திங்கள், 29 மார்ச், 2010

அங்காடித் தெரு -- யானையும் எறும்பும்


வசந்தபாலனின்  ’வெயில்’ கொடுத்த எதிர்பார்ப்பில் ஜெயமோகனின் பப்ளிசிட்டியில் :) நிச்சயம் ஒரு நல்ல படமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடனே ’அங்காடித் தெரு’ பார்க்க சென்றேன். நல்ல படமா? நிச்சயமாக.  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? கண்டிப்பாக.  ஆனால் ‘ஆனால்’ என்ற ஒரு  இழுவை  படம் முழுதும் என்னை தொற்றிக் கொண்டே தான் இருந்தது.  காரணங்களை போகிற போக்கில் சொல்கிறேன். தமிழ் சினிமா மேல் நம்பிக்கை தரும் மற்றுமொரு படமாக அங்காடித் தெருவை நான் மட்டும் இன்னும் நிறைய பேர் சொல்லத் தான் போகிறார்கள். களம், கதை மாந்தர் ,திரைக்கதை எல்லாமே முதிர்ச்சியுடன் மிகுந்த குவிப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் நிஜமான கரிசனத்துடன் வந்த சில தமிழ்ப்படங்களில் ‘அங்காடித் தெரு’ வும் ஒன்று. நாம் கடை வீதியில் மிக வேகமாக கடக்கும் போது   நம்மை  நிறுத்தி இதோ பார் இந்த மனிதர்களை இவர்கள் வாழ்க்கை எத்தனை நெருக்கடியானது, அவர்கள் வாழும் இந்த கடைத் தெரு போலவே என்று ஒவ்வொருவர் பற்றியும் கதை சொல்கிறது.  நீ ப்ளு கலர் சுரிதார் கேட்ட்யே அந்த பொண்ணு காசுல தான் அவ அப்பா மருந்து வாங்குராரு. ஸ்டோன் ஜீன்ஸ் கேட்ட பையன் காலைல இருந்து  50-60 கிலோ மூட்டைகளை குடோன்ல எறக்கிட்டு ஷிஃப்டுல வந்தான். நீ ஷிஃபான் சாரி கேட்ட பொண்ணு இந்தா பத்து நிமிஷம் முன்னாடி தான் அவ மார அவ முதலாளி தடவுனான்  இந்த ப்ளாட்பார்ம்ல  கர்ச்சீப் விக்குற பெரியவரு 15 வருஷமா இங்க தான் பொழப்பு நடத்துராரு. அவுரு பொஞ்சாதி கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியில ஊசி மாத்தி போட்டு செத்து போச்சு. கிளிப்பு விக்குற பொண்ணுக்கு போன ஜனவரில ரோட்டோரமா படுத்து இருக்கும் போது லாரி அடிச்சு ரெண்டு காலும் போயிடுச்சு என எல்லாம் நமக்கு தெரிந்த கதைகள் ஆனால் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்பவை. காசு இல்லை என்றாலும் கலர் கலராய் கனவுகள் வராமலா போய்விடும்? வ்ந்த கனவுகளுக்கு என்ன விலை தர? கனவுகளின் நிழலாய் யதார்த்தம் பயமுறுத்தும் போது எவ்வளவு சமரசங்கள் மனசாட்சியை உறுத்தாமல் நிகழும்?  என கேள்விகளை நம் முன் இறைக்கிறது இந்தப் படம்.  ரங்கனாதன் தெருவில் இறைந்து கிடக்கும் பொருட்கள் போலவே படம் நெடுகிலும் கேள்விகள். யதார்த்ததை தொலைக்காத முகங்கள் படத்தின் பெரும் பலம். அதிலும் அந்த கதாநாயகி அத்தனை உயிர்ப்பு அவளிடம்.


