வியாழன், 25 ஏப்ரல், 2013

ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளிராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை
 பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி:
ஸ்ரீ விமானம்:
ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை மண்ணில் ஒரு மலையாய் எழுந்து நிற்கிறது. அதனால் தான் அதைக் கட்டிய ராஜராஜசோழன்தக்கிண மேருஎன அதை அழைத்தான். அக்கோவிலின் தெய்வத்தைதக்கிணமேரு விடங்கன்என அழைத்தான்.
இவ்விமானம் தரையிலிருந்து 216 அடி உயரம் கொண்டது. கலசம் தவிர முழுதும் கருங்கல்லால் கட்டப்பெற்றது.
விமானத்தில் எங்கும் சுடு செங்கல்லோ,மரமோ, சொறிகல்லோ உபயோகப்படுத்தப் படவில்லை.
 எங்கும் கற்கள் ஒட்டுவதற்க்காக எந்த பூச்சுப்பொருட்களும் உபயோகப்படுத்தவில்லை.
கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு உள்ளன. மேலுள்ள கற்களின் பாரத்தில் கிழுள்ள கற்கள் அழுத்தப்பட்டு நிற்கின்றன.
சாவி பூட்டு போல கற்கள் ஒன்றோடு ஒன்று இணையும் வகையில் வெட்டப்பட்டு பிணைக்கப்பட்டு  உள்ளன.
விமானம் மொத்த கோவில் வளாகத்தில் ஏதோ ஒரு பக்கம் என்று இல்லமால் வடிவியல் ரீதீயாய் கணக்கிடப்பட்டு முறையான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
மொத்த கோவில் மூன்று சதுரங்களாய் பிரித்தால் முதல் சதுரத்தின் நடுக்கோட்டில் கேரளந்தகன் வாயில் இரண்டாம் சதுர ஆரம்பத்தில் ராஜராஜன் நுழைவாயில் இரண்டாம் சதுரத்தின் நடுவில் நந்தி மண்டபம்,மூன்றாம் சதுரத்தின் சரியாக மத்தியில் கருவறை தெய்வம் உள்ளது.
 இரண்டு கோபுரங்களும் , விமானமும் சம மைய வளயங்களில்  ஒன்றன் பின் ஒன்றாக உள்ளன. வடிவியல் நேர்த்தியுடன் கட்டப்பட்டு இருப்பது இக்கோவிலின் திருத்தமான அழகிற்கு பெரும் பங்கு வகிக்கிறது.


விமானம் -உப பீடம், அதிட்டானம்,கருவறைத் தளம்,கருவறையின் மேல் ஒரு தளம், கூரை, அதன் மேல் பதின்மூன்று தளங்கள் (மொத்தம் 15 தளங்கள்), பின் கிரீவம் (கழுத்து) ,சிகரம் அதன் மேல் கலசமும் கொண்டு உள்ளது

அஸ்திவாரம்:
கோவிலின் அஸ்திவாரம் 4 அடிக்கு போடப்பட்டுள்ளது. 216 அடி உயர கட்டிடத்திற்கு 4 அடியில் அஸ்திவாரம் என்பது வியப்படைய வைக்கிறது.இதை தொல்லியல் துறையினர் துளையிட்டு அளந்து பார்த்து சொல்லியுள்ளனர். அஸ்திவாரம் இரண்டு கற்சுவற்களால் எழுப்பபட்டுள்ளது. நான்கடி ஆழம் கொண்ட இவ்விரண்டு சுவர்களில் வெளிச்சுவர் 13 அடி அகலமும் உள்சுவர் 11 அடி அகலமும் கொண்டது. இரண்டு சுவர்களுக்கும் இடையில் உள்ள வெளி 6 அடி அகலம் . இந்த இடைவெளி அளவில் வேறுபட்ட பல கற்களால் நிரப்பப்பட்டுள்ளது.
உபபீடம்:
உபபீடம் என்பது பூமிக்கு மேல் அமைந்த கோபுரத்தின் முதல் பகுதி ஆகும் . உபபீடம் மட்டுமே ஆறு அடி உயரம் கொண்டுள்ளது.  இது கபோத உறுப்பை பெற்று இருப்பதால்  கபோத பந்த வகையை சார்ந்தது ஆகும். (கபோதம் என்பது உபபீடத்தில் இருந்து வெளித்தள்ளி sunshade போல  இருக்கும்  பகுதி)

