ஞாயிறு, 24 அக்டோபர், 2010

எங்கள் நூல்களை எரியுங்கள்




(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) 

எல்லா காலங்களிலும் ஒரு சாரார் ஒடுக்கப்படும் போது முதலில் அவர்கள் சிந்தனை ஒடுக்கப்படுகிறது. பேசுபவர்களின் நாக்கு, எழுதுபவனின் கை, எழுதிய பக்கங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன.
நிறம், மொழி, இனம்,கலாசாரம்,மதம் என எதேதோ சொல்லி அடக்குமுறை நிகழும் போதெல்லாம் அமைதியாய் அடி வாங்கும் ஊமை சனம் பின் காலத்தின் மற்றுமொரு புள்ளியில் மெல்ல சேர்ந்து திரண்டு, பிரவாகமாகி, பதிலடி தருகிறது.  நாக்குகளும் கைகளும் பக்கங்களும் வெட்ட வெட்ட குறையாமல் பெருகிப் பெருகி வெட்டுபவனை விழுங்குகின்றன.
இதை  சரித்திரம் மீண்டும் மீண்டும் நமக்கு சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது.

எரிந்த புத்தகங்களின் பக்கங்கள் சாம்பலாகிவிடுவதில்லை. அவை மீண்டும் வேறு வேறு  உருக் கொள்ளவே செய்யும். எழுத்திற்க்கு எழுத்தாளன் வெறும் கருவி. மானுடத்தின் சிந்தனையை ஓரிரு பக்கங்களை எரிப்பதாலோ அல்லது சில கைகளை துண்டிப்பதாலோ நிறுத்திவிட முடியாது.


இந்த யுகம் தொழில்நுட்ப யுகம். சிந்தனைகள் பைட்டுகளாக மாறிய பின் எதை அழிப்பது? சிந்தனைகள் தரவாக மாறிவிட்டபின் அழிவற்ற வடிவம் கொண்டு
நிலைபெறுகிறது. எனது 500 ஜி.பி டிஸ்க்கில் வெறும் அவதார் படமும், எந்திரன் பாடல்களும் மட்டும் தானா இருக்கின்றன?
அதில்
சைபீரிய சிறையில் தாஸ்தவெஸ்கி இருக்கிறான்
நெரூடாவின் ரத்தம் தோய்ந்த வரிகள் இருக்கின்றன
உ.சேரனின் யுத்த ஓலமிடும் கவிதைகள் இருக்கின்றன
ஷோபா சக்தி ‘ம்’ மிடுகிறான்
காந்தி அம்பேத்கர் உரசல்கள் இருக்கின்றன
அ.ராயின் நக்சலைட் கட்டுரை அவுட்லுக்கிலிருந்து இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்திருக்கிறது

எனது டிஸ்க்கிலிருந்து என் நண்பன் டிஸ்கிற்கு செல்லும்; அங்கிருந்து ஃபேஸ்புக் செல்லும்; ட்விட்டர் செல்லும்  அங்கிருந்து கன்னியாகுமரியும் செல்லலாம்; அண்டார்டிக்காவும் செல்லலாம்.
இனி எழுதும் கைகள், பேசும் வார்தைகள், அச்சிடும் மை எல்லாம் தரவாகும் (Data) .
தரவு எல்லாரிடமும் பேசும். ஆயிரம் வருடம் தாண்டி எரிந்த நூலகங்கள் பற்றியும் சிதைந்த மக்கள் பற்றியும்..

ஆதலால் வலியவர்களே
தாராளமாய் எங்கள் நூல்களை எரியுங்கள்.

(noolaham.org வலைத்தளத்தை பார்த்த பின் தோன்றியவை) 

புதன், 22 செப்டம்பர், 2010

கமலஹாசன் என்றொரு கலைஞன் இருந்தான்.



கமலின் திரைப்படங்கள் பல உலக திரைப்படங்களின் தழுவல் என சாடும் பதிவை பார்த்தேன் (http://www.karundhel.com/2010/09/blog-post.html). பொதுவாகவே இது தமிழில் கமல் முதற்கொண்டு நிறைய பேர் செய்து வரும் விஷயம். எந்த கதையும் ,படைப்பும் முழுக்க முழுக்க தனித்து நிற்க முடியாது. எதேனும் ஒரு கதையை நினைவு படுத்துவது மிக இயல்பு. ஆனால் தனிச்சையான ஒத்துபோதலை  மீறி கட்டமைக்கப்பட்ட தழுவலாக அது நிகழும் போது மூலம் பற்றி குறிப்பிடுவதே அடிப்படை நாகரீகம். இது குறித்த எனது சிந்தனைகளை அந்த  பதிவில் கருத்துரை இட்டேன். கருத்துரை தனி பதிவாகக் கூடிய சாத்தியம் கொண்டிருந்ததால் இங்கு பதிவிடிகிறேன்.

---------------------------------------

நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.

உதாரணமாக ‘planes automobiles..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம்.  ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்)  இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை  மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.

 ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு  அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை  ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.

தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை.   இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு  தெரிந்தது  சாகெத் ராம் அல்ல  பெரும்பாலும் கமல் மட்டுமே )
கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல்.  உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.

நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும்  கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.


------------------------------------------

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தமிழ் எண்கள் வழக்கொழிந்து விட்டதா?

இன்று தமிழ் எண்கள் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. மும்பையில் எல்லா பஸ்களிலும்  மராத்திய எண்கள் தான்  உபயோகபடுத்தப்பட்டிருக்கும். . பேருந்து எண்களை பார்க்கும் போதெல்லாம் இதே போல தமிழில் எண்கள் உபயோகபடுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என யோசிப்பேன்.  யாருக்கும்மே அது புரியப் போவதில்லை. பேருந்து எண்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ் பாடபுத்தகங்கள் கூட தமிழ் எண்களை சொல்லித் தருவதாய் தெரியவில்லை. இது பற்றி பேசிய போது என் நண்பன் தமிழில் எண்கள் உள்ளதா என கேட்டான்.
அதில் ஆச்சரியம் அடைய ஒன்றும் இல்லை. என் தாத்தா தமிழ் பேராசிரியராக இருந்ததால் எனக்கு எண்கள் குறித்து தெரிந்துள்ளது. இல்லையென்றால் எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
நெட்டில் எதேனும் பதிவு இருக்கிறதா என பார்த்தேன்.
தமிழ் விக்கிபீடியாவில் எண்கள் குறித்த பதிவு இருப்பது சந்தோஷமாக இருந்தது.
தமிழில் எனக்கு 1-9 வரை எண்கள் இருப்பது 100, 1000 த்திற்க்கும் எண்கள் இருப்பதும்,fractions கூட தமிழில் இருப்பதை (அரைக்காணி, காணி, முந்திரி என்பதாக) அறிந்து கொண்டேன்.
இவை எல்லாம் முறையாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.
ஆனால் நிச்சயம் இனி தமிழ் எண்கள் புழக்கத்தில் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை. குறைந்த பட்சம் இவ்வெண்கள் பற்றி பள்ளிகளில் சொல்லி தரவாவது செய்யலாம்.
இல்லெயேல் உலகமயமாக்காலின் அவசரத்தில் கட்டாயம் மொத்தமாய் வழக்கொழிந்து போய் விடும்.

சுட்டிகள்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

http://tamilelibrary.org/teli/numeral.html

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கடவுளின் நகரம் (City of God)



நகரங்கள் என்பவை என்ன? அவை வெறும் வாழ்விடங்கள் மட்டும் அல்ல. அவை மனித நாகரிகத்தின் சாட்சி. அவனது ஆசையின் சாட்சியாய் உருக்கொண்டு அவனது தேவைகளை தாண்டிய இச்சைகள் இயங்கும் இடம் தான் நகரம். இச்சைகளுக்கு விதிகள் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் விதிகளே இச்சைகளால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. நியாயங்கள் உருவாக்கி அழித்துக்கொள்ளப் படுகின்றன.

இந்த விதிகள் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும் . அது சென்னை ஆனாலும் சரி, அல்லது ரியோ டி ஜெனிரோ வாக இருந்தாலும் சரி.
'City of God' ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் கதை. இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் கதை. உண்மை கதை அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். முகத்தில் அறைவதை போல பட ஆரம்பம் முதலே அப்படி ஒரு வேகம்.

