செவ்வாய், 23 மார்ச், 2010

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

என் சுவர்களுக்கு எப்போதோ  கண்கள் முளைத்து விட்டன.  ஆமாம். இப்போதெல்லாம் எங்கும் தனிமைக்கான வெளி இருக்கிறதா என்ற சந்தேகம் முளைக்கிறது. நான் கவனிக்கபடுகிறேன் என்ற சின்ன பயம் எல்லோருக்கும் கொஞ்சமாய் இருக்கத் தான் செய்கிறது.
மற்றவர்கள் வாழ்க்கை மேல் நம் எல்லோருக்கும் அத்தனை  ஆசை. அவன் என்ன செய்கிறான்?  இவனுக்கு என்னை விட அதிக சம்பளமா? இவளது கணவன் யார்? இன்னும் இன்னும். தோண்டி தோண்டி பேசிக் கொண்டே இருக்கிறோம்.


இந்த கிசு கிசு மனப்பான்மையை ஊடகங்கள் அருமையாக ஊதி ஒரு மாபெரும் வ்ண்ண பலூனாக பறக்க விட்டுள்ளன. உள்ளே காற்றுக்கு பதில் சேறு. ஊடகம் என்பதே காமம் வன்முறை ஆசை இவற்றின் பிரதிநித்துவமோ என்று சில சமய்ம் எனக்கு தோன்றுவதுண்டு.  ஆனால் அது அப்படி மட்டும் அல்ல. ஊடகங்கள் மக்கள் பிரதிநிதியும் கூடத்தான். மக்களின் பிம்பம் அவை.

 பிரபு தேவா - நயனோடு உள்ள உறவு குறித்து நமக்கு தான் எத்தனை அக்கறை.
டைகர் வுட்ஸ் காதலிகளின் எண்ணிக்கை குறித்து எத்தனை பெரிய விசாரனை எத்தனை பேர் இரவு பகல் பாராமல் செய்தி திரட்டினர். அவர் இனி நிம்மதியாய் சிறுநீர் கழிப்பாரா என்பதே சந்தேகம் தான்.

ஒரு செய்திக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் அவனது அந்தரங்கத்திற்க்குள் எந்த அளவு நாம் நுழைய வேண்டும் இவை குறித்த எந்த முதிர்வும் நம்மிடம் இல்லை.

நம் நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறோம்.
கோடி கோடியாய் பணம் தருகிறோம்
அவர்கள் படுக்கையை யாரோடு எல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று விவாதம் செய்கிறோம்.
வேசி முத்திரை குத்த அல்லது அவரது படுக்கையறை காட்சிகளை வலையில் தேட துடிக்கிறோம்.
கோயில் கட்டுகிறோம்.
கற்பு பற்றி பேசினால் செருப்பு மாலை போடுகிறோம்.
முதல்வர் ஆக்கி விடுகிறோம்.
( ஹ்ம்ம்.. அவர்கள் நடிப்பு பற்றி மட்டும்  இதே அளவு அக்கறை கொண்டு இருந்தோமானால் உலக சினிமா நம்மை தேடி இருக்கும். )

 பிரபலமானவர்கள் சொந்த வாழ்கையில் இத்தனை அதிகாரம் நமக்கு யார்  தந்தது?

ஒரு நித்தியானந்தர் கதவை திற எழுதினால், காவி தரித்து பின்னால் ஒளியுடன் புன்னகை செய்து அருள் பாலித்தால் அவர் பெரும் ஞானி . காவி கட்டி முடி வளர்த்து மந்திரம் சொன்னால் அவர்  சந்தேகம் இல்லாமல்  ஞானி தானே. இப்போதைய மார்கெட் ட்ரெண்டில் ஞானிகள் கொஞசம் குண்டலினி,பிராணயாமம் எல்லாம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பணம் கொட்டும் .தெய்வமாய் வழிபடுவோம்; பூஜிப்போம்
பின் அவர் படுக்கையறையில் திருட்டு காமிராவில் பதிவான அந்தரஙகம் காண ஆலாய் பறப்போம். "நித்தியானந்தருக்கு அடுத்தபடியாய் மற்றுமொரு   சாமியாரின்  காம லீலை - படங்களுடன்" -- எத்தனை கவர்ச்சியான டைட்டில்... சும்மா கொடுத்து பாருங்கள் ! உங்கள் வலைப்பூ ஹிட்டுக்கள் லட்சத்தை தொடும். நித்தியானந்தர் படங்களோடு நம் படங்களையும் சேர்த்து கொளுத்தினால் கணக்கு சரியாய்  இருக்கும்.

சரி விடுஙகள் கண்ணாடியில் நிறைய  அழுக்கு இருந்தால் முகம் எப்படி தெரியும். ஆனால் இந்த விளையாட்டு கொஞ்சம் சலிக்கத்தான் செய்கிறது. ஆகையால்  இதோ  காமிராக்கள் இனி உங்கள் வீடுகளிலும். பிரபலமானவர்கள் பற்றி மட்டும் பேசி பேசி அலுக்காதா என்ன?இனி ஆளப் போவது Reality Shows தான். பின் என்ன நாம் ராஜ ராஜ சோழன் எப்படி பெரிய கோவில் கட்டினான் என்றோ தமிழக காட்டு பகுதியின் நிலை பற்றியோவா பார்க்கப் போகிறோம்? எத்தனை சுவாரஸ்யம் குழந்தைகள் பந்தயக் குதிரைகளாக்கி பாட விட்டு ஆட விட்டு பின் அழ விட்டு விடுவதில்.  அவர்களும் போட்டி நிறைந்த உலகிற்கு தயாராக வேண்டாமா? இன்னும் இன்னும் சுவாரஸ்யமாக பெரியவர்களுக்கு காதல் போட்டிகள்,தனித் தீவில் அவர்கள் மட்டுமே இருந்தால் வாழுதலுக்கு என்ன செய்வார்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டினால் தாங்கும் மனம் அவர்களுக்கு உள்ளதா, அவர்கள் சொந்த வாழ்க்கை சோகங்கள் பற்றிய முழுமையான ஆவணம் என சமூக தத்துவ உளவியல் ரீதியான அர்த்த புஷ்டியான நிகழ்ச்சிகள் தான் நம் தொலைக்காட்சியின் முகம். எல்லாம் சம்மந்தப்படவர்களின் சம்மதத்துடன் தான். பிரபலங்களுக்கு என்றால் சம்மதம் தேவை இல்லை. ஆனால் சாமனியனுக்கு தேவை.
நம் சமூகத்தின் அடுத்த பரிணாம முன்னேற்றம் ஏன் சாமனியனின் சம்மதமும் தேவை இல்லை என்று நிகழ கூடாது? நமக்கு பேச எத்தனை கிடைக்கும்?  Truman Show போல.. என் பக்கத்து வீடுக்காரன் இன்று என்ன சோப் போட்டான் என்பது எனக்கு  குட்டி சுவாரஸ்யம் என்றால் அவனுக்கு என் படுக்கையறை காமிரா பற்றி தெரியாமலா போய் விடும்?

2 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...