உலோகம் (தொடர்ச்சி)
5
நான்காம் பரிமாணம்
..
ஒளிநீரில் அமிழ்ந்திருக்கும் பூங்காவில்
X அச்சில் நேர்கோட்டில்
நடந்து செல்கிறான் ஒரு மனிதன்
அவனைப் பின் தொடர்கிறது பறவைக்கூட்டம்
Y அச்சில் அமைந்த புல்வெளியின் மேல்
தானியங்களை சுமந்த சிறு பையுடன் அமரும்
அம்மனிதனை சூழ்கின்றன பறவைகள்
தலையில் தோள்களில்
கைகளில் முதுகில்
என கணத்தில் குவியும் பறவைகளால்
முற்றிலுமாக மூடப்படுகிறான்
Z அச்சில் மேலுயரும் அவனின்
ஒரு கை மாத்திரம்
தானியங்களை இரைக்கத் துவங்குகிறது.
காலாதீத வெளியில்
முளைத்த தானியங்களை விரிந்த சிறகுகளுடன் அலகால்
கொத்திப் பறிக்கின்றன பறவைகள்
மனிதப் பறவையொன்று மேலெழுகிறது
உதிர்ந்த இறகொன்றை விரல்களால் சேகரிக்கிறாள் சிறுமி
--பாம்பாட்டிச் சித்தன்.
உதிரும் அந்த ஒற்றை இறகை சேகரிப்பவள் பூங்கோதை என்கிறீர்கள் நீங்கள். பைரவன் என்கிறேன் நான். காலம் நம் இருவரையும் பார்த்து சிரிப்பது யுக முடிவில் பட்டு எதிரொலிக்கிறது.
கபிலன்
விருக்கென்று விழித்துக் கொண்டான். காலை நன்கு விடிந்திருந்தது.
நேரம் 10 மணியைத் தாண்டி இருந்தது. மெத்தையில் கால் மடித்து உட்கார்ந்து தான் எங்கிருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொண்டான். தலை பாரமாக அழுத்தியது. எதையோ இழந்து விட்ட்து போன்ற உணர்வு. சங்கக் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது. மலையில் காட்டருவியாய் விழுந்து , காட்டாறாய்ப் பொங்கிப் பாய்ந்து பெரு நதியாய் ஓடி பின் குறுகி சிறு ஓடையாய் கடலில் முடியும். அப்படித்தான் தனக்கும் நடந்து விட்டதோ? ஓடை தானா அல்லது வற்றி வெயில் பட்டுத் தகிக்கும் மணலாகி விட்டதா? எங்கு தவறு நடந்தது? எல்லாக் காதலும் ஒரே கணத்தில் அறுபட்டுவிடக் கூடியது தான். அறுபட்ட பின் எல்லாம் முடிந்து விடுகிறது. காதல் கடந்த காலம் ஆகி விடுகிறது. அதன் பிறகு காதலில்
கொண்ட காவியப் பித்து மனநிலையை பின் எப்போதும் அடைய முடியாது. வாழ்வின் ஒவ்வொரு நாளும் மற்ற நாட்களிலிருந்து வித்தியாசமற்ற சாதாரண நாளாக ஆகி விடும். கபிலனால் அர்த்தமற்ற நாளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் சம்பவங்களற்ற ஒரு சாதாரண நாளைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.
நேற்று
வரை கொந்தளித்துக் கொண்டிருந்த அவன் மனம் இன்று பெரிதாய்க் குறிப்பிடக்கூடிய எந்த எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை. அவனது மனதின் இயல்பே எப்போதும் அதீதமாய் செயல்படுவது. காதல், காமம், கலை, கனவு தத்துவம் என எதுவாக இருந்தாலும் அவன் சமதளத்தில் அணுகி அனுபவித்ததே இல்லை.
அவன்
மலைநாட்டுக்காரன். இணையைப் பிரிந்து அலையும் வெறி கொண்ட களிறாய் அவனால் இருக்க முடியும். ஆனால் இணையை மறந்த கோவில் யானையாய் கொட்டிலில் உழல முடியாது. நிச்சயம் முடியாது. அவன் ஒரு முறை தலையை உதறிக் கொண்டான்.
” ஆ.. கபிலா .. விழித்துக் கொண்டாயா? நேற்று இரவு நிறைய பேசி நிறைய யோசித்து பொங்கிய மனம் இப்போது ஏனோ மந்தமாய் இருக்கிறதடா.. இரு.. காப்பி போட்டு கொண்டு வருகிறேன்” தன் மனதை உணர்ந்தவன் போல பேசினான் செழியன். திரும்பிச் செல்ல முற்பட்டவனை “செழியா நில்” என்று தடுத்தான் கபிலன்.
