வியாழன், 25 ஏப்ரல், 2013

ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி 3: கல்லிலே வெட்டுக
ராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை
பகுதி 3:   கல்லிலே வெட்டுக
சரி இனி சில சுவாரஸ்யமான விஷயங்கள், என்னுள் எழுந்த சில ஐயங்கள் இவற்றை கேள்வி பதில் வடிவில் தொகுக்க முயன்றுள்ளேன். படிக்க எளிமையாக இருப்பதற்கு கேள்வி பதில் வடிவம் உதவும் எனத் தோன்றியதும் ஒரு காரணம்.

1. ராஜராஜன் தான் கட்டினானா??
இப்போதிருந்து ஒரு நூற்றாண்டு காலம் முன்பு  வரை இது ராஜராஜனால் கட்டப்பட்டது என யாருக்கும் தெரியாமல் தான் இருந்தது. எப்படி அது மறக்கப்பட்டது எனவும் தெரியவில்லை. கரிகாலன் தன் நோய் நீக்க இக்கோவிலை கட்டியதாக கூறப்பட்டது.        ஜி.யு போப் காடுவெட்டி சோழன் என்பவன் கட்டியதாக கூறுகிறார் (யார் இந்த காடுவெட்டி சோழன் என ஜி.யு.போப்புக்குத்  தான் தெரியுமென நினைக்கிறேன்)
இறுதியாக 1886 சென்னை அரசாங்கம் நியமித்த ஜெர்மன் ஆரய்ச்சியாளர்  ஹூல்ஷ் கல்வெட்டுக்களை முழுமையாய் ஆரய்ந்து இது ராஜராஜனால் கட்டப்பட்டது என அறிவித்தார். அதன் பின் எல்லா ஆராய்ச்சிகளும் கல்வெட்டு செய்திகளும் மறுக்க முடியாத உண்மையாக ராஜராஜன் தான் கட்டியது என்று உணர்த்துகிறது.  

2. ஏன் கட்டினான்?
இக்கேள்விக்கு பல விடைகள் இருக்கலாம். டிஸ்கவரி தொலைக்காட்சியின் ஆவணப்படம் ராஜராஜன் போர் பல புரிந்து தன் அமைதிக்காக இதை கட்டினான் எனக் கூறுகிறது.
கோவில் என்பது அக்காலத்தில்  ஒரு சமூக மையமாகவே கருதப்பட்டது. அங்கு வழிபாடு நிகழ்ந்தது, கலைகள் நிகழ்ந்தன, வணிகம் நடந்தது, கோவில் பல்லாயிரம் மக்களுக்கு பணி வழங்கியது. அங்கு நீதி வழங்கப்பட்டது. ஒரு சமூகத்தின் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இயக்கமும் கோவிலின் மூலமாக நிகழ்ந்தது.
இதனால் எந்த ஒரு மன்னனும் தன் சமூகத்தில் கலாசார, தத்துவ, சமூக மையமான கோவிலை தன் தலை நகரில் முக்கிய வளாகமாக கட்ட வேண்டி இருந்தது.
இது தான் ராஜராஜனுக்கும் காரணமாக இருந்து இருக்க வேண்டும். இதையெல்லம் விட  அவன் தன் காலம் தாண்டி தன் கலையாக தன் சமூகத்தின் அடையாளமாக் பல தலைமுறைகளுக்கும் தன் கோவில் நிற்க வேண்டும் என விரும்பி இருக்க வேண்டும் .
கையிலாசநாதர் ஆலயத்தை கண்டு வியந்த ராஜராஜன் இக்கோவிலை தன் பெயர் சொல்ல, நூற்றாண்டுகள் தாண்டி மக்கள் தன்னை பற்றியும் தன் கோவில் பற்றியும் தங்கள் கணிணியிலும் நூல்களிலும் எழுத அவன் விரும்பி இருக்க வேண்டும். 
தத்துவ ரீதியாகவும் இக்கோவிலுக்கு நிச்சயம் அவன் அர்த்தம் அளித்து இருக்க வேண்டும். வடிவியலில்  இத்தனை ஒழுங்கு கொண்ட இக்கோவில் தத்துவத்திலும்  ஒழுங்கும் அர்த்தமும் கொண்டு இருந்து இருக்க வேண்டும்.
என்ன தத்துவம் என்றால் அதற்கு பதில் நம்மிடம் யூகங்களாகவே உள்ளன. தக்கிண மேரு என்பதால் அவன் தன் கோவிலை மலையாக உருவகம் செய்து அதில் சிவன் குடி இருப்பதாக கொண்டு இருக்க வேண்டும் . தெற்கின் கயிலையாக தன் கோவிலை நினைத்து இருக்க வேண்டும்.
கோவிலின் சுற்றறைகளில் தெற்கில் உக்கிர மூர்த்தியய் சிவன் சிற்பம் இருக்கிறது. மேற்கில் நடராஜரும் , மேற்கில் மனோன்மணியின் சிற்பமும் உள்ளது. இச்சிற்பஙகள் அளவில் பெரிய சிற்பங்கள்.


