ஞாயிறு, 3 மார்ச், 2019

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை


தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்றிலும் சோழர்கள் சிறந்து விளங்கினர். அவற்றை ஆவணப்படுத்தவும் செய்தனர். அதனாலேயே பிற்காலச்சோழர்களின் வரலாற்றை நம்மால் விரிவாக கட்டமைக்க முடிகிறது. சோழர்களின் வீரம்,அரசியல் இவை சார்ந்து பல புதினங்களும்  வெளிவந்து உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றோடு சுவாரஸ்யமான சம்பவங்களைப் புனைந்து வாசகரின் கவனத்தை ஈர்ப்பவை.
வரலாறு என்பதே சம்பவங்களின் தொகுப்பு தானே. ஆனால் நல்ல இலக்கியம் சம்பவங்களைப் பார்ப்பதில்லை. அவை நிகழ்ந்த அல்லது நிகழ்த்திய மனிதர்களைத் தான் தேடும். ஒரு பெருங்கோவிலைக் கட்டியவனின் பெயரை வரலாறு பதிவு செய்யும். ஆனால் இலக்கியமோ அப்பெருங்கோவிலை கட்டியவனின் மனதில் அன்று சுழித்தோடிய கவலைகள் ,உவகைகள், ஐயங்கள் இவற்றைப் பதிவு செய்யும்.
கோவிலைக் கட்டியவன் என்றால் மன்னனை மட்டுமல்ல, உளி தட்டிய சிற்பியையும்,சிற்பமாய் உறைந்த ஆடல் நங்கையையும் சேர்த்து தான்.
கங்காபுரம் புதினம் ,அவ்வாறே சோழமன்னன் ராஜேந்திரனின் அகவெளியை பதிவு செய்ய முயல்கிறது. தனிமையும், வெறுமையும்,கைவிடப்படலும் சாமானியனைப் போலவே மாமன்னனையும் அலைக்கழிக்கும் என அது நினைவுறுத்துகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சில வருடங்கள் முன் நான் சென்ற போது எனக்கு முதலில் தோன்றியது இது தான்..”ஏன்?” தஞ்சையைப் போல ஏன்? சற்று சிறியதாய் ஏன்?   இன்னொரு தலைநகரம் ஏன்? தஞ்சை போல இங்கு பெருநகரம் இல்லையே ஏன்? தஞ்சைக்கு ஈடாயும் அதை விஞ்சும் சிற்பங்களையும் பாராட்ட மக்கள் இல்லையே ஏன்?

இது போல நூராயிரம் கேள்விகள் அந்த மாமன்னனின் மனதிலும் தனைமையில் ஓடியிருக்கும். ”தஞ்சையைப் போல” “தந்தையன்ன” என்று உவம உருபுகள் அவனைக் குத்திக் கிழித்திருக்கும். அந்தக் கேள்விகளையும், வலியையும் தான் ஆ.வெண்ணிலா தன் புதினத்தில் நம் முன் வைக்கிறார்.
நாம் மனதில் பெரும் பிம்பமாய் நினைக்கும் எவரையும் சராசரித் தளத்தில் வைத்து பொருத்திப் பார்ப்பதில்லை. பிம்பங்களை வழிபடுகிறோம், எதிர்க்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம்.  ஆனால் பிம்பங்களும் மனிதர்கள் என்பதை மறந்து விடுகிறோம். ஆயிரம் சிடுக்குகள் கொண்ட அவர்கள் மனத்தில் நுழைந்து அம்மனத்தை புரிந்து,அங்கீகரிக்க சராசரி மனம் அல்ல கவி மனம் வேண்டும். கங்காபுரத்தில், ஆயிரம் ஆண்டுகளாய் அலைக்கழியும் ஆற்றாமையை எழுத்தில் வடிக்கிறார் வெண்ணிலா. காலத்தின் துகள்களாய் அந்த அகத்தனிமை நம் மேல் மோதுகிறது.
இரு பெரும் சோழமன்னர்கள்,தந்தை மகனாய் எதிர் எதிரே நிற்கிறார்கள். ராஜராஜன் தன்னை ஒரு பீடத்தில் ஏற்றி கீழ்நோக்கிப் பார்க்கிறான். மதுராந்தகனோ பீடம் விட்டு இறங்கி பார்வையை சமமாக்குகிறான். மக்களின் மன்னனாக தன்னை அறிய விழைகிறான். விழைவதெல்லாம் அரசன் என்றாலும் கைக்கொண்டு விடுமா என்ன? தாமதமாய்  வந்த அரியணை யை  அவன் கடமையாய் ஏற்கிறான். கடமை மட்டுமே எஞ்சினால் உட்புகும் வெறுமை என்பது காதலும்,கலையும் வெற்றியும் போட்டுக் கொட்டினாலும் நிரம்பாத வெறுமை. “தந்தையைப் போல” என்ற அடைமொழி பெய்கீர்த்தியாய் அவன் சிதை வரை சுடுகிறது.