கதையில் நிறைய கதைகள். நிறைய கதை மாந்தர். ஒரு கதை சொல்லி. இவர்களை இணைப்பது அவர்களின் சேரி. மற்றும் அவர்களது இச்சைகள். முக்கியமான கதைகள்


1) ஷேகி (Shaggy), கூஸ் (Goose),கிளிப்பர் (Clipper) மூவரும் சிறு திருடர்கள். லில் -சே எனும் சிறுவன் ஒரு ஹோட்டலை கொள்ளை அடிக்க செல்லும் போது அவர்களுடன் செல்கிறான். அவர்கள் கொள்ளை அடிக்கும் போது வெளியில் நிற்கும் லில் சே அவர்கள் போன பின் சும்மா தன் சந்தோஷத்திற்க்காக ஹோட்டலில் உள்ள எல்லோரயும் கொன்று குவிக்கிறான். இதனால் மற்ற மூவரும் போலிசால் தேடப்படுகின்றனர். இதில் க்ளிப்பர் சர்ச்சில் சேர்ந்து விடுகிறான். ஷேகி தன் காதலியுடன் அமைதியாய் வாழ செல்லும் போது போலிசால் சுடப்பட்டு சாகிறான். கூஸ் லில் சேயால் கொல்லப்படுகிறான்.



2) வன்முறை மீது தீராத ஆசை கொண்ட லில்-சே, அவனது நண்பன் பென்னி. பென்னி மனிதர்களின் மீது அக்கறை கொண்டவன். அதனாலேயே அவன் எல்லாருக்கும் பிடித்தவன் ஆகிறான். ஒரு கட்டத்திற்க்கு மேல் அவனால் லில்லுடன் கூட்டாய் இருக்க முடியாமல் கிளம்ப யத்தனிக்கிறான். ஆனால் லில்லை கொல்ல வந்த ஒருவன் தவறி பென்னியை கொன்று விடுகிறான். நண்பனின் சாவால் மேலும் வெறி கொள்கிறான். கொலை கற்பழிப்பு,கொள்ளை என தொடர்கிறான்.
3) நாக் ஒட் நெட்- லில்லின் வெறியில் குடும்பத்தை இழக்கும் இந்த பஸ் கண்டக்டர் அவனை பழி வாங்க மனமில்லாமல் எதிர் கும்பலுடன் சேர்கிறான்.  (கேரட் என்ற போதை வியாபாரி)  . அப்பாவிகளை கொல்லக் கூடாது என்ற ஒப்பந்ததுடன் கேரட்டுடன் சேரும் அவன், பின் அவனே அப்பாவிகளை கொல்லும் சூழலுக்கு செல்கிறான்.வெறும் பழி வாங்கும் போட்டியாக ஆரம்பிக்கும் சண்டை பெரும் கோஷ்டி மோதல் ஆகிறது. அந்த குப்பமே பிணங்களாகின்றன.

4) ராக்கெட் - இவன் தான் படத்தின் கதை சொல்லி , கதாநாயகனும் கூட. இவன் கொள்ளை அடிக்க முடியாமல், காதல் செய்ய முடியாமல் பெரும் பாலும் தோல்வி  மட்டுமே சந்திப்பவன். சட்டென ஒரு நாள் அவன் லில்லை  எடுக்கும் புகைப்படங்கள் பேப்பரில் வர அவன் புகைப்படக் கலைஞன் ஆகிறான். லில்லை அவனது சேரி சிறுவர்கள் அவன் கொடுத்த துப்பாக்கிகளால் கொல்வது, நாக் அவுட் நெட் அவன் கும்பல் சிறுவனை காப்பாற்ற போகும் போது அந்த சிறுவனே கொல்வது (நாக் அவுட் நெட் அந்த சிறுவனின் அப்பவை கொன்றதால் பழி வாங்கல்)  இந்த சம்பவங்கள் எல்லாமே உடனுடனெ ஒரு மணி நேரத்திற்க்குள் நடந்து முடிகிறது. இதை எல்லாம் ராக்கெட் புகைப்படம் எடுக்கிறான். இதோடு படம் முடிகிறது. 


படம் முழுதும் மள மள எனக் கதைகள் சொல்லப்படுகின்றன. சிறு திருட்டுக்களாக ஆரம்பித்து அடுத்தடுத்து  தனி மனிதர்களின் ஆசைகளாலும், வெறிகளாலும்  கொள்ளை, போதை வியாபரம், கொலை, பழி வாங்கல் அழித்தொழிப்பு என படிப்படியாக உச்சம் கொள்கிறது  கதை.

வன்முறையின் அகல ஆழங்களை சம்பவங்களின் தடையற்ற நகர்வினால் நம் முன் நிறுத்தும் இந்த படம், அதே சமயம் அந்த வேகத்திலேயே  மனிதர்களின் உளவியல் கூறுகள் எவ்வாறு அந்த சம்பவங்களின் போக்கை தீர்மானிக்கின்றன என சொல்லி கொண்டே வருகிறது.

உளவியல் ஒரு பக்கம் இருந்தாலும், எந்த  தொடர்புகளும் காரணங்களும் இல்லாமல் வாழ்க்கை போக்கு விதியே என  நிர்ணயிக்கபடுவது நிறைய இடங்களில் உணர்த்தப்படுகிறது.

உதாரணமாக கதை சொல்லி ராகெட்டின் மீது பாயவிருக்கும் தோட்டா வேறேங்கோ யதேச்சயாக சென்று விடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ராக்கெட் கடைசி வரை தன் குருட்டு அதிர்ஷ்டத்தினாலேயே சாகாமல் இருக்கிறான்.


கதையின் ஆரம்பத்தில்  இறைச்சிக்காக ஒரு கோழியை துரத்துகிறார்கள். கதை முடிவில் அதே காட்சி மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. கோழி இறுதி வரை பிடிக்கப்படுவதில்லை. அந்த கோழியின் விதி சாகாமல் போவது தான் போல.
கதையில் வரும் கதை மாந்தர்கள் எல்லாருமே எந்த நொடியில் வேண்டுமானாலும் சாவை தொடக்கூடியவர்கள். சிலர் சாகிறார்கள். சிலர் வாழ்கிறார்கள். சிலர் படம்  முடிந்த பின் கூட சாகலாம். ( உலகின் கதைகள் எல்லாம்  முடிவுக்கு வந்த பிறகும்   கதை மாந்தர்கள் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்குமோ? )
City of God ஒரு சேரியின் தெருக்களில் மூச்சிறைக்க பயந்து ஓடும் ஒரு தெரு நாய் போல அங்கும் இங்குமாய் அலைகிறது. மீண்டும் மீண்டும் அதே தெருக்களின் முக்கிற்கே வந்து நின்று பின் மீண்டும் சுற்றுகிறது. வாழ்க்கை எனும் முடிவில்லா வட்டத்தை ஒரு ரங்க ராட்டினம் போல சுற்றி விட்டு வேடிக்கை காட்டுகிறது.
City of God இன் மற்றுமொர் முக்கியமான விஷயம் வன்முறை.  வன்முறை நம்மை சுற்றி பிணைந்து நெளிகிறது.  பொதுவாய் வன்முறையை ஒரு style , status போல காண்பிக்கும் படங்கள் எனக்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த படம் ஒரு விதிவிலக்கு. என்னையும் தாண்டி அதன் அழகியல் எனக்கு பிடித்திருந்தது. படம் மானுடத்தின் எண்ணிலடங்கா மனக்கூறுகளை, வாழ்வின் அபத்தத்தை, இச்சைகளின் நடனத்தை, வன்முறையின் வழியில் முன்வைக்கிறது.


