திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தமிழ் சினிமா - 50 முக்கிய திரைப்படங்கள் (என் பார்வையில்)

தமிழ் சினிமா தன்  பயணத்தை 1931 இல் இருந்து தொடங்கியது (பேசும் படங்கள்). அன்று முதல் இப்போது வரை சினிமா தான் நம் கலையாக, சமூக சிந்தனையை மாற்றும் சாதனமாக, கனவாக, அரசியலாக, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை எல்லாவற்றிலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிக்க முடியாமல் தன் இருப்பை அசைக்க முடியாமல் செய்துள்ளது. நான் சினிமாவில் இலக்கியம் போல அதிகம் என் கேள்விகளுக்கான பதிலை, நான் விரும்பும் அனுபவத்தை அடைந்ததில்லை. ஆனாலும் என்னையும் மீறி சினிமா என் கனவிலும் சினிமா தான் அதிகம் வந்துள்ளது. உங்களைப் போலவே.

சினிமா ரசிகன் என்ற வரையில் எனக்கு பிடித்த தமிழ் சினிமா என 50 படங்களை வரிசைப்படுத்த தோன்றியது. எனவே தான் இந்த பட்டியல். எனது அனுபவத்தோடு தமிழில் சினிமா அதன் கலை வடிவத்தை எதோ ஒரு வகையில் பூர்த்தி செய்ய முயன்ற படங்கள்,கவனிக்கதக்க படங்கள் மற்றும்  அந்தந்த காலகட்டத்தில் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்க்கு எடுத்து சென்ற படங்களை குறி வைத்து இந்த பட்டியல்.
ரசனை சார்ந்த பட்டியல் என்பதால் இத்தகு பட்டியல்கள் எப்போதும் எல்லாரையும் திருப்திப்படுத்துவதில்லை. ஆனாலும் அது சார்ந்த வசீகரம் எல்லாருக்கும் உண்டு. எனக்கும் உண்டு.

1) மீரா -- 1945
படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சங்கீத முக்கியத்துவத்தை புறந்தள்ளி தமிழ் சினிமாவை பார்க்க முடியாது.
2)சந்திரலேகா -- 1948-- ஹாலிவுட் பாணி பிரம்மாண்டம். இப்போது பார்த்தலும் ’எப்படியா எடுத்தாங்க’ என தோன்றும்
3)பராசக்தி--1952 --திராவிட இயக்கத்தின் பிரச்சாரத்தை வலிமையாய் முன்வைத்த படம்.
4)அவ்வையார் -- 1953-- கே.பி. சுந்தராம்பாள் , பிரம்மாண்டம் இந்த இரண்டும் இப்படத்தின் சரித்திர முக்கியத்துவத்திற்கான காரணம்.
5) அந்த நாள் -- 1954-- குரோசவா வின் ‘ரோஷோமன்’படத்தை தழுவி எடுத்ததாக கூறப்படும் இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய பரிசோதனை முயற்சி.
6) ரத்தக்கண்ணீர் --1954--சமூக அவலங்களை தனி மனித தன்முனைப்பை ராதாவின் பகடி மூலம் வெளிப்படுத்தும் படம்.
7)மதுரை வீரன் -- 1956 -- படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சமூக முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது.
8)சிவகங்கை சீமை -- மருது சகோதரர்கள் பற்றிய படம். film noir எனும் வகையை எங்கங்கே தொடுகிறதோ என தோன்றும். கமலாவின் நடனம், இசை, துயரம் என பல எல்லைகளில் நிரூபிக்க முயன்று பெருமளவில் கவனம் பெறாமல் போனது. காரணம் வீரபாண்டிய கட்டபொம்மன் அதே வருடம் வந்ததே. கட்டபொம்மனுக்கு கிடைத்த cult status இப்படத்திற்கும் கிடைக்காதது வருத்தம். என் தட்டில் வைத்தால் கட்டபொம்மனை விட இதை சிறந்த படமாக கூறுவேன்.
9) பாசமலர் -- 1961-- படத்தின் அதிநாடகத்தன்மையை மீறி உறவு சிக்கல்களை தமிழ் சூழலில் அழுத்தமாய் சொன்ன படம்.
10)நெஞ்சில் ஓர் ஆலயம் -- 1962 -- தமிழ் சினிமாவிற்கு வேறு பரிமாணத்தை கொடுத்த படம். மூன்றே கதை மாந்தர்கள், ஒரு கதைக்க்களம், சிறுகதை போன்ற திரைக்கதை.
11) கர்ணன் -- 1964-- மகாபாரத கதை மாந்தரில் முக்கிய ஆளுமை கர்ணன் பற்றிய காவிய நடை கொண்ட படம்.
12) காதலிக்க நேரமில்லை -- 1964-- இன்றும் இளமை துள்ளும் மனதிற்க்கு எதோ ஒரு வகையில் நெருக்கம் தரும் நகைச்சுவை படம்.
13) திருவிளையாடல் -- 1966 -- காவிய நடை பக்தியில் இசை நடிப்பு என எல்லாம் பொருந்தி வந்து அதனளவில் முழுமை அடைய முயன்ற படம்.
14) தில்லானா மோகனாம்பாள் -- 1968 -- மூல நூல் படிக்கவில்லை. ஆனாலும் படம் ஒரு நல்ல பழைய கிளாசிக் நாவல் படிக்கும் அனுபவம் தரும்.
15)முஹம்மது பின் துக்ளக் -- 1971-- அரசியல் பகடியில் இன்று வரை தமிழில் இதை மிஞ்சி படம் இல்லை என்பது என் கருத்து.
16) அரங்கேற்றம்-- 1973-- சமூக ஒழுக்க நெறிகள் குறித்து நாடகபாணியில் சாட்டயடியாய் கேள்விகளை எறிந்த படம்.
17) பதினாறு வயதினிலே--1977-- தமிழ் சினிமாவை கிராமத்திற்க்கு அழைத்து வந்த படம். வலுவான திரைக்கதைகாக இன்றும் பேச வைக்க்ம் படம்.