சதுரத்தடிகளாய்   நாவலின் இறுதியில் ஊழ் பேசுகிறது..

“தகுதி இருந்தாலும் சிலருக்கு புகழ் வளராது. அந்தப் புகழில் பங்கெடுக்க யார் யாரோ வருவார்கள். நீ அப்படியொரு துயரத்தின் அடையாளம்..
நீ தப்பித்துக் கொள்ள தலைநகர் மாற்றலாம்,கோயில் கட்டலாம், கங்கையைக் கொண்டு வந்து புனித ஏரி வெட்டலாம். ஆனால் எதுவும் உன் துயர் போக்காது” 

கங்காபுரத்தின் ஒவ்வொரு பக்கமும் இந்த இறுதி வார்த்தைகளை நோக்கித்தான் நகர்கின்றது. வரலாற்று புதினம், ஒரு ஒற்றைப் புள்ளியை நோக்கிக் குவிதல் அத்தனை எளிதல்ல. விலகல்களும் உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. சில இடங்களில் வரலாற்றுத் தரவுகளை முன் வைப்பதற்காகவே உரையாடல்களும், சம்பவங்களும் நிகழ்வது போலத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. அதே போல ஆசிரியர் சோழர்கள் மீது வழிபாட்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு பிரமிப்பு மனநிலையில் இருப்பதாய் உணர்ந்தேன். படைப்புக்கு வெளியே அந்த மனநிலை சரி. படைப்பினுள் அது சமநிலையில் விலகல் ஏற்படுத்தும்.  சதுரத்தடிகளின் கட்டுடைக்கும் வார்த்தைகள், வீரமாதேவி போன்றோர் அவ்வப்போது முன்வைக்கும் கூரான விமர்சனங்கள் இவையனைத்தையும் தாண்டி அந்த சமநிலை விலகலை உணர முடிகிறது.

 மற்றொன்று,நாவலில் பெண்களின் பங்கு,மன்னனின் பிம்பத்தை/மன அமைப்பை கட்டியெழுப்பதற்காகவே இருப்பதாய் தோன்றுகிறது. நாவலின் குவிமையம் வேறாய் இருக்கும் போது இதை குறையாய் முன் வைக்க இயலாது. வைக்கவும் முடியாது. என் தனிப்பட்ட ஆதங்கமாய் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

எது எப்படியென்றாலும், புறமல்ல வரலாற்றை செதுக்குவது,அகம் தான் அதை நெய்கிறது என அழுத்தமாய் பதிவு செய்யும் கங்காபுரம் தமிழின் முக்கியமான படைப்பு. 

செவ்வாய், 6 மார்ச், 2018

அருவி விமர்சனம்- ஆண்டவரே! தயை கூர்ந்து எம்மிடம் மன்னிப்பு கோருவீராக..!பலரும் பாராட்டிக் கொண்டாடித்தீர்த்த நிலையில் அருவி திரைப்படம் பார்த்தேன்.  இருந்தது. ஏன் இப்படம் பாராட்டப்படுகிறது என்று நிஜமாகவே புரியவில்லை.. எல்லாத் தரப்பும் பாராட்டிய இப்படம் அதிக வணிக சமரசங்கள் இல்லாத கலைப்பட சட்டகத்துக்குள் பொருத்தக் கூடிய படம். ஆனாலும் பலரையும் சென்றடைந்து பரந்துபட்டு ரசிக்கப்பட்டது. கலைப்படங்கள் வணிக வெற்றி பெறுவதும் எல்லாரலும் பாராட்டப் பெறுவதும் ஏன்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்யும். காரணம் அது ஒரு வகையில் சமூக ரசனை மேம்பாடு, சிந்தனை வளர்ச்சி மட்டுமல்லாமல் கலையின் முதிர்ச்சிக்கும் வழி தரும்.