இந்த எல்லாவற்றையும் விட ‘city of gods' மற்ற எந்த படைப்பையும் விட வேறுபடும் இடம் என்று நான் உணர்வது. குழந்தைகளை அது காண்பித்த முறை. வன்முறைக்காக ஏங்கும் குழந்தைகள் கொலை கொள்ளை,போதை என தங்களையும் தங்கள் பெரியவர்களை போல வார்த்து கொள்கிறார்கள்.  ஆம், பெரும் படைப்புகள் எல்லாம் ஒரு நம்பிக்கையுடன் முடியும். அடுத்த தலைமுறையின் மேல் உள்ள நம்பிக்கையை கோடிடும். ஆனால் ‘city of gods' அதை அழிக்கிறது. அவநம்பிக்கையை முன் வைக்கிறது. இனி குழந்தைகளிடம் பொம்மைகளோ ரோஜாக்களோ கொடுத்து போரடிக்காமல் துப்பாக்கி கொடுத்து ஜாலியாய் கொலை செய்ய பழக்கி விடும் இந்த உலகம் என ரத்தசிவப்பாய் கொடிட்டு அடையாளப்படுத்துகிறது.

திங்கள், 6 செப்டம்பர், 2010

யூத் விகடனில் எனது வலைப்பூ கட்டுரை குட் பிளாக்

என் அடூரின் எலிப்பத்தாயம் குறித்த கட்டுரை யூத் விகடனில் குட் பிளாக் எனும் வகையில் சுட்டியாக (link)  வந்துள்ளது.  மகிழ்ச்சியாய் இருந்தது.
நன்றி விகடன்.

சுட்டி:

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

சனி, 4 செப்டம்பர், 2010

மருது சகோதரர்கள் - ஒரு ஆவணம் (காலச்சுவடு)

மருது சகோதரர்கள் குறித்த ஆவணம் ஒன்றை ஆகஸ்டு காலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் (புலி நகக் கொன்றை ஆசிரியர்) முன்வைத்துள்ளார். இதில் மருதுவின் வீர்ம், அவர் மற்றும் அவரது உறவினர் (ஆண் குழந்தைகள் முதற்கொண்டு)எல்லாரும் தூக்கில் இடப்பட்டது, அவரது விதவைகள் சிவகங்கை ஜமீந்தாருக்கு அடிமைகள் ஆக்கப்பட்டது  எல்லாம் குறிப்பிடப்படுள்ளது. அவரே குறிப்பிட்டது போல ஆவணத்தின் நம்பகத்தன்மை சரித்திர ஆதாரமாக கொள்ள தடையாக இருக்கிறது. எழுதிய ஆசிரியருக்கு இந்த புத்தகத்தால் பெரிய லாபம் ஏதும் இல்லாததால் இதில்  நிச்சயம் உண்மைகள் கணிசமான சதவிகிதம் இருக்கும் எனவே நம்புகிறேன். வரலாறு என்பதே இப்படி துண்டுகளாக தொகுப்பாவது தானே.

சுட்டி :
http://kalachuvadu.com/issue-128/page52.asp

http://books.google.co.in/books?id=Z3QIAAAAQAAJ&pg=PA1&lpg=PA1&dq=Mahradu+%E2%80%93+An+Indian+Story+of+the+Beginning+of+the+Nineteenth+Century&source=bl&ots=LdDm9thNnS&sig=B3NQ9YTZkyj0g7nUCiHiAal3Wc8&hl=en&ei=mryBTJ6hL4vRcYiEnagL&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CCwQ6AEwBTgK#v=onepage&q&f=false

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எஸ்.ராமகிருஷ்ணனின் பதில் கடிதம்

எனது யாமம் நாவல் விமர்சனத்தை எஸ்.ரா அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.பதில் எழுதி இருந்தார். சந்தோஷமாய் இருந்தது. :-)
பதில் கீழே.



”ஆழ்ந்து எழுதப்பட்ட விமர்சன்ம், நன்றாக உள்ளது, 
 
நாவல் ஒரு சேர்ந்திசை போன்றது, அதில் பல்வேறு இசைக்கருவிகள் பல்வேறு நிலைகளில் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருக்கும், மௌனமும் அதில் இசையே, சதாசிவ பண்டாரம் இந்த சேர்ந்திசையின் ஒற்றை புல்லாங்குழல்,
 
மற்றபடி பண்டாரங்களும் சாமியார்களும் ஜெமோவிற்கு மட்டுமே குத்தகை தரப்பட்டவர்களில்லை, யார் வேண்டுமானாலும் எழுதலாம் தானே,
 
உங்கள் அன்பு
 
எஸ்ரா,”

இரவுக்கு ஆயிரம் கண்கள்-- ( எஸ்.ராமகிருஷ்ணனின் - யாமம் )

”கிராமத்தில் உள்ள வீடுகளில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் சுடர்கள் இரவில் மக்கள் உறங்க துவங்கிய பிறகு யாவும் தனியே ஒரு இடத்தில் ஒன்று கூடுகின்றன ..அவை அந்தந்த வீட்டில் வாழும் மனிதர்களின் அன்றாட செயல்களை ,கோபதாபங்களை பகிர்ந்து கொண்டுவிட்டு இருட்டில் மறைந்துவிடுகின்றன ”எஸ்.ரா யாமம் முன்னுரையில்

எஸ். ராவின் யாமம் நாவல் குறித்து படித்தது முதலே எழுத வேண்டும் என்ற எண்ணம். இப்போது தான் எழுதுகிறேன்.

தமிழின் இந்த தலைமுறை முதன்மை படைப்பாளியாக நான் கருதும் எஸ்.ராவின் சமீபத்திய நாவல் யாமம் (2007).

யாமம் என்பது மிக ரகசியமான பொழுது. எஸ்.ரா கூறுவது போல மனிதன் தூங்கும் வேளையில் தான் அவனது கதைகள் வெளியே அலைகின்றன. மனிதர்கள் எல்லாருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். நறுமணம் போல காற்றில் கலைவது தான் மனிதர்கள் வாழ்க்கையும்.
 
இரவின் சுகந்தத்தை அத்தராக வடிக்க கற்ற ஒரு வம்சாவளி. ஒரு சுஃபி ஞானியின் அருளுடன் அவர்கள் வழி வழியாக இத்தொழிலை செய்து வருகிறார்கள். இந்த அத்தரின் பெயர் ‘யாமம்’.

மதராப்பட்டிணத்தின் சரித்திர பிண்ணனியுடன் ஆரம்பிக்கும் நாவல், அந்த நகரத்தின் சின்ன சின்ன சந்துகளான  கதைகளில் அலைகிறது. (நகரம் சுமக்கும் கதைகள் மீது எஸ்.ராவிற்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு) . பின்னிப் பிணையும் இந்த கதைகளில் மைய சரடு, எல்லா பேரிலக்கியங்களும் வியக்கும் பெரு மானுடத்தின் ஒட்டு மொத்த இயக்கம் குறித்த அளவிலா வியப்பும், அந்த சமுத்திரத்தின்  ஆர்பரிக்கும் அலைகள் மீண்டு சமுத்திரத்திற்க்கே சென்று விடுவதும் பின் மீண்டும்  வேறொரு நீர்த் தொகுப்பாகி பிரிதொரு அலையாகி விடுவதும் என முடிவில்லாமல் சுழலும் ஒரு அமைப்பை காட்சிப்படுத்த முயலுவதும் தான்.

அத்தர் தயாரிக்கும் கரீம் சூதில் நாட்டம் கொண்டு வீடு விட்டு வெளியேறுகிறான்.  அவனது மனைவிகள் அவனில்லாமல் வாழ்க்கையை தனித்து ஓட்ட, கடைசியில் வாழ்க்கையின் அழுத்தும் சுமையை இறக்க முடியாமல் அவர்கள் தத்தம் வழியில் பிரிந்து செல்கிறார்கள்.  கரீமின் மூன்றாம் மனைவி வெறுமனே காலத்தின் பழைய நினைவுகளுடன் அந்த இடிபாடான  அத்தர் தயாரிப்பு சாலையை பிரயோஜனமற்றுப் பார்க்கிறாள் . பரம்பரை பரம்பரையாக இரவின் சுகந்தத்தை வடித்தவர்கள் சுவடில்லாமல் காற்றில் கரைகிறார்கள்.

