ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை -
பகுதி 1 நாங்கொடுத்தனவும்
..
வரலாறு ஒரு இனத்தின் மொழியின் சமூகத்தின் அடையாளம்.
அந்த இனம் எப்படி வாழ்ந்தது, அதன் சமூகம் எத்தகைய நாகரீகத்தைக் கொண்டு வளர்ந்தது
என்பதை உலகம் உணர வரலாறு தான் அத்தாட்சி.
தமிழ்ச் சமூகம் தொன்மையான சமூகம். அதன் வரலாற்றை முழுமையாய் தெரிந்து கொள்வதிலும் தெரிந்தவற்றை ஊர்ஜிதம் செய்வதிலும்
பல சிக்கல்கள் உள்ளன. ஆனால்
இன்றும் வாழும் ஆவணங்களாய் உள்ள நம் இலக்கியங்களும் கோவில்களும்
நம் சமுகம் எப்படி வாழ்ந்திருந்தது என்பதற்கான மறுக்க முடியாத சான்றுகள்.
சில மாதங்களுக்கு முன்னால் தஞ்சை சென்றிருந்தேன். அங்கு பெரிய கோவிலுக்கு சென்று பார்த்த போது மனம் முழுதும்
வியப்பும் பெருமிதமும். பல
வருடங்களுக்கு முன் பல முறை சென்று பார்த்து வியந்த கோவில் என்றாலும் இம்முறை அதன்
பிரமாண்டமும் கலை மதிப்பும் என்னுள் தர்க்கத்தில் பிடிபடாத ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது. இது வரை நான் பார்த்தவற்றில் எனக்கு நெருக்கமான ஒரு உணர்வை
கொடுத்து அதன் பிரமாண்டத்தின் முன் என்னை ஒரு சிறு குழந்தையை போல் உணர வைத்தது.
ஒரு அரிய கலைப்படைப்பு என்ற வகையிலும்
அது தமிழ்நாட்டில் இருக்கிறது என்ற முறையிலும்,
அதை வியப்பதை தாண்டி அக்கோவில் குறித்து கொஞ்சமேனும் அறிந்து
கொள்ள ஆவல் ஏற்பட்டது
அப்படி நான் அறிய முயன்றதில் தெரிந்து
கொண்டதை பகிர்வதே இந்த இடுகை.
கோவில் பற்றி நான் படித்தவற்றில் எல்லாம்
ஆச்சரியங்களும் , வியப்புகளுமாய் தகவல்கள். முன் அறிந்தவற்றை முற்றிலும் மறுப்பவை, .மார் தட்டி பெருமிதம் கொள்ள வைப்பவை, முரண்பட்டு மோதும் தகவல்கள்,
பழம் பெருமையில் அது குறித்து பல ஜோடனைக்கதைகளுடன் வாழ்ந்து
பூரிக்கும் தமிழர் குறித்த சலிப்பு, கலை அதன் முழு வீச்சில் நிகழும் போது காலம் அதைப் பொத்தி வைத்து காப்பாற்றுவதை
உணரும் ஒரு சிறிய மனத்தின் குழப்பம் என தஞ்சை கோவில் என்னுள் ஒரு உணர்வுக்களியாட்டத்தை
நிகழ்த்தியது.
இதனாலேயே இக்கோவில் குறித்து இன்னும்
அறிந்து கொண்டு அதைப் பகிர்ந்து கொள்ளவும் ஆசை. கோவில் மற்றும்
அது சார்ந்தவை பற்றி நான் தெரிந்து கொண்டவற்றை இந்த இடுகையில் பகிர்ந்து
கொள்கிறேன்.
ராஜராஜ
சோழன் இம்மாபெரும் கோவிலை கட்ட முடிவு செய்து திருப்பணி தொடங்கிய காலம் கி.பி. 1003. இது அவனது 19 வது
ஆட்சியாண்டு.