செழியன் நின்று கவனித்தான். செழியனின் முகத்தை கூர்ந்து நோக்கி பேச ஆரம்பித்தான் கபிலன். அவன் கண்களில் இருந்த உறுதி செழியனுக்கு இனம் புரியாத அச்சத்தை தந்தது.
”செழியா... உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நம் இளவயதில் நம் ஊர் இருந்த மலைக்காட்டில்
வனதேவதை வசிப்பதாக
நம்பினோம். மலையருவி விழும் காடு முழுதும் நாம் சுற்றி இருக்கிறோம். அவளைக் காண்பதற்காக. அவள் உமையவள் என்றாய் நீ. யட்சி என்றேன் நான். அருவிப் பாறையின் உச்சியில் அமர்ந்து மலை முழுவதையும் பார்ப்போம். எங்கேனும் அவள் இலைகளை விலக்கி தன் மாமைக் கவின் திருமேனிக் கோலத்தை நமக்கு காட்சி தருவாளோ என்று தவமிருந்தோம். அவள் கொலுசொலி இரவுகளில் வனமெல்லாம் ஒலிப்பதாய் நீ சொன்னாய். அவள் கருங்குழலின் பிச்சிப்பூ வாசத்தில் பித்துக் கொண்டதாய் நான் சொன்னேன்.
நாட்கள்
சென்றன. போதையேறிய விழிகளுடன் நாம் அலைந்து திரிந்தோம் மலையெல்லாம். அன்று பெருமழை அடித்து தீர்த்த நாள். பனி கொட்டிக் கொண்டிருந்த மையிரவில் நாம் கதலிப் பள்ளத்திற்கு கையில் விளக்கோடு சென்றோம். இரவின் பனியில் அவள் நிச்சயமாய் நனைய வருவாள் என்று நம்பிக்கையுடன் நடந்தோம். அங்கு சிற்றருவியின் அருகில் நீ அதைக் கண்டாய்.
நெருப்புபிழம்பு இரு
சுடராய் காற்றில் எரிந்து கொண்டிருந்தது. பின் அது ஆயிரம் சுடராய் பிரவாகம் எடுத்தது. அப்போது தான் நாம் அறிந்து கொண்டோம், நம் முன் சில அடி தூரத்தில் நூற்றுக் கணக்கில் மான்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தன. கூட்டத்தின் நடுவில் ஒரு ஆண் மான் பெரிய கிளைகிளையாய் விரிந்த கொம்புகளுடன் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தது அதன் ஜ்வலிக்கும் கண்களுடன். அக்கண்களில் துளியும் மிரட்சியில்லை. அது நம்மை கவனித்து விட்டு தலையை குனிந்து மீண்டும் புல்லை மேயத் தொடங்கியது. அது மேய ஆரம்பித்த உடன் பிற மான்களும் தலை குனிந்து மேய ஆரம்பித்தன.
நீ
உடனே நடுக்கத்துடன் “கபிலா.. இது இது.. வன தேவதை வசிக்கும் இடமடா” என்று என் தோள்களை இறுக்கமாய் பற்றினாள். உன் விரல்கள் குளிர்ந்து இருந்தன. வியர்த்த உன் உள்ளங்கையின் ஈரம் என் சட்டையை நனைத்தது. நீ அப்படியே மயங்கி சரிந்தாய். அதன் பிறகு நடந்ததை நீயறியாய். நான் உனக்கு இது நாள் வரை சொன்னதுமில்லை.
உன்னை மயங்கிய இடத்திலேயே விட்டு விட்டு நான் கைவிளக்கை அணைத்து விட்டு முன்னேறி நடக்க ஆரம்பித்தேன். காட்டின் இருட்டு சட்டென அணைந்தது. சுடர் தீபமாய் நிலவொளி பனியில் பட்டு வனமெங்கும் தகித்தது. மொத்த
பச்சை வனமும் வெண்காடாய் ஒளிர்ந்தது. மான்கள்
விலகி எனக்கு வழிவிட்டன. நிலவின் ஒளியில் மான்களின் செவ்வுடலில் சிதறிக்கிடந்த வெண்புள்ளிகள் வின்மீண்களாய் மிணுங்கின. நான் முன்னால் செல்ல என் பின்னால் மான் கூட்டம் முதுகு காட்டி புல் மேய்வதைத் தொடர்ந்தன. அப்போது தான் அந்த காட்சி என் கண் முன் விரிந்தது செழியா..
என்
முன்னால் ஒரு கரிய பாறை. பனியில் சிதறிய நிலவு துளித்துளியாய் அந்த கரும்பாறையின் மேல் வழிந்து கொண்டிருந்தது. பாறையின் மேல் அவள் தன் கால்களை பக்கவாட்டில் மடக்கி நிலவில் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் உடல் முழுதும் கூந்தலை ஆடையாய்ப் போர்த்தி அதில் பிச்சி சூடி இருந்தாள்.