பத்ரகிரி-விசாலம் குடும்பம்; அவனது தம்பி திருச்சிற்றம்பலம்- மனைவி தையல். திருசிற்றம்பலம் படிப்பிற்க்காக லண்டன் செல்கிறான். தம்பிக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பத்ரகிரி மெல்ல தையலிடம் விருப்பம் கொள்கிறான். இருவருக்கும் நிகழும் காமத்தின் பரிமளம் தையலின் நோயால் மெல்ல மறைகிறது.
லண்டன் செல்லும் சிற்றம்பலத்தின் தோழன் சற்குணம் லண்டனை போகத்த்டன் சுகிக்க வருகிறான். போகத்தை முழுமையாய் சுகிக்கும் அவன் லண்டனின் மற்றொரு பக்கம் தெரியும் போது அதை முழுமையாய் வெறுத்து அந்த மாநகரத்திற்க்கு எதிராய் ஒற்றையாய் சீறுகிறான்.

திருசிற்றம்பலம் தன் படிப்பை முடித்து கணித யந்திர கண்டுபிடிப்பிற்க்கான சாதனையின் பெருமையுடன் ஊர் திரும்பும் போது அவன் முகத்தில் அறைவது சிதறுண்ட அவன் குடும்ப நிலை.

தன்  பங்கு சொத்திற்க்காக  கோர்ட்டிற்க்கு அலையும் கிருஷ்ணப்பா , எலிசபெத் என்னும் ஆங்கிலோ-இந்திய பெண்ணின் மீது உள்ள காமத்தால் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். ஒரு சுயநல ஒப்பந்தமாக ஆரம்பிக்கும் அவர்கள் உறவு அவர்கள் வாழும் மலையின் அமைதியில் மெல்ல ஆழம் கூடிக் கொள்கிறது. வாழ்க்கையின் அர்த்தம் அதன் எளிமையில் உள்ளது என ஏதோ ஒரு கணத்தில் உணரும் கிருஷ்ணப்பா தன் சொத்துக்களை புறந்தள்ளி மலையில் தன் பிரிய எலிசபெத்துடம் வாழ்கிறார். மலையின் தேயிலை தோடத்தில் வருமானம் வருகிறது. எலிசபெத் லண்டன் பார்த்து வர ஆசைப்படுகிறாள். திரும்பி வந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவளை அனுப்பி வைக்கிறார். அவளும் அதற்க்கு உட்பட்டே செல்கிறாள். ஆனால் அவர்களது மலை விரைவில் தேயிலை வியாபரிகளின் விளைநிலமாகிவிடும் என குறிப்புடன் இந்த கதையும் முடிவுக்கு வருகிறது.

எல்லாக் கதைகளுமே கால நதி அடித்து செல்லும் திசையெல்லாம் முட்டி மோதி பின் எங்கோ யாரும் யூகிக்கா மூலையில் கரை ஒதுங்குகின்றன.
நாவல் முடியும் போது வாழ்க்கை குறித்த நம்பிக்கை தோன்றுவதில்லை. அதன் அர்த்தமின்மை குறித்த அபத்தமே தொங்கிக் கொண்டிருக்கிறது. அலையும் வாழ்க்கையின் அகத்தைஒன்றோடு ஒன்று முட்டி மோதும்  புறவயமான நிகழ்வுகள் கட்டமைக்கிறதா அல்லது புறத்தே நிகழும் சம்பவங்களும் சரித்திரமும் அகத்தின் எண்ணிலடங்கா உள்மடிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறதா  எனும் பதிலற்ற கேள்வியின் அனுபவத்தை தன் ஒவ்வொரு பக்கத்திலும் கொண்டிருக்கிறது யாமம் நாவல்.
ஆனாலும்  என் அனுபவத்தில் சில இடறுகளும் உண்டு. எஸ்.ராவின் நெடுங்குருதியில் வெயிலின் தகிப்பை உணர்ந்தது போல இன்நாவலில் இர்வின் ரகசியம் ஒரு படிமமாக என்னை எல்லாக் கணத்திலும் பின் தொடரவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாய யதார்த்ததிற்க்குள் (magical realism) புகுந்து விடக்கூடிய பரப்பு கொண்ட நாவல்.; ஆனாலும் சுஃபி ஞானியின் பகுதிகளில் மட்டுமே கொஞ்சமாய் சென்று விட்டு மீண்டுவிடுகிறது. இது படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும் இத்தனை விரிவான நாவலின் பரப்பு  மேலும் அகழப்பட்டிருக்கும் என்பது என் ஆதங்கம். பின் அந்த பண்டாரத்தின் கதை. சட்டென ஜெமோவின் நாவலுக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு. கதையின் மைய சரடு சராசரிகள் வாழ்க்கையின் கூட்டியக்கமாக இருக்கும் போது சதாசிவப் பண்டாரம் ஒரு விடுபடல் (exception)  போல வருகிறார். எஸ்.ரா ஆரம்பத்தில் ‘இந்தியாவில் சாமியாராகாமல் இருந்தால் தான் அதிசயம்’ என்று பண்டார வாழ்க்கையும் சம்சார வாழ்க்கை போல சமூகத்தின் ஒரு கூறே என குறிப்புணர்த்தினாலும் எனக்கு இக்கதை ஒட்டாமலே போகிறது கடைசிவரை.
மேலும் எஸ்.ராவின் படிமங்களும் உருவகங்களும் ஒரு வித மாதிரித்தன்மையை (template) பெற்றுவிட்டனவோ எனத் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.
குறைகளாகத் தோன்றிய இவை எல்லாமே நாவல் தரும் ஒரு முழு அனுபவத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் போகின்றன. தமிழின் முக்கிய நாவல்களுல் ஒன்றாக சொல்லக்கூடிய யாமம் இலக்கியத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)


அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில்  இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தேன்.
எலிப்பத்தாயம் என்னை மிகவும் கவர்ந்தது.


படம் ஒரு அண்ணன் மூன்று தங்கைகளை பற்றியது. குறிப்பாக அண்ணன் - இரண்டாம் தங்கை (ராஜம்மை) உறவு கதையில் விஸ்தாரமாக நிகழ்கிறது.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் இவ்விருவரது குணங்களும் கட்டமைக்கப்படுகிறது. இந்த இருவரும் ஒரே வீட்டில் வாழும்  இரு வெவ்வேறு துருவங்கள் என நமக்கு புரிய தொடங்குகிறது. ஆணை மட்டுமே மையப்படுத்திய, அவனது பலவீனங்களை சகித்து, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவனை மீறி செய்ய இயல ஒன்றும் இல்லாமல்,அவன் மட்டுமே உலகம் என கொள்ளும் பெண்கள் நிறைந்த இந்திய குடும்ப சூழலின் துல்லிய ப்ரதிபலிப்புகள்  தான் உன்னி (அண்ணன்) மற்றும் ராஜம்மை.
ஒரு ஆழமான சமூக  விரிவாய்வு செய்யும் அளவு இவ்விரு கதைமாந்தரின் பாத்திரமும் நுணுக்கமான படிமங்களோடு படைக்கப்பட்டுள்ளது.


உன்னி -- உன்னியை போல நிறைய ஆண்களை என் சமூகத்தில் பார்த்துள்ளேன். அவனது இறுக்கமும் அதிகாரமும் வெளிப்படையாய் தெரியும் அவனது சோம்பலையும், கோழைத்தனத்தயும் மறைக்க இயலுவதில்லை. அதற்க்காக அவன் கவலைப்படுவதுமில்லை. சாவகாசமாக பரம்பரை சொத்தின் மூலம் பொழுதை கழிக்கும் அவன், சொகரியங்களுக்காக எந்த நிலையிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுப்பதில்லை; பிரச்சனைகளிலிருந்து நழுவி நழுவி ஓடும் அவனிடம் இருப்பது அவனுக்கான ஆண் ஈகோ மட்டும். தன்னை சார்ந்த பெண்களில் தனக்கு சாதகமான அம்சம் கொண்டவள் ராஜம்மை மட்டுமே என உள்ளூர உணர்ந்த அவன் ஆண் மனம் அவளை தன் காரியங்கள் எல்லாம் செய்யக் கூடிய ஒரு இயந்திரம் போலவே உபயோகிக்கிறான். உன்னியின் பாத்திரம் அவளை வெறும் இயந்திரமாக உபயோகித்தாலும் அவளிடம் உணர்வு சார்ந்த பெருத்த சார்பும் கொண்டதே. தன் உத்தரவுகளை அவளிடம் அலுங்காமல் வெளிப்படுத்தும் அவன், அவளிடம் எல்லா ஆண்களுமே தேடும் தாயின் அரவணைப்பு சொகுசை பெற்றுக் கொள்கிறான். அது அவனை தன் தினசரி வாழ்க்கை அமைப்புக்கு கொஞ்சம் கூட மாறுதல் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லி அவளிடம் அதிகாரம் செய்வதில் தெரிகிறது. ஒரு பசுவை விரட்டுவதில் இருந்து , வெண்ணீர் போட்டு கொடுப்பது வரை அவனக்கு ‘ராஜம்மை ;ராஜம்மை’ மட்டும் தான்.
படம் முழுவதும் தன் தங்கையை தன் சௌகரியங்களுக்காக  ஏவுவதில் அவளிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு சுயநல சிறுவன் போலவே தெரிகிறான்.