18) அழியாத கோலங்கள் -- 1979 -- நாடகத்தன்மை இல்லாமல்  விடலை பருவ கனவுகளை சொன்ன படம்.
19) பசி -- 1979 -- படம் பார்க்கவில்லை; ஆனாலும் சமூக அக்கறையில் தட்டிக்கழிக்க முடியாத படமாகிறது.
20)உதிரிப்பூக்கள் --1979-- வசனங்கள் குறைந்த அமைதியில் கூட தீயாய் சுட முடியும் என domestic violence குறித்து வந்த முக்கியமானபடம்.
21) நண்டு-- 1981-- நெடு நாள் முன் பார்த்தது. சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொல்ல்ம் படம்.
22) தில்லு முல்லு -- 1981-- எத்தனை முறை பார்த்தாலு சலிக்காமல் சிரிக்க வைக்கும் படம்.
23) சலங்கை ஒலி-- 1983-- மறக்க முடியாத இசை, வலுவான திரைக்கதை.
24)ஆண்பாவம் -- 1985 -- இயல்பான மிக எளிமையான நகைச்சுவை மூலம் மற்ற பல படங்களை தாண்டி செல்லும் படம்.
25) சிந்து பைரவி -- 1985 -- விடுகதை போல் உறவு சிக்கல்களில் விளையாடும் படம். மறக்க முடியாத இசை.
26) சம்சாரம் அது மின்சாரம்--1986 -- மேடை நாடகபாணி படமென்றாலும், நல்ல திரைக்கதை மூலம் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்காத படம்.
27)நாயகன் -- 1987-- Godfather தழுவலாய் கூறப்படும் நாயகன், வேறுபட்ட  கதைக்களம், கதை மாந்தர் மூலம் கவனத்தை பெரிதும் ஈர்த்த படம்.
28) வேதம் புதிது -- 1987 -- முக்கியமான சமூக கேள்விகளை வீசி எறிந்த படம்.
29) வீடு-- 1987-- நடுத்தட்டு மக்களின் கனவுகளையும் அது எவ்வளவு சாதரணமாக வீசி எறியப்படக்கூடும் என்பதையும் அழுத்தமாய் சொன்ன படம்.
30) சந்தியா ராகம் -- 1989-- தியேட்டரில் ரிலீஸானதா என்று கூடஎனக்கு  தெரியாது. ஆனாலும் யதார்த்த பாணி நடுத்தர மக்கள் பிரச்னையை சொன்ன முக்கியமான படம். அசோகமித்திரன் சிறுகதை படித்த உணர்வு ஏற்படுத்திய படம்.
31) வருஷம் 16--1989-- ஒரு அழகான குடும்பம் உறவு சிக்கல்களால் சிதறுவதை வலுவான திரைக்கதை மூலம் சொன்ன படம்.
32) ஒரு வீடு இரு வாசல் -- 1990-- அனுராதா ரமணனின் சிறுகதையின் திரைப்பட ஆக்கம். கதை சொல்லலில் இரு கதைகளை ஒரு கோட்டில் கட்டும் யுத்தியை கையாண்ட படம்.
33)ரோஜா -- 1992-- இந்திய அளவில் கவனம் ஈர்த்த படம். கதை களம், புது வகை இசை என தமிழ் சினிமாவின் முக்கிய முயற்சி.
34) கருத்தம்மா--1994--பெண் சிசுக் கொலை பிரச்னையை பிரச்சார நெடி இல்லாமல் நல்ல திரைக்கதை மூலம் சொன்ன படம்.
