ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு அடர்ந்த கானகமும்..



 

உலகின் மிக சிறந்த படைப்புகள் நம்மிடம் எதையும் தீர்க்கமாய் சொல்வதில்லை. அவை நம்முடன் உரையாடுகின்றன. மானுடத்தின் தேடலில் ஒரு பகுதியாய் இருக்கின்றன. தன் சமூகத்தின் மனசாட்சியை தயவு தாட்சண்யமின்றி உரை கல்லில் உரசி பார்க்கின்றன.
இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் இவற்றைத் தான் செய்கின்றன. ஆனால் திரைப்படங்களில்  வணிகத்தின் பங்கு அதிகம் என்பதால் அவை எத்தனை தீவிரமாய் இயங்கினாலும் சமரசங்கள் தேவையாய் இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் இந்த சமரசங்கள் மிகவும் அதிகம். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.ஆனாலும்  விரல் விட்டு எண்ணக் கூடிய முயற்சிகள் நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  தமிழ் சினிமாவின் அத்தகு அரிய முயற்சி.

இருண்ட அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து வெளியே வருவது போல நாம் திரைப்படம் முடியும் போது உணர்கிறோம். அந்த அடர்ந்த காடு நாம் வாழும் சமூகம் என்பதும் நமக்கு உரைக்கிறது.

காடு முழுவதும் விலங்குகள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயல்பு ஒவ்வொரு உணர்ச்சி. புலியும் முயலும் ஆடும் எருமையும் உலவும் காடு இது.

இதில் ஒரு ஆடும் ஓநாயும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. காடு முழுக்க இவ்விரு மிருகங்களும் அலைந்து திரிகின்றன.

படத்தின் ஆரம்பத்திலேயே நான் பார்க்கப் போவது ஒரு நல்ல படைப்பு  என்ற நம்பிக்கையடைந்தது மட்டுமல்ல அதற்குள் நான் முழுவதுமாய் இழுக்கப்பட்டு பரபரப்பாய் கவனிக்கத் தொடங்கி விட்டேன்.

ஆரம்ப காட்சிகளில்  ஒரு சாமானியன் அவனது மனசாட்சிக்கு பதிலளிக்க வேண்டி இருக்கிறது. இரவில் குண்டடி பட்டு உயிருக்கு போராடும் ஒரு மனிதனை அவன் காப்பாற்ற வேண்டும். அவன் படிக்கும் மருத்துவம் அவனுக்கு ஒரு மனிதனை எந்த நிலையிலும் காப்பாற்ற வேண்டும் எனச் சொல்லித் தந்து இருக்கிறது. காப்பாற்ற வேண்டியது ஒரு மருத்துவனின் கடமை. ஒரு தனி மனிதனின் அறம். ஆனால் அவனது அறம்  அவன் வாழும் சமூகத்தால் கேள்வி கேட்கப்படுகிறது. எள்ளி நகைக்கப் படுகிறது.

இருந்தும்  அவனது மனம் அவனை எங்கும் நிற்கச் சொல்லவில்லை.  உயிர் பிரிந்து விடுமோ என்ற பதட்டத்துடன்  தன் தோளில் அந்த மனிதனை தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எள்ளும் அதே சமூகம் தான்  ஒரு பிச்சைக்காரனாய் அவனுக்கு தோள் கொடுக்கிறது, ஒரு புகழ் பெற்ற மருத்துவராய் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய சொல்லித் தருகிறது.

இந்த பத்து நிமிட காட்சியிலும்   அதன் பின் நடக்கும் எல்லா சம்பவங்களிலும்    தனி மனிதன் X  சமூகம் என்ற இருநிலையின்  சேர்க்கையும் அதன் முரணும் மிக நேர்த்தியாய் கட்டமைக்கப்படுகிறது. தனி மனிதனாய் சமூகத்தை கேள்வி கேட்கும் அந்த மருத்துவ மாணவன் விளைவுகளை யோசிக்காமல் அறுவை சிகிச்சை செய்கின்றான்.
அதன் பின் அவன் மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றான். தான் காப்பாற்றியவன் ஒரு கொலைகாரன் எனத் தெரிகிறது. ஒரு மருத்துவனாய் தான் செய்தது சரிதான் என்றாலும் ஒரு சமூக உறுப்பினனாய் தான் காப்பாற்றிய குற்றவாளியை  கொலை செய்ய வேண்டும் என அவன் நிர்பந்திக்கப்படுகின்றான்.
சமூகத்தின் கடமை என்று அவனுக்கு சொல்லப்பட்டாலும் அவனது அறம் அதை மறுக்கிறது. படம் முழுக்க இந்த மனப் போராட்டதில் அவன் ஊசலாடுகின்றான். இறுதியில் அதற்கு பதிலையும் கண்டு கொள்கிறான்.