ராஜம்மை -- பொறுமை,சகிப்பு, தீராத பணி, குடும்ப சுமை என தன்னை பற்றியே யோசிக்காத அல்லது யோசிக்க இடம் தரப்படாத பெண் தான் ராஜம்மை. காலையில் இருந்து இர்ரவு வரை அவள் செய்ய வேண்டியது எல்லாம் தன் அண்ணனுக்காக, தன் தங்கைக்காக. ஆனாலும் அவள் அதற்க்காக குறைப்பட்டுக்கொள்வதில்லை. ஒரு இடத்தில் கூட யாரிடமும் கடிந்தோ, குறை சொல்லியோ பேசுவதில்லை. வரிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த குறையும் சொல்லாமல் எத்தனை பெண்கள் இந்திய குடும்பங்களில் (நடுத்தர குடும்பங்களில் பொதுவாக)  தங்கள் புதிரற்ற மௌனத்தால் நாட்களை கடத்துகிறார்கள் என்பதற்கு ராஜம்மை ஒரு வகை மாதிரி. ஆனால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுதுவது அவர்களின் மௌனம் அல்ல. அவர்கள் குறையின்றி தங்கள் கடமையாகவே ஆண்களுக்கு பணி செய்கிறார்கள். தனக்கான மனதை அவர்கள் கிட்டதட்ட மறந்தே விடுகிறார்கள். ஆனால் ராஜம்மை ஒரு கட்டத்தில் தன் சகிப்புத்தன்மையை உடைக்கிறாள். ‘எத்தனை நாள் இந்த நரகம்’ என தன் அண்ணனிடம் கேட்கிறாள். இது வெற்றுக் குறீயிடு மட்டுமே. நம் இந்திய ராஜம்மைகளுக்கு  நிச்சயம் விதிக்கப்பட்டவைகளை தாண்டி கேள்வி கேட்டலும் கூட அது வெற்று மன ஆறுதலுக்காக மட்டுமே எனத் தெரியும். குடும்ப சட்டகத்திற்க்குள் அகப்பட்ட எலிகளாய் அடூர் அவர்களை உருவகப்படுத்துகிறார்.
ஆனால் கதை இதோடு முடிவதில்லை. ராஜம்மையின் சாவிற்க்கு பிறகு பயந்து வெளிறும் உன்னியும் ஒரு எலி தான். ஆணின் அடக்குதல் பெண்ணின் அடங்குதல் இரண்டுமே ஒரு வித ஒப்பந்தமே. அடக்குதல் மூலம் தன் பலவீனங்களை மறைக்கும் ஆண், அடங்குதல் மூலம் ஆணை திருப்திபடுத்தி தனக்கானவனாய் அவனை உருவாக்கிக் கொள்ளும் பெண் -  என இது ஒரு விளையாட்டோ எனத் தோன்றும். இந்த அடிப்படையில் ராஜம்மை ஒரு எலி என்றால் அவளின்றி தனித்து விடப்படும் உன்னியும் எலி தான். எலிப்பொறி ஆண் தன்முனைப்பா? பெண் சகிப்பா? அல்லது சமூகத்தின் குடும்ப அமைப்பா?
எதுவானாலும் எல்லா எலிகளும் ஆசைப்பட்டு பொறிக்குள் தானாகவே சென்று விழுகின்றன என்பது தான் உண்மை.

படம் ராஜம்மையின் மரணம் பின் உன்னி பித்தாகி ஒரு இரவில்  கள்ளர்களால் துரத்தப்படுவதோடு முடிகிறது. தப்பி வெளியே ஓடும்  மூன்றாவது தங்கை , சொத்தில் பங்கு கேட்க்கும் முதல் தங்கை இவ்விருவரும் கதையின் மையமாகிய உன்னி-ராஜம்மை பாத்திர வடிவமைப்பிற்க்கு ஒரு பங்கு மட்டுமே. பெரிதாய் எதுவும் சொல்ல அவர்களிடம் இல்லை.

அடூரின் இந்த படம் ஒரு நாவல் போலவே எனக்கு அனுபவம் தந்தது.
காட்சிகளிம் ஊடாகவோ, சம்பவங்களின் ஊடாகவோ நிகழாமல் ,கதை மாந்தரின் வகை மாதிரித் தன்மை (prototype) மூலம் முழுமையடயும் இந்த படம் நிச்சயம் உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று என என்னால் சொல்ல முடியும்.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

காசு.. காசு... காசு... (சுவிஸ் பேங்க் பாலன்ஸ்- பயனர் பெயர்- இந்தியா)

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் எனது இன்பாக்ஸில் வந்தது. ஃபார்வார்ட் செய்யப்பட்ட கிட்டத்தட்ட ஸ்பாம் அஞ்சல் அது. ஆனாலும் இந்தியா ஸ்விஸ் வங்கி வைப்பில் முதலிடல் வகிப்பதாக குற்றசாட்டு.
செய்தியில் கவரப்பட்டு அந்த மெயிலில் உள்ளது எந்த அளவு உட்டாலக்கடி என தெரிந்து கொள்ள கூகிளினேன். நமது தாய்திருநாட்டின் லட்சனங்கள் தெரிந்த எல்லா ஜனங்களில் அடியேனும் ஒரு பரிதாப ஜனம் தான் என்றாலும்  ’swiss bank black money india'  என்பதான தேடு பதங்களில் கூகிள் கொட்டிய செய்திகளில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அதிர்ச்சி தான்.



சில செய்திகள் :
1) இரண்டு வருடம் முன்னால் வந்த செய்திகளின் படி இந்தியா சுவிஸ் பேங்க்கில் பணம் வைத்திருக்கும் நாடுகளில் முன்னணி வகிக்கிறது.
2) ஆவரேஜாக 2002-6 இல் இந்திய பணம் 136,466 கோடி இந்திய பணம் சுவிஸ் பாங்கில் முடங்கியிருக்கிறது. இந்த கணக்கில் தற்போது 692,328 (!!!!!) கோடி முடங்கி இருக்கக் கூடும். 
3) 2002 க்கு முன்னால் எவ்வளவு பணம் என தெரியாது. (வெறும் பத்து வருடக்கணக்கு இவ்வளவு என்றால் 40 வருடகணக்கு??) கிட்டத்தட்ட எல்லாம் சேர்த்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் 71 லட்சம் கோடி (இதுக்கு எத்தினி சைபர்னு சொன்னா சூரியம் எஃப்.எம் ல உங்குளுக்கு புடிச்ச பாட்டெல்லாம் போட மாட்டங்க) 
4) ஸ்விஸ் பேங்க் போல கருப்பு பணம் ஏற்க்கும் பேங்குகள் இன்னும் கிட்டதட்ட 40 உலகில் உள்ளதாம். இங்கெல்லாம் கூட இந்தியா முன்னணி வகிக்கலாம்.
5) இந்தியா போட்டிருக்கும் இந்த பணம் உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளின் மொத்த கணக்கை விட அதிகம் (!) என நமது முன்னாள் கவர்னர் பி.சி. அலெக்ஸாண்டர் கூறுகிறார். 
6)2009 இல் யூ.எஸ் மற்ற பிற நாடுகளின் கோரிக்கை படி ஸ்விஸ் பேங்க் தனது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் கணக்குகளை தேவையின் போது வெளியிடும் என சொல்லி உள்ளது. இதை சமீபத்தில் இந்தியாவிற்க்கும் இந்த சேவையை இரக்க மனம் கொண்டு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது* (*Conditions Apply) ஆனால் இது வரை இந்தியா எதயாவது கேட்டதா. பேங்க் எதயாவது வழங்கியதா என தீபிக்கா படுகோனேவின் சமிபத்திய பார்ட்டி, எந்திரனின் மிக சமிபத்திய ஸ்டில்ஸ் இவற்றுக்காக மிக பிஸியாய் இருக்கும் நமது நிருபர்கள், டீ டைமில் சும்மங்காட்டிக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 


பின்குறிப்பு -- நேற்றுக் கூட எங்கள் கம்பெனிக்கு முன்னால் இருக்கும் மேம்பாலத்திற்க்கு அடியில் வசிக்கும் சில குடும்பத்தின் குழந்தைகள் சிரித்து கொண்டு தான் இருந்தன. வறுமை எல்லாம் நமக்கு ஒரு பிரச்னையா என்ன? 