 -- மேற்கில் உள்ள நடராஜர் சிற்பம்.

இப்போது ஒவ்வொரு திசையிலும் ஒரு தெய்வம் நடுவில் சிவலிங்கம் மேலே உட்கூடாய் வெற்று வெளி என யோசிக்கும் போது இது சதாசிவத் தத்துவத்தை சொல்வதாக இருக்குமோ என சில ஆய்வாளர்கள் யோசிக்கின்றனர்.
சதாசிவம் என்பது  ஐந்து முகங்கள் கொண்ட சிவன். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துபவை. இங்கு தெற்கில் அகோரராக ருத்ர மூர்த்தி, வடக்கில் வாமதேவராக மனோண்மனி (பெண் வடிவம்)  மேற்கில் சத்யோஜராக நடராஜர் ,ஈசானராக உட்கூட்டின் வெளி (ஆகாயம்) ,தத்புருஷராக கிழக்கில் லிங்கம் எனக் கொள்ளக்கூடும்.. ஆனால் இது யூகமே.
இதே போல உட்க்கூட்டை பரசிவமாக ஆட வல்லானாக லிங்க திருமேனியின் நீட்சியாகவும் கொள்ளக் கூடும் .இந்த உட்கூடு பிரபஞ்சத்தின் குறியீடாகவும் கொள்ளக் கூடும். இது குடவாயில் அவர்களின் யூகம்.
ஆனால் வெற்று வெளியான உட்கூடு, கட்டிட தொழில்நுட்பம் மட்டுமாக, வேறு எந்த தத்துவக் குறியீடாக இல்லாமலும் இருக்கலாம். காரணம் இந்த உட்கூடு விமானக் கட்டுமானம் முற்கால சோழர் கட்டுமானத்திலும் பல்லவக் கட்டுமானத்திலும் உள்ள முறையே ஆகும். இது தஞ்சையில் புதுமையாக புகுத்த பட்ட முறை அல்ல. மாமல்லபுரக் கடற்கரைக் கோவில்,திருப்பட்டூர் கயிலாசநாத கோவில்,திருப்பட்டூர் அய்யனார் கோவில் என எல்லாமே இத்தகு உட்கூடு முறையை கொண்ட கட்டுமானங்களே.