இதற்கு முன் இம்மன்னன் போர்த்தொழில்
கொண்டு கங்கம்பாடி,நுளம்பாடி
(மைசூர்) தடிமைபாடி என கர்நாடக பகுதிகள்(கி.பி 991), ஈழம்
(கி.பி. 991), சீட்புலி நாடு பாகி நாடு ( நெல்லூர் சார்ந்த ஆந்திர பகுதிகள்
–கி.பி 991),வேங்கை நாடு(கோதாவரி கிருஷ்ணாயிடை அமைந்த
நாடு-கி.பி 999), கலிங்கம்(கோதாவரி,மகாநதியிடை
அமைந்த நாடு),முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் (இலட்சத்தீவு) என
தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினான்.
பின் கி.பி 1001 இல் தன்
ராஜ்ஜியத்தை முழுமையாய் அளந்து (!) மண்டலம், வளநாடு,நாடு என பிரித்தான்.
பாண்டிய மண்டலம் சேர மண்டலம் அடங்கிய இராஜராஜ தென்னாடு,தொண்டை மண்டலம் அடங்கிய சயங்கொண்ட
சோழ மண்டலம், கங்க
மண்டலம்,கொங்கு
மண்டலம்,நுளம்பாடி,கலிங்கம்,ஈழம்
அடங்கிய மும்முடி சோழ மண்டலம்- இது தான் ராஜராஜனின் சோழ சாம்ராஜ்ஜியம்.
இந்த சாம்ராஜ்ஜியத்தின் தலை நகரம் தஞ்சை.
காஞ்சியில்
கைலாசநாதர் ஆலயத்தை கண்டு வியந்த ராஜராஜன் ,ஒரு கற்றளியை (கல் + தளி , தளி என்பது கோவில்) தன் தலைநகர் தஞ்சையில் கட்ட முடிவு செய்தான். கைலாசநாதர் கோவிலில் இருந்து மாறுபட்ட கலைப்படைப்பாய்
ஒரு பெரும் கற்றளியை கட்ட ஆயத்தமானான்.
அதன்படி கி.பி 1003ல் தஞ்சை ராஜராஜீஸ்வரத்திற்கான திருப்பணி ஆரம்பமாகியது. கோவிலின் திருப்பணி முடிந்து குடமுழுக்கு செய்யப்பட்ட நாள் - கி.பி. 1010 ஆம் ஆண்டு 275 ஆம் நாள். இந்நாளில்
தான் ராஜராஜன் தன் கற்றளிக்கு
2926-1/2 கழஞ்சு ( 1 கழஞ்சு ~ 2.1875 கிராம்) பொன் பூசிய
செப்புக்குடம் கொடுத்த நாள்.
தான் கட்டிய கோவில் வளாகத்திற்கு ராஜராஜன்
இட்ட பெயர் ராஜராஜீஸ்வரம். இன்றைய தினம், நாயக்கர்
கால அகழி, கோட்டை, அதைத் தாண்டி , ஐந்து அடுக்கு கேரளாந்தகன் கோபுரம்,
மூன்று அடுக்கு ராஜராஜன் கோபுரம், அதனையடுத்து உள்மதிலுடன் இணைந்த திருச்சுற்று
மாளிகை, பரிவார ஆலயங்களுடன் 216 அடி உயர விமானம் அதன் மண்டபங்களோடு ஒரு பெருங்கோவிலாக , ராஜராஜீஸ்வரம்
ராஜராஜ சோழ மன்னனுடைய கனவின் பருப்பொருளாய் கம்பீரமாய் நிற்கிறது.
சோழர் காலம் பதிமூன்றாம் நூற்றாண்டில்
முடிவுக்கு வந்த பின் ஒரு நூற்றாண்டு காலம் பாண்டியர்கள் தஞ்சையை ஆண்டனர். பின் மாலிக் கபூரின் படையெடுப்பில் டெல்லி சுல்தான் ஆட்சிக்கு
கீழ் அரை நூற்றாண்டு இருந்த தஞ்சை பின் மீண்டும் பாண்டியரிடம் வந்து சேர்ந்தது.ஆனால் வெகு சீக்கிரமே பாண்டியரிடம் இருந்து விஜயநகரப் பேரரசிடமும்
பின் சில காலத்தில் நாயக்க மன்னர்களிடமும் வந்து சேர்ந்த்து. நாயக்க மன்னர்கள் தஞ்சையை
1532 முதல் 1673 வரை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆண்டனர்.