சுட்டிகள்:
 http://election.rediff.com/interview/2009/mar/31/inter-swiss-black-money-can-take-india-to-the-top.htm

http://www.asianage.com/columnists/india-road-failure-241

http://ibnlive.in.com/news/swiss-banks-ready-to-help-india-trace-black-money/103530-7.Publish Post.html 


http://www.expressindia.com/latest-news/Swiss-banks-offer-to-tax-Indian-clients/522085/



ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

கிம் கி டுக் - இன் ’மூச்சு’ (The Breath).

கிம்  கி டுக் -  இன்  ’மூச்சு’ (The Breath).



கொரிய மொழி இயக்குநரான கிம் கி டுக் (Spring,Summer,Fall,winter.. and Spring படத்தின் இயக்குநர்) இயக்கிய ‘The Breath' படம் பார்த்தேன். அழகான படம்.
படத்தின் அழகு அதன் மௌனத்தில் இருந்த்தது. அதிகம் வசனங்கள் இல்லாமல் கிம்மின் முத்திரைகளோடு.
ஒன்றேகால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை சொல்கிறார். கணவனின் தகாத உறவு பற்றி அறியும் பெண் மரணதண்டனை கைதி ஒருவனுடன் கொள்ளும் காதல் தான் கதையின் மையச் சரடு. கணவன் - மனைவி, கைதி- காதலி, கைதி- சக கைதி என மூன்று காதல்கள். உரசல்,பொறாமை, கோபம், வருத்தம், வன்முறை என உறவுகளின் பல பரிணாமங்களோடு ஒரு மாலை நேரக் கவிதையின் போதையோடு கதை மெள்ள நகர்கிறது.

தற்கொலைக்கு பல முறை முயலும் மரணதண்டணைக் கைதியிடம் காதல் கொள்ளும் பெண் அவனை மகிழ்ச்சி கொள்ள செய்வதற்க்காக  ஒவ்வொரு முறை அவனை சந்திக்கும் போதும்,சந்திக்கும் அறையை  ஒரு பருவகாலத்தினை அடையாளப்படுத்தும் வகையில் அலங்கரிக்கிறாள்.  அந்த பருவகாலத்திற்க்கு ஏற்றாற் போல் உடை அணிகிறாள். அந்த பருவ காலத்திற்கு ஏற்ற பாடல்களை பாடுகிறாள்.

அவனுடன் தனக்குள்ள உறவை கற்பனையான பருவ மாற்றங்களோடு கழிக்கும் அவள் அந்த உறவை வேக வேகமாக முடித்து கொண்டு,தன் குடும்ப வாழ்க்கைக்கு திரும்புகிறாள்.
எத்தனை சுயநலமானவை உறவுகள். ஆனாலும் உறவுகளின் அழகே அவற்றின் சுயநலம் தான். தன்னை விட்டு செல்லும் எங்கிருந்தோ வந்த உறவு அதன் பிரிவிக்கான நியாயங்களை அவனிடம் உணர்த்தி விட்டு செல்வதாக தான் நான் நினைக்கிறேன்.
ஆனால் பிரிவில் நியாய தர்மங்கள் இல்லை. அது தரும் வலிக்கு அவை புரிவதும் இல்லை.

தன் சக கைதியின் காதல் கலந்த நட்ப்பை தன் புதிய காதலிக்காக  ஒதுக்கும் போது  ஒரு பழைய உறவு வெறி கொள்கிறது. அவனை இறுதியில் கழுத்தை நெறித்து கொல்கிறது.
கொலை ஒருவனுக்கு ஆறுதல் என்றால் கொல்லப்படுதல் மற்றொருவனுக்கு ஆறுதல்.

என் மனதில் அதிகம் பதியாத உறவு கணவன் நாயகியிடம் கொண்டிருக்கும் அசட்டையும், பின் உணர்ந்து தன் தகாத உறவை முறித்து கொள்வதும் தான். அவனது மற்றைய  உறவு பலமற்று காட்டப் படுகிறது (கதை அந்த உறவினை காட்சிபடுத்த தேவை இல்லை என கிம் நினைத்து இருக்கலாம்). அதே போல அந்த ஜெயிலரின் சபலம் கூட ஏதோ கதையில் ஒட்டுப் போட்டு தைத்தது போல நிகழ்கிறது. கதையின் ஆத்மாவிற்கு எந்த வகையிலும் தேவை இல்லாத சேற்க்கையாகவே அதைப் பார்க்க முடிகிறது.

 ஆனாலும்குறைகள் பெரிதும் நம்மை சங்கடப்படுத்துபவையில்லை.

இறுதியில், நாயகி தன் கணவனுடன் குளிர் காலத்திற்கான பாடலை  பாடிக் கொண்டிருக்க, அவளது காதலன் சிறையில் கண்ணீருடன் தன் கொலையை ஏற்பதாக முடியும் இந்த படம், கிம்மின் மற்றுமொரு கவிதை.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தமிழ் சினிமா - 50 முக்கிய திரைப்படங்கள் (என் பார்வையில்)

தமிழ் சினிமா தன்  பயணத்தை 1931 இல் இருந்து தொடங்கியது (பேசும் படங்கள்). அன்று முதல் இப்போது வரை சினிமா தான் நம் கலையாக, சமூக சிந்தனையை மாற்றும் சாதனமாக, கனவாக, அரசியலாக, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை எல்லாவற்றிலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிக்க முடியாமல் தன் இருப்பை அசைக்க முடியாமல் செய்துள்ளது. நான் சினிமாவில் இலக்கியம் போல அதிகம் என் கேள்விகளுக்கான பதிலை, நான் விரும்பும் அனுபவத்தை அடைந்ததில்லை. ஆனாலும் என்னையும் மீறி சினிமா என் கனவிலும் சினிமா தான் அதிகம் வந்துள்ளது. உங்களைப் போலவே.

சினிமா ரசிகன் என்ற வரையில் எனக்கு பிடித்த தமிழ் சினிமா என 50 படங்களை வரிசைப்படுத்த தோன்றியது. எனவே தான் இந்த பட்டியல். எனது அனுபவத்தோடு தமிழில் சினிமா அதன் கலை வடிவத்தை எதோ ஒரு வகையில் பூர்த்தி செய்ய முயன்ற படங்கள்,கவனிக்கதக்க படங்கள் மற்றும்  அந்தந்த காலகட்டத்தில் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்க்கு எடுத்து சென்ற படங்களை குறி வைத்து இந்த பட்டியல்.
ரசனை சார்ந்த பட்டியல் என்பதால் இத்தகு பட்டியல்கள் எப்போதும் எல்லாரையும் திருப்திப்படுத்துவதில்லை. ஆனாலும் அது சார்ந்த வசீகரம் எல்லாருக்கும் உண்டு. எனக்கும் உண்டு.