  குரோசாவா,பெர்க்மன் போன்றோரின் திரைப்படங்களில் காணப்படும் தத்துவ விசாரணைகள்  தமிழில் முயற்சி செய்யப்பட்டு இருப்பதை நினைத்து பெருமை கொண்டேன். நாடகத்தன்மையற்ற தத்துவ விசாரணை நிகழ்த்த சினிமா ஒரு காட்சி ஊடகம் என  முழுமையாய் புரிந்து கொண்டவர்களாலேயே  முடியும். மிஷ்கின் அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

 
படத்தில் அந்த மருத்துவ மாணவன் ஆட்டுக்குட்டு எனவும் அந்தக் கொலையாளி ஓநாய் எனவும் உருவகிக்கபடுகிறார்கள்.
கொலையாளி தன்னை ஒநாய் என உணர்ந்து  அந்த வெறியில் குதறியவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறான்.  தான் செய்ய வேண்டிய கடமையை செய்யாவிட்டால் அவன் நிம்மதியாய் இருக்க முடியாது என்பதை ஓநாய் உணர்ந்து இருக்கிறான்.  தான் செய்யக் கூடாத குற்றத்தை செய்து விட்டால் தன்னால் நிம்மதியாய் இருக்க முடியாது என்பதை ஆட்டுக்குட்டி உணர்ந்து கொள்கிறான். ஆட்டிற்கு இருக்கும் குழப்பம் அவன் செய்யும் தவறின் விளைவால் நிகழும் மரணத்தின் மூலம் தெளிவாகிறது.அதை ஒப்புக்கொண்டு கண்ணீர் மல்கும் போது ஒநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்

ஓநாய் நினைத்தால் தன் கடமையை செய்யாமல் தன்னைத் துரத்தும் போலீஸிடம் இருந்து தப்பிக்க முடியும். ஆடு நினைத்தால் தான் சுட வந்த ஓநாயை சுட்டிருக்க முடியும். இதனால் அவர்கள் இருவரது வாழ்க்கையும் சுலபமானதாகி இருக்கக் கூடும் . ஆனால் அவர்கள் அதை செய்யத் துணிவதில்லை.


இவ்விருவரும் சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்கள் . இவர்களை யாரும் அங்கீகரிக்கப் போவதில்லை. ஆனால் இவர்கள் போன்றோர் தான் மானுடத்தின் அறத்திற்கு விளக்கம் அளிப்பவர்கள்.

படம் முழுக்க நடக்கும் வேட்டை , துப்பாக்கி முழக்கங்கள், சதுரங்க ஆட்ட நகர்வுகள் என எல்லாம் ஒரு அழுத்தமான தத்துவ தரிசனத்திற்கான தேடலாய் உள்ளது.

ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் படத்தின் ஒட்டுமொத்த தேவைக்காக பங்களிக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் இயல்பை நம்மிடம் வெளிப்படுத்தி விட்டு தான் திரையிலிருந்து விலகுகின்றன.
படம் முழுதும் இரவின் இருட்டும் குருதியின் வாசமும் கொண்டு நகர்கிறது. காமிராவும் ஒரு காட்டு விலங்காய் சென்னையின் இரவில் வெறி கொண்டு அலைகிறது. மூச்சிரைத்து அயர்கிறது. பின் சுதாரித்து மீண்டும் பாய்கிறது.
 இசை கம்பீரமாய் இந்த படைப்பின் ஆன்மாவை இயக்குகிறது. இளையராஜா இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஓநாய்- ஆட்டுக்குட்டி என தலைப்பு தரும் இருநிலை முரண் அவ்விரு கதாப்பாத்திரங்களுள் பெரிதாய் நிகழ்வது இல்லை. முரண் சமூகம்- தனிமனிதன் என்ற மட்டத்திலும் தனிமனித உள்முரண் என்ற மட்டத்திலும்  தான் நிகழ்கிறது.
திரைப்படம் தான் சொல்ல வந்ததை தாண்டியும் நீளமான காட்சிகளை கொண்டுள்ளது. இரவில் நிகழும் பரபரப்பான வேட்டை எனும் கருத்துரு (concept)   இந்த நீளமான காட்சிகளால் தொய்வடைகிறது. இந்த தொய்வு படத்தின் தத்துவ பிண்ணனிக்கும் பயன்படவில்லை.

அமைதியாய் இருக்க வேண்டிய இடங்களிலும் இசை ஒலிக்கிறது. (ஹ்ம்ம்.. ரஷ்ய இயக்குனர் தர்கோவ்ஸ்கியின் படங்களில் கூட இசை அதிகம் இருப்பதாய் குறை சொல்பவன் நான் .. அதனால் இந்த கருத்தை அதிகம் பொருட்படுத்தத் தேவை இல்லை :-)  )

சில இடங்களில் நாடகத்தன்மை இருப்பதை மறுக்க முடியாது. மிஷ்கின் தன் கதையை சொல்லும் காட்சியில் அத்தனை உணர்ச்சிவசப்படத் தேவையா எனத் தோன்றியது.

ஆனால் இதெல்லாம் படத்தின் சமரசமற்ற கலைத்தன்மையின் முன்னால் ஒன்றுமில்லாதவை.

’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ மூலம் தமிழின்  சிறந்த சினிமா  படைப்பாளிகளுள் ஒருவராய்  மிஷ்கின் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.
இந்த திரைப்படமும் தமிழில் அரிதாய் நிகழ்ந்துள்ள கலை முயற்சி என பெருமையுடன் சொல்வேன்.

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...