அருவி விமர்சனம்- ஆண்டவரே! தயை கூர்ந்து எம்மிடம் மன்னிப்பு கோருவீராக..!பலரும் பாராட்டிக் கொண்டாடித்தீர்த்த நிலையில் அருவி திரைப்படம் பார்த்தேன்.  இருந்தது. ஏன் இப்படம் பாராட்டப்படுகிறது என்று நிஜமாகவே புரியவில்லை.. எல்லாத் தரப்பும் பாராட்டிய இப்படம் அதிக வணிக சமரசங்கள் இல்லாத கலைப்பட சட்டகத்துக்குள் பொருத்தக் கூடிய படம். ஆனாலும் பலரையும் சென்றடைந்து பரந்துபட்டு ரசிக்கப்பட்டது. கலைப்படங்கள் வணிக வெற்றி பெறுவதும் எல்லாரலும் பாராட்டப் பெறுவதும் ஏன்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்யும். காரணம் அது ஒரு வகையில் சமூக ரசனை மேம்பாடு, சிந்தனை வளர்ச்சி மட்டுமல்லாமல் கலையின் முதிர்ச்சிக்கும் வழி தரும்.

அத்தகைய கலை முயற்சி, கருத்தியல் ரீதியாக தன் சமூகத்தை ப்ரதிபலிக்க மட்டுமல்லாமல் மேம்படுத்தவும்  செய்யும் போது அதைப் பாராட்டலாம். தன் சமூகத்தின் மாறாத பிற்போக்குக்களை முன்வைப்பது மட்டுமில்லாமல் அதனை தன் கருத்தோட்டத்தைக் கடத்தும் ஊடகமாக பயன்படுத்துவது எனக்கு ஒரு வகையில் வருத்தமும் இன்னொரு வகையில் அதிர்ச்சியும் கொடுப்பதாய் இருந்தது.
அருவி , ஒரு பெண்னின் கதை. சமூகத்தாலும் , நோயாலும் சிதைக்கபட்டு,தனிமைப்படுத்தப்பட்ட பெண். சமூகத்திடம் அன்பு செலுத்துங்கள் என இரைஞ்சுகிறாள். அவளைக் குறீயீடாக எடுத்துக் கொண்டால் அவள் மானுடத்தை நோக்கி, ‘யோசிக்காமல் ஓடும் மனிதர்களே.. நில்லுங்கள், சிறிய விஷயங்களை ரசியுங்கள் , ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்,உங்கள் மனதின் மூலையில் எங்கேனும் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும், அதை தேடுங்கள்” என்கிறாள் அருவி.

ஆம். காலத்தின் தேவை தான் அருவி. ஆனால் அவள் உதடுகள் சொல்வதை மனம் சொல்கிறதா? அப்படி மனம் சொன்னால் அவள் மனம் யாருடைய மனம். தன்னை வன்புணர்ந்த ஆண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்< அன்பு செலுத்துங்கள் எனக் கேட்க்கும் பெண்ணின் மனம் யாருடைய மனம்?
சரி அவள் அன்பை எந்த பாரபட்சமும் இல்லாமல் வழங்குபவள் என்றும் வைத்துக் கொள்வோம், எல்லா ஆண்களாலும் உடலால் மனதால் சிதைக்கப்பட்டவள், அவை பற்றி எதுவும் பேசாமல் நுகர் கலாச்சாரம் குறித்தும், அதன் அர்த்தமின்மை குறித்தும் 15  நிமிடங்கள் நீளமாய்ப் பேசுகிறாள். தன்னை நுகர ஆசைப்படும்  தொலைக்காட்சி இயக்குனரிடம் அவள்  மனம் வெதும்பிக் கேட்கும் ஒரே கேள்வி ‘டி.ஆர்.பி க்காக எதுவும் செய்வீங்களா?” இவை எதுவும் தற்செயலானவயோ அல்லது கதைப்போக்கில் நிகழ்பவயோ அல்ல. அருவியின் சூழ்நிலைகள் மிக கவனத்துடன் கட்டமைக்கப்பட்டிருகின்றன. அவள் வாழ்வில் இருக்கும் ஆண்கள் யாரும் அவளுக்கு நியாயம் வழஙியவர்களில்லை. அவளது அப்பா ,தம்பி, முதலாளி,ஆன்மிக குரு.,தோழியின் அப்பா யாருமே அவளுக்கு நியாயம் வழங்கவில்லை. அதவது  பெண் வாழ்வின் பல நிலைகளில் வரும் எந்த ஆணும் அவளுக்கு துணையில்லை. அவர்களை அவள் வழிதவறிய குழந்தைகளைப் போல் பாவிக்கிறாள். தன் பங்கு நியாயத்தைக் கேட்கவும் தயாராக இல்லாத தன் தந்தையிடம் அவள் குழந்தையாய் அன்பிற்கு தவித்து அழுகிறாள். அப்போதும் அவள் தன் தாய் குறித்து எதுவும் யோசிப்பதில்லை.

