ஞாயிறு, 3 மார்ச், 2019

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை






தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்றிலும் சோழர்கள் சிறந்து விளங்கினர். அவற்றை ஆவணப்படுத்தவும் செய்தனர். அதனாலேயே பிற்காலச்சோழர்களின் வரலாற்றை நம்மால் விரிவாக கட்டமைக்க முடிகிறது. சோழர்களின் வீரம்,அரசியல் இவை சார்ந்து பல புதினங்களும்  வெளிவந்து உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றோடு சுவாரஸ்யமான சம்பவங்களைப் புனைந்து வாசகரின் கவனத்தை ஈர்ப்பவை.
வரலாறு என்பதே சம்பவங்களின் தொகுப்பு தானே. ஆனால் நல்ல இலக்கியம் சம்பவங்களைப் பார்ப்பதில்லை. அவை நிகழ்ந்த அல்லது நிகழ்த்திய மனிதர்களைத் தான் தேடும். ஒரு பெருங்கோவிலைக் கட்டியவனின் பெயரை வரலாறு பதிவு செய்யும். ஆனால் இலக்கியமோ அப்பெருங்கோவிலை கட்டியவனின் மனதில் அன்று சுழித்தோடிய கவலைகள் ,உவகைகள், ஐயங்கள் இவற்றைப் பதிவு செய்யும்.
கோவிலைக் கட்டியவன் என்றால் மன்னனை மட்டுமல்ல, உளி தட்டிய சிற்பியையும்,சிற்பமாய் உறைந்த ஆடல் நங்கையையும் சேர்த்து தான்.
கங்காபுரம் புதினம் ,அவ்வாறே சோழமன்னன் ராஜேந்திரனின் அகவெளியை பதிவு செய்ய முயல்கிறது. தனிமையும், வெறுமையும்,கைவிடப்படலும் சாமானியனைப் போலவே மாமன்னனையும் அலைக்கழிக்கும் என அது நினைவுறுத்துகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சில வருடங்கள் முன் நான் சென்ற போது எனக்கு முதலில் தோன்றியது இது தான்..”ஏன்?” தஞ்சையைப் போல ஏன்? சற்று சிறியதாய் ஏன்?   இன்னொரு தலைநகரம் ஏன்? தஞ்சை போல இங்கு பெருநகரம் இல்லையே ஏன்? தஞ்சைக்கு ஈடாயும் அதை விஞ்சும் சிற்பங்களையும் பாராட்ட மக்கள் இல்லையே ஏன்?

இது போல நூராயிரம் கேள்விகள் அந்த மாமன்னனின் மனதிலும் தனைமையில் ஓடியிருக்கும். ”தஞ்சையைப் போல” “தந்தையன்ன” என்று உவம உருபுகள் அவனைக் குத்திக் கிழித்திருக்கும். அந்தக் கேள்விகளையும், வலியையும் தான் ஆ.வெண்ணிலா தன் புதினத்தில் நம் முன் வைக்கிறார்.
நாம் மனதில் பெரும் பிம்பமாய் நினைக்கும் எவரையும் சராசரித் தளத்தில் வைத்து பொருத்திப் பார்ப்பதில்லை. பிம்பங்களை வழிபடுகிறோம், எதிர்க்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம்.  ஆனால் பிம்பங்களும் மனிதர்கள் என்பதை மறந்து விடுகிறோம். ஆயிரம் சிடுக்குகள் கொண்ட அவர்கள் மனத்தில் நுழைந்து அம்மனத்தை புரிந்து,அங்கீகரிக்க சராசரி மனம் அல்ல கவி மனம் வேண்டும். கங்காபுரத்தில், ஆயிரம் ஆண்டுகளாய் அலைக்கழியும் ஆற்றாமையை எழுத்தில் வடிக்கிறார் வெண்ணிலா. காலத்தின் துகள்களாய் அந்த அகத்தனிமை நம் மேல் மோதுகிறது.
இரு பெரும் சோழமன்னர்கள்,தந்தை மகனாய் எதிர் எதிரே நிற்கிறார்கள். ராஜராஜன் தன்னை ஒரு பீடத்தில் ஏற்றி கீழ்நோக்கிப் பார்க்கிறான். மதுராந்தகனோ பீடம் விட்டு இறங்கி பார்வையை சமமாக்குகிறான். மக்களின் மன்னனாக தன்னை அறிய விழைகிறான். விழைவதெல்லாம் அரசன் என்றாலும் கைக்கொண்டு விடுமா என்ன? தாமதமாய்  வந்த அரியணை யை  அவன் கடமையாய் ஏற்கிறான். கடமை மட்டுமே எஞ்சினால் உட்புகும் வெறுமை என்பது காதலும்,கலையும் வெற்றியும் போட்டுக் கொட்டினாலும் நிரம்பாத வெறுமை. “தந்தையைப் போல” என்ற அடைமொழி பெய்கீர்த்தியாய் அவன் சிதை வரை சுடுகிறது.

சதுரத்தடிகளாய்   நாவலின் இறுதியில் ஊழ் பேசுகிறது..

“தகுதி இருந்தாலும் சிலருக்கு புகழ் வளராது. அந்தப் புகழில் பங்கெடுக்க யார் யாரோ வருவார்கள். நீ அப்படியொரு துயரத்தின் அடையாளம்..
நீ தப்பித்துக் கொள்ள தலைநகர் மாற்றலாம்,கோயில் கட்டலாம், கங்கையைக் கொண்டு வந்து புனித ஏரி வெட்டலாம். ஆனால் எதுவும் உன் துயர் போக்காது” 

கங்காபுரத்தின் ஒவ்வொரு பக்கமும் இந்த இறுதி வார்த்தைகளை நோக்கித்தான் நகர்கின்றது. வரலாற்று புதினம், ஒரு ஒற்றைப் புள்ளியை நோக்கிக் குவிதல் அத்தனை எளிதல்ல. 



விலகல்களும் உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. சில இடங்களில் வரலாற்றுத் தரவுகளை முன் வைப்பதற்காகவே உரையாடல்களும், சம்பவங்களும் நிகழ்வது போலத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. அதே போல ஆசிரியர் சோழர்கள் மீது வழிபாட்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு பிரமிப்பு மனநிலையில் இருப்பதாய் உணர்ந்தேன். படைப்புக்கு வெளியே அந்த மனநிலை சரி. படைப்பினுள் அது சமநிலையில் விலகல் ஏற்படுத்தும்.  சதுரத்தடிகளின் கட்டுடைக்கும் வார்த்தைகள், வீரமாதேவி போன்றோர் அவ்வப்போது முன்வைக்கும் கூரான விமர்சனங்கள் இவையனைத்தையும் தாண்டி அந்த சமநிலை விலகலை உணர முடிகிறது.

 மற்றொன்று,நாவலில் பெண்களின் பங்கு,மன்னனின் பிம்பத்தை/மன அமைப்பை கட்டியெழுப்பதற்காகவே இருப்பதாய் தோன்றுகிறது. நாவலின் குவிமையம் வேறாய் இருக்கும் போது இதை குறையாய் முன் வைக்க இயலாது. வைக்கவும் முடியாது. என் தனிப்பட்ட ஆதங்கமாய் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

எது எப்படியென்றாலும், புறமல்ல வரலாற்றை செதுக்குவது,அகம் தான் அதை நெய்கிறது என அழுத்தமாய் பதிவு செய்யும் கங்காபுரம் தமிழின் முக்கியமான படைப்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...