அத்தகைய கலை முயற்சி, கருத்தியல் ரீதியாக தன் சமூகத்தை ப்ரதிபலிக்க மட்டுமல்லாமல் மேம்படுத்தவும்  செய்யும் போது அதைப் பாராட்டலாம். தன் சமூகத்தின் மாறாத பிற்போக்குக்களை முன்வைப்பது மட்டுமில்லாமல் அதனை தன் கருத்தோட்டத்தைக் கடத்தும் ஊடகமாக பயன்படுத்துவது எனக்கு ஒரு வகையில் வருத்தமும் இன்னொரு வகையில் அதிர்ச்சியும் கொடுப்பதாய் இருந்தது.
அருவி , ஒரு பெண்னின் கதை. சமூகத்தாலும் , நோயாலும் சிதைக்கபட்டு,தனிமைப்படுத்தப்பட்ட பெண். சமூகத்திடம் அன்பு செலுத்துங்கள் என இரைஞ்சுகிறாள். அவளைக் குறீயீடாக எடுத்துக் கொண்டால் அவள் மானுடத்தை நோக்கி, ‘யோசிக்காமல் ஓடும் மனிதர்களே.. நில்லுங்கள், சிறிய விஷயங்களை ரசியுங்கள் , ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்,உங்கள் மனதின் மூலையில் எங்கேனும் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும், அதை தேடுங்கள்” என்கிறாள் அருவி.

ஆம். காலத்தின் தேவை தான் அருவி. ஆனால் அவள் உதடுகள் சொல்வதை மனம் சொல்கிறதா? அப்படி மனம் சொன்னால் அவள் மனம் யாருடைய மனம். தன்னை வன்புணர்ந்த ஆண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்< அன்பு செலுத்துங்கள் எனக் கேட்க்கும் பெண்ணின் மனம் யாருடைய மனம்?
சரி அவள் அன்பை எந்த பாரபட்சமும் இல்லாமல் வழங்குபவள் என்றும் வைத்துக் கொள்வோம், எல்லா ஆண்களாலும் உடலால் மனதால் சிதைக்கப்பட்டவள், அவை பற்றி எதுவும் பேசாமல் நுகர் கலாச்சாரம் குறித்தும், அதன் அர்த்தமின்மை குறித்தும் 15  நிமிடங்கள் நீளமாய்ப் பேசுகிறாள். தன்னை நுகர ஆசைப்படும்  தொலைக்காட்சி இயக்குனரிடம் அவள்  மனம் வெதும்பிக் கேட்கும் ஒரே கேள்வி ‘டி.ஆர்.பி க்காக எதுவும் செய்வீங்களா?” இவை எதுவும் தற்செயலானவயோ அல்லது கதைப்போக்கில் நிகழ்பவயோ அல்ல. அருவியின் சூழ்நிலைகள் மிக கவனத்துடன் கட்டமைக்கப்பட்டிருகின்றன. அவள் வாழ்வில் இருக்கும் ஆண்கள் யாரும் அவளுக்கு நியாயம் வழஙியவர்களில்லை. அவளது அப்பா ,தம்பி, முதலாளி,ஆன்மிக குரு.,தோழியின் அப்பா யாருமே அவளுக்கு நியாயம் வழங்கவில்லை. அதவது  பெண் வாழ்வின் பல நிலைகளில் வரும் எந்த ஆணும் அவளுக்கு துணையில்லை. அவர்களை அவள் வழிதவறிய குழந்தைகளைப் போல் பாவிக்கிறாள். தன் பங்கு நியாயத்தைக் கேட்கவும் தயாராக இல்லாத தன் தந்தையிடம் அவள் குழந்தையாய் அன்பிற்கு தவித்து அழுகிறாள். அப்போதும் அவள் தன் தாய் குறித்து எதுவும் யோசிப்பதில்லை.

இவை எல்லாமும் தற்செயல் என்று கொள்வோம்,மிக அப்பட்டமாய் நிகழும் சொல் வன்முறை ‘அதப் போய் எப்படி அண்ணே மூணு பேர்’ என ஒரு பதின்பருவ இளைஞன் மீண்டும் மீண்டும் கேட்பது. ஒரு முறை அல்ல பல முறை. அது நகைச்சுவையா? பகடியா? எப்படி அதை எடுப்பது. எதுவானாலும் அது வக்கிரம். சமீபத்தில் ஒரு வணிக திரைப்படத்தில் கூட இப்படி ஒரு முகம் சுளிக்கும் உரையாடலைக் கேட்கவில்லை. அருவிக்கு அது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லை.

