”கிராமத்தில் உள்ள வீடுகளில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் சுடர்கள் இரவில் மக்கள் உறங்க துவங்கிய பிறகு யாவும் தனியே ஒரு இடத்தில் ஒன்று கூடுகின்றன ..அவை அந்தந்த வீட்டில் வாழும் மனிதர்களின் அன்றாட செயல்களை ,கோபதாபங்களை பகிர்ந்து கொண்டுவிட்டு இருட்டில் மறைந்துவிடுகின்றன ”எஸ்.ரா யாமம் முன்னுரையில்
எஸ். ராவின் யாமம் நாவல் குறித்து படித்தது முதலே எழுத வேண்டும் என்ற எண்ணம். இப்போது தான் எழுதுகிறேன்.
தமிழின் இந்த தலைமுறை முதன்மை படைப்பாளியாக நான் கருதும் எஸ்.ராவின் சமீபத்திய நாவல் யாமம் (2007).
யாமம் என்பது மிக ரகசியமான பொழுது. எஸ்.ரா கூறுவது போல மனிதன் தூங்கும் வேளையில் தான் அவனது கதைகள் வெளியே அலைகின்றன. மனிதர்கள் எல்லாருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். நறுமணம் போல காற்றில் கலைவது தான் மனிதர்கள் வாழ்க்கையும்.
இரவின் சுகந்தத்தை அத்தராக வடிக்க கற்ற ஒரு வம்சாவளி. ஒரு சுஃபி ஞானியின் அருளுடன் அவர்கள் வழி வழியாக இத்தொழிலை செய்து வருகிறார்கள். இந்த அத்தரின் பெயர் ‘யாமம்’.
மதராப்பட்டிணத்தின் சரித்திர பிண்ணனியுடன் ஆரம்பிக்கும் நாவல், அந்த நகரத்தின் சின்ன சின்ன சந்துகளான கதைகளில் அலைகிறது. (நகரம் சுமக்கும் கதைகள் மீது எஸ்.ராவிற்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு) . பின்னிப் பிணையும் இந்த கதைகளில் மைய சரடு, எல்லா பேரிலக்கியங்களும் வியக்கும் பெரு மானுடத்தின் ஒட்டு மொத்த இயக்கம் குறித்த அளவிலா வியப்பும், அந்த சமுத்திரத்தின் ஆர்பரிக்கும் அலைகள் மீண்டு சமுத்திரத்திற்க்கே சென்று விடுவதும் பின் மீண்டும் வேறொரு நீர்த் தொகுப்பாகி பிரிதொரு அலையாகி விடுவதும் என முடிவில்லாமல் சுழலும் ஒரு அமைப்பை காட்சிப்படுத்த முயலுவதும் தான்.
அத்தர் தயாரிக்கும் கரீம் சூதில் நாட்டம் கொண்டு வீடு விட்டு வெளியேறுகிறான். அவனது மனைவிகள் அவனில்லாமல் வாழ்க்கையை தனித்து ஓட்ட, கடைசியில் வாழ்க்கையின் அழுத்தும் சுமையை இறக்க முடியாமல் அவர்கள் தத்தம் வழியில் பிரிந்து செல்கிறார்கள். கரீமின் மூன்றாம் மனைவி வெறுமனே காலத்தின் பழைய நினைவுகளுடன் அந்த இடிபாடான அத்தர் தயாரிப்பு சாலையை பிரயோஜனமற்றுப் பார்க்கிறாள் . பரம்பரை பரம்பரையாக இரவின் சுகந்தத்தை வடித்தவர்கள் சுவடில்லாமல் காற்றில் கரைகிறார்கள்.
பத்ரகிரி-விசாலம் குடும்பம்; அவனது தம்பி திருச்சிற்றம்பலம்- மனைவி தையல். திருசிற்றம்பலம் படிப்பிற்க்காக லண்டன் செல்கிறான். தம்பிக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பத்ரகிரி மெல்ல தையலிடம் விருப்பம் கொள்கிறான். இருவருக்கும் நிகழும் காமத்தின் பரிமளம் தையலின் நோயால் மெல்ல மறைகிறது.