1) மீரா -- 1945
படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சங்கீத முக்கியத்துவத்தை புறந்தள்ளி தமிழ் சினிமாவை பார்க்க முடியாது.
2)சந்திரலேகா -- 1948-- ஹாலிவுட் பாணி பிரம்மாண்டம். இப்போது பார்த்தலும் ’எப்படியா எடுத்தாங்க’ என தோன்றும்
3)பராசக்தி--1952 --திராவிட இயக்கத்தின் பிரச்சாரத்தை வலிமையாய் முன்வைத்த படம்.
4)அவ்வையார் -- 1953-- கே.பி. சுந்தராம்பாள் , பிரம்மாண்டம் இந்த இரண்டும் இப்படத்தின் சரித்திர முக்கியத்துவத்திற்கான காரணம்.
5) அந்த நாள் -- 1954-- குரோசவா வின் ‘ரோஷோமன்’படத்தை தழுவி எடுத்ததாக கூறப்படும் இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய பரிசோதனை முயற்சி.
6) ரத்தக்கண்ணீர் --1954--சமூக அவலங்களை தனி மனித தன்முனைப்பை ராதாவின் பகடி மூலம் வெளிப்படுத்தும் படம்.
7)மதுரை வீரன் -- 1956 -- படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சமூக முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது.
8)சிவகங்கை சீமை -- மருது சகோதரர்கள் பற்றிய படம். film noir எனும் வகையை எங்கங்கே தொடுகிறதோ என தோன்றும். கமலாவின் நடனம், இசை, துயரம் என பல எல்லைகளில் நிரூபிக்க முயன்று பெருமளவில் கவனம் பெறாமல் போனது. காரணம் வீரபாண்டிய கட்டபொம்மன் அதே வருடம் வந்ததே. கட்டபொம்மனுக்கு கிடைத்த cult status இப்படத்திற்கும் கிடைக்காதது வருத்தம். என் தட்டில் வைத்தால் கட்டபொம்மனை விட இதை சிறந்த படமாக கூறுவேன்.
9) பாசமலர் -- 1961-- படத்தின் அதிநாடகத்தன்மையை மீறி உறவு சிக்கல்களை தமிழ் சூழலில் அழுத்தமாய் சொன்ன படம்.
10)நெஞ்சில் ஓர் ஆலயம் -- 1962 -- தமிழ் சினிமாவிற்கு வேறு பரிமாணத்தை கொடுத்த படம். மூன்றே கதை மாந்தர்கள், ஒரு கதைக்க்களம், சிறுகதை போன்ற திரைக்கதை.
11) கர்ணன் -- 1964-- மகாபாரத கதை மாந்தரில் முக்கிய ஆளுமை கர்ணன் பற்றிய காவிய நடை கொண்ட படம்.
12) காதலிக்க நேரமில்லை -- 1964-- இன்றும் இளமை துள்ளும் மனதிற்க்கு எதோ ஒரு வகையில் நெருக்கம் தரும் நகைச்சுவை படம்.
13) திருவிளையாடல் -- 1966 -- காவிய நடை பக்தியில் இசை நடிப்பு என எல்லாம் பொருந்தி வந்து அதனளவில் முழுமை அடைய முயன்ற படம்.
14) தில்லானா மோகனாம்பாள் -- 1968 -- மூல நூல் படிக்கவில்லை. ஆனாலும் படம் ஒரு நல்ல பழைய கிளாசிக் நாவல் படிக்கும் அனுபவம் தரும்.
15)முஹம்மது பின் துக்ளக் -- 1971-- அரசியல் பகடியில் இன்று வரை தமிழில் இதை மிஞ்சி படம் இல்லை என்பது என் கருத்து.
16) அரங்கேற்றம்-- 1973-- சமூக ஒழுக்க நெறிகள் குறித்து நாடகபாணியில் சாட்டயடியாய் கேள்விகளை எறிந்த படம்.
17) பதினாறு வயதினிலே--1977-- தமிழ் சினிமாவை கிராமத்திற்க்கு அழைத்து வந்த படம். வலுவான திரைக்கதைகாக இன்றும் பேச வைக்க்ம் படம்.

18) அழியாத கோலங்கள் -- 1979 -- நாடகத்தன்மை இல்லாமல்  விடலை பருவ கனவுகளை சொன்ன படம்.
19) பசி -- 1979 -- படம் பார்க்கவில்லை; ஆனாலும் சமூக அக்கறையில் தட்டிக்கழிக்க முடியாத படமாகிறது.
20)உதிரிப்பூக்கள் --1979-- வசனங்கள் குறைந்த அமைதியில் கூட தீயாய் சுட முடியும் என domestic violence குறித்து வந்த முக்கியமானபடம்.
21) நண்டு-- 1981-- நெடு நாள் முன் பார்த்தது. சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொல்ல்ம் படம்.
22) தில்லு முல்லு -- 1981-- எத்தனை முறை பார்த்தாலு சலிக்காமல் சிரிக்க வைக்கும் படம்.
23) சலங்கை ஒலி-- 1983-- மறக்க முடியாத இசை, வலுவான திரைக்கதை.
24)ஆண்பாவம் -- 1985 -- இயல்பான மிக எளிமையான நகைச்சுவை மூலம் மற்ற பல படங்களை தாண்டி செல்லும் படம்.
25) சிந்து பைரவி -- 1985 -- விடுகதை போல் உறவு சிக்கல்களில் விளையாடும் படம். மறக்க முடியாத இசை.
26) சம்சாரம் அது மின்சாரம்--1986 -- மேடை நாடகபாணி படமென்றாலும், நல்ல திரைக்கதை மூலம் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்காத படம்.
27)நாயகன் -- 1987-- Godfather தழுவலாய் கூறப்படும் நாயகன், வேறுபட்ட  கதைக்களம், கதை மாந்தர் மூலம் கவனத்தை பெரிதும் ஈர்த்த படம்.
28) வேதம் புதிது -- 1987 -- முக்கியமான சமூக கேள்விகளை வீசி எறிந்த படம்.
29) வீடு-- 1987-- நடுத்தட்டு மக்களின் கனவுகளையும் அது எவ்வளவு சாதரணமாக வீசி எறியப்படக்கூடும் என்பதையும் அழுத்தமாய் சொன்ன படம்.
30) சந்தியா ராகம் -- 1989-- தியேட்டரில் ரிலீஸானதா என்று கூடஎனக்கு  தெரியாது. ஆனாலும் யதார்த்த பாணி நடுத்தர மக்கள் பிரச்னையை சொன்ன முக்கியமான படம். அசோகமித்திரன் சிறுகதை படித்த உணர்வு ஏற்படுத்திய படம்.
31) வருஷம் 16--1989-- ஒரு அழகான குடும்பம் உறவு சிக்கல்களால் சிதறுவதை வலுவான திரைக்கதை மூலம் சொன்ன படம்.
32) ஒரு வீடு இரு வாசல் -- 1990-- அனுராதா ரமணனின் சிறுகதையின் திரைப்பட ஆக்கம். கதை சொல்லலில் இரு கதைகளை ஒரு கோட்டில் கட்டும் யுத்தியை கையாண்ட படம்.
33)ரோஜா -- 1992-- இந்திய அளவில் கவனம் ஈர்த்த படம். கதை களம், புது வகை இசை என தமிழ் சினிமாவின் முக்கிய முயற்சி.
34) கருத்தம்மா--1994--பெண் சிசுக் கொலை பிரச்னையை பிரச்சார நெடி இல்லாமல் நல்ல திரைக்கதை மூலம் சொன்ன படம்.
35) இருவர் --1996 -- தமிழின் மிக குறைவான அரசியல் வரலாற்றுப் படங்களுல் ஒன்று. திரைக்கதையில் இன்னும் தெளிவு இருந்திருந்தால் மிக சிறப்பான படமாகி இருக்கும்.
36) ஹே ராம்-- 2000- கோட்சேவின் உளவியல், காந்தியின் விமர்சனம் பற்றிய கதையை  சில புதிய சினிமா உத்திகளோடு சொன்ன படம்.
37) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் -- 2000-- தமிழ் கதை முறையில் ‘sense and sensibility' நாவலின் திரைப்பட ஆக்கம்.
38) பாரதி-- 2000 -- தமிழின் முக்கிய கவிஞரான பாரதியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
39)அழகி-- 2002-- வாழ்க்கை எங்கு சென்றாலும் முள்ளாய் அப்பபோது தைக்கும் முதல் காதலை மையமாய் கொண்ட படம்.
40) கன்னத்தில் முத்தமிட்டால்-2002-- ஈழ பிரச்னையை கையாண்ட  மிக சொற்ப படங்களுல் ஒன்று.
41) அன்பே சிவம் -- 2003 -- Planes Trains and Automobiles படத்தை போல் கதைப்போக்கு கொண்ட படம். மனிதாபிமானம்,மதம், கமியூனிசம் இவற்றோடு விவாதம் நிகழ்த்தும் படம்.
42) இயற்கை-- 2003-- நெய்தல் நிலத்தில் நிகழும் கதை. ஒரு சங்கப்பாடலை போல, ஒரு பழைய classic novel போல கதை சொன்ன படம்.
43)காதல்-- 2004-- யதார்த்த பாணியில் காதல் அது சார்ந்த சமூக சிக்கல்களை காட்டிய படம்.
44) விருமாண்டி -- 2004 -- தூக்கு தண்டனை குறித்த விமர்சனம் கொண்ட படம். ஒரு சம்பவம் ஒவ்வொருவர் நோக்கில் வேறுபட்ட சித்திரங்களாய் பதிவதை கதை சொல்லும் முறையாகக் கொண்டது.
45) ஆட்டோகிராஃப் --2004-- காதல் வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் நிகழக்கூடும் என்பதை மையமாக்கிய படம்.
45)புதுப்பேட்டை-- 2006 -- 'City of Gods' படத்தின் சாயல் கொண்டகூலிப்படை வாழ்க்கையை கதைக்களமாய் கொண்ட படம்.
46) வெயில் --   2006 --  வீடுகளில் நிகழும் வன்முறை ஒருவனது வாழ்க்கையை சிதறடிக்கும் கதை.
47)இம்சை அரசன் 23ஆம் புலிகேசி -- 2006 -- காமிக்ஸ் கதை முறையில் சரித்திர கதை. சமகால அரசியலை நகைச்சுவையில் விமர்சனம் செய்த படம்.
48) சுப்ரமணியபுரம் -- 2008-- உறவுகளை  துரோகத்தின், சந்தர்ப்பத்தின் கூரிய கத்தி குத்தி கிழிப்பதை சொல்லும் படம்.
49) ஈரம் -- 2009 -- தமிழில் வந்த பேய்ப்படங்களில் நல்ல திரைக்கதையுடன் வந்த ஒரே படம்.
50)  நான் கடவுள் -- 2009--  ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலின் சாயலுடன் வந்த படம். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட,கவனிக்கப்படாத  உலகத்தை காட்டிய படம்.