அவள்
உடல் மடிந்து குழைந்து வளைந்து கூந்தலுக்குள் மறைந்து கொண்டிருந்தது. குழலை
மெல்ல அலைத்த காற்று அவளின் வெறியூட்டும் மேனியை நீரில் கலையும் ஓவியமாய் காட்டியது.
அந்த
பச்சை வனத்தின் ஒவ்வொரு இலையும், விழுந்து ஓடும் அருவியின்
ஒவ்வொரு துளியும்,
மேலே விரிந்த விசும்பில் பறக்கும் புள்ளின் ஒவ்வொரு சிறகும், மருளும் அணிலும், அசையும் யானையும் நெளியும் பாம்பும் எல்லாமும் அவள் தானடா.. அவள் தான் வனம் . வனம் தான் அவள். நான் அன்று அவளை அதற்கு மேல் நெருங்கவில்லை. அவளை எப்படி நெருங்க முடியும்? அவள் வனதேவதை.
ஆம் செழியா
அவள் தான் வனதேவதை. ஆனால் அவள் நாம் நினைத்தது போல உமையவளோ யட்சியோ அல்ல. அவள் யாரென்று நான் பல வருடங்கள் கழித்து அவளை இந்த நகரத்தில் என் வீட்டருகே உள்ள தேனீர் விடுதியில் சந்த்தித்த போது அறிந்து
கொண்டேன். அது அவளே தான். அன்று பாறையின் மேல் நிலவொளியில் பின்னால் மான் கூட்டமும் முன்னால் பேரருவியையும் கொண்டு வீற்றிருந்தவளே தான் இவள். பிச்சிப்பூவின் பச்சை வாசம் அவள் உடல் முழுதும் கசிந்தது. எனக்கு புரிந்தது. என் வனதேவதையின் உலோகச் சிலை தான் பூங்கோதை. அவள் என்னுடையவள். என்னுடையவள் மட்டும். அவளை நான் இழந்து விட்டால் என்றென்றைக்கும் நான் வனம் திரும்ப முடியாது. இந்த நகரத்தின் நியான் விளாக்கொளியில் பொசுங்கி, கணினித் தரவுக் குழியில் விழுந்து ஒன்றுமில்லாத இருளாகி விடுவேன். ” கபிலன் எழுந்தான். செழியனின் மறுமொழிக்கோ ஒப்புதலுக்கோ காத்திராமல் வேகமாய் தன் நண்பனின் வீட்டை விட்டு வெளியேறினான்.
பார்க்கிங்கிலிருந்து வருவதற்கு காருக்கு சமிக்ஞை பொத்தானை அழுத்தி விட்டு லிப்டுக்குள் நுழைந்தான். கட்டிட வாசலில் கார் நின்றிருந்தது. வரவேற்பறை ரோபோவின் செயற்கை புன்னகைக்கு பதிலளிக்காமல் காருக்குள் நுழைந்து அமர்ந்தான். அது கேட்கும் முன்னரே “ சேருமிடம் -வீடு. வழித்தடம் – 1 . வேகம் – 100” என்று சொன்னான். “ நன்றி. நீங்கள் வேகம் 100 ஐ தேர்வு செய்துள்ளீர்கள். இந்த வேகத் தேர்வுக்கு நகரில் அதிக வரி கட்ட்த் தேவையிருக்கும். இது சரியா?” என்றது காரின் இயந்திரக் குரல்.
”சரி” என்றான் கபிலன்.
” நன்றி. சேருமிடம் – வீடு க்கு செல்ல 15 நிமிடங்கள் 20 நொடி ஆகும் தோராயமாக. இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்” என்று சொல்லி கார் என்ஜினை உறுமிக் கிளம்பியது. கபிலன் கண்கள் மூடி அமர்ந்து கொண்டான். மனம் பதட்டமாகவே இருந்தது. பூங்கோதையை பார்த்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினான்.
15 நிமிடங்களுக்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்தான். ஆனால் அதுவே ஒரு நாள்ப் பொழுதாகத் தோன்றியது.
அவன்
கண்களை பதிவு செய்ததும் வீட்டின் கதவு திறந்து கொண்டது. கோதை வீட்டில் தான் இருந்தாள். அவன் அவளைப் போய் பார்க்காமால் ஹாலில்
இருந்த சோபாவில் அமர்ந்தான். இதயம் படபடப்புடன் துடிப்பதை அவனால் உணர முடிந்தது. அறை குளிரூட்டப்பட்டிருந்தாலும் புழுக்கமாய் உணர்ந்தான். எவ்வளவோ பேசத் தோன்றினாலும் எதை சொன்னாலும் அது அபத்தமாகவே இருக்கும் போலிருந்தது.