ஆனால்..
படம் முடியும் போது ஒரு முதிர்ந்த அழுத்தமான படம் பார்த்து விட்டு வரும் போது கிடைக்கும் அனுபவம் என்னிடம் இல்லை. காரணம் நிறைய. மிக முக்கிய காரணம்  மிகை உணர்ச்சியும் நாடகத்தனமும் படம் முழுதும் விரவியிருக்கின்றன. ‘இங்க பாத்தியா இவன் எவ்ளோ பாவம்னு இங்க பாத்தியா இவன் எவ்வளவு கஷ்டத்துலயும் நம்பிக்கயோட இருக்கானு’ என்பது போல ஒரு வித சொல்லிச் சொல்லி காண்பிக்கும் அணுகுமுறை நம்மை படத்திலிருந்து விலக்குகின்றன.  போகிற போக்கில் சொல்லப் படவேண்டிய வாழ்க்கை துணுக்குகள் கூட அத்தனை அதி உணர்ச்சியுடன் அரங்கேறுகின்றன. உ.ம் - உயரம் குறைந்த மனிதரும் அவர் மனைவியும். இதில் அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் குறைபாட்டுடன் பிறக்கிறது. அதற்க்கு அந்த பெண் தரும் விளக்கம் வேறு. குறையுடைய மனிதனுக்கு குறையுடன் குழந்தை பிறக்கும் என்ற தேவையற்ற ஒரு செய்தி தான் இந்த அதி உணர்ச்சி கதையால் கிடைக்கும் ஒரே நன்மை.  பிண்ணனி இசை பெரும் பலவீனமாக நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் இசை பின்னால். நாடகத்தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் நோக்குடன். ஹ்ம்ம்.. ரொம்பவே இளையராஜாவை மிஸ் பண்றேன் :(


குறைகளை மீறி அங்காடித் தெரு என்னை கவர்ந்த படம். காரணம் அது துணிவுடன் முன் வைக்கும் முதலாளித்துவ பிரச்சினைகள் மட்டுமல்ல. அது காட்டும் சராசரிகளின் கனவுகளால் அவர்கள் சமரசஙகளால்.  இவை எல்லாவற்றையும் விட அதன் அடி நாதமாய் இருக்கும் மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. அந்த பிளாட்பார பாய் சொல்வது போல  ‘ மனுசன  நம்பி கடை போட்டு இருக்கேன், பத்து வருஷமாச்சு. இன்னும் நம்பிக்கை குறையல’ இந்த நம்பிக்கையுடன் தான் மானுடம் இயங்குகிறது. யானை வாழும் காட்டில் தான் எறும்புகளும் வாழும் ஒன்றுக்கு ஒன்று துணையாய், நம்பிக்கையுடன். இதே செய்தியுடன் படம் முடிகிறது. மிக அழகாய்.
பி.கு: அட இப்போ எல்லா படத்துலயும் நம்ம விக்கிரமாதித்தியன பாக்க முடியுது நம்ம கவிஞர் கொஞ்ச நாள்ல ஸ்டார் நடிகர் ஆகிடுவார் போல :-)

9 கருத்துகள்:

 1. நான் இன்னும் அக்காடி தெரு பார்க்கவில்லை. விரைவில் பார்க்க இருக்கிறேன்.வசந்த பாலன் தரமான படங்கள் தருகிறார்.இன்னும் சிறப்பாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாமே என்று பார்த்த அனைவரும் சொன்னார்கள்.உங்களுடைய விமர்சனம் அருமை..

  பதிலளிநீக்கு
 2. நன்றி அஷிதா! நிச்சயம் படம் பாருங்கள்.. நிச்சயம் கவனிக்கபட வேண்டிய முயற்சி.. பாத்துட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுனு.. :)

  பதிலளிநீக்கு
 3. vimarsanam nandru. Naan innum padam parka villai sani iravu sellalam yendru irrukiren.

  Parthu vittu innum thelivana yen kannottathi tharukiren. Athu varai indha Nandrigal mattum ungalikku.

  பதிலளிநீக்கு
 4. நன்றி குட்டி சாத்தான்... (உங்க பேரு என்ன?? இருந்தாலும் குட்டி சாத்தான் கூட நல்லா தான் இருக்கு :-) ) நிச்சயம் பாத்துட்டு சொல்லுங்க.. பேசலாம்..

  பதிலளிநீக்கு
 5. எனக்கு "வெயில்" பிடித்திருந்தது. அதனாலே அங்காடி தெருவும் பார்க்கலாம் என்றிருந்தேன். உங்கள் விமர்சனம் என் ஆர்வத்தை கூட்டியிருகிறது.

