திங்கள், 17 ஜனவரி, 2011
ஆடுகளம் விமர்சனம்
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஜெயபாலன் கிஷோர் தபசி நடிப்பில் ஆடுகளம் வெளிவந்துள்ளது ஆடுகளம். நேற்று மாலை பெங்களூரில் குடும்பத்துடன் பார்த்தேன். தமிழ் சினிமா இப்போதெல்லாம் நிறைய நம்பிக்கை தருகிறது. மகிழ்ச்சி.
கதை :- ஒரு பர பர நாவல் போல பயணிக்கும் கதை. கருப்புக்கு (தனுஷ்) சேவல் சண்டை தான் உயிர். சேவல் சண்டையின் எல்லா நுணுக்கங்களும் தெரிந்தவர் பேட்டைகாரர் ( ஜெயபாலன்) . கருப்பு அவரை தன் குருவாக தந்தையாக நினைக்கிறார். கருப்பு தயார் செய்த சேவல்களில் ஒன்று சரியில்லை என அதை அறுத்து போட்டு விட சொல்கிறார் பேட்டைகாரர். ஆனால் கருப்பு மனமில்லாமல் அதை செய்வதில்லை. அதே சேவல் ஒரு சந்தர்பத்தில் போட்டியில் வென்றுவிட பேட்டைகாரருக்க்கு கருப்பின் மேல் பொறமை வளர்கிறது. பொறாமையின் உச்சத்தில் கருப்பை மொத்தமாய் அழிக்க துரோகத்தை ஆயுதமாக்குகிறார்..
ஆடுகளம் நிகழ்வது மதுரையில். மதுரையின் வட்டார தமிழ் மணக்கும் வசனங்கள். எல்லா நடிகர்களுமே வசனங்களை அதனை லாவகமாக பேசுகிறார்கள். இதனால் அவற்றை புரிந்துகொள்ள அவ்வபோது எனக்கு சிரமம் ஏற்பட்டது. ஒரு ஆங்கில படம் பார்ப்பது போல மிகுந்த குவிப்புடன் படம் பார்க்க வேண்டி இருந்தது.
சேவல் சண்டை படத்தின் கதையை முடுக்கி விடும் கருவி. கதாபத்திரங்களின் தொழில், உணர்வுகள், தன்முனைப்பு எல்லாம் சேவல் சண்டையின் வழியாகவே வெளிப்படுகிறது. காசு உணவு உறவு இவை எல்லாம் தாண்டி மனிதன் தனக்கான வட்டத்தை எதோ ஒன்றின் வழியில் உருவாக்கி கொள்கிறான். மதம் இனம் மொழி சாதி நாடு மட்டுமல்ல அது சேவல் சண்டையாக கூட இருக்கலாம். சேவல் சண்டை நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அது சற்று மிகையாகவும் சில இடங்களில் ஸ்பெஷல் எபக்ட்ஸ் துணையுடனும் எடுக்கப்படிருந்தாலும் ஒரு வித்தியாசமான ஆடுகளத்தை அதன் யதாரத்தம் அதிகம் கெடாமல் விறுவிறுப்புடன் காண்பித்து இருக்கிறார்கள். (கொஞ்சம் ameros perros இன் நாய் சண்டையை ஞாபகபடுத்தினாலும் கூட)
படத்தின் முதல் பாதி சேவல்கள் சண்டையிட இரண்டாம் பாதியில் அதே ஆக்ரோஷத்துடன் மனிதர்கள் வாழ்வெனும் ஆடுகளத்தில் சண்டையிடுகிறார்கள். பொறாமையும் துரோகமும் சந்தேகமும் முட்டி மோதிக் கொள்கின்றன. உணர்வுகள் சம்பவங்களோடு சிக்கலில்லாமல் பிண்ணி பிணைவதை திரைக்கதையக்குவது மிகவும் சிரமம் என்றே நினைக்கிறேன். ஆடுகளம் இதில் வெற்றியடைகிறது.
தனுஷ், ஜெயபாலன் இருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்கள். கேமராவும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மதுரையின் நிலவமைப்பை உயிர்ப்புடன் கண் முன் நிறுத்துகிறது கேமரா. பாடல்களில் சமாளித்தாலும் பின்னணி இசையில் மீண்டும் மீண்டும் இளையராஜாவின் வெற்றிடத்தை நினைத்து கொள்ள வைக்கிறது ஜி.வி. பிரகாஷின் இசை.
இனி பிரச்சனைகளுக்கு வருவோம், ஆடுகளத்தின் பிரச்னை சற்று வித்தியாசமானது. தங்குதடையில்லாமல் செல்லும் திரைக்கதையே அதன் பிரச்னையாகவும் அமைந்து விடுகிறது. 2.5 மணி நேரம் சமபவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது அதிக குவிப்பை பார்வையாளனிடம் கோருகிறது. ஒரு சராசரி தமிழ் பார்வையாளன் இன்னும் அதற்க்கு பழகவில்லை என நினைக்கிறேன். இது ஒரு புறம் இருக்க சம்பவங்களின் தொடர் அரங்கேற்றம் பாத்திரங்களின் வார்ப்பை, தன்மைகளை முறையாக உள்வாங்க முடியாமல் செய்து விடுகின்றன. ஆடுகளத்தின் பிரச்னை இந்த அவசரம் தான்.
அதே போல , பேட்டைகாரர் தட்டையான கதாபத்திரம் இல்லையென்றாலும் அவருக்கு விழும் வில்லன் இமேஜ் நெருடுகிறது . கருப்பு அவர் மேல் இறுதியில் காட்டும் அளவுக்கு அதிகமான பிரியம் அல்லது நன்றியுணர்வு அதன் காரணமாய் அவருக்கு அவன் அளிக்கும் மன்னிப்பு இதெல்லாம் வணிக சினிமாவின் பார்முலா போலத்தான் உள்ளது. கருப்பு பேட்டைகாரரை மீறி கோழி சண்டை விடுவது, அவர் ஆத்திரப்படும் போது அவரிடம் இருந்து விலகி வாழ்வது என தன்னை இழக்காமல் பயணிக்கும் திரைக்கதை இறுதியில் மெல்ல வணிக சூத்திரங்களுக்குள் அடங்குகிறது. முதல் paathiyil கோழி சண்டையில் எதிராளியாய் வரும் போலீஸ் மற்றும் அவர் சார்ந்த பாத்திரங்கள் தேவைக்கும் அதிகமான அளவு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இதனால் படம் முன்பாதியில் ஒரு படம் போலவும் பின் பாதியில் மற்றொரு படம் போலவும் தோற்றமளிக்கிறது.
குறைகளை தாண்டி இது மனித உறவுகளை ஆடுகளத்தில் விட்டு மோதி பார்க்க செய்யும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படம். இந்த இரண்டாவது படம் முலம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தரும் இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைப்படுத்தி உள்ளார். வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)
தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...
-
(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படு...
-
அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...
-
படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :( மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பரிமாற்றங்கள்