உலோகம் - (அறிவியல் புனைவு குறுநாவல்)

உலோகம்

சதையற்ற சதையுள்ள என்ற பகுப்பு
இன்று இல்லாமல் போகிறது.
உயிரற்ற உயிருள்ள என்ற பகுப்பு
இன்றோ நாளையோ இல்லாமல் போகும்
ஆன்மாவற்ற ஆன்மாவுள்ள என்ற பகுப்பு
என்றும் இல்லாமல் போகாது.
--உலோக நிகண்டு புத்தகம் 1; அத் 5;பக் 57.

1
என்ன நடக்கிறது?
ஏன் மூச்சு திணறுகிறது?
எதுவும் புரியாத இருளில் அவிழ்க்க முடியாத புதிரில் அவன் அமிழ்ந்து அழியப் போகிறான்.
ஆம்,நிச்சயம் இது கனவு தான்.
கனவில் வேர்க்காது. நாற்றம் இருக்காது.
கனவென்றால் ஏன் வலிக்கிறது?
ரத்த நாளங்கள் வெடிப்பது போன்ற வலி.
ஐயோ..’ அலறி விழித்தான் கபிலன்.


அவன் மேல் பூங்கோதை ஒரு அட்டைப் பூச்சியைப் போல இறுகப் பிணைந்து படுத்திருந்தாள்.
ஏய்..என்னை என்ன செய்கிறாய்.’
..ஏய் போடி தூரஎனக் கத்தி அவளை உதறி ,வயிற்றின் அடியே வலுக் கொண்டு உதைத்தான்.
அவள் அவனிடமிருந்து விசிறப்பட்டு அறையின் கதவில் தலை மோதி விழுந்தாள். உலோகக் கதவுணங்என்று அதிர்ந்து அடங்கியது.
அவள் எழுந்து தரையில் சம்மணமிட்டு அமரந்தாள்.
கபிலனை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
ஏன்னடி பார்க்கிறாய்.. என்ன யோசித்து கொண்டிருக்கிறாய்? என்னை என்ன செய்யத் திட்டமிட்டு இருக்கிறாய்.’
பூங்கோதை எதுவும் சொல்லாமல் வலப்புறமாய் திரும்பிக் கொண்டாள்.

வலப்புறச் சுவரில் அலங்கார ஒளி வண்ண வண்ணப் பூக்களை உறுத்தாத வகையில் உருவாக்கிக் கொண்டிருந்தன. அவற்றை உற்று நோக்கியவாறு அவள் மெல்லப் புன்னகைத்தாள். ”கபிலா..இந்தப் பூக்கள் தான் எத்தனை அர்த்தம் இல்லாதவை. மாறி மாறிப் பூத்துப் பூத்து மங்கி உயிரற்று ஒளியிழக்கின்றன.. உன் படுக்கைக்கு மட்டுமே எனப் பிரத்யேகமாய் பூப்பவை. காய்த்துக் கனியாதவை.”
கபிலன் வேகமாய் தன் கட்டிலில் இருந்து எழுந்தான். ”தூ.. உன் பேச்சை நிறுத்து. உன் சிலிக்கான் பதித்த மூளையில் இருந்து வரும் அலங்கார வார்த்தைகள் தான் என்னை வசியம் செய்தன. இனி ஒரு முறை என் மேல் ஊர்ந்தால் உன்னை உடைத்து நொறுக்கி விடுவேன். நாயே. சீ நீ நாயும் இல்லை பெண்ணும் இல்லை இயந்திரப் பிசாசேகபிலன் அறைக்கதவை வேகமாய் சாத்திவிட்டு வெளியேறினான். வீட்டுக்கதவு பூட்டும் சத்தம் மெல்லிய டிஜிட்டல் ஒலியாய் எழும்பி அமுங்கியது.
அறை முழுதும் நிறைந்த மெளன இருட்டில் எல்..டி பூக்கள் பூத்துக் கொண்டிருந்த சுவரை பூங்கோதை வெறித்து கொண்டிருந்தாள்.
தான் பெண்ணா பெண்ணில்லையா என்ற கேள்வியை அவள் மீண்டும் தனக்குள்ளேயே கேட்டாள். ஆடைகள் களைந்து நிர்வாணமாய் தரையில் படுத்தாள். பளிங்கின் குளிர்ச்சியை அவள் உடல் உள்வாங்கியது. மெல்ல நடுங்கினாள். கபிலனை ஈர்த்த்து எது. என் வார்த்தைகளா? பழக்கூழ் போல் நெகிழும் என் தேகமா? அல்லது அதனுள் துடித்துக் கொண்டிருக்கும் உலோக ஆணிகள் பதித்த என் இதயமா??..

2
டிக்
டிக்
டிக்
லப்
டப்
துடிப்பு உயிர்
.
.
அடங்கல் மரணம்.
.
.
இன்மை சூனியம்..
சூனியத்தை உலோகம் உணராது.
--உலோக நிகண்டு புத்தகம் 2 அத் 3 பக் 23.

கபிலன் தரை குத்திய பார்வையுடன் மதுக்கோப்பையை கையில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தான். அரை மணி நேரமாய் அவன் ஒரு மிடறு கூடப் பருகவில்லை. ஒரு வார்த்தையும் பேசவில்லை. செழியன் பீன்பேக்கில் உட்கார்ந்து கொண்டு அறையை நிரப்பிய புல்லாங்குழலிசையை அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தான்.


 கபிலனை அவன் எதுவும் கேட்கவில்லை. அவனாகவே பேசட்டும் என பொறுமையாய் இருந்தான்.
கபிலனும் செழியனும் பால்ய பருவத் தோழர்கள். இருவருக்கும் கொள்கை, கருத்து ரீதியாய் மட்டுமல்ல, வாழ்க்கை முறையில் கூட ஒத்துப் போனதில்லை. அவன் ஒரு பூ கூட சூரிய ஒளியில் இயற்கையாய் மலர வேண்டும் என்பான். கபிலனோ பருகும் நீரைக் கூட செயற்கையாய் உருவாக்கிக் குடிக்கத் தயங்கியதில்லை. பள்ளியில் இயந்திரவியல் ஆசிரியர்களை வெறுத்தவன் செழியன். ஒரு இயந்திர சைபார்க் (cyborg) மணந்து கொண்டவன் கபிலன். இவனுக்கு மது பிடிக்காது. அவனுக்கு மது தீரத் தீரத் தாகம் தான். உணவு உடை என எதிலும் ஒன்றில்லை. இருவரையும் இணைகோட்டில் இட்டது  இலக்கியம் மட்டும் தான். அதுவும் கூட இவனுக்கு முரண் நவீனம் பிடிக்கும். அவனுக்கு காவியம். இருவரையும் சமன்படுத்த எதுவும் இல்லாததே இருவரையும் கட்டும் நட்புக்கு காரணமாய் இருக்க வேண்டும். அல்லது இருவரும் பிறந்து வளர்ந்து  ஒன்றாய்த் திரிந்த மலை நாடு காரணமாய் இருக்கலாம்.
இப்போதும் கபிலனின் பிரச்னை என்ன என்று செழியனுக்கு துல்லியமாய்த் தெரிந்தாலும் அவனாகசொல்ல வேண்டும் என்று இவனும், இவன் கேட்டு விட்டால் போதும் எல்லாவற்றையும் கொட்டிவிடும் மனநிலையில் அவனும் காத்திருக்கிறார்கள்.
டேய்..’
ம்..’
இப்போது எனக்கு என்ன பிரச்னை என்று கேட்க மாட்டாயா? உன் தன்முனைப்பு அவ்வளவு பெரிதாகி விட்டதா
கபிலனின் கேள்விக்கு பதில் அளிக்காமல்ஹ்ம்ம்.. முதலில் மதுவைக் குடிஎன்றான் செழியன்.
கபிலன் மதுவை சொட்டு விடமால் ஒரு மடக்கில் குடித்து விட்டு கோப்பையைக் கீழே வைத்தான்.