அதிட்டானம்:
உபபீடத்தின் மேல் உள்ள பகுதி அதிட்டானம் ஆகும் . கோபுரத்தை தாங்கும் பகுதி என்பதால் இதை தமிழில் தாங்கு தளம் எனக் கொள்ளலாம். உபபீடம் 8 அடி உயரம் கொண்டுள்ளது.
அதிட்டானம்,  அளவில் பெரிய ஜகதியும் குமுதமும் கொண்டுள்ளது.  இவ்விரு உறுப்புகளிலும் தான் ராஜராஜன் கோவிலின் முக்கிய செய்திகளை கல்வெட்டாகப் பொறித்து உள்ளான்.

படம்: ஜகதியிலும், உருள் குமுதத்திலும் காணப்படும் கல்வெட்டு வரிகள்
யாளி வரிசை கொண்டுள்ளதால் இது பிரதி பந்த வகை அதிட்டானம் ஆகும்.
 யாளிகள் எல்லாவற்றிலும் போர் வீரர்கள் அமர்ந்தி இருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. திருப்பங்களில் ஒரு பெரும் யாளி வாய் திறந்து அதன் வாயினுள் சிறிய யாளிகளில் வீரர்கள் அமர்ந்து போர் புரிவது போலும் செதுக்கப் பட்டுள்ளது.

சுவர் மற்றும் கோட்டம்:
அதிட்டானத்திற்கு மேலே கூரை வரை உள்ள உறுப்புசுவர்ஆகும் . கருவறைத்தளம்  மற்றும் முதல் தளத்திற்கென சுவர் இரண்டாய் அமைந்து உள்ளது. 
இரண்டு சுவர்களிலும் கோட்டங்கள் உள்ளன. சுவரின் இடையில் தெற்கு மற்றும் வடக்கில் அர்த்தமண்டபத்திற்கும் கருவறைக்கும் செல்ல  பெரிய வாயில்கள் படிக்கட்டுடன் அமைந்து உள்ளன

விமானத்தின் உள்ளே கருவறையைச் சுற்றியும், நேர் மேலே முதல் தளத்திலும் இரு சுற்றறைகள் உள்ளன (இந்த அறைகள் பற்றி கட்டுரையின் பின் பகுதியில் காணலாம்)
முதல் சுவற்றின் மத்தியில் கருவறையின்  உள் சுற்றறைக்குச் செல்ல வாயில் உள்ளது. இங்கு மட்டும் கோட்ட்டங்களில் தெய்வ உருவமில்லாமல் துவாரபாலகர்கள் உள்ளனர். பிற கோட்டங்களில் பல்வேறு தெய்வ உருவங்கள் சோழ சிற்பிகளின் திறமையை பறைசாற்றும் வகையில் உள்ளன.
இரண்டாம் சுவற்றின் மத்தியிலும்  உள்சுற்றறைக்குச் செல்லும் வாயில் உள்ளது.
இந்த வாயில்களுக்கு ஏனோ படிக்கட்டுக்கள் இல்லை (படத்தில் இரும்பு படிக்கட்டுக்களை காணலாம்). இரண்டாம் சுவற்றில் கோட்டங்களில் சிவன் திருபுராந்தகராக வெவ்வேறு வடிவங்களில்  உள்ளார் . இவை ராஜராஜனின் போர்த் தளபதிகளின்  சிலைகளாக இருக்கக் கூடும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
முதல் சுவரில் உள்ள கோட்ட தெய்வங்கள் குறித்து சுருக்கமாக கட்டுரையின் பின் பகுதியில் பார்க்கலாம். *(விமானத்தின் ஆர உறுப்புகள் குறித்து அறிந்து கொண்ட பின் கோட்ட தெய்வங்கள் குறித்து தெரிந்து கொண்டால் இலகுவாக இருக்கும்)

இரண்டு சுவர்களுக்கும் இடையில் கபோதம் நாசிகைகளுடன் உள்ளது. இரண்டாம் சுவரிலும் கூரைக்கு கீழாக கபோதம் உள்ளது.