அதன் பின் தஞ்சை மராத்திய மன்னர்கள் வசம் வந்து சேர்ந்தது.
தஞ்சை மட்டுமல்ல அதன் பெரிய கோவிலும்
வரலாற்றின் நிலையின்மை நோக்கிய ராஜராஜனின்
1000 வருடத்து புன்னகை.
ராஜராஜீஸ்வரம் காலந்தோறும் தஞ்சையை
ஆண்ட மன்னர்களால் நன்கு பராமரிக்கபட்டு, அதன் கலையழக்கு சேதமில்லாமல் மேலும் அழகூட்டும் கோவில்கள் வளாகத்துள்
கட்டப்பட்டது. கோவில் வளாகத்துள் உள்ள
வெவ்வேறு கட்டுமானங்கள் எந்த காலகட்ட்த்தில் கட்டியது என்னும் பட்டியல் கீழே.
·
கோட்டை,
அகழி – நாயக்க மன்னன் செவ்வப்ப நாயக்கரால் கி.பி 16 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது
·
கேரளாந்தகன் வாயில் (முதல் கோபுரம்) – ராஜராஜனால் கட்டப்பட்டது
·
ராஜராஜன் வாயில் (இரண்டாம் கோபுரம்)
– ராஜராஜனால் கட்டப்பட்டது
·
திருச்சுற்று மாளிகை – ராஜராஜன் ஆணைக்கு இணங்க அவனது சேனாதிபதி கிருஷ்ணன் ராமன்
என்னும் மும்முடி சோழ பிரம்மராயனால் கட்டப்பட்டது.
·
நந்தி மற்றும் நந்தி மண்டபம் – நாயக்கர் காலத்தில் செவ்வப்ப நாயக்கரால் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது.
·
வினாயகர் கோவில் – இரண்டாம் சரபோஜி மன்னனால் கி.பி. 1801 ஆம் ஆண்டு கட்டப்பெற்றது.
·
முருகன் கோவில் – செவ்வப்ப நாயக்கார் காலத்தில்
(கி.பி 16 ஆம் நூற்றாண்டு) கட்டப்பெற்றது. விஜயநகர காலத்தில் கட்டப்பெற்றது எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன
·
முருகன் கோவில் முன் மண்டபம் – செவ்வப்ப நாயக்கரின் தம்பி மல்லப்பர் பெயரால் எடுப்பிக்கப்பட்டது. (கி.பி. பதினாறாம் நூற்றாண்டு)
·
அம்மன் கோவில் – 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. கோவிலின் மகாமண்டபம் விஜயநகர ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது
·
ஸ்ரீ விமானம் – ராஜராஜனால் கட்டப்பட்டது.
·
முகமண்டபம்
– 17 ஆம் நூற்றாண்டு, சரபோஜி மன்னரால் கட்டப்பெற்றது.
·
அர்த்தமண்டபம் – ராஜராஜனால் கட்டப்பெற்றது.
·
மகா மண்டபம் – ராஜராஜனால் கட்டப்பெற்றது.
·
சண்டிகேஸ்வரர் கோவில் – ராஜராஜனால் கட்டப்பெற்றது.(பரிவார ஆலயங்களில் ராஜராஜனால் கட்டப்பெற்ற ஒரே ஆலயம்)
·
மூர்த்தி அம்மன் மண்டபம்- நாயக்கர் காலத்திய மண்டபம்.
செவ்வப்ப நாயக்கர் மனைவியின் பெயரில் எடுக்கப் பெற்ற இம்மண்டபத்தில்
நடராஜரின் செப்புத் திருமேனி உள்ளது.
எல்லாக்
காலகட்டங்களிலும் ராஜராஜீஸ்வரம் கலையழகு கொண்ட கோவில்களாலும் கட்டமைப்புகளாலும் அழகுபடுத்தப்பட்டது
என்றாலும் இந்த இடுகை ராஜராஜன் காலத்திய கட்டமைப்புகள் குறித்து மட்டும் எழுதப்பட்டுள்ளது.