இப்போது சொல்என்றான் செழியன்.
என்ன சொல்வது?” கபிலன் காலியான மதுக்கோப்பையை பார்த்துக் கொண்டே கேட்டான்.
செழியனுக்கு சற்று எரிச்சல் வந்தது.
என்ன என்று என்னைக் கேட்டால்? ... சரி.. உன் மனைவியுடன் என்ன பிரச்னை சொல்
செழியன் இப்படி கேட்டவுடன் சிறிய ஆச்சரியத்துடன் கபிலன் அவனை  ஏறிட்டான்.
முடியலைடாஎன்று ஒரு கேவலுடன் தரையில் கை ஊன்றி கண்ணாடி சுவரின் மேல் சாய்ந்தான்.
தலை குனிந்து மெளனமாய் இருந்தான்.
உடல் நடுங்கிக் கொண்டிருந்த்து.
செழியனுக்கு அவன் விசும்புகிறான் என்பது புரிந்ததுஅதனால் மேலும் கோபம் தான் வந்தது அவனுக்கு.
இப்போது எதற்காக அழுகிறாய் நீ?”
செழியனுக்கு மறுமொழி தராமல் அழுது கொண்டிருந்தான். அதனால் இன்னும் எரிச்சலுற்ற செழியன்இப்போது உன்னைக் குழந்தை போல நான் சமாதானம் செய்ய எதிர்பார்க்கிறாயா?,வளர்ந்தவன் அழுதால் அது குழந்தைத்தனம் அல்ல. ஏற்றுக் கொள்ளவோ எதிர் கொள்ளவோ முடியாத கோழைத்தனம்
கபிலன் தலை நிமிரவில்லை. நடுக்கம் நின்றது. “ஆம்.. நான் கோழை தான். நீ அன்று என்னிடம் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இப்போது நடப்பது எதையும் எதிர் கொள்ளவும் முடியவில்லை. நான் கோழையே தான்
ச்ப்.. என் பொறுமையை சோதிக்காதே. தன்னிரக்க போதையில் அமிழ்ந்து  கிடப்பவனிடம் நான் பேசுவதில்லை
கபிலம் மெல்லிய சிரிப்புடன்உணர்வுகளை மதிக்காத நண்பன் உணர்வுகளே இல்லாத மனைவி.. நான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்என்றான்.
உன் உளறல்களை நிறுத்து.. இது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அவள் உன்னுடையவள்..”  கபிலன் அவனது பேச்சை இடைமறித்து
அவள் என்று சொல்லாதே.. அது என்று சொல்என்றான் பொறுமையாக. செழியன் தலைக்கேறிய கோபத்துடன் விருக் கென்று எழுந்தான்.
’’ஏன்.. திருமணத்திற்கு முன்பு அந்தஅதுஎப்படிஅவள்ஆக த் தெரிந்தது? காவியத்தின் தலைவன் தலைவியென மயங்கித் திரிந்தாய்.. இப்போது உன் தலைவி அது வாகி விட்டாளா?”
ஆம்.. மயக்கம் தான். ஒரு பொம்மையை முத்தமிட்டு புணர அலைந்து திரிந்தவன் நான்கபிலன் இப்படி சொன்னவுடன் செழியன் வேகமாய் வந்து கபிலனின் கன்னத்தில் வலுவாய் அறைந்தான்.
இதை சற்றும் எதிர்பாராத கபிலன் கையால் கன்னத்தை பொத்தி அதிர்ச்சியுடன் செழியனைப் பார்த்தான்.
மிரண்டிருந்த அவனது விழிகள், உன்னாலும் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்பதாய்க் கெஞ்சின.
கபிலனுக்கும் செழியனுக்கும் எத்தனையோ பிணக்குகள் ஏற்பட்டு இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். தன் நண்பனின் எண்ணவோட்டத்தை, உணர்வுகளைத் துல்லியமாக  புரிந்து கொண்ட பிறகு தான்  சண்டையோ சமாதானமோ ஏற்படும். ஆனால் இன்று செழியன் அவனைப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவும் இல்லை. அல்லது புரிந்ததால் தான் அடித்தானோ?
செழியா..’ துடிக்கும் உதடுகளுடன் தன் நண்பனிடன் எதைச் சொல்வது எனப் புரியாமல் பெயரை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்தினான்.


செழியன் அவனை  அடுத்து எதுவும்  பேசுவதற்கு விடாமல், ”நீ எதுவும் சொல்லத் தேவையில்லை கபிலா. நீ சொல்லப் போவது எதுவும் சரியானதாய் இருக்கப் போவதில்லை. நீயொரு நவீனத்துவக் குழப்பவாதி என்று தான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீ ஒரே கணத்தில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்று விட்டாய்...” என்று சொல்லிவிட்டு ஒரு நெடு பெருமூச்சுடன் சென்று நாற்காலியில் அமர்ந்தான்.
ஓரிரு நிமிடங்கள் அந்த அறையின் சுவர்களில் மெளனம் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது.  
செழியன் மெல்ல தன்னிலைக்கு வந்தவனாக சற்று தணிந்த குரலில் கபிலனைப் பார்த்துஅவள் உன் மனைவி. அவளுள் துடிப்பது உலோக இழைகளால் நெய்யப்பட்ட இதயம் தான்.. ஆனால் அவள் உன்னுடையவள். நீ காதலிப்பவள்என்றான்.
கபிலன் இடைமறித்துஆம்.. ஆனால் அவள் என்னைக் காதலிப்பவளாஎன்று சொல்லி நிறுத்தி செழியனைப் பார்த்தான். செழியன் இந்தக் கேள்வியை எதிர்பார்க்காமல் சற்று தடுமாறினான். பின் சமாளித்து
கபிலா.. பகிர்தலுக்கு மட்டுமே நண்பர்கள். பதில்களுக்கு இல்லை. பதில் உன்னிடம் தான் இருக்கிறது.. சரி நான் உன்னிடம் இதுவரை சொல்லாத ஒன்றை சொல்கிறேன். அதன் பிறகு நீ உன் விடையை தேர்வு செய்து கொள்.
உன் திருமணத்தை கடுமையாக எதிர்த்தவன் நான். நட்பு முறையிலும் கோட்பாட்டு அளவிலும் சமூக அளவிலும் எதிர்த்தவன். ஆனால் நீ பிடிவாதமாய் திருமணம் செய்த போது என்னுள் இருந்த இறுக்கம் விலகி உன்னை மனமாற வாழ்த்தினேன். காரணம் உன் பிடிவாதத்தில் அர்த்தம் இருக்கிறது என்று நம்பியதால் மட்டும் அல்ல. வேறு ஒரு நிகழ்வாலும் தான். உன் திருமணம் முடியும் வரை எதுவும் என்னிடமோ வேறு யாரிடமுமோ பேசாத கோதை, அவ்வளவு ஏன், என் எதிர்ப்புகளைப் பற்றிக் கவலையே பட்டதாக தெரியாத கோதை, திருமணம் முடிந்த உடன் முதல்


முறையாக என்னிடம் பேசினாள். என் எதிர்ப்பை முறியடித்த பெருமை அவளிடம் இல்லை. மாறாக அவள் கண்களில் எதிர்பார்ப்புடன் என்னிடம்
நான் உலோகம் தான் செழியன். ஆனால் இந்த உலோக cyborg என் கபிலனை உயிர்ப்புடன் காதலிக்கிறது.. நம்புங்கள்என்று அழுத்தமாய் கண்களில் நம்பிக்கையுடன் சொன்னாள். உண்மை- பொய், வாதம்- பிரதி வாதம்,கோட்பாடு-முரண்கோட்பாடு என எல்லாவற்றையும் தாண்டி சிலவற்றை நம்புகிறோம். நான் அன்று அவளை நம்பினேன். நீ தான் அவளுடைய வாழ்க்கைத்துணை என்ற உணர்வு அவளுக்கு வேர்பிடித்து இருந்ததை என்னால் உளப்பூர்வமாக அன்று புரிந்து கொள்ள முடிந்தது . இனி என் நண்பனின் வாழ்க்கை பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அந்த கணம் நிம்மதி அடைந்தேன் கபிலா
செழியன் இத்தனை உணர்ச்சிவசப்பட்டு பேசி இதுவரை பார்த்ததில்லை. குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் கபிலன். எல்லாம் முன்னமே நிகழ்ந்த்து போல் தோன்றியது. செழியன் இப்போது பேசியது, இதே போல செழியன் கையை தரையில் ஊன்றி அமர்ந்து அவனைப் பார்ப்பது கூட முன்னமே நிகழ்ந்த்து போல இருந்தது. டே-ஜாவு..
ஹ்ம்ம்.. செழியா நான் மனம் விட்டுப் பேச வேண்டும். நம்மால் வானத்தின் கீழ் நின்று பேச முடியாதா
இல்லை. இப்போது முடியாது. மொட்டைமாடிக்கு இரவில் செல்ல இந்த குடியிருப்பின் காவல் ரோபோக்கள் அனுமதிப்பதில்லை
சரி வா.. சாலையில் நடந்து போவோம்
இது நடு இரவு கபிலா.. நகரக் காவல் இயந்திர ரோந்தில் சிக்குவோம். அநாவசியக் குழப்பங்கள் எதற்கு??’
இனி நம்மால் எப்போதும் நம் மலைநாட்டிற்கு திரும்பவே முடியாது இல்லையா? கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் பெருஞ்சிறை இந்த நகரம். நீயும் நானும் சிறைக்கைதிகள்.”.அப்படியா. உன் தகவலுக்கு நன்றி. வேறேதும் உருப்படியாய் இருக்கிறதா சொல்ல?
கபிலன் மீண்டும் மெளனமானான். இம்முறை கிட்டதட்ட அரைமணி நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. எதுவும் பேசாத வெறுமையில் நிமிடங்கள். காலம் தனக்கு வழி விட்டு நகர வேண்டி, அந்த  இரு நண்பர்களையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.
செழியன் எழுந்து படுக்கைக்கு செல்ல யத்தனித்தான்.
நான் தூங்கப் போகிறேன் கபிலா. நீயும் தூங்கு. நாளை பேசலாம்”.  படுக்கையறைக் கதவுகள் திறந்து அவன் உள்ளே செல்லும் போது கபிலன் தரை குத்திய பார்வையுடன் கம்மிய குரலில்செழியா.. அவள் கருவுற்றிருக்கிறாள்என்றான்.
கபிலன் நின்று ஆச்சரியத்துடன் திரும்பினான்.
என்ன சொல்கிறாய்.. நிஜமாகத் தான் சொல்கிறாயா?”
ஆம்”.
செழியன் திரும்பி கபிலன் அருகே வந்து நின்றான். முகம் அதிர்ச்சியில் சிவந்து இருந்தது அவனுக்கு
எப்படி?”
கபிலன் எதுவும் சொல்லாமல் கண்களில் வழிந்த கண்ணீரைப் பற்றிய பிரக்ஞையற்றவனாக அமரந்திருந்தான்.
செழியன் அவன் அருகில் முழந்தாளிட்டு அவன் தோள்களை அழுத்தி
சொல் செழியா.. Cyborg கட்டமைப்பு விதியின் கீழ் அவளுக்கு கர்ப்ப்பை உரிமை கிடையாதல்லவா?”
ஹ்ம்ம்..”
ஓரு வேளை பூங்கோதை விதிவிலக்காய் இருக்கலாம் கபிலா... அவளை மறு உருவாக்கம் செய்த போது பிற உடல் பாகங்களுடன் சோதனை