இன்னொரு தற்செயல். அருவிக்கு நோய் வர சொல்லபட்ட காரணம். அபத்தம். ‘Butterfly effect’ ஐ காட்சிப்படுத்த வேண்டுமானால் அந்தக் காரணம் பயன்படலாம். அதன் மருத்துவ நம்பகத்தன்மை ஒரு புறம் இருக்கட்டும் .எதற்கு அப்படி ஒரு சுற்றி வளைக்கப்பட்ட காரணம்? அருவி “தவறு ”செய்யவில்லை என்று நிரூபிக்கவா? அவள் தன் அப்பாவிடம் தப்பு செய்யவில்லை எனக் கெஞ்சவா? நோயை ஒரு ஆயுதம் போல தன்னை நுகரும் ஆண்களுக்கு தண்டனையாக தருவதைப் போல் பயமுறுத்திப் பார்க்கிறாள். ஒரு நோய், அதன் காரணம், அதன் விளைவு, அதை சமூகத்திடம் சொல்ல வேண்டிய முறை என எந்த பொறுப்புமே இல்லாமல் செல்லும் கதை.

எத்தனை தற்செயல்கள்..திரைப்படத்திற்குள் மட்டுமல்ல..ிரைப்படத்தைத் தாண்டியும் பல தற்செயல்கள்…எந்த ஊடகமும் இந்த விமர்சனங்களை முன்வைக்கவில்லை. விகடன் எல்லாக் குறைகளையும் சொல்லிவிட்டு,இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல..அருவி நம்ம ராசாத்தி என்று கொண்டாடுகிறது..தி இந்து சொல்லும் ஒரே குறை பிராமண துவேஷம் (இது படத்தின் நோக்கதிற்கே எதிராய் இருக்கிறதாம்..இது மட்டும் தான் அவர்கள் கண்ணில் பட்டதா??)
எனக்கு தெரிந்த வரை  காலச்சுவடு மட்டுமே காட்டமான விமர்சனத்தை பதிவிட்டுள்ளது.


சரி விடுங்கள்..ஒரு வகையில் பெருமை தான்…தன் ஆண்டவனை மன்னிப்பு கேட்க சொல்லி உருகும் அருவி என்னும் ராசாத்தியால் நாம் எல்லோரும் தவறுகளை எத்தனை சுலபமாய் மன்னிக்கும் பெரிய மனதுக்காரர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ! அவ்ளோ நல்லவங்களா நாம?


புதன், 9 மார்ச், 2016

உலோகம்.. (அறிவியல் புனைகதை) தொடர்ச்சி

உலோகம் (தொடர்ச்சி)

5
நான்காம் பரிமாணம்
..
ஒளிநீரில் அமிழ்ந்திருக்கும் பூங்காவில்
X அச்சில் நேர்கோட்டில்
நடந்து செல்கிறான் ஒரு மனிதன்
அவனைப் பின் தொடர்கிறது பறவைக்கூட்டம்
Y அச்சில் அமைந்த புல்வெளியின் மேல்
தானியங்களை சுமந்த சிறு பையுடன் அமரும்
அம்மனிதனை சூழ்கின்றன பறவைகள்
தலையில் தோள்களில்  கைகளில் முதுகில்
என கணத்தில் குவியும் பறவைகளால்
முற்றிலுமாக மூடப்படுகிறான்
Z அச்சில் மேலுயரும் அவனின்
ஒரு கை மாத்திரம்
தானியங்களை இரைக்கத் துவங்குகிறது.
காலாதீத வெளியில்
முளைத்த தானியங்களை விரிந்த சிறகுகளுடன் அலகால்
கொத்திப் பறிக்கின்றன பறவைகள்
மனிதப் பறவையொன்று மேலெழுகிறது
உதிர்ந்த இறகொன்றை விரல்களால் சேகரிக்கிறாள் சிறுமி
                                    --பாம்பாட்டிச் சித்தன்.