கேரளாந்தகன் நுழைவாயில்:
நாயக்கர் கால கோட்டை மதிலை தாண்டி முதலில்
நிற்பது கேரளாந்தகன் நுழைவாயில் கோபுரம். தமிழகத்தின் ஏனைய பிற கோவில்கள் போலல்லாமல் தஞ்சை கோவிலில் விமானத்தை விட அளவில்
சிறியவையாக உள்ளன அதன் கோபுரங்கள்.
முதல் கோபுரமான கேரளாந்தகன் கோபுரம் (கேரள + அந்தகன் (எமன்) ராஜராஜனின் கேரள வெற்றின் நினைவாய் இடப்பட்ட பெயர்) – 97 அடி நீளம் 55 அடி அகலம்
110 அடி உயரம் கொண்ட கோபுரம்.
கோபுரம் மூன்று தளங்கள் கொண்டு, ஒவ்வொரு தளத்திலும் அகண்ட சாலைகள்
வாயில்களுடன் அமைந்துள்ளன. இரு மகாநாசிகளோடு சிகரம் ஏழு கலசங்கள் பெற்றுள்ளது.ஒவ்வொரு தளத்திலும் பலகணிகள் கொண்டு கோபுரம்
நல்வெளிச்சம் கிடைக்க வழிபெற்றுள்ளது.
முதல் தளத்தில் இரு சிற்றாலயங்கள் இருக்கின்றன. ஒன்றில் தக்ஷிணாமூர்த்தியும் மற்றொன்றில் பிரம்மனும் உள்ளனர்.
இக்க்கோபுரத்தின் சிறப்பே அதன் நிலைக்கால்கள்
தாம். 4’X4’ அளவில் 40 அடி உயரத்தில் மிகப்பெரிய இரண்டு நிலைக்கால்கள் கொண்டுள்ளது. இவை ஒரே கல்லில் ஆனவை
(!)
இதன் அடித்தள அமைப்பு உட்சுவர் ,வெளிச்சுவர் இரண்டுக்கும் இடையே ஒரு சுற்று அறை எனும் சாந்தாரம்
கொண்டதாகும்.
முழுதும் கருங்கல்லில் உபானம் (தரையோடு ஒட்டிய கோபுர உறுப்பு)
முதல் இரண்டாம் தளத்தின் பாதி வரை கட்டப்பெற்றுள்ளது. இதற்கு மேல் செங்கல் கட்டுமானம் பெற்றுள்ளது. அடித்தளம் முழுதும் கருங்கல் கட்டுமானம் என்பதாலும் சாந்தார
அமைப்பு பெற்றிருப்பதாலும், கோபுரத்தின் வலு பெருமளவு அதிகரிக்கப் பட்டுள்ளது.
(வெளிச்சுவர் மட்டும் கருங்கல்லில் அமைக்கப் பெற்று காலப்போக்கில்
சிதைந்த கோபுரங்கள் பல தமிழகத்தில் உள்ளனவாம்)
ஒவ்வொரு தளத்தின் உட்சுவற்றிலும் துவாரம்
அமைத்து அவற்றில் மர உத்திரங்களை நெருக்கமாகப் பதித்து அவற்றின் மேல் பலகைகளை தைத்து
செங்கற்களை குத்துவாட்டில் சுண்ணாம்பு சாந்து கொண்டு இணைத்து தளம் அமைத்து உள்ளனர். இத்தகு தளக்கூரை அமைப்பு முறை பிற்காலத்தில் Madras Roofing என்று பெயர் பெற்றது.
ஆனால் பிற்காலத்தில் இந்த மரங்கள்
அகற்றப்பட்டதல் தளங்கள் சிதைந்து வெற்று உட்கூடாகவே இப்போது உள்ளது.
படம்:
Modern Madaras roofing
இக்கோபுரத்தின் சிற்பங்கள் பெரும்ம்பாலும் சுதை சிற்பங்கள். நாயக்கர்
மற்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதால் இவை பல்வேறு கலைப்பாணியில்
அமைந்து உள்ளன.
