ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)


அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில்  இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தேன்.
எலிப்பத்தாயம் என்னை மிகவும் கவர்ந்தது.


படம் ஒரு அண்ணன் மூன்று தங்கைகளை பற்றியது. குறிப்பாக அண்ணன் - இரண்டாம் தங்கை (ராஜம்மை) உறவு கதையில் விஸ்தாரமாக நிகழ்கிறது.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் இவ்விருவரது குணங்களும் கட்டமைக்கப்படுகிறது. இந்த இருவரும் ஒரே வீட்டில் வாழும்  இரு வெவ்வேறு துருவங்கள் என நமக்கு புரிய தொடங்குகிறது. ஆணை மட்டுமே மையப்படுத்திய, அவனது பலவீனங்களை சகித்து, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவனை மீறி செய்ய இயல ஒன்றும் இல்லாமல்,அவன் மட்டுமே உலகம் என கொள்ளும் பெண்கள் நிறைந்த இந்திய குடும்ப சூழலின் துல்லிய ப்ரதிபலிப்புகள்  தான் உன்னி (அண்ணன்) மற்றும் ராஜம்மை.
ஒரு ஆழமான சமூக  விரிவாய்வு செய்யும் அளவு இவ்விரு கதைமாந்தரின் பாத்திரமும் நுணுக்கமான படிமங்களோடு படைக்கப்பட்டுள்ளது.


உன்னி -- உன்னியை போல நிறைய ஆண்களை என் சமூகத்தில் பார்த்துள்ளேன். அவனது இறுக்கமும் அதிகாரமும் வெளிப்படையாய் தெரியும் அவனது சோம்பலையும், கோழைத்தனத்தயும் மறைக்க இயலுவதில்லை. அதற்க்காக அவன் கவலைப்படுவதுமில்லை. சாவகாசமாக பரம்பரை சொத்தின் மூலம் பொழுதை கழிக்கும் அவன், சொகரியங்களுக்காக எந்த நிலையிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுப்பதில்லை; பிரச்சனைகளிலிருந்து நழுவி நழுவி ஓடும் அவனிடம் இருப்பது அவனுக்கான ஆண் ஈகோ மட்டும். தன்னை சார்ந்த பெண்களில் தனக்கு சாதகமான அம்சம் கொண்டவள் ராஜம்மை மட்டுமே என உள்ளூர உணர்ந்த அவன் ஆண் மனம் அவளை தன் காரியங்கள் எல்லாம் செய்யக் கூடிய ஒரு இயந்திரம் போலவே உபயோகிக்கிறான். உன்னியின் பாத்திரம் அவளை வெறும் இயந்திரமாக உபயோகித்தாலும் அவளிடம் உணர்வு சார்ந்த பெருத்த சார்பும் கொண்டதே. தன் உத்தரவுகளை அவளிடம் அலுங்காமல் வெளிப்படுத்தும் அவன், அவளிடம் எல்லா ஆண்களுமே தேடும் தாயின் அரவணைப்பு சொகுசை பெற்றுக் கொள்கிறான். அது அவனை தன் தினசரி வாழ்க்கை அமைப்புக்கு கொஞ்சம் கூட மாறுதல் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லி அவளிடம் அதிகாரம் செய்வதில் தெரிகிறது. ஒரு பசுவை விரட்டுவதில் இருந்து , வெண்ணீர் போட்டு கொடுப்பது வரை அவனக்கு ‘ராஜம்மை ;ராஜம்மை’ மட்டும் தான்.
படம் முழுவதும் தன் தங்கையை தன் சௌகரியங்களுக்காக  ஏவுவதில் அவளிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு சுயநல சிறுவன் போலவே தெரிகிறான்.


ராஜம்மை -- பொறுமை,சகிப்பு, தீராத பணி, குடும்ப சுமை என தன்னை பற்றியே யோசிக்காத அல்லது யோசிக்க இடம் தரப்படாத பெண் தான் ராஜம்மை. காலையில் இருந்து இர்ரவு வரை அவள் செய்ய வேண்டியது எல்லாம் தன் அண்ணனுக்காக, தன் தங்கைக்காக. ஆனாலும் அவள் அதற்க்காக குறைப்பட்டுக்கொள்வதில்லை. ஒரு இடத்தில் கூட யாரிடமும் கடிந்தோ, குறை சொல்லியோ பேசுவதில்லை. வரிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த குறையும் சொல்லாமல் எத்தனை பெண்கள் இந்திய குடும்பங்களில் (நடுத்தர குடும்பங்களில் பொதுவாக)  தங்கள் புதிரற்ற மௌனத்தால் நாட்களை கடத்துகிறார்கள் என்பதற்கு ராஜம்மை ஒரு வகை மாதிரி. ஆனால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுதுவது அவர்களின் மௌனம் அல்ல. அவர்கள் குறையின்றி தங்கள் கடமையாகவே ஆண்களுக்கு பணி செய்கிறார்கள். தனக்கான மனதை அவர்கள் கிட்டதட்ட மறந்தே விடுகிறார்கள். ஆனால் ராஜம்மை ஒரு கட்டத்தில் தன் சகிப்புத்தன்மையை உடைக்கிறாள். ‘எத்தனை நாள் இந்த நரகம்’ என தன் அண்ணனிடம் கேட்கிறாள். இது வெற்றுக் குறீயிடு மட்டுமே. நம் இந்திய ராஜம்மைகளுக்கு  நிச்சயம் விதிக்கப்பட்டவைகளை தாண்டி கேள்வி கேட்டலும் கூட அது வெற்று மன ஆறுதலுக்காக மட்டுமே எனத் தெரியும். குடும்ப சட்டகத்திற்க்குள் அகப்பட்ட எலிகளாய் அடூர் அவர்களை உருவகப்படுத்துகிறார்.
ஆனால் கதை இதோடு முடிவதில்லை. ராஜம்மையின் சாவிற்க்கு பிறகு பயந்து வெளிறும் உன்னியும் ஒரு எலி தான். ஆணின் அடக்குதல் பெண்ணின் அடங்குதல் இரண்டுமே ஒரு வித ஒப்பந்தமே. அடக்குதல் மூலம் தன் பலவீனங்களை மறைக்கும் ஆண், அடங்குதல் மூலம் ஆணை திருப்திபடுத்தி தனக்கானவனாய் அவனை உருவாக்கிக் கொள்ளும் பெண் -  என இது ஒரு விளையாட்டோ எனத் தோன்றும். இந்த அடிப்படையில் ராஜம்மை ஒரு எலி என்றால் அவளின்றி தனித்து விடப்படும் உன்னியும் எலி தான். எலிப்பொறி ஆண் தன்முனைப்பா? பெண் சகிப்பா? அல்லது சமூகத்தின் குடும்ப அமைப்பா?
எதுவானாலும் எல்லா எலிகளும் ஆசைப்பட்டு பொறிக்குள் தானாகவே சென்று விழுகின்றன என்பது தான் உண்மை.