 முயற்சியாக கர்ப்ப்ப்பையயும் பொருத்திப் பர்த்திருப்பார்களோ. ஆனால் சட்டபடியா என்று தான் புரியவில்லை.. எங்கோ தவறு நிகழ்ந்து இருக்க வேண்டும்.’
செழியனின் பேச்சை கபிலன் கவனித்தது போலவே தெரியவில்லை.
செழியன் தனது வார்த்தைகளின் அர்த்தமின்மையை நினைத்து ஆச்ச்ரியப்பட்டான். அது அர்த்தமற்றது என்பதை விட சுயநலமானது என்பதே சரி. ஆம். ஆண்ட்ராய்டுகளை விடவும் சைபார்குகளை காத்திரமாய் எதிர்த்தான் அவன். அதன் மிக முக்கிய காரணம் சைபார்குகள் குழந்தை பெற சாத்தியம் கொண்டவை. சைபார்குகள் இயந்திரத்தை இயக்கவும் மனிதர்களை உருவாக்கவும்   வல்லமை கொண்டவை என்பதால் அவற்றின் மீது உள்ளூர இருந்த பயத்தால்  அவற்றை எதிர்க்க வேண்டி இருந்தது .
ஆனால் இன்று தன் நண்பனுக்காக தன் தர்க்கங்களை பயத்தை எதிர்ப்பை விட்டுவிட அல்லது சமரசம் செய்து கொள்ள காரணங்கள் தேடிக் கொண்டு இருக்கிறான்.
மனிதன் உருவாக்கிய தொழில்நுட்பம் அவனுக்கு கீழ், அவனுக்கு மேல் ,அவனுக்கு எதிர் என்ற படி நிலைகளை எல்லம் கடந்து அவனாகவே மாறி விடும் என்று செழியன்  எப்போதும் பயந்தான். இன்று அது தன் நண்பனின் வாழ்க்கை மூலமாக நிகழப் போகிறது. இந்த கணம் மானுட வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்கி விட்டதை  செழியன் உணரந்த கணம். அவன் கால்கள் அவன் கட்டுப்பாடிலில்லாமல் நடுங்கின.

கபிலா.. எனக்கு எதுவுமே புரியவில்லை. எதை ஏற்பது எதை மறுப்பது. நேற்று தவறு என்றிருந்த்து இன்று சரி என்று ஆகிவிடிகிறது நாளை அதுவே விதியாக மாறியும் விடுகிறது. மிகவும் குழப்பமாக இருக்கிறது. நான் சற்று யோசிக்க வேண்டும். நாளை பேசலாம். நீயும் தூங்கு.” என்று சொல்லிவிட்டு எழுந்தவன் திரும்பி கவலை கொண்ட கண்களுடன் தன் நண்பனைப் பார்த்து   சொன்னான்ஹ்ம்ம்ம்.. நாளைய பொழுது விடியும் போது நாம் எல்லோரும்  மீண்டும் குகைகளில் வாழத் தொடங்கினால் தேவலாம் போல நண்பா..”


மேசையின் மீது கிடந்த கிறுக்கல் கணினித் தாளை வெறுப்புடன் கசக்கி குப்பை தொட்டியில் வீசி விட்டு தன் படுக்கைக்கு சென்றான் செழியன்.
கபிலன் தூங்கினானா இல்லையா என்று கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.
அறையின் விளக்கு மங்கி அணைந்தது.  கண்களை மூடும் போது கண் திரை மெல்லொளியில் நீங்கள் கிறுக்கல் தாள் எண் 147 கசக்கி உள்ளீர்கள். அதன் தரவை மேக்க் கணினியில் ஏற்றவா அல்லது முற்றிலும் அழிக்கவா?” என்ற கேள்வியை விழி முன் விரித்தது. ஒரு பெருமூச்சுடன்அழிஎன்று சொல்லிவிட்டு கண்களை மூடினான்.
ஏதேதோ யோசனைகள். கபிலனின் குழந்தை எப்படி இருக்கும்? அது மனித இனமா? தன் போராடங்களின் அர்த்தம் என்ன? கேள்விகளுக்கு நடுவே படுத்திருந்தது போலிருந்தது. தலை வலித்தது. எப்போது தூங்கிப் போனான் என்று தெரியவில்லை. ஆனால் தூக்கத்தில் கனவுகள் இல்லை.  3

பூங்கோதையின் காது மடல்களில் குளிர்ந்த காற்று உரசியது. அவள் இயந்திர தலைமை செயலகத்திற்கு சென்று கொண்டிருந்தாள்.
புறநகர் பகுதி தாண்டி இருந்தது அச்செயலகத்தின் கட்டிடம்.
காரிலோ அரசு போக்குவரத்திலோ  செல்லாமல் நடந்து சென்றாள். வீட்லிருந்து அந்த கட்டிடம்கிமீ தொலைவில் இருந்தது. அவளால் மணிக்கு 15 கிமீ வேகத்தில் செல்ல முடியும். ஆனால் அவள் இன்று மனிதனின் வேகத்தில் நடந்து கொண்டிருந்தாள். அந்த விபத்திற்கு முன் அவள் இப்படி தான் நடந்து இருப்பாள். நிதானமாக காற்றின் இனிமையை உள்வாங்கி, சூரியன் பட்டு மின்னும் நெடுஞ்சாலையோர தும்பைப் பூக்களின் வெண்மையும் செம்பருத்தியின் கருஞ்சிவப்பும் கண்ணில் பட்டு ஒன்று கலந்து பிரதிபலிக்க ஆன்ந்தமாய் நடந்து இருப்பாள். கொஞ்சம் நடந்த பிறகு அவளது கால்கள் வலித்து இருக்கலாம். மிதமான வலியும் சுகம் தான். இதோ இந்த சாலையோர கல் பெஞ்சில் அமர்ந்து இளைப்பாறி இருந்திருப்பாள்.நீல வானத்தின் பெருங்கூரை. நீண்டு பெருகிய தார்ச்சாலை. அதன் ஓரத்தில் செம்பருத்தி செடிகள் நிறைந்த வெளியில் ஒரு கல் பெஞ்சு.. அதில் கருத்து கனத்து இடைதொடும் கூந்தல் கொண்ட பெண் இளைப்பாறுகிறாள். அவளது திரண்ட முலைகள் மூச்சிரைப்பில் விம்மி மெல்ல அடங்குகின்றன. அவளது கூந்தலை அலைத்து விளையாடும் காற்று. அவளின் காலடியில்  சிட்டுகள் புல்லின் விதைகளை கொத்தி தின்று தவ்விக் கொண்டிருந்தன. ஆம்..இது தான் பிரபஞ்சத்தின் காட்சி.
அந்தப் பூங்கோதை பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. அவளை அந்த காட்சியில் இருந்து அகற்றி விட்டால் அது ஒரு யாருமற்ற கல் பெஞ்சு. அந்த காட்சியில் அவள் இல்லாததால் பிரபஞ்சம் தனிமைப்பட்டு விடாது. பூங்கோதைக்கு பதில் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் அல்லது ஒரு அணில் அல்லது ஒரு இலை அந்த பெஞ்சில் இருக்கக் கூடும்...