உதிரும் அந்த ஒற்றை இறகை சேகரிப்பவள் பூங்கோதை என்கிறீர்கள் நீங்கள். பைரவன் என்கிறேன் நான். காலம் நம் இருவரையும் பார்த்து சிரிப்பது யுக முடிவில் பட்டு எதிரொலிக்கிறது.


கபிலன் விருக்கென்று விழித்துக் கொண்டான். காலை நன்கு விடிந்திருந்ததுநேரம் 10 மணியைத் தாண்டி இருந்தது. மெத்தையில் கால் மடித்து உட்கார்ந்து தான் எங்கிருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொண்டான். தலை பாரமாக அழுத்தியது. எதையோ இழந்து விட்ட்து போன்ற உணர்வு. சங்கக் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது. மலையில் காட்டருவியாய் விழுந்து , காட்டாறாய்ப் பொங்கிப் பாய்ந்து பெரு நதியாய் ஓடி பின் குறுகி சிறு ஓடையாய் கடலில் முடியும். அப்படித்தான் தனக்கும் நடந்து விட்டதோ? ஓடை தானா அல்லது வற்றி வெயில் பட்டுத் தகிக்கும் மணலாகி விட்டதா? எங்கு தவறு நடந்தது? எல்லாக் காதலும் ஒரே கணத்தில் அறுபட்டுவிடக் கூடியது தான். அறுபட்ட பின் எல்லாம் முடிந்து விடுகிறது. காதல் கடந்த காலம் ஆகி விடுகிறது. அதன் பிறகு  காதலில் கொண்ட காவியப் பித்து மனநிலையை பின் எப்போதும் அடைய முடியாது. வாழ்வின் ஒவ்வொரு நாளும் மற்ற நாட்களிலிருந்து வித்தியாசமற்ற சாதாரண நாளாக ஆகி விடும். கபிலனால் அர்த்தமற்ற நாளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் சம்பவங்களற்ற ஒரு சாதாரண நாளைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.
நேற்று வரை கொந்தளித்துக் கொண்டிருந்த அவன் மனம் இன்று பெரிதாய்க் குறிப்பிடக்கூடிய எந்த எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை. அவனது மனதின் இயல்பே எப்போதும் அதீதமாய் செயல்படுவது. காதல், காமம், கலை, கனவு தத்துவம் என எதுவாக இருந்தாலும் அவன் சமதளத்தில் அணுகி அனுபவித்ததே இல்லை.
அவன் மலைநாட்டுக்காரன். இணையைப் பிரிந்து அலையும் வெறி கொண்ட களிறாய் அவனால் இருக்க முடியும். ஆனால் இணையை மறந்த கோவில் யானையாய் கொட்டிலில் உழல முடியாது. நிச்சயம் முடியாது. அவன் ஒரு முறை தலையை உதறிக் கொண்டான்.
.. கபிலா .. விழித்துக் கொண்டாயா? நேற்று இரவு நிறைய பேசி நிறைய யோசித்து பொங்கிய மனம் இப்போது ஏனோ மந்தமாய் இருக்கிறதடா.. இரு.. காப்பி போட்டு கொண்டு வருகிறேன்தன் மனதை உணர்ந்தவன் போல பேசினான் செழியன். திரும்பிச் செல்ல முற்பட்டவனைசெழியா நில்என்று தடுத்தான் கபிலன்செழியன் நின்று கவனித்தான். செழியனின் முகத்தை கூர்ந்து நோக்கி பேச ஆரம்பித்தான் கபிலன். அவன் கண்களில் இருந்த உறுதி செழியனுக்கு இனம் புரியாத அச்சத்தை தந்தது.