லண்டன் செல்லும் சிற்றம்பலத்தின் தோழன் சற்குணம் லண்டனை போகத்த்டன் சுகிக்க வருகிறான். போகத்தை முழுமையாய் சுகிக்கும் அவன் லண்டனின் மற்றொரு பக்கம் தெரியும் போது அதை முழுமையாய் வெறுத்து அந்த மாநகரத்திற்க்கு எதிராய் ஒற்றையாய் சீறுகிறான்.
திருசிற்றம்பலம் தன் படிப்பை முடித்து கணித யந்திர கண்டுபிடிப்பிற்க்கான சாதனையின் பெருமையுடன் ஊர் திரும்பும் போது அவன் முகத்தில் அறைவது சிதறுண்ட அவன் குடும்ப நிலை.
தன் பங்கு சொத்திற்க்காக கோர்ட்டிற்க்கு அலையும் கிருஷ்ணப்பா , எலிசபெத் என்னும் ஆங்கிலோ-இந்திய பெண்ணின் மீது உள்ள காமத்தால் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். ஒரு சுயநல ஒப்பந்தமாக ஆரம்பிக்கும் அவர்கள் உறவு அவர்கள் வாழும் மலையின் அமைதியில் மெல்ல ஆழம் கூடிக் கொள்கிறது. வாழ்க்கையின் அர்த்தம் அதன் எளிமையில் உள்ளது என ஏதோ ஒரு கணத்தில் உணரும் கிருஷ்ணப்பா தன் சொத்துக்களை புறந்தள்ளி மலையில் தன் பிரிய எலிசபெத்துடம் வாழ்கிறார். மலையின் தேயிலை தோடத்தில் வருமானம் வருகிறது. எலிசபெத் லண்டன் பார்த்து வர ஆசைப்படுகிறாள். திரும்பி வந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவளை அனுப்பி வைக்கிறார். அவளும் அதற்க்கு உட்பட்டே செல்கிறாள். ஆனால் அவர்களது மலை விரைவில் தேயிலை வியாபரிகளின் விளைநிலமாகிவிடும் என குறிப்புடன் இந்த கதையும் முடிவுக்கு வருகிறது.
எல்லாக் கதைகளுமே கால நதி அடித்து செல்லும் திசையெல்லாம் முட்டி மோதி பின் எங்கோ யாரும் யூகிக்கா மூலையில் கரை ஒதுங்குகின்றன.
நாவல் முடியும் போது வாழ்க்கை குறித்த நம்பிக்கை தோன்றுவதில்லை. அதன் அர்த்தமின்மை குறித்த அபத்தமே தொங்கிக் கொண்டிருக்கிறது. அலையும் வாழ்க்கையின் அகத்தைஒன்றோடு ஒன்று முட்டி மோதும் புறவயமான நிகழ்வுகள் கட்டமைக்கிறதா அல்லது புறத்தே நிகழும் சம்பவங்களும் சரித்திரமும் அகத்தின் எண்ணிலடங்கா உள்மடிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறதா எனும் பதிலற்ற கேள்வியின் அனுபவத்தை தன் ஒவ்வொரு பக்கத்திலும் கொண்டிருக்கிறது யாமம் நாவல்.
ஆனாலும் என் அனுபவத்தில் சில இடறுகளும் உண்டு. எஸ்.ராவின் நெடுங்குருதியில் வெயிலின் தகிப்பை உணர்ந்தது போல இன்நாவலில் இர்வின் ரகசியம் ஒரு படிமமாக என்னை எல்லாக் கணத்திலும் பின் தொடரவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாய யதார்த்ததிற்க்குள் (magical realism) புகுந்து விடக்கூடிய பரப்பு கொண்ட நாவல்.; ஆனாலும் சுஃபி ஞானியின் பகுதிகளில் மட்டுமே கொஞ்சமாய் சென்று விட்டு மீண்டுவிடுகிறது. இது படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும் இத்தனை விரிவான நாவலின் பரப்பு மேலும் அகழப்பட்டிருக்கும் என்பது என் ஆதங்கம். பின் அந்த பண்டாரத்தின் கதை. சட்டென ஜெமோவின் நாவலுக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு. கதையின் மைய சரடு சராசரிகள் வாழ்க்கையின் கூட்டியக்கமாக இருக்கும் போது சதாசிவப் பண்டாரம் ஒரு விடுபடல் (exception) போல வருகிறார். எஸ்.ரா ஆரம்பத்தில் ‘இந்தியாவில் சாமியாராகாமல் இருந்தால் தான் அதிசயம்’ என்று பண்டார வாழ்க்கையும் சம்சார வாழ்க்கை போல சமூகத்தின் ஒரு கூறே என குறிப்புணர்த்தினாலும் எனக்கு இக்கதை ஒட்டாமலே போகிறது கடைசிவரை.