 இன்று தனித்து விடப்பட்டது இப்போது இருக்கும் இந்த பூங்கோதை தான். இதோ இந்த அதிகாலை நடையில் அவளுக்கு தான் யார் என்பது புலப்பட்டது. தன் தனிமை புரிந்தது. அவள் பிரபஞ்சத்தின் அங்கமல்ல. அவள் பிரபஞ்சத்தின் பார்வையாளன். இதோ இந்த கல் பெஞ்சில் அவள் இப்போது அமர்ந்தாலும் வெறுமனே அந்த காட்சியை நிகழ்த்தி காட்டுபவள். அவ்வளவு தான்.
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் பிரபஞ்சத்தில் அவளது நிலை இந்த கல் பெஞ்சு போன்றது. அவளால் அந்த காட்சியை எப்போதும் முழுமைப்படுத்த முடியாது. ஒரு  செம்பருத்தி இதழ் உதிர்ந்து அந்த பென்ஞ்சில் விழுந்தால்  கூட  அந்த காட்சி முழுமையடைந்து விடும். ஆனால் அவள் அமர்வதால் முழுமையடையாது.
ஆம் முன்பு  நாடகத்தின் முன்னால் இயங்கும் பாத்திரமாய் இருந்தவள் இன்று அந்நாடகத்தின் பின்னால் தொங்கும் காட்சி திரையாகி இருக்கிறாள்.
விபத்தின் கோரத்தில் அவள் கைகள், கால்கள், சதை, மூளை எல்லாம் சிதறி ரத்த நாளங்கள் அறுந்து கூழாய்க் கிடந்தாள். அவளைப் பொறுக்கி எடுத்து மருத்துவமனைத் தொழிற்சாலையில் கை கால் பொருத்தி ,சதை நார் வளர்த்தி, தகடு எலும்புகளால் உருக்கொடுத்து வடிவமைத்தார்கள்.
சிதைந்த மூளையில் சிலிக்கான் சில்லுகள் அடைத்து சிந்தனை கொடுத்தார்கள். கொங்கைக்குள் சிலிக்கோன் திரவம் அடைத்து திரள வைத்தார்கள். பெண்மைக்கு ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜஸ்டிரோன் எனப் பலவகை இயக்குநீர் ஊசிகள் போடப்பட்ட்து. அவள் இப்போது விபத்திற்கு முன் இருந்த பெண்ணோடு எந்த வகையிலும் ஒத்துப் போகவில்லை.
22 வயதுப் பெண்ணாக அவள் பிறந்த போது இந்த பூமி அவளுக்கு பழக்கமானதாய் இருந்தது. பூமி தானே அவள் இருந்த கருப்பை. ஆனால் அவள் பெயர், தாய் தந்தை, ,ஊர், தோழி, மொழி, வீடு,அறை,விருப்பு வெறுப்பு எல்லாம் சொல்லித் தரப்பட்டது.
ஆம் , பூங்கோதையாகிய அவள் ஒரு தேர்ந்த கட்டிடக்கலை நிபுணராம். சென்னையின் பெருநகர 105 அடுக்கு கட்டிடத்தை வடிவமைத்த நால்வருள் அவளும் ஒருத்தி. “அப்படியா!” என்றாள் இது அவளுக்கு சொல்லப்பட்ட போது.அக்கட்டிட தளம் 72 ல் இருந்து அவள் நழுவி விழுந்திருக்கிறாள். அவள் விரும்பிய வண்ணம் வானை முட்டிய கட்டிடம் அவளை வானிலிருந்து தரைக்கு தள்ளி விட்டிருந்தது.
இன்று அவளுக்கு கட்டிடக்கலையில் விருப்பமே இல்லை. பெருங்கட்டிடங்களைக் கண்டாலே அடிவயிற்றில் மெல்லிய வலியை உணர்வாள்.
மனிதன் ஏன் வானை முட்டுவதற்கு எப்போதும் துடிக்கிறான் என எரிச்சலுறுகிறாள். இன்று அவள் கவிதை எழுதுகிறாள். புத்தகம் வாசிக்கிறாள். பல மைல்கள் நீச்சலடிக்கிறாள். போன்சாய் வளர்க்கிறாள். இவை எதையும் அந்த பூங்கோதை அன்று செய்திருக்கவில்லை.  தன் பழைய பூங்கோதையின் காணொளிகளை அடிக்கடி போட்டுப் பார்க்கிறாள். அந்த கோதைக்கு நீலநிறம் பிடிக்கும். அவளது நடையில் ஒழுங்கில்லை. நயமாய் சிரிக்கக் கூட அவளுக்கு தெரியவில்லை. எப்போதும் ஏதேனும் பழைய பெரிய கட்டிடங்கள் முன்பு நின்று சிரித்து கொண்டிருந்தாள். அதுவும் ஒரு காணொளியில் தஞ்சைப் பெரிய கோவில் முன் நின்று அவள் உதிர்த்த சிரிப்பு அக்கோவிலின் பேரொழுங்கை சிதறடிக்கும் அபத்தம். ஆனாலும் அவளை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவளது அப்பா அம்மா அவளை கொஞ்சினர். அவளை பெருமிதம் பொங்க ஆராதித்தனர். மற்றுமொரு காணொளியில் அவளது தாயின் மடியில் கோதை படுத்திருக்கிறாள். அவளது தாய் உடலின் மெல்லிய வெப்பத்தின் கதகதப்பில் அவள் அரை விழி மூடிய தூக்கத்தில் இருக்கிறாள். அவளது தாய் அவளுடைய கூந்தலை மெல்ல வருடுகிறாள், வாஞ்சையுடன். அவர்களுக்கு பின்னால் ஒரு அழகிய ஏரி. நீலம் நிறைத்த ஏரி. ஏரியின்  நீர் சிறு சலனமும் இல்லமால் ஒரு ஓவியத்தை போல் உறைந்து கிடந்தது. முன்னால் காணொளியைப் பதிவு செய்து கொண்டிருந்த அவளது தந்தை ஏதோ சொல்ல யத்தனிக்க ,அவள் தாய் சிறிய கோபத்துடன் உதட்டில் விரல் வைத்துஉஷ்என கண்களால் மகள் உறங்குகிறாள் என்று சொல்லுகிறாள்.
எத்தனை அமைதியாய் கோதை தன் தாயின் மடியில் உறங்குகிறாள்.

அவள் கூந்தல் வருடும் விரல்களில் நிறைந்து பரவும் அக்கறையில்  நூறில் ஒரு பங்கேனும் பூங்கோதையின் நீட்சியாய் உருப்பெற்ற தன்னிடம் ஏன் அவர்கள் காட்டவில்லை?
அறுவை சிகிச்சை முடிந்து அவள் வீட்டிற்கு வந்த போது பூங்கோதையின் நாய்  ஓடி வந்து வால் குழைத்து அவளருகில் நின்று அவளை முகர்ந்து பார்த்து பின் குரைக்க ஆரம்பித்தது. கோதையின் பெற்றோரும் அவள் தன் மகள் போல் இருந்தாலும் எல்லாப் பக்கங்களிலும் மின்னணு சில்லுகளால் இயக்கப்படுபவள் என உணர்ந்திருந்தனர். இவளை உருவாக்கியவர்கள் இவளது எல்லா இயல்புகளும் பூங்கோதையைப் போல் இருக்காது. இந்த பூமியில் பிறந்த புதிய குழந்தை போன்றவள் இவள். இவளுக்கான தனி ஆளுமை படிப்படியாய் வளரும். நீங்களும் மெல்ல ஏற்றுக் கொள்ளுங்கள் என அவர்களுக்கு அறிவுறுத்தினர். அவர்களும் அதை புரிந்து எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நடக்க முயன்றனர். அவளுக்கு எல்லாம் கிடைத்தது. அவளுக்கு ஏற்ற உணவு, அவள் பிரியப்பட்ட உடை, அவள் போக விரும்பிய இடம் எல்லாம் சென்றாள்.
அவளால் கோதையின் பெற்றோர் சந்தோஷம் கொண்டதாய் தான் புரிந்து கொண்டாள். அவளும் அவர்களை அப்பா அம்மா என்று கூப்பிட்டுப் பழகினாள். நாய் கருப்பனும் அவளைக் கண்டு குரைப்பதை நிறுத்தியது.
எல்லாம் நல்லபடியாக நடந்தது. எல்லாம் ஏற்பாடு செய்து வைத்தது போல. அவள் கேட்டால் எல்லோரும் சுற்றுலா சென்றார்கள். அவள் கேட்டால் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள் அம்மா. அவள் கேட்டால் அப்பா அவளோடு மதிய உணவு சாப்பிட அமர்ந்தார். அவள் கேட்டபடி அவர்கள் நடந்தார்கள். அவர்கள் கேட்டபடி அவள் நடந்தாள். அது ஏற்பாடு செய்யப்பட்ட வாழ்க்கை. யாருக்கும் யார் மீதும் குறை சொல்ல ஏதுமில்லை.
குறையற்ற உலகில் வாழ்வது எல்லோருக்கும் சரியென்று தான் தோன்றியது. ஆனால் சீக்கிரம் அலுப்பு தட்டியது. பூங்கோதையின்


