செவ்வாய், 6 ஜூலை, 2010

வேம்பு நிழல் (சிறுகதை)நேற்று மாலை மாமா இறந்து விட்டிருந்தார். காட்டுக்கு போய் ஆள் கூலி பேசி விட்டு வரும் போது விபத்து நடந்திருக்கிறது. டி.வி.எஸ்ஸில் வரும் போது கூட்டு ரோட்டுக்கு நூறு அடி முன்னால் திருச்சி வண்டி மினி பஸ்ஸை ஸைடெடுக்கும் போது மோதி ஸ்பாட்டிலேயே இறந்து விட்டார்.

மாமா குடும்பத்தோடு பேச்சு வார்த்தை நின்று கிட்டத்தட்ட 4 வருடமாயிற்று. பக்கத்து ஊர் தானென்றாலும் எதிரெதிர் பார்த்தால் கூட பெசுவதில்லை. வாய்க்கால் பாலத்தோடு வைத்து ஒரு முறை ‘ எல்லாமே விட்டுப் போயிடுமா? பகையாளியாவே போயிட்டனா மாப்ளே..’ என்று கண்ணில் நீருடன் கேட்டே விட்டார். நான் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டேன். அம்மாயி சாவுக்கு அவரும் தான் காரணம். அத்தையின் சுடு சொற்களைத் தட்டிக் கேட்க துப்பில்லாத மனுஷன். ஒரு கட்டத்தில் அத்தையின் விஷ வார்த்தைகள் பொறுக்காமல் சுழித்த வாய்க்காலில் விழுந்தாள் அம்மாயி. கொடுமை என்னவென்றால் காலை துணி அலச வந்த வண்ணான் சொல்லித் தான் விஷயமே தெரிந்தது. தண்ணீர் ஊறி உப்பிய அந்த முதிய உடல் இப்போதும் என் கண் முன்னால்.  ஹ்ம்ம்.. அம்மா பலமுறை இங்கே வீட்டிற்கு வரச் சொல்லியும் மாமாவிடமே கடைசி வரை இருந்து உயிரை விட்டாள்.