35) இருவர் --1996 -- தமிழின் மிக குறைவான அரசியல் வரலாற்றுப் படங்களுல் ஒன்று. திரைக்கதையில் இன்னும் தெளிவு இருந்திருந்தால் மிக சிறப்பான படமாகி இருக்கும்.
36) ஹே ராம்-- 2000- கோட்சேவின் உளவியல், காந்தியின் விமர்சனம் பற்றிய கதையை  சில புதிய சினிமா உத்திகளோடு சொன்ன படம்.
37) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் -- 2000-- தமிழ் கதை முறையில் ‘sense and sensibility' நாவலின் திரைப்பட ஆக்கம்.
38) பாரதி-- 2000 -- தமிழின் முக்கிய கவிஞரான பாரதியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
39)அழகி-- 2002-- வாழ்க்கை எங்கு சென்றாலும் முள்ளாய் அப்பபோது தைக்கும் முதல் காதலை மையமாய் கொண்ட படம்.
40) கன்னத்தில் முத்தமிட்டால்-2002-- ஈழ பிரச்னையை கையாண்ட  மிக சொற்ப படங்களுல் ஒன்று.
41) அன்பே சிவம் -- 2003 -- Planes Trains and Automobiles படத்தை போல் கதைப்போக்கு கொண்ட படம். மனிதாபிமானம்,மதம், கமியூனிசம் இவற்றோடு விவாதம் நிகழ்த்தும் படம்.
42) இயற்கை-- 2003-- நெய்தல் நிலத்தில் நிகழும் கதை. ஒரு சங்கப்பாடலை போல, ஒரு பழைய classic novel போல கதை சொன்ன படம்.
43)காதல்-- 2004-- யதார்த்த பாணியில் காதல் அது சார்ந்த சமூக சிக்கல்களை காட்டிய படம்.
44) விருமாண்டி -- 2004 -- தூக்கு தண்டனை குறித்த விமர்சனம் கொண்ட படம். ஒரு சம்பவம் ஒவ்வொருவர் நோக்கில் வேறுபட்ட சித்திரங்களாய் பதிவதை கதை சொல்லும் முறையாகக் கொண்டது.
45) ஆட்டோகிராஃப் --2004-- காதல் வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் நிகழக்கூடும் என்பதை மையமாக்கிய படம்.
45)புதுப்பேட்டை-- 2006 -- 'City of Gods' படத்தின் சாயல் கொண்டகூலிப்படை வாழ்க்கையை கதைக்களமாய் கொண்ட படம்.
46) வெயில் --   2006 --  வீடுகளில் நிகழும் வன்முறை ஒருவனது வாழ்க்கையை சிதறடிக்கும் கதை.
47)இம்சை அரசன் 23ஆம் புலிகேசி -- 2006 -- காமிக்ஸ் கதை முறையில் சரித்திர கதை. சமகால அரசியலை நகைச்சுவையில் விமர்சனம் செய்த படம்.
48) சுப்ரமணியபுரம் -- 2008-- உறவுகளை  துரோகத்தின், சந்தர்ப்பத்தின் கூரிய கத்தி குத்தி கிழிப்பதை சொல்லும் படம்.
49) ஈரம் -- 2009 -- தமிழில் வந்த பேய்ப்படங்களில் நல்ல திரைக்கதையுடன் வந்த ஒரே படம்.
50)  நான் கடவுள் -- 2009--  ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலின் சாயலுடன் வந்த படம். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட,கவனிக்கப்படாத  உலகத்தை காட்டிய படம்.