செழியா... உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நம் இளவயதில் நம் ஊர் இருந்த மலைக்காட்டில்   வனதேவதை  வசிப்பதாக நம்பினோம். மலையருவி விழும் காடு முழுதும் நாம் சுற்றி இருக்கிறோம். அவளைக் காண்பதற்காக. அவள் உமையவள் என்றாய் நீ. யட்சி என்றேன் நான். அருவிப் பாறையின் உச்சியில் அமர்ந்து மலை முழுவதையும் பார்ப்போம். எங்கேனும் அவள் இலைகளை விலக்கி தன் மாமைக் கவின் திருமேனிக் கோலத்தை நமக்கு காட்சி தருவாளோ என்று தவமிருந்தோம். அவள் கொலுசொலி இரவுகளில் வனமெல்லாம் ஒலிப்பதாய் நீ சொன்னாய். அவள் கருங்குழலின் பிச்சிப்பூ வாசத்தில் பித்துக் கொண்டதாய் நான் சொன்னேன்.
நாட்கள் சென்றன. போதையேறிய விழிகளுடன் நாம் அலைந்து திரிந்தோம் மலையெல்லாம். அன்று பெருமழை அடித்து தீர்த்த நாள். பனி கொட்டிக் கொண்டிருந்த மையிரவில் நாம் கதலிப் பள்ளத்திற்கு கையில் விளக்கோடு சென்றோம். இரவின் பனியில் அவள் நிச்சயமாய் நனைய வருவாள் என்று நம்பிக்கையுடன் நடந்தோம். அங்கு சிற்றருவியின் அருகில் நீ அதைக் கண்டாய்.
நெருப்புபிழம்பு இரு சுடராய் காற்றில் எரிந்து கொண்டிருந்தது. பின் அது ஆயிரம் சுடராய் பிரவாகம் எடுத்தது. அப்போது தான் நாம் அறிந்து கொண்டோம், நம் முன் சில அடி தூரத்தில் நூற்றுக் கணக்கில் மான்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தன. கூட்டத்தின் நடுவில் ஒரு ஆண் மான் பெரிய கிளைகிளையாய் விரிந்த கொம்புகளுடன் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தது அதன் ஜ்வலிக்கும் கண்களுடன். அக்கண்களில் துளியும் மிரட்சியில்லை. அது நம்மை கவனித்து விட்டு தலையை குனிந்து மீண்டும் புல்லை மேயத் தொடங்கியது. அது மேய ஆரம்பித்த உடன் பிற மான்களும் தலை குனிந்து மேய ஆரம்பித்தன.

 நீ உடனே நடுக்கத்துடன்கபிலா.. இது இது.. வன தேவதை வசிக்கும் இடமடாஎன்று என் தோள்களை இறுக்கமாய் பற்றினாள். உன் விரல்கள் குளிர்ந்து இருந்தன. வியர்த்த உன் உள்ளங்கையின் ஈரம் என் சட்டையை நனைத்தது. நீ அப்படியே மயங்கி சரிந்தாய். அதன் பிறகு நடந்ததை நீயறியாய். நான் உனக்கு இது நாள் வரை சொன்னதுமில்லை.
உன்னை மயங்கிய இடத்திலேயே விட்டு விட்டு நான் கைவிளக்கை அணைத்து விட்டு முன்னேறி நடக்க ஆரம்பித்தேன். காட்டின் இருட்டு சட்டென அணைந்தது. சுடர் தீபமாய் நிலவொளி பனியில் பட்டு வனமெங்கும் தகித்தது.    மொத்த பச்சை வனமும் வெண்காடாய் ஒளிர்ந்தது. மான்கள்  விலகி எனக்கு வழிவிட்டன. நிலவின் ஒளியில் மான்களின் செவ்வுடலில் சிதறிக்கிடந்த வெண்புள்ளிகள் வின்மீண்களாய் மிணுங்கின. நான் முன்னால் செல்ல என் பின்னால் மான் கூட்டம் முதுகு காட்டி புல் மேய்வதைத் தொடர்ந்தன. அப்போது தான் அந்த காட்சி என் கண் முன் விரிந்தது செழியா..
என் முன்னால் ஒரு கரிய பாறை. பனியில் சிதறிய நிலவு துளித்துளியாய் அந்த கரும்பாறையின் மேல் வழிந்து கொண்டிருந்தது. பாறையின் மேல் அவள் தன் கால்களை பக்கவாட்டில் மடக்கி நிலவில் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் உடல் முழுதும் கூந்தலை ஆடையாய்ப் போர்த்தி அதில் பிச்சி சூடி இருந்தாள்.

அவள் உடல் மடிந்து குழைந்து வளைந்து கூந்தலுக்குள் மறைந்து கொண்டிருந்தது.  குழலை மெல்ல அலைத்த காற்று அவளின் வெறியூட்டும் மேனியை நீரில் கலையும் ஓவியமாய் காட்டியது.
அந்த பச்சை வனத்தின் ஒவ்வொரு இலையும், விழுந்து ஓடும் அருவியின்  ஒவ்வொரு துளியும்மேலே விரிந்த விசும்பில் பறக்கும் புள்ளின் ஒவ்வொரு சிறகும், மருளும் அணிலும், அசையும் யானையும் நெளியும் பாம்பும் எல்லாமும் அவள் தானடா.. அவள் தான் வனம் . வனம் தான் அவள். நான் அன்று அவளை அதற்கு மேல் நெருங்கவில்லை. அவளை எப்படி நெருங்க முடியும்? அவள் வனதேவதை.


