு பத்திரிக்கை வாங்கி இருக்கும், சுறா ஓடி முடிந்து எறா, எந்திரன் எல்லாம் வரும். அதனாலே மக்களே நாட்டில்  நெல்லுக்கு பஞ்சம் வந்தாலும் சொல்லுக்கு பஞ்சம் வராது.. பேசினோம்.. பேசுகிறோம், இன்னும் பேசுவோம்.....

சுட்டிகள்:
அருந்ததி ராய் அவுட்லுக் கட்டுரை

Endosulfan பிரச்னைகள்

.

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...