படம் ராஜம்மையின் மரணம் பின் உன்னி பித்தாகி ஒரு இரவில்  கள்ளர்களால் துரத்தப்படுவதோடு முடிகிறது. தப்பி வெளியே ஓடும்  மூன்றாவது தங்கை , சொத்தில் பங்கு கேட்க்கும் முதல் தங்கை இவ்விருவரும் கதையின் மையமாகிய உன்னி-ராஜம்மை பாத்திர வடிவமைப்பிற்க்கு ஒரு பங்கு மட்டுமே. பெரிதாய் எதுவும் சொல்ல அவர்களிடம் இல்லை.

அடூரின் இந்த படம் ஒரு நாவல் போலவே எனக்கு அனுபவம் தந்தது.
காட்சிகளிம் ஊடாகவோ, சம்பவங்களின் ஊடாகவோ நிகழாமல் ,கதை மாந்தரின் வகை மாதிரித் தன்மை (prototype) மூலம் முழுமையடயும் இந்த படம் நிச்சயம் உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று என என்னால் சொல்ல முடியும்.

13 கருத்துகள்:

  1. good review.but you may change the tittle as attractively for marketting purpose..(sorry for this english coment.tamil font not working in my system)

    பதிலளிநீக்கு
  2. அக்கறையான பின்னூட்டதிற்க்கு நன்றி செந்தில்.. குறைந்த ஹிட்டுக்கள்-பின்னூட்டங்கள் என்னை கொஞ்சம் சலிப்படையத்தான் செய்கின்றன.
    ஆனால் தலைப்புகளை விட மார்க்கெடிங் வேறு வழிகளில் நிகழ வேண்டும் என நினைக்கிறேன். என் தளத்திற்க்கான வாசகர்கள் மிக குறைவாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தலைப்பில் மயங்கி உள் நுழைபவர்கள் அல்ல. மாறாக அவர்களை தேடி நான் எனது தளத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.அதை யோசித்து கொண்டு தான் இருக்கிறேன். பார்ப்போம். :)

    பதிலளிநீக்கு
  3. நல்ல பரிந்துரை. பார்த்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல திரைப்பார்வை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. அடூரின் 'நிழல்குத்து'ம் மிகச் சிறந்த படைப்பு. உங்கள் பதிவை மார்க்கெட் செய்ய ஒரு சிறந்த வழி. மற்ற பிரபல பதிவர்களின் பதிவில் பின்னூட்டம் போடுங்க, இன்ட்லியில் நிறைய பேருக்கு ஃபாலோயராக மாறுங்கள். அப்புறம் மற்ற பதிவர்களின் பதிவிற்கு ஓட்டு போட்டா, தானா உங்க பதிவுகளுக்கு ஓட்டு விழும்...

    பதிலளிநீக்கு
  6. நன்றி பிரசன்னா.. நிழல் குத்து மற்றும் மதிலுகள் இரண்டுமே நான் பார்க்க வேண்டும் என நினைக்கும் படங்கள். இரண்டுக்கும் லிங்க் இருந்தால் அனுப்பி வை. மார்க்கடிங் விஷயத்தில் அதிக கவனம் கொள்ள முடிவு செய்துள்ளேன். பார்போம். :-)

    பதிலளிநீக்கு
  7. நல்ல திரைப்பார்வை. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. Very good review.You have used powerful words to express the feelings you got.I felt like watching the movie/or reading the novel.Very good

    பதிலளிநீக்கு
  9. நல்ல படம் நண்பரே
    இந்த படமும் நிழல்குத்தும் அடூரின் முத்திரை படங்கள்.சிறப்பான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  10. மிக சிறந்த விமர்சனம். எழுத்தாளர் ஜெயமோகன் இணையத்தளத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. http://www.jeyamohan.in/73712

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...