ஆம் செழியா அவள் தான் வனதேவதை. ஆனால் அவள் நாம் நினைத்தது போல உமையவளோ யட்சியோ அல்ல. அவள் யாரென்று நான் பல வருடங்கள் கழித்து அவளை இந்த நகரத்தில் என் வீட்டருகே உள்ள தேனீர் விடுதியில் சந்த்தித்த போது அறிந்து கொண்டேன். அது அவளே தான். அன்று பாறையின் மேல் நிலவொளியில் பின்னால் மான் கூட்டமும் முன்னால் பேரருவியையும் கொண்டு வீற்றிருந்தவளே தான் இவள். பிச்சிப்பூவின் பச்சை வாசம் அவள் உடல் முழுதும் கசிந்தது. எனக்கு புரிந்தது. என் வனதேவதையின் உலோகச் சிலை தான் பூங்கோதை. அவள் என்னுடையவள். என்னுடையவள் மட்டும். அவளை நான் இழந்து விட்டால் என்றென்றைக்கும் நான் வனம் திரும்ப முடியாது. இந்த நகரத்தின் நியான் விளாக்கொளியில் பொசுங்கி, கணினித் தரவுக் குழியில் விழுந்து ஒன்றுமில்லாத இருளாகி விடுவேன். ” கபிலன் எழுந்தான். செழியனின் மறுமொழிக்கோ ஒப்புதலுக்கோ காத்திராமல் வேகமாய் தன் நண்பனின் வீட்டை விட்டு வெளியேறினான்.
பார்க்கிங்கிலிருந்து வருவதற்கு காருக்கு சமிக்ஞை பொத்தானை அழுத்தி விட்டு லிப்டுக்குள் நுழைந்தான். கட்டிட வாசலில் கார் நின்றிருந்தது. வரவேற்பறை ரோபோவின் செயற்கை புன்னகைக்கு பதிலளிக்காமல் காருக்குள் நுழைந்து அமர்ந்தான். அது கேட்கும் முன்னரேசேருமிடம் -வீடு. வழித்தடம் – 1 . வேகம் – 100” என்று சொன்னான். “ நன்றி. நீங்கள் வேகம் 100 தேர்வு செய்துள்ளீர்கள். இந்த வேகத் தேர்வுக்கு நகரில் அதிக வரி கட்ட்த் தேவையிருக்கும். இது சரியா?” என்றது காரின் இயந்திரக் குரல்.
சரிஎன்றான் கபிலன்.
நன்றி. சேருமிடம்வீடு க்கு செல்ல 15 நிமிடங்கள் 20 நொடி ஆகும் தோராயமாக. இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்என்று சொல்லி கார் என்ஜினை உறுமிக் கிளம்பியது. கபிலன் கண்கள் மூடி அமர்ந்து கொண்டான். மனம் பதட்டமாகவே இருந்தது. பூங்கோதையை பார்த்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினான்.
15 நிமிடங்களுக்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்தான். ஆனால் அதுவே ஒரு நாள்ப் பொழுதாகத் தோன்றியது.
அவன் கண்களை பதிவு செய்ததும் வீட்டின் கதவு திறந்து கொண்டது. கோதை வீட்டில் தான் இருந்தாள். அவன் அவளைப் போய் பார்க்காமால்  ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தான். இதயம் படபடப்புடன் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. அறை குளிரூட்டப்பட்டிருந்தாலும் புழுக்கமாய் உணர்ந்தான். எவ்வளவோ பேசத் தோன்றினாலும் எதை சொன்னாலும் அது அபத்தமாகவே இருக்கும் போலிருந்தது.
வியப்பாக இருந்தது கபிலனுக்கு. யாரோ ஒருத்தியாக இருந்த போது பூங்கோதையிடம் மிக சுலபமாய் தன் காதலை வெளிப்படுத்தியவன், இப்போது அவன் மனைவியாய் ஒரே வீட்டில் இருக்கும் போது ஒரு பதின்ம வயது இளைஞனுக்கு இருக்கும் தயக்கமும் பயமும் இருந்தது.
எப்படியும் இந்த தருணத்தை ஒதுக்கி விட முடியாது. இது துள்ளி அலையும் தருணமல்ல. ஆடி அடங்கி அமைதி கொள்ளும் நிலை.
ஆனால் காதலில் அமைதி உண்டா என்ன? கோடையில் வற்றி மணலானாலும், பெருமழையில் புதுவெள்ளம் பெருகி கரை புரண்டோடும் சுழற்சி தானே காதல். சிறு குழந்தைக்கு அலையில் கால் நனைப்பது சலிப்பதே இல்லை. அதற்கு கடலின் ஆழம் குறித்தோ பேரண்டத்தின் அமைதி குறித்தோ கவலையென்ன? அலைகள் வீசும் கிளிஞ்சல்களைப் பொறுக்கவே அக் குழந்தைக்கு நேரமிருக்காதே. மெல்லிய புன்னகையுடன் சோபாவில் இருந்து எழுந்தான்  கபிலன். எழுந்து திரும்பியவன்