இவை எல்லாமும் தற்செயல் என்று கொள்வோம்,மிக அப்பட்டமாய் நிகழும் சொல் வன்முறை ‘அதப் போய் எப்படி அண்ணே மூணு பேர்’ என ஒரு பதின்பருவ இளைஞன் மீண்டும் மீண்டும் கேட்பது. ஒரு முறை அல்ல பல முறை. அது நகைச்சுவையா? பகடியா? எப்படி அதை எடுப்பது. எதுவானாலும் அது வக்கிரம். சமீபத்தில் ஒரு வணிக திரைப்படத்தில் கூட இப்படி ஒரு முகம் சுளிக்கும் உரையாடலைக் கேட்கவில்லை. அருவிக்கு அது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லை.

இன்னொரு தற்செயல். அருவிக்கு நோய் வர சொல்லபட்ட காரணம். அபத்தம். ‘Butterfly effect’ ஐ காட்சிப்படுத்த வேண்டுமானால் அந்தக் காரணம் பயன்படலாம். அதன் மருத்துவ நம்பகத்தன்மை ஒரு புறம் இருக்கட்டும் .எதற்கு அப்படி ஒரு சுற்றி வளைக்கப்பட்ட காரணம்? அருவி “தவறு ”செய்யவில்லை என்று நிரூபிக்கவா? அவள் தன் அப்பாவிடம் தப்பு செய்யவில்லை எனக் கெஞ்சவா? நோயை ஒரு ஆயுதம் போல தன்னை நுகரும் ஆண்களுக்கு தண்டனையாக தருவதைப் போல் பயமுறுத்திப் பார்க்கிறாள். ஒரு நோய், அதன் காரணம், அதன் விளைவு, அதை சமூகத்திடம் சொல்ல வேண்டிய முறை என எந்த பொறுப்புமே இல்லாமல் செல்லும் கதை.

எத்தனை தற்செயல்கள்..திரைப்படத்திற்குள் மட்டுமல்ல..ிரைப்படத்தைத் தாண்டியும் பல தற்செயல்கள்…எந்த ஊடகமும் இந்த விமர்சனங்களை முன்வைக்கவில்லை. விகடன் எல்லாக் குறைகளையும் சொல்லிவிட்டு,இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல..அருவி நம்ம ராசாத்தி என்று கொண்டாடுகிறது..தி இந்து சொல்லும் ஒரே குறை பிராமண துவேஷம் (இது படத்தின் நோக்கதிற்கே எதிராய் இருக்கிறதாம்..இது மட்டும் தான் அவர்கள் கண்ணில் பட்டதா??)
எனக்கு தெரிந்த வரை  காலச்சுவடு மட்டுமே காட்டமான விமர்சனத்தை பதிவிட்டுள்ளது.


சரி விடுங்கள்..ஒரு வகையில் பெருமை தான்…தன் ஆண்டவனை மன்னிப்பு கேட்க சொல்லி உருகும் அருவி என்னும் ராசாத்தியால் நாம் எல்லோரும் தவறுகளை எத்தனை சுலபமாய் மன்னிக்கும் பெரிய மனதுக்காரர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ! அவ்ளோ நல்லவங்களா நாம?