பின்னிணைப்பு -- இதில் நான் பட்டியலில் இருந்து 50 படங்கள் என்று குறுக்கிக் கொண்டதால்  நீக்கிய படங்களும் உண்டு ;

சபாபதி (1941),மிஸியம்மா (1955),வீரபாண்டியக்கட்டபொம்மன் (1959),தேன் நிலவு (1961),ஆயிரத்தில் ஒருவன் (1965), பாமா விஜயம் (1967),ஞான ஒளி ( 1972), உயர்ந்த மனிதன் (1968),அவள் ஒரு தொடர்கதை (1974),அவள் அப்படித்தான் (1978), நிழல் நிஜமாகிறது ( 1978), கன்னிப் பருவத்திலே (1979), இன்று போய் நாளை வா ( 1981),மண்வாசனை (1983),முந்தானை முடிச்சு (1983),புரியாத புதிர் (1990),மகளிர் மட்டும்(1994),கற்றது தமிழ்(2007),பசங்க(2009) , ஆயிரத்தில் ஒருவன் (2010)

இன்னும் பார்க்காததால் சேர்க்காத படங்களும் சில  உண்டு.

9 கருத்துகள்:

  1. முள்ளும் மலரும் மிக முக்கியமான படம். ஆனால் ஏனோ அதை நான் இன்னும் முழுதாக பார்க்கும் வாய்ப்பு இல்லை. பட்டியலில் நிச்சயம் அதுவும் ஒரு படமாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. குறிப்பிட்டதற்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மௌன ராகம், அழகன், உன்னால் முடியும் தம்பி இதெல்லாம் விட்டுடீங்களே...

    பதிலளிநீக்கு
  3. இனியாள், பின்னூட்டத்திற்க்கு நன்றி. மௌன ராகம் மகேந்திரனின் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தை போலவே அமைந்த படம் என்பதால் அதன் மேல் அதிக அபிப்ராயம் இல்லை. அழகன், உன்னால் முடியும், வானமே எல்லை போன்ற பாலசந்தர் படங்கள் தனிப்பட்ட அளவில் என் மனதிற்கு நெருக்கமான படங்கள். ஆனாலும் 50 படங்களில் வரிசையில் இடம் தர தோன்றவில்லை. காரணங்களை பட்டியல் இட்டால் பின்னூட்டம் ரொம்பவும் நீண்டுவிடும் :(

    பதிலளிநீக்கு
  4. பீரயும் ஓயினையும் கலந்து ஒரு காக்டைலாக குடிப்பது எனக்கு பிடிக்கும்..உங்களுக்கு பிடிக்காமலிருக்கலாம்....இந்த பட்டியல் தொகுப்புகளெல்லாம் அப்படித்தான்.... பதிவரின் ரசனையை காட்டுவது....அதை படித்து விட்டு இந்த படம் எங்கே ?அந்த படம் எங்கே? என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது........

    இருந்தாலும் நீங்க "புதிய பறவை" "தவமாய் தவமிருந்து" "கற்றது தமிழ்" ஆகிய படங்களை சேர்க்காதது எரிச்சலை ஏற்படுத்துகிறது.....

