சனி, 16 ஜனவரி, 2010

அக நிலம் Iவாழ்கையின் வேட்கை எதில் அடங்குகிறது? ஒரு உயிரியல் மாணவனாக என்னை கேட்டால் வாழ்கையின்  அர்த்தம் உண்ணுவதும் இனத்தை பெருக்குவதும் மட்டுமே..
ஆனால் மானுடம் இதையும் மீறி தன இருத்தலுக்கு அர்த்தம் கற்பிக்க காலம் தோறும் முயன்று வருகிறது.. உண்பது புணர்வது இதையும் மீறி அல்லது இதன் நீட்சிகளை தன் வாழ்தலுக்கான வேட்கையை எடுத்து  புதுப்பித்து வருகிறது.
அர்த்தங்கள் வேட்கைகள் இவற்றின் சட்டகங்கள் மாறினாலும் காலத்தின் தூசி படாமல் அவற்றின் ஆதாரம் எப்போதும் அப்படியே தான் உள்ளது.. அகம் தன்னை நிறுவ, தன்னை மகிழ்விக்க, தான் சோர்ந்து விடாமல் இருக்க, தன்னை பெருக்க ஓயாமல் முயன்று கொண்டே இருக்கிறது..
அகத்தின் விதிகள் இயற்கையின் ஆதி விதிகளுக்கு மாறுபட்டவை அல்ல.
கட்டுக்கடங்காத சுயநலமும் குரூரமும் கொண்டது அது. எத்தனை சமூக ஒழுக்க நியதிகள் புனிதங்கள் மதங்கள் முயன்றாலும் அவற்றை உடைத்து மீறி திமிறி செல்வது அகம். காடும் மலையும் விலங்கும் மணலும் சூறைக்காற்றும் என அலைக்கழியும் மனம் மனிதனின் இருத்தலின் சான்று. அவனது அர்த்தம்.
காலம் தோறும் கலைகள் அகத்தை ஆசுவாசப்படுத்த அதன் ப்ரதி பிம்பத்தை தேடி அலைந்தன. அகம் பக்தியானது,கவிதையானது, nநிறமானது, நடனமானது..
தில்லையில் ஆடும் சிவன் ப்ரபஞ்சத்தின் உருவம் மட்டும் அல்ல அவன் என் அகத்தின் உருவமும் கூட.
அகத்தை அதன் போக்கில் வெளிப்படுத்த தமிழிலக்கியம் நிலத்தை உருவகமாக்கியது. நிலம் நிகழ்வுகளின் மாபெரும் வெளி. மோதும் காற்றுக்கு பொங்கும் கடலுக்கு  பாயும் காட்டாற்றுக்கு அலையும் விலங்கிற்க்கு நிலம் வெளி.என் அகம் நிலமன்றி வேறென்ன?  சங்க இலக்கியம் நிலமாய் அகத்தை கட்டமைத்தது. அகத்தின் தனிமையை அது தேம்பி அழும் விசும்பலின்  வலியை ஆயிரம் வார்த்தைகளை கொண்டு நிரப்பவில்லை.  இரவின் இருளில் கொல்லையில் எருதின் சலிப்பான கழுத்தசைவில் சிணுங்கும் மணியோசை போதும் அதை சொல்ல.. ஒரு முழு நிசப்தத்தை அறுக்கும் அந்த மெல்லிய ஒலி தனிமையில் தவிப்பவன் மட்டுமே கேட்கும் ஒலி. இது போதும் ஒரு உன்னத கவிதைக்கு.
சங்கப் பாடல்கள் அனைத்தும் இத்தகு குறீயீடுகள் நிரம்பியவை. மனிதன் இயற்கையின் ஒரு துண்டு என்று குறியீடுகளால் மீண்டும் மீண்டும் சலிக்காமல் வலியுறுத்தி வாசிப்பவனை அதை தரிசித்து ஏற்றுக் கொள்ள நிர்பந்திப்பவை.
ஆம்.. சங்க இலக்கியம் முழுதும் படிக்கவில்லை நான்.  அகம் சார்ந்த கவிதைகள் குறிப்பாக குறுந்தொகை தொகுப்பு மட்டுமே படித்துக்கொண்டு இருக்கிறேன். பேரிலக்கியங்கள் மட்டுமே தரக் கூடிய மௌனம், தவிப்பு அகம் சார்ந்த இக்கவிதைகள் என்னுள் நிரப்பின.

இரவு முழுவதும் விழித்து தவித்து முனகிய எந்த ஒரு எளிய ஜீவனும் சங்கப்பாடல்களை ஒதுக்க முடியாது. அவை அத்தனை நெருக்கமானவை, அந்தரங்கமானவை.
நல்ல இலக்கியம் ஒரு வாசகனுள் மாபெரும் அனுபவமாய் மலரும் .
சங்க இலக்கியம் என்னுள் மலர்த்திய அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர ஆசை.
தொடர்ந்து எழுதுவேன். 

3 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை

தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...