மேலும் எஸ்.ராவின் படிமங்களும் உருவகங்களும் ஒரு வித மாதிரித்தன்மையை (template) பெற்றுவிட்டனவோ எனத் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.
குறைகளாகத் தோன்றிய இவை எல்லாமே நாவல் தரும் ஒரு முழு அனுபவத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் போகின்றன. தமிழின் முக்கிய நாவல்களுல் ஒன்றாக சொல்லக்கூடிய யாமம் இலக்கியத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...
கடைசியாக படித்தது 'உறுபசி' தான். எஸ்.ராவின் நாவல்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு புகார் உண்டு. என்னவென்றால் படித்த அத்தனையும் மறந்து விடும். வரிசையாக 'உபபாண்டவம்', 'நெடுங்குறுதி' இரண்டையும் கல்லூரி காலத்தில் படித்து முடித்திருந்தாலும் இப்போது அதில் கொஞ்சம் கூட நினைவு இல்லை. சென்னையில் பணியில் இருந்த போது 'உறுபசி' படித்திருந்தாலும், அது படித்த சுவடே என் மனதில் இல்லை.
பதிலளிநீக்குஇதில் ஒரு நன்மை என்னவென்றால் எப்போதும் எஸ்.ராவின் எழுத்துக்களை மறுவாசிப்பு செய்யலாம்... நல்ல பதிவு...
நன்றி பிரசன்னா. எஸ்.ராவின் ‘உபபாண்டவம்’ நீண்ட நாட்களுக்கு முன்னால் படித்தது. எனக்கும் சரியாய் ஞாபகம் இல்லை தான். ஆனால் மற்ற படைப்புகள் அப்படி இல்லை. அது போல எனக்கு தல்ஸ்தோயிடம் ஏற்படும். நீ சொன்னது போல அது எனக்கு சதகமான அம்சமே. அவர் எப்போது மெனக்கு சலித்ததே இல்லை.
பதிலளிநீக்குநல்ல பார்வை...
பதிலளிநீக்குஅதே நேரம் நாவல் படிக்கையில் எனக்குள்ளும் இருந்த ‘பண்டாரம்’ பற்றிய கேள்வியைத் தெளிவாகக் கேட்டு விடையும் வாங்கி விட்டீர்கள். நன்றி..
அடிக்கடி வரும் ‘அலைதல்’ வார்த்தைதான் கொஞ்சம் அலைக்கழித்தது.
‘நெடுங்குருதி’ இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி தமிழ்,
பதிலளிநீக்குஎஸ்.ராவின் பதில் ஒருபுறம். பண்டாரம் பகுதி என்னை கவரவில்லை என்பதே உண்மை. ஆனால், நாவல் அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. அது என் தனிப்பட்ட விமர்சனம் மட்டுமே.
நெடுங்குருதி நல்ல நாவல். படிச்சுட்டு எப்டி இருக்குனு சொல்லுங்க..
அலைக்கழிக்கற அளவா ‘அலைதல்’ இருக்கு :-( சரி இதெல்லாம் கண்டுக்காதிங்க. :)
அழகான மதிப்புரை. நானும் என் பங்குக்கு யாமம் பற்றி எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பாருங்களேன்.
பதிலளிநீக்குhttp://jekay2ab.blogspot.com/2010/07/blog-post_19.html
அதவிட்டா வேற வேலை :-) படிச்சு பதிலும் எழுதிட்டேன் ஜெகதீஷ்
பதிலளிநீக்கு