  பதிலளிநீக்கு
 6. >ஜான்..நிச்சயம் உங்களுக்கு படம் பிடிக்கும்.. கட்டாயம் பாருங்க.. (இன்னும் பாக்குலியா?? ஏன்???)

  பதிலளிநீக்கு
 7. தல... சுருங்கச் சொன்னாலும் நச்சுன்னு சொன்னீங்க. ஆனால் ஒரு விஷயம். சினிமாவே மிகை நாடும் கலை தான். மேலும் எதையும் மிகைப்படுத்தி சொன்னால் தான் மக்களிடம் சீக்கிரம் சென்றடைகிறது. அந்த மனோபாவத்தை நம் சினிமா மகானுபவார்கள் நம் மக்களின் மனதில் விதைத்து விட்டனர். போகிற போக்கில் சொன்னால், மக்களுக்கு புரிவதில்லை. போகிற போக்கில் சொல்லப் படும் காட்சிகளின் உண்மையான விளக்கம், பார்க்கும் பார்வையாளனை ஒரு வேளை அவன் அந்த படத்தை மறுவாசிப்பு செய்யும் போது தான் சென்றடைகிறது. இந்த அனுபவம் எனக்கும் நேர்ந்து உள்ளது.

  அதே போல் ஒரு படத்தைப் பற்றிய ஒருவரது பார்வைகளும் வேறுபடலாம். உங்களுக்கு சிவராமன் அண்ணனைத் தெரியும் என்று நினைக்கிறேன் (நம்ம காலேஜ் தான். உங்களுக்கு ஜூனியர், எனக்கு சீனியர்). நான் ‘வெயில்’ பார்த்து விட்டு ஆஹா ஒஹோ என்று சொல்லிக் கொண்டிருக்க, அவர் சாதாரணமாக அதை ஒரு ‘பழிவாங்கும் நாடகம்’ என்று சொல்லி விட்டு போனார். It happens...

  பதிலளிநீக்கு
 8. >பிரசன்னா.. உன் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். மிகை உணர்ச்சி குறித்தும், சொல்லி சொல்லி புரிய வைக்கும் முறை குறித்தும் தமிழ் இயக்குனர்கள் மிக நன்றாக உணர்ந்தே deliberate ஆக அதை செய்கிறார்கள். ஆனால் அங்காடி தெருவில் சில இடங்களில் மிகை உணர்ச்சி 80களில் வந்த படங்கள் அளவு கூடி இருக்கிறதோ என்ற ஐயம். இந்த பாணியை கைவிட முடியாது என்றாலும் வசந்த பாலன் போன்ற இயக்குனர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் கழற்றி விட வேண்டும் என்பது என் ஆசை.
  (விகடன்ல 47 மார்க்காமே அங்காடி தெருவுக்கு.. நல்ல பப்ளிசிட்டி. நல்ல விஷயம்)
  வெயில் நிச்சயம் நாடகத்தனம் நிறைந்த படம் தான். ஆனால் நீ குறிப்பிட்டது போலவே தமிழ் சினிமா சூழல் அதற்க்கு ஒரு காரணம். அதை விட முக்கியமாய் பொதுவாகவே நம்மவர்கள் (நான் முதல் கொண்டு) வாழ்வின் யதார்த்ததிலேயே அதிக உனர்ச்சிவசப்படுபவர்கள். நம் மக்கள் வாழ்க்கையை சொல்லும் போது தானாகவே நாடகத்தனம் கூடி விடும் என்றே தோன்றுகிறது.
  சரி விடு சிவராமன நானும் நீயும் சேர்ந்து convince பண்ணுவோம் இல்ல confuse பண்ணிடுவோம் :-)
  ( அவனுக்கு என் ப்ளாக் பத்தி இன்னும் அறிமுகமே செய்யலே :-( )

  பதிலளிநீக்கு
 9. //
  ( அவனுக்கு என் ப்ளாக் பத்தி இன்னும் அறிமுகமே செய்யலே :-( )
  //

  அவரு கோவால ஏதோ ஆராய்ச்சி பண்றேன்ற பேர்ல இந்த பக்கம் எட்டி பாக்குறதே இல்ல. என்னோட ப்ளாக்கை பத்தி பல தடவை சொல்லியும் அந்தாளு வரலை. நீங்க சொல்லி வந்துற போறாராக்கும்... :D

  பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...