எல்லா உறவுகளுக்கும் மிக நெருக்கமான தருணங்கள் உண்டு.வாழ்க்கையை வெறும் நாட்களின் நகர்வாக மட்டும் இல்லாமல் ஒரு அனுபவ தொகுப்பாக நம் இருப்பின் சாட்சியாக மாற்றுபவை இந்த நெருக்கமான தருணங்கள் தான். மற்ற உறவுகள் போல் அல்லாமல் காதலில் மட்டும் இது நெருக்கம் என்பதை தாண்டி அந்தரங்கம் என்ற நிகழ்வாகிறது. எனக்கு மட்டுமே சொந்தமானவை அவை. சில சமயம் அது என்னவளுக்கு (என்னவனுக்கு) கூட தெரிந்து இருக்க தேவை இல்லை. என் ப்ளாகோ டைரியோ அவற்றை கொண்டிருப்பதில்லை.
நான் முதுமையில் நடுங்கும் நோயுடன் படுத்திருப்பேனே அப்போது அவை சிறு எறும்புகளாய் என் மேல் ஊர்பவை. என் சிதைத் தீக்கு மட்டும் தான் அவற்றின் உஷ்ணம் தெரியும்.
ரொம்ப நாடகத்தனமான உணர்ச்சிகள் கொண்டதாய் தெரியும் வரிகள் இல்லையா?
ஆம். மறுப்பதற்கில்லை. காதல் மட்டுமே அத்தனை உணர்ச்சிமயமானது. பிறரிடம் அதை சொல்லும் போது அது அர்த்தம் இழக்கிறது. புரிந்து கொள்ள முடியாததாகிறது. உலகியல் யதார்த்தங்களை போட்டு குழப்பப்படுகிறது.
'உனக்கு தெரியாதுடா .. அவ மத்தவங்க மாதிரி இல்ல. ரொம்ப ஸ்பெஷல் டா.. '
என்று சொல்லாத காதலன் உண்டா? அதற்க்கு உள்ளூர நமட்டு சிரிப்பு சிரிக்காத நண்பன் தான் உண்டா?
சொல்லப்படும் போது காதல் வெறும் உளறலாகிறது. அது உணரப்பட மட்டுமே கூடியது. பிரிவின் போது காதலின் வலியை யாராலும் பகிர்ந்து கொள்ளவே முடிவதில்லை.
'சரி விடுடா.. அவளுக்கு என்ன பிரச்சனையோ?'
'இல்லடி.. கொஞ்சம் ப்ராக்டிகலா தின்க் பண்ணி பாரு'
'கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாய் போய்டும்'
சரி தான். எல்லா வியாக்கானங்களும் அடுத்தவருக்கு ரொம்ப நியாயமானவை தான். ஆனால் தனக்கு வலிக்கும் போது.,உணர்வுகள் ஊசியாய் குத்தும் போது தர்க்கத்தை மனம் கண்டு கொள்வதே இல்லை.
அங்கு நண்பர்கள் மெல்ல அன்னியம் ஆகி விடுகிறார்கள். பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆகிறார்கள். உலகம் முழுதும் மனிதர்கள் இருந்தும் தனிமை சொந்தமாகிறது. அப்போதைய ஒரே துணை தனிமை மட்டும் தான்.
கவியும் இருட்டில் மிதக்கும் இரவு மட்டுமே தான் தோழி.
அவள் மட்டுமே எல்லாவற்றையும் ஏற்கிறாள். நம் கண்ணீர் மொத்தத்தையும் இரகசியமாய் வாங்கி கொள்கிறாள்.
காதலில் உருகும் எந்த ஒருவரையும் பாருங்கள். இரவுக்காக ஏங்குவார்கள்.
பிரிவின் போது இரவில் உங்கள் அறையில் அருகில் படுத்து இருக்கும் உங்கள் நண்பன் நிச்சயம் தூங்கி கொண்டு இருக்க மாட்டான். தனக்கு மட்டுமே புரியக்கூடியவற்றை சுழலும் மின் விசிறியை வெறித்து கொண்டே அசை போட்டு கொண்டிருப்பான்.
ஆம்.. பகலை விட மிக நீண்டதாய்,இம்சிப்பதாய், கதை கேட்பதாய், சாய்ந்து கொள்ளும் தோளாய் நிகழ்கிறது காதலின் இரவுகள்.
இரவு வெறும் தூக்கத்திற்கும் புணர்ச்சிக்கும் மட்டுமான பொழுதல்ல என்று காதல் சொல்லித் தருகிறது. இரவுக்கு உயிர் இருப்பதை அடையாளம் காட்டுகிறது. இரவின் பெரும் மௌனத்தை முறிக்கும் ஓசைகள் துல்லியமாய் காதில் விழுகின்றன.
பல்லியின் விட்டில் தின்னும் ஓசை, சமையலறையில் எதன் மேலோ ஏறி ஊரும் கரப்புகள், சாலையில் BPO ஆட்களை ஏற்றி விரையும் sumo வின் அதிர்வு ,மின்விசிறியின் சீரான ஓசையை சிதறடிக்கும் சிள்வண்டு
என தனக்கான எல்லா ஓசைகளையும் உங்கள் முன்னாள் கொட்டும் இரவு.