3. எப்படிக் கட்டினான்?
இதுவும் நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாகும் ராஜராஜீஸ்வரத்தின் விமானம் ஒர் அசாத்திய கலை மற்றும் தொழில்நுட்ப சாதனையாகும். அப்போது அத்தனை வசதிகள் இல்லாத காலத்தில் எப்படி இம்மாபெரும் கோவிலை கட்டினான் ராஜராஜன் என பல ஆய்வாளர்கள் வியக்கிறார்கள்.  பல யூகங்கள் அல்லது கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
விமானம் முழுதும் கருங்கலால் கட்டப்பெற்றது (granite) தஞ்சை மண்ணில் இவ்வளவு கற்கள் இல்லாத போது கற்கள் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டன? தஞ்சை மண்ணில் இருந்து பல மைல் (குறைந்த பட்சம் 20 மைல்) தொலைவில் இருந்து திருச்சி மானமலை, புதுக்கோட்டை அடுத்த குன்னாண்டார் கோவில், பச்சை மலை போன்ற பகுதிகளிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.  கற்களை பெரும்பாலும் யானைகள வைத்து  தஞ்சை மண்ணிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் .
எப்படி யானைகள் கற்களை இழுத்தன என்பதை டிஸ்கவரி தொலைகாட்சியின்  ஆவணப்படம் சுவாரஸ்யமாக விளக்குகின்றது


எப்படி கற்களை விமானத்தின் மேல் கொண்டு சென்றனர் என்பதற்கும் பல முறைகள் முன் வைக்கப்பட்டுகின்றன. சாரப்பள்ளம் என்ற இடத்தில் இருந்து மண் எடுத்து சாரம் அமைத்து அதில் கற்கள் ஏற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். சாரம் அமைத்து அதில் எடை மிகுந்த கற்களை ஏற்றினால் சாரம் உடைந்து விட்டிருக்கும் என சொல்கின்றனர்.
பலரும் ஏற்றுக் கொள்ளும் முறை விமானத்தை சுற்றி சுழல் வண்டிப்பாதை அமைத்து அதில் யானைகளையும் வண்டிகளையும் கொண்டு கற்களை கொண்டு சென்றிருக்க வேண்டும்.
இந்த சுழல் பாதை அமைக்க மண் தோண்டிய இடம் தான் தஞ்சை அருகே உள்ள சாரப்பள்ளம் எனும் ஊர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த ஊரில் உள்ள பெரிய மணல் பள்ளம் இந்த எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது.
 விமானத்தின் உள்ளே கடினமான மணல் நிரப்பி அதன் மேல் ஏறி கட்டுமான வேலைகளை நடத்தி பின் அந்த மணல் மொத்தமும் நீக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் சொல்கின்றனர். (ஆனால் இம்முறை எனக்கு அவ்வளவாய் பிடிபடவில்லை)
 கோவிலின் வளாகத்திற்கான இடமும் நிலவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படு பின்னர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆறு பாயும் பகுதி என்பதால் பெரும்பாலும் வண்டல்,களிமண், மணல் பகுதியான தஞ்சையில் அழுத்தம் தாங்க கூடியதான பகுதி தெற்குப் பகுதியாகும் . இப்பகுதியின் நிலத்தாங்கு திறன் ஆராயப்பெற்றது. ஒரு சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தின் தாங்கு திறன் 162 டன்கள். விமானத்தில் பயன் படுத்தப்பட்ட கற்களின் எடையை வைத்து கணக்கிட்ட போது ஒரு சதுர மீட்டர் அளவிற்கு 47.4 டன் எடை அழுத்தப்படுகிறது. எனவே துல்லிய நிலவியல் ஆராய்ச்சிக்குப் பின்னரே கோவிலுக்கான நிலம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும்.
கற்களை செவ்வகமாகவோ சதுரமாகவோ அளவாய் வெட்டாமல், எந்த வடிவில் கற்கள் எடுக்கப்பட்டனவோ அதே வடிவில் மேடு பள்ளமின்றி    செய்து அடுக்கி உள்ளனர். பல கோணப் பிணைப்பு முறை கொண்டு கற்களை எந்த ஒட்டுபொருளும் இல்லாமல் இணைத்து உள்ளனர்.