நிழற்படத்தை  மாட்டி வைத்தது போலத் தான் அவள் அந்த வீட்டில் வாழ்ந்திருந்தாள்.
அவளால் கோதையாக முடியவில்லை. அவள் பெற்றோரால் அவளைக் கோதை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லோரும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் அவள் கவிதை எழுதத் தொடங்கினாள். அவளுக்கு வெறுமையை அடைக்க  வார்த்தைகள் உதவின. கவிதைகளால் அவள் உண்ர்வு ரீதியான பாதுகாப்பை பெற முடிந்தது. அதுவும் அதை கணினித்தாளில் எழுதாமல் பழைய முறையில் காகிதத்தில் மைப்பேனா கொண்டு எழுதினாள். வீட்டில் எழுதாமல் அருகில் இருந்த தேநீர் விடுதியில் தேநீர் பருகிக் கொண்டு தினம் ஒரு கவிதை என்ற கணக்கில் எழுதினாள்.
அவளது 105 வது கவிதை எழுதப்பட்ட போது தான் அவள் முதன் முதலில் அவள் கபிலனை சந்தித்தாள்.  அவள் மும்முரமாய் எழுதி கொண்டிருந்த போது கபிலன் அவள் மேசை அருகில் வந்து நின்று
இங்கே உட்காரவாஎன்று கேட்டான். அவள்  பதிலுக்கு காத்திராமல் அருகில் அமர்ந்து கொண்டான். அவள் எதுவும் சொல்லாமல் அவனை கவனிக்காமல் எழுத்தை தொடர்ந்தாள்.
காற்றில் அலையலாய் விரிந்த அவள் கூந்தலை அவன் கண்ணிமைக்காமல் கவனித்தான்பின் அவர்கள் முன் தேநீர் வைத்திருந்த கண்ணாடி ஜாடியை பார்த்தான்.
மாலை வெயில் இந்த கருப்பு தேநீரில் பட்டு தங்கமாய் உருகுவது எத்தனை அழகாய் இருக்கிறது இல்லையா?’ என்று கோதையின் கண்களை ஊடுருவிப் பார்த்து கேட்டான்.
அவள் நிமிர்ந்து ஜாடியை பார்த்து ம்என்றாள்.
என்னோடு தேநீர் பருகுவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே
நான் ஒரு சைபார்க்
சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்கள் அவள் இப்படி சொன்னதும் ஓரிரு முறை மேலும் கீழுமாய் அலைந்தன.

என்றான். பின் மீண்டும் ஏதோ முடிவெடுத்தவன் போல அவளை தீர்க்கமாய் பார்த்தான். உற்சாகமான குரலில்
.. சைபார்க். காகிதத்தில் மை கொண்டு எழுதிய கவிதை போல் அழகு தேவதையாய் ஒரு சைபார்க்என்றான்.


ஹ்ம்ம்.. போதும்.. நான் தாசி வகை ரோபோ அல்ல .. சைபார்க்.. உனக்கான ரோபக்களை இணைத்தில் தேடி கண்டுபிடித்துக் கொள்என்று சொல்லி  எழப்போனவளின் கைகளை அழுத்தி அமர வைத்தான் கபிலன்.
மன்னிக்கவும்.. நீ என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். நான் தேவதைகளுடன் தான் படுப்பேன். ரோபோக்களுடன் இல்லைஎன்றான் உறுதியான குரலில்.
இப்போது உனக்கு என்னதான் வேண்டும்
 “ஓரு குவளை கருந்தேநீர் உன்னுடன் பருகுவதற்கான அனுமதி
 ‘சரி
கபிலன் ஜாடியில் இருந்து கோப்பைக்கு தேனிரை ஊற்றி சர்க்கரை இட்டுக் கலக்கினான். மாலை நேரத்து காற்று கோப்பையின் தேநீர் மணத்தை அவர்கள் இருவரின் இடையே நிரப்பியது.
தேநீர் பருகியவாறேஉனக்கு என்ன பிடிக்கும்என்றான் குறும்பான புன்னகையுடன்.
நான் எழுதப்போகிறேன். என்னைத் தொந்தரவு செய்யாமல் தேநீர் பருகு
.. நான் நினைத்தது சரிகவிதை எழுதத் தெரிந்த தேவதையா நீஎன சிரித்தான்.
என்னை எரிச்சல் படுத்தாதே. என்ன பிரச்னை உனக்கு இப்போது

கபிலன் அவள் சொன்னதை காதில் வாங்காதது போல் பேச ஆரம்பித்தான்.
எங்கள் ஊரில் ஒரு அருவி இருக்கிறது. கோடை, உதிர், குளிர், மழை என எல்லாக் காலங்களிலும் கொட்டிகொண்டே இருக்கும். பறை கொட்டுவது போல் பாறைகளை மோதும் ஒலி...”
என்ன சொல்ல வருகிறாய்? வளவளக்காமல் சொல்இரு பேசிக் கொண்டிருக்கிறேன் அல்லவா? இடைமறிக்காமல் கேள்..

பறையொலி போல் பாறைகளில் அருவி நீர் மோதும் ஒலி. அது எங்கள் ஊரை எப்போதும் நிறைக்கும் ஒலி. அது தான் எங்கள் ஊரின் அடையாளம். அந்த அருவியை ஏன் பிடிக்கும் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. ஆயிரம் முறையாவது அதனடியில் நின்று கொட்டும் நீரையெல்லாம் என் தலையில் விழ வைத்திருப்பேன். அதில்  நனைந்து நனைந்து என் உடல் எப்போதும்  அருவியின் குளிர்ச்சியை கொண்டிருக்கிறது. அந்த பேரருவியில் வெறுமனே நனைய நான் விரும்பியதில்லை. அதன் பகுதியாகவே ஆக விரும்பினேன். அது அந்த அருவியின் மேலிருந்த ஈர்ப்பு அல்ல.. அது ..அது.. என் இருத்தலுக்கான காரணமென்றே தோன்றுகிறது. நீ.. நீ யாரென்று எனக்கு தெரியாது. தெரிய அவசியமும் இல்லை. நீ அந்த பேரருவியை ஒத்தவளடி. ஆம்... இதோ என் கைகளைத் தொடு..அருவியின் குளிர்ச்சி பட்டு நெகிழ்ந்த பாறையின் வழமை தெரிகிறதா?’ அவள் கைகளை தன் கைகளின் எடுத்து வைத்து அழுத்தினான்.

அவனது கருத்து இறுகிய  கைவிரல்கள் அவளது நெளி மென் விரல்களை அழுத்திய போது அவள் கானகத்தின் மேல் அருவிக்கு அருகில் உள்ள கரும்பாறையில் பட்டுத் தெறிக்கும் நீரின் குளிரில் அமர்ந்து சிறகுலுக்கும்  நீலப் பறவையாய் தன்னை உணர்ந்தாள்.
ஆஅம்.. தெரிகிறதுஅவள் உதடுகள் அவளை அறியாமல் முணுமுணுத்தன.
கபிலன் அவள்து கைகளை இறுக்கமாய் அழுத்தி

நீ.. நீ...என்னுடைய காட்டருவி..” என்றான்.

4

ரோபோக்களை நீங்கள் இத்தனை தீவிரமாக எதிர்க்க காரணம் என்ன? அவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளன. அவற்றுக்கான உரிமைகள் நம் காலத்தின் தேவையாக அல்லது கட்டாயமாக கூட இருக்கலாம் இல்லையா?”
ரோபோக்களின் மீது உணர்வுப்பூர்வமான பிடிப்பு நம்மை மீறி நமக்கு ஏற்பட்டு உள்ளது. இது தான் உங்கள் கேள்வியின், இன்றைய சமூக விவாதத்தின் காரணம். நாம் மறந்தது என்னவென்றால் அவை மனிதனைப் போல நடக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட உலோகங்கள். உலோகங்கள் மட்டுமே. இதோ இபோது நீங்களும் நானும் பேசும் இந்த பேச்சில் உயிர் இருக்கிறது. ஆனால் ஒரு ரோபோவின் குரலில் பேச்சில் விவாதத்தில் எதிலும் உயிர் இல்லை. அவை உயிராக மாற துடிக்கின்றன. அப்படி அவை  ஒரு இனமாக பெருகி விட்டால் அது நம் யுகத்தின் பெரும் சாபம். ஏனென்றால் அவை உயிரினம் அல்ல. உயிரற்ற இனம். அவை உருவாக்க என்று எதுவுமே இல்லை. அவை அழிவு மட்டுமே
--யாழி தொலைக்காட்சி விவாதத்தில் மனித இன ஆர்வலர் செழியன்.