 விமானத்தின் முதல் தளத்திற்க்கு மேல் கூரைக்கு மேலாக 13 தளங்கள் அமைந்து உள்ளன. இந்த தளங்கள் ஒவ்வொன்றும்  அதன்  கீழுள்ள தளத்தை விட சிறியதாக உள்ளது. இதனால் விமானம் பிரமிடு போல் கூம்பிய வடிவம் கொள்கிறது.
 நான்காம் தளத்திற்கு மேலே விகிதாசாரத்தில் சட்டென மேலும் அதிகமாக குறுகுகிறது விமானம். அவ்வாறு குறுகாவிடில்   விமானம் இதே உயரத்தில் இன்னும் அகலமாக முடிந்திருக்கும் அல்லது இதே அகலத்தில் இன்னும் நீளம் கொண்டு இருக்கும்.
விமானத்தின் ஆர உறுப்புகளாய் ஒவ்வொரு தளத்திலும் குடமும் , பஞ்சரமும், சாலையும் மாறி மாறி வருகின்றன.
படம்: K- குடம்,P- பஞ்சரம் S- சாலை  

மூன்றாம்  தளம், ஆறாம் தளம் மற்றும் பத்தாம் தளத்தில் சற்றே உருவில் மாறுபட்ட சாலைகள் ( படத்தில்- )  காணப்படுகின்றது.

ஒரு கோட்டத்தின் மேல் குடம் இருக்கும் போது அந்த பகுதியை (கோட்டம் முதல் குடம் வரை) குடப்பத்தி என்பர், பஞ்சரம் இருந்தால் அது பஞ்சரப்பத்தி.
ஒரு பத்தியை நாம் ஒரு கோவில் போலவே காண முடியும் .குடப் பகுதியை சிகரம் போலவும், கோட்ட தெய்வத்தை நீள்வெட்டுத் தோற்றத்தில்  கருவறை தெய்வம் தெரிவதாகவும் கொள்ள முடியும்.
பத்திகளுக்கு இடையே உள்ள சுவர்பகுதி உள்தள்ளி (depression) உள்ளது.

 
குடப்பத்தி                                           

 பஞ்சரப் பத்தி
இறுதித்தளத்தில் (13 ம் தளம்)  மட்டும் தளக்க்கல் உள்ளது. இது விமானத்தை மூடி மேலே கிரீவமும் சிகரமும் அமர்வதற்கான தளமாய் உள்ளது.
ஒவ்வொரு பத்தியிலும் உள்ள கோட்டங்களில் உள்ள தெய்வங்கள் பற்றி இனி பார்ப்போம். (கருவறைத் தள கோட்ட தெய்வங்கள்). இத் தெய்வ வடிவங்கள் சோழ சிற்பிகளின் மிகச் சிறந்த கலைப் படைப்புகள்.
கு, , சா குடப்பத்தி, பஞ்சரப்பத்தி,சாலைப்பத்தி

1.    பிச்சாடனர்
2.    வீரபத்திரர்
3.    நுழைவாயில் மற்றும் துவாரபாலகர்கள்
4.    காலகால மூர்த்தி
5.    நடராஜர்
6.    ஹரிஹரர்
7.    லிங்கோத்பவர்
8.    நுழைவாயில் மற்றும் துவாரபாலகர்கள்
9.    சந்திரசேகரர்
10.   ஆலிங்கனர்
11.   அர்த்தநாரீஸ்வரர்
12.   கங்காதரர்
13.   நுழைவாயில் மற்றும் துவாரபாலகர்கள்
14.   வீரபத்திரர்
15.   உமாசகிதர்.
16.   விஷ்ணு
17.   கணபதி
18.   பைரவர்
19.   துர்கை
மண்டபப்பகுதியில் குடம், பஞ்சரம் அணி செய்யாத பத்திகளில் தெற்கில் விஷ்ணு,கணபதி ( 16,17) வடக்கில் பைரவர், துர்கை (18,19) சிற்பங்கள் உள்ளன.

அர்த்தமண்டப படிக்கட்டுகளின் இருபுறமும் சில கோட்ட சிற்பங்கள் உள்ளன. இவற்றில் சரஸ்வதி, மற்றும் லஷ்மி சிற்பங்கள் மிகுந்த கலை நயத்துடன் உள்ளன.  லஷ்மி அமர்ந்த முறை, அணிகலங்கள், கிரீடம், உடல் வளைவுகள்,முகப் பொலிவு என ஒரு அற்புத சிற்பமாக உள்ளது.