    பதிலளிநீக்கு
  5. ராஜாண்ணா!! வெகு நாட்கள் கழித்து உங்கள் பதிவை படிக்கிறேன். முக்கியமான திரைப்படங்களை இணைத்து இருந்தாலும், இன்னும் நிறைய படங்களை விட்டு விட்டீர்கள். முதல் தமிழ் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் படங்களை பற்றி நீங்கள் சொல்லவே இல்லை. அவரின் படங்கள் அன்றைய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பறியாதவை.

    மேலும் அக்ரஹாரத்தில் கழுதை, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், தண்ணீர் தண்ணீர், பேசும் படம், காதலிக்க நேரமில்லை (தமிழின் முதல் Chick Flick), ஏழாவது மனிதன் ஆகியனவற்றையும் சேர்த்து இருக்கலாம். அக்ரஹாரத்தில் கழுதை வந்த போது அந்த படத்தை ஒடுக்க ஒரு பெரிய 'லாபி' நிகழ்ந்ததாம். என்ன தான் என்.எப்.டி.சி தயாரித்து இருந்தாலும், அதை டி.டியில் கூட ஒளிபரப்பு செய்யப்படவில்லையாம்.

    நல்ல வேளை. "எங்க தளபதியோட 'கில்லி' லிஸ்டில் எங்கே" என்று பின்னூட்டம் வரவில்லை...

    பதிலளிநீக்கு
  6. >>கனவு துரத்தி.
    பின்னூட்டத்திற்க்கு நன்றி.
    எனக்கு பீர்,ஒயின் இரண்டுமே பழக்கம் இல்லை.
    அதனால் சொல்லத் தெரியவில்லை. மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் கற்றது தமிழ் தவிர மற்ற இரண்டும் எரிச்சல் தரும் அளவு பெரிய விடுபடல் இல்லை என்பது எனது ரசனை.
    கற்றது தமிழ் விடுப்பட்ட படியலில் இணைத்தும் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  7. >> பிரசன்னா..
    நன்றி பிரசன்னா.
    தியாகராஜ பாகவதர் பற்றியும் அவரது சமூக தாக்கம் பற்றியும் அதிகம் எனக்கு தெரியாது. ஆனால் நான் படித்த வரை அவர் ஒரு வித அக்கால சூழலுக்கு உரிய மாஸ் ஹீரோவோ என்ற எண்ணம் உண்டு, அவரது படங்கள் ஒன்றிரண்டு கொஞ்சம் பார்த அளவு அவை காலத்தை தாண்டி நிற்க கூடியவை இல்லை எனத் தோன்றியது. சங்கீத அளவில் இருக்கலாம். அதில் எனக்கு அதிக ஞானம் இல்லை :-(

    அக்ரஹாரத்தில் கழுதை - பார்க்கவில்லை. ஆனால் ஜெயமோகனின் கட்டுரை படித்த போது அந்த படம் குறித்த சந்தேகங்கள் எழுந்தன. அதனால் அதை விட்டு விட்டேன்.
    தண்ணீர் தண்ணீர் ஒரு ஆர்ட் ஃபில்மாக எடுத்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பதற்காகவே எடுத்தது போன்ற வகையாகவே கருதுகிறேன்.
    ஏழாவது மனிதன், சிறை இரண்டு படங்களும் கேள்விபட்டு உள்ளேனே தவிர பார்த்ததில்லை. அதனால் தான் சேர்க்கவில்லை.

    பேசும் படம் , முள்ளும் மலரும் இரண்டும் முக்கிய விடுபடல்கள் தான். (சே.. எப்படி உட்டு போச்சு அதுவும் பேசும் படம் நான் முதல்ல தயார் பண்ண லிஸ்ட்ல இருந்துச்சு ) :-(

    பதிலளிநீக்கு
  8. >> பிரசன்னா (பிற்சேர்க்கை) காதலிக்க நேரமில்லை பட்டியல்ல இருக்கு பிரசன்னா.. கவனிக்கலையா?

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...