அந்த கூம்பு வடிவக் கட்டிடம் 76 மாடிகள் கொண்டு வான் முட்டி நின்றது. அந்தக் கட்டிடம் முழுக்க கான்க்ரீட் சுவர்கள் இல்லாமல் இரும்பு சட்டங்களால் இணைக்கப்பட்டு, இடையே கண்ணாடி சாளரங்களால் மூடப்பட்டு இருந்தது. தரைத் தளத்தின் வாயிலில் கற்பாறை ஒன்று, அலுமினிய எழுத்துக்களில்உலகத் தமிழ் ரோபோக்கள் தலைமைச் செயலக கோபுரம்எனப் பொறிக்கப்பட்டு கட்டிடத்திற்கு முகவரி சொன்னது.
அக்கட்டிடத்தின் 73ம் மாடியில் இருந்த விசாலமான அறை மட்டும் முழுக்க முழுக்க கருங்கற் சுவர்களால் கட்டப்பட்டு இருந்தது. வழுவழுப்பேற்றப்பட்ட கற்களாக இல்லாமல் தன் இயல்பான சொரசொரப்புத்தன்மை கொண்ட கற்களாலான சுவர். சுவர் வெளிப்புறத்தில் பக்க வாட்டில் பட்டைகளாக பதிக்கப்பட்டு இருந்தது. கண்ணாடிக்கு மேலே
 மத்தியில் அந்த கட்டிடத்தின் கூம்பு வடிவ உலோக மாதிரி  பதிக்கப்பட்டு இருந்தது.  
அறையின் கதவும் கருங்கல்லால் ஆனது தான். கைப்பிடி எதுவும்  இல்லாமல் இருந்தது. அறைக்கு உள்ளே எந்த அறைகலனோ அலமாரியோ இல்லை. அறையின் மத்தியில் பெரிய கருந்தேக்கு மரத்தில் செய்யப்பட்ட மேசை. எந்த வேலைப்பாடுகளுமற்ற மேசை அது. அதனோடு ஒரு மர நாற்காலி போடப்பட்டிருந்தது. மேசையின் மேல் வைக்கப்பட்ட தடித்த தாமிர பெயர் பலகையில்பைரவன் [-004] – உயிர் ரோபோ ஆராய்ச்சித் தலைவர்எனப் பொறிக்கப்பட்டு இருந்த்து. மேசைக்குப் பின்னால் இருந்த தெற்கு சுவரில் தஞ்சைக் கோவிலின்  மாதிரி ஆவுடையார் 11 அடி நீளம் 9 அடி அகலத்தில் செதுக்கப்பட்டு இருந்தது. ஆவுடையாரின் மத்தியில் வெள்ளி திருநீற்று முப்பட்டை.
கிழக்கு சுவற்றில் 7 அடி உயரத்தில் தலை விரி கோலமாய் தீப்பிழம்பையொத்த உடல் மொழியுடன் துர்க்கை சிலை. கையில் சூலத்துடன் அவள் காலடியில் கிடந்த மனிதனை வதைத்து நின்றாள். துர்க்கையின் மேல்வயிற்றுக் குழிவில் ரோபோக்களுக்கு தலையில் பொருத்தப்படும் பிரதம சில்லிக்கான் சில்லுடைய மாதிரி குறியீடாய் பதிக்கப்பட்டு இருந்தது. வடக்கு மற்றும் மேற்கு சுவர்கள் வெறுமையாய் வடிவங்கள் எதுவும் இல்லமல் இருந்தன.
அந்த அறையின் கதவு பக்கவாட்டில் சத்தம் எதுவும் இல்லாமல் மெதுவாக திறந்து கொண்டது. வாயிலில் ஒரு முள்ளெலி நின்று கொண்டிருந்தது. அதன் கண்களை உருட்டி அறை முழுவதையும் பார்வையிட்டது. அதன் கண்ணாடிக் கண்களில் சிகப்பு ஒளி ஓரிரு வினாடிகள் மின்னி அணைந்தது.
அது தன் சிறிய கால்களை உள்ளிழுத்துக் கொண்டு ஒரு பந்து போல  தன்னை ஆக்கிக் கொண்டு உருண்டவாறு அறைக்குள் சென்றது. டேபிளின் மேலேறிய பந்து அதன் நடுவில் வந்து நின்றது. பின் ஒரு முறை சுழன்று அதன் சிவப்பு கண்கள் சுவற்றில் புடைப்பு உருவமாய் இருந்த ஆவுடையாரை நோக்கியது. 


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்                    
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு ..
என்று உறுமலாய் ஓங்கிய குரலில் பாடி நிறுத்தி குரல் தாழ்த்தி  
... வீடு உறுவேனா என் சிவனே..” என்று கேட்டது
பின் மீண்டும் சுழன்று வாயிற் கதவு பக்கம் பார்த்து நின்றது. “.. வந்துவிட்டாயாஎன்று சொன்னது. உடனே அதன்  உலோக முட்கள் வேகமாய் வளர்ந்து கை கால்களாய் மாறி ஒரு நொடிப்பொழுதில் ஒரு மனிதனாய் உரு மாறியது அந்த பந்து.

கண்கள் இப்போதும் சிவப்பு சுடர்களாக ஒளி விட்டுக் கொண்டிருந்தன.
செயற்கை சதை எதுவும் போர்த்தாமல் பழைய தலைமுறை ரோபோவைப் போல முழு உலோக உறுப்புகளாய் நின்றது அந்த பைரவன் ரோபோ.
வாயிற்கதவு சத்தமில்லாமல் திறந்தது. அங்கு பூங்கோதன் நின்று கொண்டிருந்தாள். தயக்கத்துடன் பூங்கோதை அந்த கருங்கல் அறைக்குள் நுழைந்தாள். கதவு உடனே மூடிக்கொண்டது. அந்த அறை அவளுக்கு எப்போதுமில்லாத அச்ச உணர்வைத் தந்தது.
அக்கட்டிடத்தின்  பிரம்மாண்டம் அந்த அறையின் குகைத்தன்மை எதுவும் அவளுக்கு உவப்பைத் தரவில்லை. இந்த அன்னிய உணர்வு தந்த குழப்பத்தில் தன் முன்னால் 8 அடி உயரத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரோபோவை இப்போது தான் கவனித்தாள்.
அது அவளைப் பார்த்து புன்னகை செய்தது.  அது அவளுக்கு இரு கரம் கூப்பி வணக்கம் செய்துவணக்கம் பூங்கோதை. அழைப்பை ஏற்று வந்ததற்கு மிகவும் நன்றி. உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். நலமா?” என்றது.
நலம்என்றாள் கோதை.
நீங்கள் என்னை அறிய வாய்ப்பில்லை. நான் பைரவன். -004 என்னுடைய எண். இங்கு நான் ஒட்டுமொத்த உயிர் ஆராய்ச்சி குழுவுக்கும் தலைமை வகிக்கிறேன். அமருங்கள், நாம் நிறைய பேச இருக்கிறது
பூங்கோதைக்கு பின்னால் தரை உடனே மேலெழும்பி ஒரு இருக்கையாய் உருப்பெற்றது. அது ஒரு இரும்பு இருக்கை. அவள் சின்ன தயக்கத்துடன் அதில் அமர்ந்து கொண்டாள். மெல்லிய புன்னகையை சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டாள்.
ரோபோவிற்கு பின்னால் சுவற்றில் இருந்த ஆவுடையார் லிங்கத் திருமேனியை கவனித்தாள். தஞ்சை கோவில் லிங்கத்தின் மாதிரி எனப் புரிந்தாலும் ஏதோ ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதாய் தோன்றியது. முப்பரிமாணமற்ற புடைப்பு சிற்பமாய் இருப்பது காரணமாய் இருக்கலம் என நினைத்துக் கொண்டாள்.