 
                                             லஷ்மி


 -
                                        பிச்சாடனர்


படம்: ஆடவல்லானாக தன்னை நிகழ்த்தும் சிவன். உடலின் வளைவு, பாதம் தூக்கிய முறை, மணிக்கட்டில் நழுவி ஆடும் பாம்பு, பறக்கும் கச்சைத் துணி என ஓர் கச்சித கலைப் படைப்பு


                                    காலாந்தகர்                    முதல் தளத்தில் உள்ள திருபுராந்தகர் சிற்பம்
கிரீவம்:
விமானத்தின் கிரிவப் பகுதியில் (கழுத்துப் பகுதி எனக் கொள்ளலாம்) நான்கு மூலைகளிலும் மூலைக்கு இரண்டாக எட்டு நந்திகள் அணி செய்கின்றன.  இவை திருசுற்று மாளிகையில் உள்ள நந்தியை விட அளவில் சிறியவை.
கிரீவப் பகுதியில் ஒரு பூதகணமும் உள்ளது. சிகரத்தின் மேல் கொடி நட்டால் கொடிக்கம்பு வாகாய் இந்த பூதகணத்தின் தலையில் உள்ள ஓட்டையில்  சொருகிக் கொள்வது போல் அமைக்கப்பட்டு உள்ளது.


சிகரம்:
கோவிலின் சிகரம் 80 டண் எடை எனக் கூறப்படுகிறது. ஆனால் குடாவாயில் இச்செய்தியை மறுக்கிறார்.
இச்சிகரம் ஒரு கல்லால் ஆனது அல்ல. இது பல கற்களை இணைத்து ஒரே கல்ல்லில் ஆனதைப் போல் தோற்றமளிக்கும் வகையில் உள்ளது.
சிகரத்தின் மேல் உள்ள ஸ்தூபி, 12 அடி உயரம் கொண்டது. 3085 பலம் (1 பலம் ~ 35 கி)  செம்பால் செய்யப்பட்டு பொன் 2926 1/2 கழஞ்சு பூசப்பட்டது.

விமானம் உள்கட்டுமானம்:
விமானத்தின் உள்கட்டுமானம் வியப்புக்குரியதாகும். தமிழகத்தின் மற்ற கோபுரங்களிலிருந்து  கட்டுமான அமைப்பில் மாறுபட்டுள்ளது.
 தஞ்சை விமானத்தின் தளங்கள் எல்லாம் தடையின்றி ஒரே சீராக மேலெழுபவை. தளங்கள் கூரைகள் அற்று உள்ளே முழுவதும் வெற்று வெளியான உட்கூடாக அமைந்துள்ளது.


 முதல் தளம் முடிந்த பிறகு சீராக கூம்பிக்கொண்டு செல்லும் வடிவம் முதலில் சதுர வடிவில் குறுகி மேலே ஏற ஏற வட்டவடிவமாகிறது.
கருவறைத் தளமும் முதல் தளமும் விமானத்தின் எடையை தாங்குவதற்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது. இதிலும் கட்டுமான யுத்திகள் சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கருவறையை சுற்றிலும் ஓர் சுற்றறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறை 6 ஆடி அகலம் கொண்டதாக உள்ளது. ஆனால் இதன் சுவர்கள் அறையை விட அகலமாக உள்ளது.  உட்சுவர் 11 அடியும் வெளிச்சுவர் 13 அடி அகலமும் கொண்டுள்ளது.
இதே அமைப்பு முதல் தளத்திலும் தொடர்கிறது. உள்சுற்றறை 6 அடி அகலமும், அறையின் உள் சுவர் 11 அடியும் வெளி சுவர் 13 அடியும் கொண்டுள்ளது. இவ்விரு சுவர்களும் விமானத்தின் பாரத்தை தாங்குவதற்காகவே இத்தனை அகலமானதாக உள்ளன. இரு சுவர்களும் முதல் தளத்தில் கூம்பி ஒன்றாய் இணைகின்றன. இதனால் இரு சுவர்களும் ஒரு சேர மேலுள்ள தளங்களை தாங்குகின்றன


படம்- உள்சுற்றறை சுவர்கள் முதல் தளத்தில் ஒன்றிணகின்றன.