படம்: பல்கோணப் பிணைப்பு முறை.
ஒன்றோடு ஒன்றாய் கற்களை இணைக்க பந்துக்க்குழிவு (ball and socket joint) நீள் குழிவு(groove joint)  கோர்வை (inter locking joint) காடி பள்ள முறை (tongue and groove joint) முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

படம் : கல்லின் இறுதி பகுதி பாதி யாளியில் வந்து இருப்பதால் மீதி யாளி அடுத்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது ..

விமான நிழல் தரையில் விழாதா?
விழும். கலச நிழலும் விழும்.


கிரீவ நந்தி திருசுற்று மாளிகையில் உள்ள சோழன் கால நந்தியின் அளவும் ஒன்றா
இல்லை. கிரீவ நந்திகள் ஒன்றிரண்டு அடியேனும் சிறியவை.
ஓவிய அறையில் ராஜராஜன் கருவூர்த் தேவரின் ஓவியம் உள்ளதா?
அவ்வோவியத்தில் உள்ளவர்கள் ராஜராஜனின் அவையில் இருந்தவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ராஜராஜனுக்கும் கருவூர்த் தேவருக்கும் உள்ள தொடர்புக்கு வரலாற்று ரீதியான சான்றுகள் இல்லை.

விமானம் முழுதும் பொன் வேய்ந்து இருந்ததா?
நான் கேட்டவற்றில் என்னை மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைத்த செய்தி இதுதான். உண்மையாய் இருந்தால் அந்த ம்கிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்வேன்.
ஆனால் குடவாயில் சொல்லும் இச்செய்த்தியை அவர் தரும் சான்றுகள் வலுவானதாய் இல்லை என முனைவர் கலைக்கோவன் ஆணித்தரமாக மறுக்கிறார். சிறு சிறு கொடைகளை கூட மிக விரிவாக பதிவு செய்த ராஜராஜன் விமானம் முழுதும் பொன் வேய்ந்த கருத்தை துண்டு கல்வெட்டில் ஒரு மூலையிலா வைத்திருப்பான் என்பது அவர் வாதம். அதுவும் அத்துண்டு கல்வெட்டு முழுமையான செய்திகளும் இல்லாத கல்வெட்டு.
கலைக்கோவனின் வாதம் எனக்கு ஏற்றுக் கொள்வதாகவே இருக்கிறது.

அஸ்திவார சுவர்களின் இடைவெளியில் நிரப்பப்பட்டுள்ள பல அளவுக் கற்களை தஞ்சை மக்கள் கொண்டு வந்து நிரப்பினரா?
வரலாற்று சான்று இல்லை
அழகி என்ற பெண் கொடுத்த கல் தான் சிகரத்தை தாங்கும் 15 ஆம் தளமாய் உள்ளதா?
வரலாற்று சான்று இல்லை.
விமானத்தில் உள்ள அயல்நாட்டு தொப்பிகாரன் சிலை ராஜராஜன் காலத்தில் அயல்நாட்டு மக்கள் குறித்து தெரிந்து இருந்ததன்  விளைவா?
இது நாயக்கர் கால சிலை . ராஜராஜன் காலத்தியது அல்ல என குடவாயில் சொல்கிறார். இதே போல மோனத்தில் ஆழ்ந்து அமர்ந்து இருக்கும் பெண்ணின் உருவமும் ராஜராஜன் காலத்தியதா எனத் தெரியவில்லை.புத்தர் சிற்பங்கள் எப்படி ராஜராஜன் காலத்தில் செதுக்கப்பட்டன?
அது புத்தர் சிலை அல்ல. திருபுரந்தாகர்  கதையில் வரும் ஒரு காட்சி


