ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எங்கள் நூல்களை எரியுங்கள்




(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) 

எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படுகிறது. பேசுபவர்களின் நாக்கு, எழுதுபவனின் கை, எழுதிய பக்கங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.
நிறம், மொழி, இனம்,கலாசாரம்,மதம் என எதேதோ சொல்லி அடக்குமுறை நிகழும் போதெல்லாம் அமைதியாய் அடி வாங்கும் ஊமை சனம் பின் காலத்தின் மற்றுமொரு புள்ளியில் மெல்ல சேர்ந்து திரண்டு, பிரவாகமாகி, பதிலடி தருகிறது.  நாக்குகளும் கைகளும் பக்கங்களும் வெட்ட வெட்ட குறையாமல் பெருகிப் பெருகி வெட்டுபவனை விழுங்குகின்றன.
இதை  சரித்திரம் மீண்டும் மீண்டும் நமக்கு சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.

எரிந்த புத்தகங்களின் பக்கங்கள் சாம்பலாகிவிடுவதில்லை. அவை மீண்டும் வேறு வேறு  உருக் கொள்ளவே செய்யும். எழுத்திற்க்கு எழுத்தாளன் வெறும் கருவி. மானுடத்தின் சிந்தனையை ஓரிரு பக்கங்களை எரிப்பதாலோ அல்லது சில கைகளை துண்டிப்பதாலோ நிறுத்திவிட முடியாது.


இந்த யுகம் தொழில்நுட்ப யுகம். சிந்தனைகள் பைட்டுகளாக மாறிய பின் எதை அழிப்பது? சிந்தனைகள் தரவாக மாறிவிட்டபின் அழிவற்ற வடிவம் கொண்டு
நிலைபெறுகிறது. எனது 500 ஜி.பி டிஸ்க்கில் வெறும் அவதார் படமும், எந்திரன் பாடல்களும் மட்டும் தானா இருக்கின்றன?
அதில்
சைபீரிய சிறையில் தாஸ்தவெஸ்கி இருக்கிறான்
நெரூடாவின் ரத்தம் தோய்ந்த வரிகள் இருக்கின்றன
உ.சேரனின் யுத்த ஓலமிடும் கவிதைகள் இருக்கின்றன
ஷோபா சக்தி ‘ம்’ மிடுகிறான்
காந்தி அம்பேத்கர் உரசல்கள் இருக்கின்றன
அ.ராயின் நக்சலைட் கட்டுரை அவுட்லுக்கிலிருந்து இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது

எனது டிஸ்க்கிலிருந்து என் நண்பன் டிஸ்கிற்கு செல்லும்; அங்கிருந்து ஃபேஸ்புக் செல்லும்; ட்விட்டர் செல்லும்  அங்கிருந்து கன்னியாகுமரியும் செல்லலாம்; அண்டார்டிக்காவும் செல்லலாம்.
இனி எழுதும் கைகள், பேசும் வார்தைகள், அச்சிடும் மை எல்லாம் தரவாகும் (Data) .
தரவு எல்லாரிடமும் பேசும். ஆயிரம் வருடம் தாண்டி எரிந்த நூலகங்கள் பற்றியும் சிதைந்த மக்கள் பற்றியும்..

ஆதலால் வலியவர்களே
தாராளமாய் எங்கள் நூல்களை எரியுங்கள்.

(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...