கருவறையின் உள்ளிருந்து பார்த்தால் சிகரத்தைத் தாங்கும் தளக்கல் வரையிலும் தெரியும். பின்னாளில் மழை நீர் வடிவதை தடுக்க கருவறையின் மேல் ஒரு கூரையிடப்பட்டுள்ளது

படம்- விமான உட்கூடு. (கீழே சதுரமாக ஆரம்பித்து மேல செல்லும் போது வட்ட வடிவம் பெறுவதை காணலாம்)

இரு தளங்களிலும் உள்ள அகலம் குறைந்த சுற்றறைகளை ராஜராஜன் வெற்று அறைகளாக விடவில்லை.கருவறை தளத்தில் உள்ள சுற்றறையில் முழுவதும் அற்புத ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
சமீப காலம் வரை இச் சோழர் கால ஓவியங்களின் மேல் நாயக்கர் கால ஓவியங்கள் வரையப்பட்ட்டு இருந்ததால் இவ்வோவியங்கள் குறித்து அறியப்படாமலேயே இருந்தன. S.K. கோவிந்தசாமி எனும் வரலாற்று பேராசிரியர் 1931 இவ்வோவியங்களை கண்டு உணர்த்தினார். எல்லா ஓவியங்களுமே சோழர் காலத்தில் தமிழ்ச் சமூகம் கலையின் பரிபூரணத்தை நோக்கி தன்னை நகர்த்திக் கொண்டு இருந்தது என உணர்த்துபவை.
குறிப்பக என்னை கவர்ந்தது திருபுராந்தக சிவனின் ஓவியம். போரின் உக்கிரம் கொண்ட முகத்தில் ஏனோ ஒரு புன்னகை

படம்- திருபுராந்தகர்
இது தவிர கைலாச சித்திரம், சுந்தரர் கதை, நடராஜர், ராஜராஜனின் அரசியல் அதிகாரிகள் (இது ராஜராஜன் மற்றும் கருவூர் தேவர் என பலராலும் சொல்லப்படும் ஓவியம் ) ஆகிய ஓவியங்கள்- கருவறைத் தள சுற்றறை சுவர்களை அணி செய்கின்றன.
ஒவ்வொரு ஓவியமும் சுமார் 15 அடி உயரம் கொண்டவை. பாதிக்கு மேல் நம் கண்பார்வைக்கு மேலாக உள்ளது. வெளிச்சம் மிக குறைவான  ஆறு அடி அகல அறையில் எப்படி இவ்வளவு பெரிய ஓவியங்களை வரைந்தனர் என்பது சோழ ஓவியர்களுக்கு தான் தெரியும் .

முதல் தளத்தில் சிவன் 108 நாட்டிய கரண முறைகளில் 81 முறைகளை ஆடுவதான சிற்பங்கள் உள்ளன. இவை இரண்டடி உயரக் கல்லில் செதுக்கப் பட்டுள்ளன. இவற்றை நான் புகைப்படத்தில் பார்த்த போது ஏமாற்றம் அடைந்தேன் எனத் தான் சொல்ல வேண்டும் . கலையாழம் குறைந்த சிற்பங்களாய் தான் இவற்றை உணர்ந்தேன். கருவறைத் தள அறையில் அற்புத ஓவியங்களை படைக்க தோன்றிய ராஜராஜன் முதல் தளத்து அறையில் அதே போல் சிறந்த சிற்பங்களை படைக்காதது எனக்கு வியப்பானதே. ஆனாலும் 81 சிற்பங்கள் மட்டுமே செதுக்கிய நிலையில் மீதி சிற்பங்கள் செதுக்கபடாமல் விடப்பட்டு இருப்பதற்கு காரணம் தெரியவில்லை.

 
படம்- முதல் தள உள்சுற்றறை நாட்டிய சிற்பங்கள்

சிவலிங்கம்: கருவறை சிவலிங்கம், நிறுவிய காலத்தில் அக்காலத்தின் மிகப்பெரிய சிவலிங்கம் ஆகும் .
13 அடி உயர லிங்கத் திருமேனி.6 அடி உயர 55 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார் பீடம்  கொண்ட பெரும் லிங்கம் தான் கருவறை தெய்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...