கருவறை தெய்வம் குடமுழுக்குக்கு முன்னமே கோவிலில் வைத்து வழிபாடு நடந்ததா? கருவறை அதன் பின் தான் கட்டப்பட்டதா?
குடவாயில் அவர்களின் இக்கருத்தை கலைக்கோவன் முற்றிலும் மறுக்கிறார்.
காரணம் கருவறையை விட  லிங்கம் பெரியதாக இருப்பது என சொல்வது மறுக்கப்படுகிறது. ஆவுடையார் ஒரே கல்லில் ஆனது அல்ல என்பதால் கருவறைக்குள் வைப்பது சுலபம். அதே போல் லிஙத்திருமேனி ஒரே கல் என்றாலும் உருள் வடிவம் என்பதால் நீள்வாக்காக கொண்டு வந்து இருக்க முடியும். இவை தவிர குடவாயில் முன் வைக்கும் கருத்துகலள் பலமானதாக இல்லை எனவே தோன்றுகிறது.
நந்தி வளர்கிறதா?
ஹ்ம்ம்ம்.. என்னத்தை சொல்ல (நல்ல வேளை ஆணி அடித்து வளர்ச்சியை நிறுத்திவிட்டார்களாம்.இல்லாவிடில்  நந்தி  வளர்ந்து வளர்ந்து விமானத்தை விட பெரியதாகி இருக்கும்)

மக்கள் எப்படி வாழ்ந்தனர்? எப்படி கோவிலை கொண்டாடினர்? கோவில் எப்படி நிர்வகிக்கப்பட்டது?
இந்த  கேள்வி இன்னுமொரு பெரும் கட்டுரைக்குரிய விஷயம் கொண்டதாகும்.
ராஜராஜன் தனது கோவிலை நிர்வகித்த விஷயம் என்னை வியப்படைய வைத்தது.
இது வரை ராஜராஜனைத் தவிர எந்த தமிழக மன்னனும் தன் கோவிலை கட்டியவர் (குஞ்சர மாமல்லன் எனும் ராஜராஜபெருந்தச்சன்) , அதை நிர்வகித்தவர்கள், அதில் ஆடல் கலையில் ஈடுபட்டவர்கள்,  இசை கலைஞர்கள்,பற்றிய தகவல்களை  கோவிலில் விவரமாக குறிப்பிட்டு இருக்கிறாரா எனத்தெரியவில்லை. கோவில் பணியாளர்களின்( கணக்கர்கள், பொக்கிஷத்தார், மெய்காப்பாளர், திருவிளக்கு இடுபவர்,மாலை கட்டுவோர், வண்ணமிடுவோர், சோதிடர், தச்சர்,தையல்காரர்,நாவிதர்,வண்ணான் ) சம்பளம் முதற் கொண்டு குறிக்கப்பட்டு உள்ளது.
அதே போல கோவிலுக்கு கொடுத்த கொடை, கோவிலில் அளவு எடுத்த முறை (அளவுக்கற்களின் பெயர் முதல் கொண்டு) கோவிலின் நகை மற்றும் செப்புத் திருமேனிகளின் கணக்கு, நகையில் எவ்வளவு தங்கம், அதன் தரம், நகைகளில் உள்ள கல் முத்து அவற்றின் தரம் , (சரடு நீக்கி பொன் மட்டும்   எடை பார்க்கப்பட்டு குறிக்கப்பட்டுள்ளது). என எல்லாம் குறிக்கப்பட்டு உள்ளது.
கோவிலின் செலவு வணிகர்களுக்கு வட்டிக்கு விடப்பட்ட பணத்தில் நிர்வகிக்கப்பட்டு இருக்கிறது (12% வட்டி)
கோவிலில் எத்தனை விளக்குகள் அவற்றிற்க்கு எவ்வளவு நெய் விட வேண்டும் பால்,நெய் தருவதற்கு பசு,எருமை ஆடுகளின் கணக்கு, இறைவனுக்கு படைக்கப்பட்ட நெய்வேதிய விவரங்கள்,
கோவில் மூல பண்டாரம்( அளவுக்கல்) தஞ்சை விடங்கன் எனவும் கோவில் மரக்கால்ஆடவல்லான்எனவும் பெயர் கொண்டு இருந்தது.
கோவிலின் கொடைகள் எல்லாம் கல்வெட்டுகளாய் செதுக்கப்பட்டு உள்ளன. பெரும் வரிகளாய் நீளும் இக்கல்வெட்டுகள் சரித்திர  பொக்கிஷம்.
என்னை சுவாரஸ்யப்படுத்திய விஷயம் அக்காலத்தின் விலைவாசி .. ஒரு கிராம் தங்கத்தின் விலை 2000ரூ என வைத்துக் கொண்டால்
ஒரு கலம் நெல் – 273.42 ரூ
எலுமிச்சை – 3.02
சீரகம் 1 படி – 21.08
வாழை 12 – 22.
தயிர் ஒரு படி- 8.8
உப்பு 1 படி – 2.58
பசு – 1466.78
நிச்சயம் அதிக விலைவாசி தான் :)
ஆச்சரியிம் என்னவென்றால் 1000 வருடம் முன் மக்கள் எவ்வளவு விலை கொடுத்து பொருள் வாங்கினர் என நம்மால் இப்போது அறிந்து கொள்ள முடிவது தான்.