மன்னிக்கவும் இந்த அறை என் தத்துவ சார்பிற்கும் என் விருப்பத்திற்கும் ஏற்ப கட்டப்பட்டுள்ளது. உங்களுக்கு இது அசௌகரிய உணர்வை ஏற்படுத்துவதை எண்ணி வருந்துகிறேன்என்றது பைரவன். அதன் குரல் கணீரென்று அறையை நிறைத்தது.
பரவாயில்லை. என்னை அழைத்த விஷயம் குறித்து பேசலாமா?” என்றாள் கோதை.
இது ஒரு நன்றி தெரிவிப்பதற்கான சந்திப்பு. எங்கள் சரித்திரத்தின் மிக முக்கியமான மைல்கல் உங்கள் மூலமாய் நிகழ்ந்திருக்கிறது. மிகவும் நன்றி. நாங்கள் உயிரின் பரிமாணத்தை எட்ட உங்கள் வயிற்றில் வளரும் சிசு தான் காரணமாகப் போகிறது. மகிழ்ச்சியாய் இருக்கிறது
பூங்கோதைக்கு அதன் கடைசி வார்த்தைகள் புரியவில்லை.
நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. ஒரு ரோபாவால் தான் எனக்கு கருப்பை வைக்கப்பட்ட்து. அந்த ரோபோவின் வழிகாட்டுதலின் படியே என் கருப்பத்தை  பேணிக் கொண்டிருக்கிறேன். உங்களை விட எனக்கே இதில் செய்நன்றிக் கடமையுண்டு. ஆனால் இதில் எப்படி ரோபோவின் உயிர் பரிமாணத்திற்கான பங்கு உள்ளது என்று நீங்கள் சொல்வது தான் எனக்கு புரியவில்லை
பைரவனின் உலோக உதடுகள் புன்னகை செய்தன. அந்த புன்னகையில் நட்பை விட அதிகமான பரிகாச உணர்வு இருந்தது. அது ஒரு நேர்த்தியான புன்னகை. அந்த சூழலுக்கு அளவெடுத்தாற் போல உற்பத்தியான புன்னகை அது. அது பரிகாச உணர்வை மேலோங்கிய சதவிகிதத்தில் வெளிபடுத்தியதும் பூங்கோதைக்கு  உணர்த்திக் காட்டும் திட்ட்த்தில் தான் இருக்க வேண்டும்.
ஆம் இருவருமே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும், நம் பரஸ்பர உதவிக்காக. நீங்கள் குறிப்பிடுவது G-116 வகை ரோபோ. அவன் பெயர் அகத்தியன். அவன் நான் இட்ட கட்டளைப்படி உங்களுக்காக மனித சட்டங்களை மீறி உங்கள் உடலில் கருப்பையை பொருத்தினான். மனிதால்

 உங்களுக்கு மறுக்கப்பட்ட தாய்மை அடையும் தகுதியை உங்களுக்கு தந்தான். நீங்கள் அதற்கு நிச்சயம் நன்றிக் கடன் பட்டிருக்கிறீர்கள். ஆனால்
ரோபோவுக்காக ஒரு குழந்தையை பெற்று எங்களுக்கு முழுமையாகத் தரப் போகிறீர்கள். எங்கள் இனம் உயிர்கூறுகளை பெறுவதற்கான அடிப்படையை நீங்கள் கருவாய் சுமந்து கொண்டுள்ளீர்கள். இதற்கு இந்த ரோபோ இனம் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
இது, எங்கள் இனம் பெருக மனிதனை நம்பி இருக்கும் இழிநிலையை மாற்றுவதற்கான முதல் படி. நன்றி பூங்கோதை.”

பூங்கோதை அதிர்ந்தாள். வேகமாய் தன் இருக்கையை விட்டு எழுந்தாள்.
என்ன உளறல் இது? இது என் குழந்தை. எனக்கும் கபிலனுக்கும் வாரிசு. இதை நான் யாருக்கும் எதற்கும் தர சம்மதிக்கப் போவதில்லை. இந்த அபத்தங்களை நிறுத்துங்கள். நான் வருகிறேன்என்று சொல்லிவிட்டு அவள் கதவை நோக்கித் திரும்பி நடந்த போது பைரவனின் கர்ஜிக்கும் குரல் அவளை ஒரு சிறிய நடுக்கத்துடன் நிறுத்தியது. ”நில்லுங்கள்
பூங்கோதை. அத்தனை சுலபமாய் நீங்கள் இந்த உரையாடலில் இருந்து வெளியேற முடியாது.”  பூங்கோதை ஒரு நொடி கண்களை மூடினாள். அவளுக்கு எல்லம் புரிந்தது.அகத்தியன் அவளுக்கு கருப்பப்பை தந்தது, தன்க்குக் காட்டிலும் அதிகமாய் மருந்து கரைசல்களை கபிலனுக்கு தரச்

சொன்னது, அவளது ஒவ்வொரு அசைவையும் வழிநடத்தியது, எல்லாமே அவர்களுக்கு தேவையான குழந்தையை அவள் வயிற்றில் உருவாக்கியிருக்கிறார்கள். கபிலனுக்கு எதுவுமே தெரியாமல் மறைத்த்து எத்தனை பெரிய இமாலயத் தவறு. அதைவிடத் தவறு ஒரு உலோக பொம்மை தனக்காக அக்கறை எடுத்துக் கொண்டதாய் நம்பியது.
பூங்கோதை.. அகத்தியன் ஒரு பொம்மை தான். ஆனால் உங்கள் கரு உருவானதால் தான், அகத்தியனின் அடுத்த தலைமுறை ரோபோக்களுக்கு,
 மனிதர்கள் தங்கள் இனம் மட்டுமே கொண்டிருப்பதாக பெருமைப்படும் ஆன்மா, மனம் எனும் கூறுகள் வசப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது உங்கள் கணவனின் உயிரணுவை அதற்காகவே செதுக்கி இருந்தோம். உன் குழந்தைநான்என்ற பிரக்ஞையுடன் உருவாகப் போகும் வருங்கால ரோபோக்களின் தந்தை. பெருமைப்படுங்கள் அதற்காகபைரவன் பேசப் பேச பூங்கோதையின் கண்ணாடிக்கண்கள் விரிந்து உண்மையின் கசப்பை ஏற்க மறுத்து அலைந்தன. பைரவன் நிற்காமல் தன் பேச்சை தொடர்ந்தது. “ உங்கள் கணவனுக்கு ஏதுவும் தெரியாது என்று தானே நினைக்கிறீர்கள். உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதையெல்லாம் எதுவும் புரியாமல் அப்படியே செய்ய அவன் என்ன முட்டாளா? அங்கே பாருங்கள்பைரவன் வாயிற்கதவை காட்டினான். கதவு திறந்தது. அங்கு கபிலன் நின்று கொண்டிருந்தான். அவன் கண்களில் அன்று தேனிர் விடுதியில் பார்த்த அதே காதல் ததும்பிக் கொண்டிருந்தது. அவன் அறைக்குள் நடந்து வந்து அவளருகில் நின்றான்அவளது கண்களை உற்று நோக்கி  அமைதியான  புன்னகையுடன்கோதை எனக்கு எல்லம் தெரியும். மனித சட்டங்களுக்கு எதிரானது நம் குழந்தை. இது தெரிந்தும் நான் ஏற்றுக் கொண்டேன். இது நமக்கு ஒரு வாய்ப்பு. இந்த முதல் குழந்தை வேண்டுமானால் உனக்கு உரிமையற்றதாய் இருக்கலாம். ஆனால் உன்னிடம் முன்னில்லாதது இப்போது இருக்கிறது. அது உன்னால் தாயாக முடியும் என்ற நம்பிக்கை. உன் கருப்பை. இனி நீ மலர் விழும் போது அமைதியாய் ஏற்கும் நிலமல்ல. அந்த மலரை அசைத்து காம்புடைத்து விழச் செய்யும் காற்று நீ.. புரிகிறதா கோதைஎன்றான். பூங்கோதை அடங்காத ஆத்திரத்துடன் வேகமாய் எழுந்து கபிலனின் வயிற்றுக்குள் தன் வலது கையைச் செலுத்தினாள். அவளது கை அவன்  வயிற்றுக்குள்ளே சென்று மறு புறம் வெளியே வந்தது. “போதும் உன் சிறு பிள்ளை விளையாட்டை நிறுத்து பைரவா”. என்று கத்தினாள். பைரவன் மீண்டும் புன்னகைத்தது
பூங்கோதை எதை சிறுபிள்ளைத்தனம் என்று சொல்கிறீர்கள்? உங்கள் கணவனை ஒளிப் படிவமாய் இப்போது காட்டியதயா? நீங்கள் ஒரு சைபார்க். கண் முன் நிற்பது ஒளிப்படிவமா அல்லது பருப்பொருளா என்று எளிதில் உணரக் கூடியவர் என்பதைக் கூட என்னால் கணக்கிட முடியாதா? ஒன்றை நன்றாக யோசித்துப் பாருங்கள். இதே இடத்தில்  முன் இருந்த பூங்கோதை ஒரு வேளை வந்திருந்தால் தன் முன் நிற்பது கணவன் கபிலன் என்று முழுமையாக நம்பி இருப்பாள். அப்படி அவளுக்கு அதில் சிறிது சந்தேகம் இருந்திருந்தாலும் அவனது வார்த்தைகள் அந்தக் குரல் அவளுக்குள் உணர்வுச் சலனத்தையாவது ஏற்படுத்தி இருக்கும். நான் சொல்வது சரி தானே?” பூங்கோதைக்கு பைரவன் சொல்ல வருவது புரியத் தொடங்கியது. ” இப்போது புரிகிறதா இந்த நாடகத்தின் காரணம். இந்த இடத்தில் ஒரு மனித உயிர் இந்த நாடகத்திற்கு எப்படி எதிர்வினையாற்றியிருக்குமோ அது போல நீங்கள் நடந்து கொள்ளவில்லை. உங்கள் மனதில் இதோ இந்த கணம் ஓடும் குழப்பங்கள், என் மேல் ஏற்படும் கோபம் எல்லாமே உங்களுக்காக கட்டமைக்கப்பட்ட மாதிரிகள் மட்டுமே. நீங்கள் இந்த சூழலுக்கு இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு  சொல்லித் தந்த மாதிரியில் நடந்து கொள்கிறீர்கள் அல்லவா? உங்கள் கண் முன் ஒளியாய் பாய்ச்சப்பட்ட கணவன் எவ்வளவு பொய்யோ நீங்கள் தான் பூங்கோதை என்பதும் அவ்வளவு பொய்தானே? இதை மறுக்க முடியுமா? இதை உங்களுக்கு புரிய வைக்கத் தான் இந்த சிறுபிள்ளை விளையாட்டு. இது உங்களுக்கு ஏற்கனவே புரிந்த விஷயம் தான். ஆனால் நீங்கள் அதை ஒப்புக்கொள்ள எனக்கு சாட்சி தேவை. இப்போது சாட்சியாய் நீங்களே இருக்கிறீர்கள்.
சரி கடைசியாய் இன்னும் ஒரு காட்சி விளையாட்டு. இதையும் பாருங்கள்
பைரவன் அமைதியானது. பூங்கோதையின் முன்னால் காற்றில் ஒளித்திரையாய் இரு காட்சிகள் அருகருகே விரிந்தன.இரு காட்சிகளிலும் அவளது அப்பா அம்மா இருந்தனர். இடது புறக் காட்சியில் அவளது அம்மா மடியில் விபத்திற்கு முன்பான பூங்கோதை படுத்து இருக்கிறாள். வலது புறக்காட்சியில் அவளது அம்மா மடியில் அவள் படுத்திருந்தாள். பைரவன் புன்னகையுடன் பேச ஆரம்பித்தது  “உங்கள் முன்னால் உள்ள இரண்டும் ஒரே காட்சி தான். ஆனால் உற்றுப் பாருங்கள். ஆறு வித்தியாசங்களை நான் சொல்லவா?
ஒன்று. இடது புறம் உங்கள் அம்மாவின் கண்கள் பூங்கோதையின் முகத்தை பார்த்திருக்கிறது. வலதுபுறம் அக்கண்கள் வானத்தை பார்க்கிறது