வியப்பாக
இருந்தது கபிலனுக்கு. யாரோ ஒருத்தியாக இருந்த போது பூங்கோதையிடம் மிக சுலபமாய் தன் காதலை வெளிப்படுத்தியவன், இப்போது அவன் மனைவியாய் ஒரே வீட்டில் இருக்கும் போது ஒரு பதின்ம வயது இளைஞனுக்கு இருக்கும் தயக்கமும் பயமும் இருந்தது.
எப்படியும்
இந்த தருணத்தை ஒதுக்கி விட முடியாது. இது துள்ளி அலையும் தருணமல்ல. ஆடி அடங்கி அமைதி கொள்ளும் நிலை.
ஆனால்
காதலில் அமைதி உண்டா என்ன? கோடையில் வற்றி மணலானாலும், பெருமழையில் புதுவெள்ளம் பெருகி கரை புரண்டோடும் சுழற்சி தானே காதல். சிறு குழந்தைக்கு அலையில் கால் நனைப்பது சலிப்பதே இல்லை. அதற்கு கடலின் ஆழம் குறித்தோ பேரண்டத்தின் அமைதி குறித்தோ கவலையென்ன? அலைகள் வீசும் கிளிஞ்சல்களைப் பொறுக்கவே அக் குழந்தைக்கு நேரமிருக்காதே. மெல்லிய புன்னகையுடன் சோபாவில் இருந்து எழுந்தான்
கபிலன். எழுந்து திரும்பியவன்
சோபாவின்
பின்னாலேயே பூங்கோதை நின்று கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தான்.
எதுவும்
பேசாமல் சட்டென அவளைத் தன் முன்னால் இழுத்து அவளது சிலிக்கான் நாரிழை கோர்த்த உதடுகளை தன் உதடுகளோடு அழுத்தி முத்தமிட்டான். அவள் இதழ்களின் எச்சிலை தன் நாவால் உறிஞ்சிக் கொண்டான். அவள் அவனுக்கானவள் மட்டுமே. தன்னை அடைவதற்காகவே பிறந்து வளர்ந்து இறப்பிலிருந்து மீண்டு மறு உருப்பெற்று வந்தவள்.
அவள்
கூந்தலைப் பற்றி கழுத்திலும் மார்பிலும் வயிற்றுக் குழிவிலும் மாறி மாறி முத்தமிட்டான். அவள் சதைத் திரட்சி மொத்தத்தையும்
கைகளில் அள்ளி தன் தீராக் காமத்திற்கு இரையாக்கி விடத் துடித்தான். இதோ ..இதோ என் முன்னால் என் மலைநாட்டின் வாசம். பிச்சியும் முல்லையும் நிறைந்த மலைக்காட்டின் மணத்தை இல்லையென செய்யும் களிற்றின் மதநீர் வாசம் கொண்டது இவள் உடல்.
இவள் தான் என் காடு.
பித்துக்
கொண்டு அவளை வலுவாய்
இறுக அணைத்த போது பூங்கோதை திடீரென அவன் பிடியிலிருந்து விலகினாள். அவன் வெறியில் மூச்சு வாங்கிக் கொண்டு நின்றான். மீண்டும் அவளை இழுக்க அவன் முற்பட்ட போது பலம் கொண்டு தள்ளினாள். அவன் கைகளை பற்றி இழுத்து தன் அடிவயிற்றில் அழுத்தி வைத்தாள். உள்ளிருந்த உயிரின் துடிப்பு அவன் உள்ளங்கையில் பட்டு அதன் இருப்பை உணர்த்தியது. அந்த கணமே கபிலன் தன் கைகளை விலக்கிக் கொண்டு முழந்தாளிட்டு அமர்ந்து விக்கி அழ ஆரம்பித்தான். கோதையும் தரையில் அமர்ந்தாள். அவள், ரௌத்திரம் வடிந்து குளிர்ந்த துர்க்கையின் மந்தகாசத்துடன், அவனை தன் இரு மார்பகங்களுக்கு இடையில் சாய்த்துக் கொண்டாள். அவன் இன்னும் அழுது கொண்டிருந்தான். அப்போது அவர்களை சுற்றியிருந்த கான்கிரீட் சுவர்களும் கூரையும் திடீரென
மறைந்தன. பூங்கோதையின் தொடைகள்
மேல்
சிறு வெண்வேம்பு மலர்கள் விழத் தொடங்கின. மேலே ஆகாயத்தில் கிளிக்கூட்டம் பறந்து கொண்டிருந்தது.
வேம்புக் குருத்திலைகளின் வாசம் நிரம்பிய வெளியில் அந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தாள்.
வனதேவதை.
கூந்தலே ஆடையாக. கபிலன் அவள் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தான்.