ராஜராஜன் சாதி வேறுபாடு பார்த்தானா?
இது பற்றி எனக்கு தெரியவில்லை. நாவிதனுக்கு ராஜராஜன் அவனது பெயரை சூட்டியதாக சில புத்தகங்கள் தெரிவிக்கின்றன. பாலகுமாரன் தனது உடையார் நாவலில் சிற்பிகள் தளிசேரி பெண்டிர் (ஆடல் மகளிர்)  பெயர்களை கல்வெட்டில் எழுதிய மன்னன் ஏன் தங்களை குறித்து விரிவாக எழுதவில்லை என பொருமுவது போல் எழுதுகிறார்.  சிலர் ராஜராஜன் சாதாரண மக்களுக்கு பெரு வட்டிக்கு பொருள் கொடுத்ததாக கூறுகின்றனர். (கல்வெட்டுகள் உள்ளதா எனத் தெரியவில்லை)
சாதி அதிகம் வேரூன்றிய காலம் அது என்பது உண்மை.. ராஜராஜன் அதிலிருந்து வேறுபட்டு இருந்தானா எனத் தெரியவில்லை. ஆனால் ராஜராஜன் அக்காலத்ததை தாண்டி யோசித்தவனாகவே எனக்குத் தோன்றுகிறது. அவனது விரிவான கல்வெட்டுகள் பல தரப்பு மக்கள் குறித்தும் பதிவு செய்கிறது. கோவிலின் ஓவியங்கள் ,சிற்பங்கள் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்துள்ளன.
அவனது கலையை அக்காலத்தின் சாதீய வேறுபாடுகளை தாண்டி பாராட்டலாமா என கேள்விகள் எழுப்புகின்றனர் ஒரு சாரார். பெரும் போர்கள் செய்து குவித்த செல்வத்தில் கட்டிய கோவில் என சிலர் சாடுகின்றனர்.
இவை எல்லாவற்றையும் யோசிக்கவே வேண்டி உள்ளது.  ஆனால் வரலாறு ராஜராஜனை தன் காலத்தின் பல படிகள் தாண்டி கலை,தொழிநுட்பம், நிர்வாகம்,என முழு வீச்சில் தமிழ் சமூகத்த்தை கட்டமைத்த பெரும் மன்னனாகவே நினைவு கூறுகிறது.
எது உண்மையோ இல்லையோ
 கலை வளர்த்த தமிழ் சமூகத்தின் 1000 வருட வரலாற்றின் பாரம்ப்பரியத்தின் சாட்சியாய் நெடிதுயர்ந்து வான் முட்டி காலம் தாண்டி, படையெடுப்புகள் தாண்டி, ஆறு நிலநடுக்கங்களை தாண்டி   மலையாய்  நிற்கும் அந்த மன்னனின்  கலைப்படைப்பு மறுக்க முடியாத மாபெரும் உண்மை.