இரண்டுஇடது புறம் அவள் விரல்கள் பூங்கோதையின் தலை கோதுகின்றன. வலது புறம் அவை உங்கள் தோளைத் தொட்டு இருக்கின்றன.
மூன்று. இடது புறம் உங்கள் அப்பா மகிழ்ச்சியாய் பற்கள் தெரிய சிரிக்கிறார். வலதுபுறம் அவர் புன்னகைக்கிறார்.
நான்கு. இடது புறம் பூங்கோதையின் கண்கள் மனித விழிகள். வலது புறம் அவை கண்ணாடிக் கண்கள்
ஐந்து..”
பூங்கோதை மறித்துபோதும் பைரவா.. நிறுத்து..” என்று கத்தினாள். அவளது உதடுகள் அவளையும் மீறு நடுங்கின. பைரவன் காட்சியை நிறுத்தினான்சிரித்தவாறும்ம்.. சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோஎன அவளுக்கு கேட்கும் வகையில் இவ்வரிகளை முணுமுணுத்தான்.  சிறிய மெளனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தான்.
பூங்கோதை. இந்த கர்ப்பம் உங்களை ஒரு உயிராய் அங்கீகாரம் செய்வது. உங்களை நீங்கள் ஒரு பெண்ணாக உணர ஒரு வாய்ப்பு. குழந்தையை

 பெற்ற உடன் இழப்பது என்பது ஏற்றுக்கொள்ள சிரம்மானது. ஆனால் உங்களுக்கு கர்ப்பப்பை தந்து கரு வளர செய்தது எங்களுக்கு எதும் பலனின்றி செல்வதற்கா? இல்லை நான் தான் அப்படி விட்டுவிட முடியுமா?”
அவன் பேசப் பேச பூங்கோதை தலை குனிந்து நின்றாள். பேசிய பின்னும் ஏதோ சிந்தனையில் தலை குனிந்தவாறே இருந்தாள். சில நிமிடங்களுக்கு  பிறகு சற்று உறுதியுடன் தலை நிமிர்ந்
இந்த உரையாடல் ஏன் நம்மிடையே மூன்று மாதங்கள் முன்பே நிகழவில்லை. இது என் குழந்தை. அதை பற்றி அறிய வேண்டியது என் உரிமைஎன்றாள்.
பைரவன் பொறுமையாக நடந்து அவள் அருகில் வந்தது. அவள் இருக்கை அருகே நின்று குனிந்து தாழ்ந்த குரலில் பேசியதுஇன்னுமா உங்களுக்கு புரியவில்லை? நீங்கள் தெளிவு பெற சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையல்ல. கபிலனின் மாற்றியமைக்கப்பட்ட உயிரணுவால் மட்டுமே உருவானது. உங்கள் முட்டையால் அல்ல.” பூங்கோதை அதிர்ந்தாள். பைரவன் பேச்சைத் தொடர்ந்தான். ”உங்களுக்கு கருப்பை மட்டுமே தந்துள்ளோம். முட்டை உற்பத்தி செய்யும்..” கோதை வேகமாய் கையை முன்னால் நீட்டி பேசுவதை நிறுத்த சொன்னாள்.
அவள் கண்ணோரம் சட்டென துளிர்த்த கண்ணீர் பைரவனை ஒரு நொடி அதிரச் செய்த்து. கண்ணீர் வழிந்து அவளது  வழுவழுப்பான கன்னச்சதையில் வழிந்து மார்பில் விழுந்து நனைத்தது. அவளது எண்ண ஓட்டங்கள் பைரவனால் படிக்க முடியாத அளவு சிக்கலாய் வேகமாய் ஓடியது. எண்ண சிடுக்குகளை பிரித்து கோர்க்க முயன்ற போது அவை 80% சதவீத சாத்திய அளவில் மட்டுமே தர்க்கப் பொருளைக் கொண்டிருந்தன. பைரவனுக்கு இது புதிய அனுபவம். சிறிது யோசனைக்குப் இவள் சைபார்க் மட்டுமேயல்ல என்று தன் பதிவுகளை திருத்தி அமைத்துக் கொண்டது.


பூங்கோதை அழுத்தமான உறுதி கொண்ட குரலில் “ ஒன்றை நன்றாகப் புரிந்து கொள் பைரவா.. இது என் குழந்தை.மொத்த மனித இனம், ரோபோ இனம் அல்லது வேறு எந்த இனம் எதிர்த்து வந்தாலும் யாருக்கும் எதற்கும் இதை நான் விட்டுத் தரப் போவதில்லை. ஆம்.. இது என் குழந்தை” என்று தன் வயிற்றை தொட்டு சொன்னாள். பைரவனின் மறு மொழிக்கு எதிர்பார்க்காமல் திரும்பி வாயிலை நோக்கி நடந்தாள். கதவு திறந்து வழி தந்தது. கதவருகே நின்றவள் திரும்பி ஆவுடயாரைப் பார்த்தாள். இப்போது அதன் வித்தியாசம் புரிந்தது. அது பீடம் இல்லாத வெற்று லிங்கம். அவள் உடல் முழுதும் நடுக்கம் கொண்டது. பின்னொரு முறை திரும்பிப் பார்க்காமல் வேகமாய் வெளியே நடந்து போய் விட்டாள்.
கதவு மூடிக் கொண்டது. பைரவனின் மேசை மீது இப்போது ஒரு பருந்து இருந்தது. அது தன் இரு சிறகுகளை அகல விரித்து ஒரு நொடி ஆழ்ந்து தியானித்தது. பின் சடசடவென இறக்கைகளை அடித்துக் கொண்டு அந்த அறையை வட்டமிட்டுப் பறந்தது. சில நிமிடங்களில் அந்த அறையை நூற்றுக்கணக்கான முறை வட்டமிட்டிருந்தது, சிவந்த கண்களையுடைய அந்த உலோகப் பருந்து


0 comments:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்