அத்னால் தான் காலை மணி ஏழாகியும் அவர் சாவுக்கு கூட போகத் தோன்றவில்லை. அம்மா நேற்று இரவே கிளம்பியிருந்தாள். நானும் மெல்ல குளித்து கிளம்பினேன். எட்டு மணிக்கு வர வேண்டிய திண்டல் வண்டி அரை மணி தாமதமாய் வந்தது. வேட்டியை இறுக்கிக் கொண்டு கூட்டத்தில் முண்டினேன். வேர்வை நசநசப்பால் யாரைப் பார்த்தாலும் கோபம் வந்தது. மேக்கூரில் இறங்கி இரண்டு நிமிடம் வேப்பமரத்தடியில் நின்று விட்டு பெட்டிக்கடையில் சின்ன பாட்டில் பெப்ஸி ஒன்றை குடித்தேன். பின் பொறுமையாய் கிழக்காக மாமா வீடு நோக்கி நடந்தேன். வீடு கட்டி எப்படியும் 10 வருடம் மேல் ஆகியிருக்கும். மாமா பார்த்து பார்த்து கட்டிய வீடு. நான் தான் ஹால் டைல்ஸ் கலர் தேர்ந்தெடுத்தேன். தனக்கு பிடித்த கலரே நானும் தேர்ந்தெடுத்ததாக அம்மவிடம்  மாமா சொல்லி சொல்லி மாய்ந்தார்.
வீட்டு வழியில் தாரதப்பட்டை ஆட்கள் மரத்தடியில் கள்ளோ பதனியோ குடித்துக் கொண்டும் பீடி பற்றவைத்துக் கொண்ட்ம் இருந்தார்கள். கோபி சித்தப்பு சாவுக்கு இதே கூட்டம் தான் தப்படித்தது. இழவு விசாரித்த கையோடு என்னை திண்டல் கூட்டிப் போய் செகண்ட் ஹேண்ட் பைக்கிற்க்கு விசாரித்தார். ‘ மாமா, நாளைக்கு பாத்துக்கலாமே’ என்று சொன்ன போது ‘ நாளைக்கு எவன் போறானோ .. சாவுக்காக நாம நிக்கக் கூடாது மாப்ளே. ஒனக்கு இன்னைக்கு தான் லீவு. அட கையோட வேலைய முடிச்சு போட்டா ஆச்சு. இதுக்கினி நாளு கெளமயா  பாக்க முடியும்” என்றார்.
மாமாவோடு பேச்சு வார்த்தை நின்றாலும் அவர் கொடுத்த ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வண்டியில் தான் காலேஜ் போய் வந்து கொண்டிருந்தேன். ஒரு முறை  எதோ கல்யாணத்தில் அதை பற்றி குத்திச் சொன்னதாக பட  பெருந்துறை பட்டறையில் பைக்கை விட்டு இரண்டு வருடமாயிற்று.
மாமா வீடு வந்து சேர்ந்தேன். முன்னால் தென்னம்பந்தல் .  சிறுவன் ஒருவன் எல்லாருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தான். இதற்க்கு முன் மாமா பையன் சிவாவிற்கு பேர் வைக்கும் போது பந்தல் போட்டிருந்தது. காம்பவுண்டு  முன்னால் பவள மல்லி செடி மொத்தமாய் பூத்திருந்தது. அத்தை வைத்த செடியாய் இருக்க வேண்டும். வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் ஹால் ஓரத்தில் மாமா படம் வைத்து விளக்கேற்றி இருந்தார்கள். மின் மயானத்திற்க்கு உடல் எடுத்து கொண்டு போஇவிட்டதாக யாரோ சொன்னார்கள்.
 மாம்வின் படம் சாத்தி வைக்கப் பட்டிருந்த இடத்தில் தான் முன்பு டீ.வி இருந்தது. அப்போது மாமா வீட்டில் மட்டும் தான் டீ.வி. ஒரு கோடை விடுமுறையில் எனக்காக டெர்மினேட்டர் படம் ஈரோட்டில் வீடியோ கடையில் வாங்கி வந்து போட்டு காண்பித்தார். இருவரும் ஒரு சேரப் பார்தோம். அம்மாயி கோழிக்குழம்பும், வறுவலும் செய்திருந்தாள். அம்மாயி வைத்த குழம்பு சாப்பிட்டால் இரவு சாப்பாடு வரை அந்த மணம் விரல்களிலேயே இருக்கும். ஹாலில் எங்குமே அம்மாயி படம் தென்படவில்லை. பூஜை ரூமில் இருக்குமோ? அம்மாயி வைப்பது போல அம்மாவிற்கு கோழி குழம்பு வருவதில்லை.
அம்மா அத்தையருகே உட்கார்ந்திருந்தாள். அவள் கைகளை கோர்த்தபடி . என்னை பார்த்தவுடன் அத்தை கதறினாள். ‘அய்யா.. பாத்தீங்களா.. அநாதையா உட்டுப் போட்டு போய்ட்டாரே.. ரெண்டு நாள் முன்ன கூட உங்கள பத்தி தான் ஒசத்தியா பேசிக்கிடிருந்தாரு. உசுரா இருந்தாரே உங்க மேல..’ என்று கேவினாள். அவள் அழுகையில் பொய்யில்லை. எத்தனை வருடங்களாய் என்னைப் பார்த்தாலே முகம் சுளித்தவள். ‘ரெண்டு புள்ளைகளை இந்த முண்டைகிட்ட உட்டுட்டு போயிட்டாரே’ அப்போது தான் அத்தை சின்ன நீலப் பூக்கள் போட்ட வெள்ளை புடவை கட்டியிருப்பதை பார்த்தேன்.   பையன்களை ஹாலில் காணோம். மெல்ல பெட்ரூமிற்க்குள் எட்டிப் பார்த்தேன். உறவுக்காரர்கள் மத்தியில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். ‘சிவா.. இங்க வாடா..” என்றேன். பெரியவன் வந்தான். கூடவே சின்னவனும். சின்னவன் இன்னும் அழுது கொண்டிருந்தான்.  “சாப்டீங்களா” என்றேன். சிவா இல்லையென தலையாட்டினான். ‘சரி வாங்க” என்றேன். அவன் கொஞ்சம் தயங்கினான். ‘ வாங்கடா’ என்றேன். கெஞ்சலுமில்லாமல் மிரட்டலுமில்லாமல். இருவரும் கோடு பிடித்தாற் போல் பின்னால் வந்தனர். ‘மோகன்,செருப்பு தொடு டா’ என்று சிவா சொன்னவுடன் சின்னவன் அழுகையை நிறுத்து விட்டு செருப்பு போட்டுக் கொண்டு வந்தான். மெல்லிய காற்று.  இருவரையும் கூட்டிக்  கொண்டு இட்லி கடைக்கு வந்தேன். சின்னவன் முகம் அழுகையால் வீங்கியிருந்தது. கர்சீப் எடுத்து அவன் முகம் துடைத்தேன்.
மாமா எனக்கு எப்போதும் இதே கடையில் தான் இட்லியும் குருமாவும் வாங்கித் தருவார்.  ‘எத்தன இட்லி வேணும்? “ கேள்விக்கு சிவ எதுவும் சொல்லவில்லை. ‘மூனு சொல்லட்டா’ என்றேன். “ம்ம்” என்று தலையசைத்தான். இவர்களிருவரிடமும் பேசி கூட வருடங்களாயிற்று. சுடச்சுட இட்லி வந்தது. சிவா கொஞ்சம் வேகமாய் சாப்பிட்டான். மோகன் அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டு சாப்பிட்டான்.  ‘என்ன படிக்குறே? ‘ சிவாவிடம் கேட்டேன். ‘ நான் எய்ட்த்து.. இவன் ஃபிப்த்து’ என்றான் இட்லியை விழுங்கிக் கொண்டே. பெரியவனுக்கு மாமா சாயல் மூக்கு. சாப்பிட்டு முடித்தார்கள். ‘வடை எதுவும் வேணுமா?” என்றேன். வேண்டாம் என்றார்கள் இருவரும். ‘முருக்கு’ என்றான் இளையவன். இருவருக்கும் வாங்கிக் கொடுத்தேன். ‘அம்மா சாப்ப்டுச்சாடா” என்றேன். இருவரும் முழித்தனர்.கடைக்காரரிடம் ‘ஏங்க.. மூணு இட்லி பார்சல் கட்டுங்க” என்றேன். நானும் ஒரு முறுக்கை எடுத்து கடித்துக் கொண்டேன்.

4 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...