பின்குறிப்பு:
ராஜராஜீஸ்வரத்தை பற்றி எழுதிய பின் எனக்கு தோன்றியது நிறைய வருத்தங்களே..
இவ்வளவு ஆழமான கட்டிட தொழிநுட்ப நிர்வாக திறமை பெற்று இருந்த தமிழ்சமூகம் இன்று? என்ற கேள்வி மனதை உறுத்துகிறது, மேற்கு உலகம் நாகரீகத்தை கொஞ்சமும் அறியாமல் இருண்ட நாட்களில் இருந்த காலம் நாம் கலை வணிகம் தொழில்நுட்பம் என முன்னேறி இருந்தோம். இன்று நாம் மேற்கின் நகல்கள். நம்மிடம் எதும் புதிதாய் வரவில்லை. நம்மிடம் இருக்கும் நாகரிகம் எதையும் யாருக்கும் சொல்லவில்லை. நம் கலை உலகை திரும்பி பார்க்க வைக்கவில்லை. ஏன்? நம் முன்னோர்க்களின் திறம் நமக்கு சரியாக பரிமாற்றம் செய்யப்படவில்லையா? காலம்தோறும் நிகழ்ந்த படையெடுப்புகள் கலாச்சார குழறுபடிகள் நம்மை மழுங்கடித்துவிட்டனவா? தெரியவில்லை.
நம் கண் முன் நிற்கும் நம் கோவில்கள் நம்மை குறுக வைக்கின்றன. நம் முன்னோரின் அறிவில் சுய சிந்தனையில் நாம் எதையும் கற்கவில்லையா?
கொஞ்சம் திரும்பி பாருங்கள் .. ராஜராஜனை வியப்பதை தவிர நாம் என்ன செய்தோம். உலகம் வியக்கும் கட்டிடம் எழுப்பினோமா? நிர்வாகத்தில் முன்னோடியா’? அறிவியல்? கலை? சிற்பம்? தொழில்நுட்பம்?  எதிலேனும்??
வரலாறு அப்படியே இருந்து விடக் கூடாது. அது வளர வேண்டும். நம் சந்தத்திகள் நம்மைப் பற்றி ஆயிரம் ஆண்டு கழித்து பெருமையாய் எழுத வேண்டும். எழுத வைப்போமா??

குறிப்பெடுக்க உதவிய நூல்கள்.
பிற்கால சோழர் சரித்திரம் - சதாசிவ பண்டாரத்தார்
சோழர்கள் - கே.. நீலகாண்ட சாஸ்த்ரி
தமிழ்நாட்டு வரலாறு- சோழர் வரலாறு - டாக்டர் மா. இராசமாணிக்கனார்
சிவபாத சேகரனின் தஞ்சை கல்வெட்டுகள்: வே மகாதேவன்.
oxford history of art - Indian art
The temple architecture of India - Adam Hardy.
சோழர் காலத்து கோவிலும் சமூகமும் - வல்லிபுரம் மகேஸ்வரன்.
The Great temple at tangjore - JM Soma sundaram
தஞ்சை பெரிய கோயில் கையேடு - டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம்
ராஜராஜசோழன் - ..கண்ணன்
காலத்தால் கரையாத காவியம் இராஜராஜேஸ்வரம் - முனைவர் வேதவல்லி கண்ணன், என்.தம்பைய்யா.
‘Vibrant at 1000: Big Temple, Thanjavur - Iqbal K Mohammed

பல்வேறு செய்திகள் varalaaru.com இல் இருந்தும் குடவாயில் அவர்களது புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளிலிருந்தும் பெற்றது.
இக்கட்டுரையை யாருக்கேனும் சமர்ப்பிக்க நான் விரும்பினால் அது முனைவர் கலைக்கோவன் அவர்களுக்கு தான் இருக்கும்.
புகைப்படங்கள் பல நூல்களிலிருந்தும், இணையத்தில் இருந்தும் எடுக்கப்பட்டது. காப்புரிமை குறித்து கேட்கப்ப்ட்டால் உடனே நீக்கப்படும் :-(

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...