ராஜராஜன்
திருவாயில்:
இரண்டாம் கோபுரமான ராஜராஜன் திருவாயில்
உபானம் முதல் ஸ்தூபி வரை கருங்கல் கட்டுமானம் கொண்ட மூன்று நிலைக் கோபுரமாகும்.
கட்டுமான முறையில் பெருமளவு கேரளாந்தகன்
நுழைவாயிலை ஒத்து இருக்கிறது. அதே போல் 4’X4' அளவில் 40 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன இரு நிலைக்கால்கள் உள்ளது. வாயிற் பகுதியின் இரு புறமும் இரண்டடுக்கு அறைகள் உள்ளன (கேரளாந்தகன் வாயிலில் இவை இல்லை)
கேரளாந்தகம் கோபுரத்தில் உள்ளது போலவே
முதல் தளத்தில் இந்திரனுக்கும் நாகராஜனுக்கும் இரு சிற்றாலயங்கள் உள்ளன.
உபபீடத்தில் இருந்து அதிட்டானம் வரை செல்ல நான்கு திசைகளிலும்
படிக்கட்டுக்கள் உள்ளன.
ராஜராஜன் திருவாயிலின் சிறப்பு கோபுரத்தின்
வெளிப்புறம் மகாவாயிலின் இருபுறமும் 20 அடி உயரம் கொண்ட இரு துவாரபாலகர்கள் சிற்பங்கள் உள்ளன.
படம்:
3. துவாரபாலகரின் காலின் கீழ் தொங்கும் பாம்பு ஒரு யானையை விழுங்குகிறது. துவாரபாலகரின் பேருருவை விளங்கி கொள்ள இக்காட்சி செதுக்கப்பட்டிருக்க
வேண்டும்.
உலகின் மிகப்பெரிய துவாரபாலாகர்கள்
இவை என குடவாயில் பாலசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
ராஜராஜன் நுழைவாயில் கோவிலின் திருசுற்று
மாளிகையோடு இணைந்து உள்ளது (மேல் உள்ள படத்தில் கோபுரத்தின் இருபுறத்திலும் இருக்கும் தூண் கொண்ட அமைப்பு
தான் திருசுற்று மாளிகை)
திருசுற்றின் மேல்தளத்தில் இருந்து
கோபுரத்தின் மேல் தளத்திற்க்கு வர வழி அமைக்கப்பட்டிருக்கிறது.
மற்றபடி
கேரளாந்தகன் நுழைவாயில் போலவே இக்கோபுரமும் இரு அடுக்கு சாந்தார அமைப்பு கொண்டதே ஆகும்.
திருச்சுற்று மாளிகை:
ராஜராஜன் வாயிலை ஒட்டிய மதிலின் உட்புறம்
நான்கு திசைகளிலும் உள்ள சுற்று மண்டபம் திருச்சுற்று மாளிகை என அழைக்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ராஜராஜனின் ஆணைக்கிணங்க அவனது சேனாதிபதி
கிருஷ்ணன் பிரம்மராயன் எனும் மும்முடிசோழப்பிரம்மராயன் கட்டியது இம்மண்டபம். இந்த செய்தி இம்மண்டபத்தில் மூன்று இடங்களில் ஒரே கல்வெட்டின்
மூன்று படிகளாக உள்ளது.
திருசுற்று மாளிகையின் உள்ளும் சுவரின்
வெளிப்புறமும் பல கல்வெட்டுக்கள் உள்ளன.
திருசுற்று மாளிகை இரு அடுக்கு மண்டபமாக
கட்டப்பெற்றுள்ளது. இவ்விறு
இரண்டு அடுக்குகளின் மேல் மூன்றாம் அடுக்காய் பிடிச்சுவரும்,நடைப்பரப்பும் கொண்டுள்ளது.
ஆனால் பிற்காலத்தில் இரண்டாம் அடுக்கு
சிதைந்து இந்நாளில்
முதல் அடுக்கு மட்டுமே உள்ளது.