உங்கள் மனதின் புலம்பல்களுக்கு இரவின் சத்தங்கள் மட்டுமே தாளம். அது வெறுமனே உங்கள் பாத்ரூமில் சொட்டிகொண்டு இருக்கும் ஒரு குழாயின் ஓசையாகக் கூட இருக்கலாம்.
நீங்கள் காதலிப்பவரானால் இரவுகள் எல்லாமே உங்களுக்கு மட்டுமேயானது. இரவில் உதிரும் ஒரு பூ கூட உங்கள் காதலுக்கு மட்டுமே சொந்தமானது...!
சங்க இலக்கியங்கள் காதலை கொண்டாடுகிறது. அதனால் அதன் அனேக பாடல்கள் இரவைக் கொண்டாடுகின்றன. இரவில் கசியும் காதலின் வலியை பாடும் கவிதைகள் ஏராளம்.
கீழே உள்ள இரண்டு கவிதைகளும் காதலில் நிகழும் இரவை அத்தனை துல்லியமாக அதன் ஒலியின் மூலம் நிகழ்த்துகின்றன.
கவிதை உச்சம் அடையும் தருணம் இந்த இரு கவிதைகளிலும் உண்டு என நம்புகிறேன்.
1) " சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்கொல் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு நல்கூர் குரலே. "
குறுந்தொகை பாடல்:86; திணை : குறிஞ்சி; தலைவி கூற்று.
துளித்துளியாய் கண்ணீருடன் நான் காமமெனும் நோயோடு
புலம்புவதை கேட்க வேறு யாரும் உளரோ?
மழைதூரலில் வாடைக்காற்று வீசும்
குளிர் காலத்தில்
ஈயின் தொந்தரவு தாங்காமல்
எருது தலையசைக்க
அதன் கழுத்து மணி சத்தம் கேட்க்கும்
நள்ளிரவில்!
2) "கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சிலமே
எம் இயல் அயலது ஏழில் உம்பர் ,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. "
குறுந்தொகை பாடல்:138; திணை : குறிஞ்சி; தோழி கூற்று.
ஊரே தூங்கியும், நான் தூங்கவில்லை.
எங்கள் வீட்டுக்கு வெளியே
மயிலின் காலடி போன்ற இலைகளை கொண்ட
நொச்சியின் கொம்பிலிருந்து
மலர்கள் உதிர்வது கூட
கேட்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...
-
ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...
அருமையான பாடல்கள். உங்கள் விவரிப்பில் நீர்த்து போய்விட்டது போன்ற பிரமை. அருஞ்சொற் பொருளும் சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குமுன்பு படித்த குறுந்தொகை அறிமுகம் ஒன்று:
http://gayatri8782.blogspot.com/2007/09/2.html
>குலவு.. பின்னூட்டத்திற்கு நன்றி.. நீர்த்து என்று எந்த விவரணை பற்றி சொல்கிறீர்கள் .. பாடல்களின் விளக்கம் பற்றியா அல்லது எனது பத்தி பற்றியா..
பதிலளிநீக்குவிளக்கம் பற்றி என்றால் பாடலின் விளக்கம் வரிக்கு வரி அதன் அர்த்தம் சொல்லும் விளக்கவுரையாக எழுதவில்லை. அது நான் எழுதிய விளக்கமும் அல்ல.
சுஜாதாவின் 401 காதல் கவிதைகள் --குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் (உயிர்மை வெளியீடு) என்ற புத்தகத்தின் விளக்கம்.
சுஜாதா இதில் மிக எளிமையாய் பாடல்களுக்கு அதன் கவித்துவம் கெடாமல் விளக்கம் தருவதாக பட்டது.
என் நோக்கமும் அதுவே. ஆனாலும் அவரது விளக்கம் நிறைய வார்த்தைகளை நழுவிச் செல்வதால் கேசிகன் என்பவரது குறுந்தொகை முழு உரையும (பாரி வெளியீடு) அவ்வபோது tamil lexicon மூலம் வார்த்தைகளுக்கு அர்த்தமும் தெரிந்து முழு பாடல் பற்றி எனக்கு ஒரு அனுபவம் ஏற்பட்ட பிறகே சுஜாதாவின் விளக்கத்தை சொல்கிறேன்.
அப்படி இல்லாமல் நீங்கள் சொன்னது என் பத்தி பற்றியது என்றால். அது என் கவிதானுபவம் சார்ந்த பதிவு தான். காதலின் மேல் எனக்கு உள்ள பிரமிப்பை குறுந்தொகை கவிதைகள் பகிர்ந்து கொள்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகட்கு பிறகு அந்த கவிஞர்களோடு என்னால் மிக நெருக்கம் கொள்ள முடிகிறது. அந்த நெருக்கத்தை மட்டுமே மட்டுமே பகிர்கிறேன் . நீர்த்து போவது என் எழுத்தின் பலவீனமா அல்லது நம் அனுபவங்கள் ஒரு புள்ளியில் குவியவில்லையா தெரியவில்லை :(
உங்கள் சுட்டிக்கு நன்றி.. அந்த பதிவரின் பதிவுகள் நன்றாக இருந்தன. என் அதிகம் எழுதுவதில்லை என தெரியவில்லை.
பொதுவாகவே என் பதிவுகளில் நிறைய எழுத்து பிழைகள் இருப்பது உணர்ந்தேன். கூகிளின் தமிழ் இன்னும் எனக்கு அதிகம் கைகூடவில்லை. இனி கவனமாய் இருப்பேன்.
பதிலளிநீக்கு