சோபாவின் பின்னாலேயே பூங்கோதை நின்று கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தான்.
எதுவும் பேசாமல் சட்டென அவளைத் தன் முன்னால் இழுத்து அவளது சிலிக்கான் நாரிழை கோர்த்த உதடுகளை தன் உதடுகளோடு அழுத்தி முத்தமிட்டான். அவள் இதழ்களின் எச்சிலை தன் நாவால் உறிஞ்சிக் கொண்டான். அவள் அவனுக்கானவள் மட்டுமே. தன்னை அடைவதற்காகவே பிறந்து வளர்ந்து இறப்பிலிருந்து மீண்டு மறு உருப்பெற்று வந்தவள்.
அவள் கூந்தலைப் பற்றி கழுத்திலும் மார்பிலும் வயிற்றுக் குழிவிலும் மாறி மாறி முத்தமிட்டான். அவள் சதைத் திரட்சி மொத்தத்தையும்  கைகளில் அள்ளி தன் தீராக் காமத்திற்கு இரையாக்கி விடத் துடித்தான். இதோ ..இதோ என் முன்னால் என் மலைநாட்டின் வாசம். பிச்சியும் முல்லையும் நிறைந்த மலைக்காட்டின் மணத்தை இல்லையென செய்யும் களிற்றின் மதநீர் வாசம் கொண்டது இவள் உடல்இவள் தான் என் காடு

பித்துக் கொண்டு அவளை வலுவாய்  இறுக அணைத்த போது பூங்கோதை திடீரென அவன் பிடியிலிருந்து விலகினாள். அவன் வெறியில் மூச்சு வாங்கிக் கொண்டு நின்றான். மீண்டும் அவளை இழுக்க அவன் முற்பட்ட போது பலம் கொண்டு தள்ளினாள். அவன் கைகளை பற்றி இழுத்து தன் அடிவயிற்றில் அழுத்தி வைத்தாள். உள்ளிருந்த உயிரின் துடிப்பு அவன் உள்ளங்கையில் பட்டு அதன் இருப்பை உணர்த்தியது. அந்த கணமே கபிலன் தன் கைகளை விலக்கிக் கொண்டு முழந்தாளிட்டு அமர்ந்து விக்கி அழ ஆரம்பித்தான். கோதையும் தரையில் அமர்ந்தாள். அவள், ரௌத்திரம் வடிந்து குளிர்ந்த துர்க்கையின் மந்தகாசத்துடன், அவனை தன் இரு மார்பகங்களுக்கு இடையில் சாய்த்துக் கொண்டாள். அவன் இன்னும் அழுது கொண்டிருந்தான். அப்போது அவர்களை சுற்றியிருந்த கான்கிரீட் சுவர்களும் கூரையும்  திடீரென மறைந்தன. பூங்கோதையின் தொடைகள்


மேல் சிறு வெண்வேம்பு மலர்கள் விழத் தொடங்கின. மேலே ஆகாயத்தில் கிளிக்கூட்டம் பறந்து கொண்டிருந்ததுவேம்புக் குருத்திலைகளின் வாசம் நிரம்பிய வெளியில் அந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தாள்.

வனதேவதை. கூந்தலே ஆடையாக. கபிலன் அவள் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தான்.

 முற்றும்..


கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...