திருச்சுற்று மாளிகையில் ஏழு திசைகளிலும்
அத்திசைகளுக்கான தெய்வங்களுக்காக பரிவாரக் கோவில்கள் அமைக்கப்பெற்றுள்ளன.
தென்கிழக்கில் அக்னி, தெற்கில் யமன்,தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன்,வட மேற்கில் வாயு,வடக்கில் சோமன்,வடகிழக்கில்
ஈசானன் என ஏழு திசைகளிலும் ,ராஜராஜன் திருவாயிலில் இந்திரனுக்கும் என எட்டு திசை தெய்வங்களுக்கும் கோவில்
உள்ளது.
இவை தவிர எட்டு நாக தெய்வங்களும் சப்த
மாதருக்கும் கணபதிக்கும்,உமா மகேஸ்வரிக்கும் கோவில்கள் உள்ளன.
ஆனால் இவற்றில் திசை தெய்வங்களில் அக்னி,வர்ணன்,ஈசானி அகிய தெய்வ உருவங்கள் மட்டுமே சிதைந்த நிலையில் உள்ளன. எட்டு நாகதெய்வங்களில் ஐந்தும்,சப்த மாதரில் வராகியும் மட்டுமே உள்ளன.
(இதில் வராகி இப்போது மக்களால் திருச்சுற்றில் இருந்து வெளியில்
எடுத்து தனி சிறு கோவிலில் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது). உமா மகேஸ்வரி கோவிலிலும் திருமுன் இல்லை.
திருச்சுற்று மாளிகையில் மொத்தம் 368 தூண்கள் உள்ளன.
திருச்சுற்றின் மதில்களில் கோவிலுக்குள்
நுழைவதற்கான நான்கு வாயில்கள் உள்ளன. இவற்றில் வடபுற வாயில் சேர பாணியில் நிலைக்கால்களோடு எழிலுற படைக்கப்பெற்றுள்ளது. இவ்வாயிலை ‘அணுக்கன் திருவாயில்’ என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது.
அணுக்கன் திருவாயில்:
சுற்றுவாயிலின் மதில்களில் உள்ள நான்கு
வாயில்களில் அழகான வேலைப்பாடுகள் கூடியது
‘அணுக்கன் திருவாயில்’.
மன்னன் ராஜராஜன் கோவிலினுள் பிரவேசிக்க இவ்வாயிலையே உபயோகப்படுத்தினார்
என கூறப்படுகிறது.
மரத்தால் செய்யப்பட்டது போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நிலைக்கால்களை கொண்டுள்ளது. மரசட்டங்கள் சொருகுவதற்க்கேற்ற சாரத்துவாரங்களும், பிற கட்டுமான அமைப்புகளும் இந்த வாயிலும் கோபுரத்துடன் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
நந்தி மண்டபம் மற்றும் நந்தி நாயக்கர்
காலத்தியது. கம்பீரமான நந்தி ஆவுடையாரின்
அளவிற்கு ஏற்றார் போல நிறுவப்பட்டுள்ளது. சோழன் காலத்தில் நிறுவப்பட்ட நந்தி இப்போது திருசுற்று மாளிகையின் தென்புறத்தில்
உள்ளது.
சண்டீசுவரர் ஆலயம்:
இது பரிவார ஆலயங்களில் ராஜராஜனால்
கட்டப்பெற்ற ஒரே ஆலயம். சோழர்
காலத்தில் சண்டீசுவரர் நிதி கணக்கு வழக்குகளுக்கான தெய்வமாய் பார்க்கப்ட்டார். அதனால் இக்கோவிலின் நிதி பரிவர்த்தனங்களுக்காக இக்கோவில்
நிறுவப்பட்டு இருக்கலாம். சண்டீசுவரர் பெயராலேயே கோவில் வரவு செலவு விற்பதும் வாங்குவதும்
நடைபெற்றதாக கூறுகின்றனர்.உள்ளே இருந்த திருமுன் இல்லாத்தால் பிற்காலத்திய தெய்வத் திருமுன் தான்
இப்போது உள்ளது.
Very good...buy y u stop writing..
பதிலளிநீக்கு