ஞாயிறு, 31 ஜனவரி, 2010

அகநிலம் -II மாமழை வீழ்ந்தென, அருவி.

காலம் காலமாய் காதலின் தவிர்க்க முடியாத அத்தியாயம் பிரிவு. பிரிவுக்கு எவ்வளவோ காரணங்கள்.
பொருள் பொருட்டு, பெற்றோர் பொருட்டு, கல்வி பொருட்டு, புது உறவின் பொருட்டு,சலிப்பின் பொருட்டு,சமுதாயத்தின் பொருட்டு என ஆயிரத்தி எட்டு காரணங்கள் எல்லாக் காலங்களிலும் மாறாமல் இருக்கிறது.
'இதெல்லாம் பொருட்டாய் தோன்றியவனுக்கு என்னை ஒரு பொருட்டாய் தோன்றவில்லையே'
எனக் கண்ணீர் விட்டுப் புலம்பும் இதயங்களால் நிரர்ம்பியது தான் இந்த உலகம்.
விடுதி அறைகளில்,ரயில்வே பிளாட்பாரம் பெஞ்சுகளில்,மொட்டை மாடிகளில், அரசுப் பேருந்து ஜன்னலோர இருக்கைகளில்,ஊர் ஓரமாய் நிற்கும் பனைமரத்தடிகளில் என எங்கேயேனும் கேட்டிருக்க முடியும் பிரிவாற்றமுடியாதவர்களின் பெருத்த விசும்பலை.

ஆர்ப்பரிக்கும் காதல் ஓய்ந்து விடுவதில்லை. பிரிவின் திரையை தன கூர் நகங்கள் கிழிக்க அலைகிறது. சிதையும் உடல், பெருகும் கண்ணீர், அடங்காமல் பொங்கும் சினம் என வெடித்து கிளம்பும்.
தன் மீதும் பிறர் மீதும் வெறுப்பை வன்முறையை வீசும். தூற்றும், பழியிடும், வஞ்சிக்கும். கழிவிரக்கத்தோடு கெஞ்சும். நிலை கொள்ளமால் தவிக்கும்.

எந்த உறவின் தொடர்பும் அவ்வளவு சீக்கிரம் அறுந்து விடுவதில்லை. அறுந்த உறவு செய்யும் ஆர்ப்பரிப்பு எளிதில் அடங்கி விடுவதும் இல்லை .
மதுக்கோப்பையாய் காதல் தீர்ந்து விடுவதில்லை. மாமழையின் பேரருவியாய் கொட்டும்.

காதலின் தொடர்பு தன் காதலியின் பெயர் கொண்ட லாரி நெடுஞ்சாலையில் கடக்கும் போது மின்னும்.
இரவில் அனலாய் வீசும் நிலவில் யாரேனும் 'நிலா அழகா இருக்கில்ல' என சொல்லும் போதும் அவனது நினைவு பொங்கி மேலெழும்.
நடு இரவில் புணர்ச்சியின் போது பல வருடம் முன் அவளுக்கு வாங்கி தர மறந்த கைக்கடிகாரம் ஞாபகம் வரும்.
'சாரி டா..'என்ற அந்த இறுதி ஒற்றை வார்த்தை ஒரு திரைப்படத்தின் இடை வெளியில் குடும்பத்தை விட்டு வந்து சிறுநீர் கழிக்கும் அந்த ஓரிரு நிமிடங்களில் சட்டென தோன்றும்.
குழந்தையின் பெயராய் மீண்டெழும்.
கணினியின் கடவுசொல்லாய் வாழும்.
மணிக்கட்டில் இருந்து நில்லாமல் பொங்கும் கருஞ்சிவப்பு ரத்தமாய் வழியும்.

நிஜமாய் சொல்லுங்கள்.. எப்போது பிரிந்து எப்படி யாரோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும் உங்கள் காதலின் தொடர்பு தூரத்தில் விழும் ஒரு காட்டின் மொத்த அமைதியையும் கிழிக்கும் பேரருவியின் சத்தமாய் மரணம் வரை நிகழ்ந்து கொண்டேதானே இருக்கிறது?


'காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே'


தொகுப்பு: குறுந்தொகை; பாடல் எண்: 42; பாடியவர்: கபிலர்;  திணை;குறிஞ்சி

காதல் ஒழிந்து போனாலும் ,
இரவெல்லாம் பெய்த பெருமழையை
அருவியின் சத்தம்
அறிவிக்கும் நாடனே,
நம் தொடர்பு  தேய்ந்தா போகும்??

2 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...