பின்னிணைப்பு -- இதில் நான் பட்டியலில் இருந்து 50 படங்கள் என்று குறுக்கிக் கொண்டதால்  நீக்கிய படங்களும் உண்டு ;

சபாபதி (1941),மிஸியம்மா (1955),வீரபாண்டியக்கட்டபொம்மன் (1959),தேன் நிலவு (1961),ஆயிரத்தில் ஒருவன் (1965), பாமா விஜயம் (1967),ஞான ஒளி ( 1972), உயர்ந்த மனிதன் (1968),அவள் ஒரு தொடர்கதை (1974),அவள் அப்படித்தான் (1978), நிழல் நிஜமாகிறது ( 1978), கன்னிப் பருவத்திலே (1979), இன்று போய் நாளை வா ( 1981),மண்வாசனை (1983),முந்தானை முடிச்சு (1983),புரியாத புதிர் (1990),மகளிர் மட்டும்(1994),கற்றது தமிழ்(2007),பசங்க(2009) , ஆயிரத்தில் ஒருவன் (2010)

இன்னும் பார்க்காததால் சேர்க்காத படங்களும் சில  உண்டு.

வெள்ளி, 9 ஜூலை, 2010

ராவணனும் குறுந்தொகையும்

 குறுந்தொகை பாடல் ஒன்றுக்கு ஷோபனாவின் நடனம். ராவணனாக ஷோபனா சிதைக்கும் தன் காதல் உணராத சீதை பற்றி கனவு காணும் போது அதற்கு நன்கு பொருந்தி வரும் குறுந்தொகை பாடலுக்கு ஆடுகிறார். 
(சில இடங்களில் பொருளுக்கு தவறாய் அபிநயம் பிடிக்கிறாரோ என்றோரு ஐயம். உ.ம் -- கானம் என்பது காடு என பாடலில் பொருள் படும் போது அவர் காண்பது என்பது போல் அபிநயம் செய்கிறார்) மற்றபடி பாடலில் காதல் ததும்பும் மாலை பற்றிய வரிகளில் பெண்டிருடன் சிருங்காரம் செய்வதும், பின் (சீதை இல்லாவிடில்) உயிர் என்னாகும் என மருகும் வரிகளில் தனித்து சீதை பற்றி கனவுகளில் மூழ்குவதும் என அழகான தமிழ்ப்பாடலுக்கு அழகான நடனம் செய்கிறார். 




மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே.



குறுந்தொகை பாடல் - 319 திணை -- நெய்தல்  பாடியவர் --தாயங்கண்ணனார்.
--
ஆண் மான் பெண் மானைத் தழுவி மயக்கத்தோடு காடின் புதர்களிடயே ஒதுங்கவும், துதிக்கையால் தழுவிக்கொண்ட யானைகள் கருமேகம் சூழ்ந்த மலைகளைச் சேர
மாலை வந்தது பலத்த மழையும் வந்தது. 
என் பொன் மேனியை சிதைத்தவர் இன்னும் வரவில்லை; 
இனி என் உயிர் என்னவாகும் தோழி?

செவ்வாய், 6 ஜூலை, 2010

வேம்பு நிழல் (சிறுகதை)



நேற்று மாலை மாமா இறந்து விட்டிருந்தார். காட்டுக்கு போய் ஆள் கூலி பேசி விட்டு வரும் போது விபத்து நடந்திருக்கிறது. டி.வி.எஸ்ஸில் வரும் போது கூட்டு ரோட்டுக்கு நூறு அடி முன்னால் திருச்சி வண்டி மினி பஸ்ஸை ஸைடெடுக்கும் போது மோதி ஸ்பாட்டிலேயே இறந்து விட்டார்.

மாமா குடும்பத்தோடு பேச்சு வார்த்தை நின்று கிட்டத்தட்ட 4 வருடமாயிற்று. பக்கத்து ஊர் தானென்றாலும் எதிரெதிர் பார்த்தால் கூட பெசுவதில்லை. வாய்க்கால் பாலத்தோடு வைத்து ஒரு முறை ‘ எல்லாமே விட்டுப் போயிடுமா? பகையாளியாவே போயிட்டனா மாப்ளே..’ என்று கண்ணில் நீருடன் கேட்டே விட்டார். நான் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டேன். அம்மாயி சாவுக்கு அவரும் தான் காரணம். அத்தையின் சுடு சொற்களைத் தட்டிக் கேட்க துப்பில்லாத மனுஷன். ஒரு கட்டத்தில் அத்தையின் விஷ வார்த்தைகள் பொறுக்காமல் சுழித்த வாய்க்காலில் விழுந்தாள் அம்மாயி. கொடுமை என்னவென்றால் காலை துணி அலச வந்த வண்ணான் சொல்லித் தான் விஷயமே தெரிந்தது. தண்ணீர் ஊறி உப்பிய அந்த முதிய உடல் இப்போதும் என் கண் முன்னால்.  ஹ்ம்ம்.. அம்மா பலமுறை இங்கே வீட்டிற்கு வரச் சொல்லியும் மாமாவிடமே கடைசி வரை இருந்து உயிரை விட்டாள்.

அத்னால் தான் காலை மணி ஏழாகியும் அவர் சாவுக்கு கூட போகத் தோன்றவில்லை. அம்மா நேற்று இரவே கிளம்பியிருந்தாள். நானும் மெல்ல குளித்து கிளம்பினேன். எட்டு மணிக்கு வர வேண்டிய திண்டல் வண்டி அரை மணி தாமதமாய் வந்தது. வேட்டியை இறுக்கிக் கொண்டு கூட்டத்தில் முண்டினேன். வேர்வை நசநசப்பால் யாரைப் பார்த்தாலும் கோபம் வந்தது. மேக்கூரில் இறங்கி இரண்டு நிமிடம் வேப்பமரத்தடியில் நின்று விட்டு பெட்டிக்கடையில் சின்ன பாட்டில் பெப்ஸி ஒன்றை குடித்தேன். பின் பொறுமையாய் கிழக்காக மாமா வீடு நோக்கி நடந்தேன். வீடு கட்டி எப்படியும் 10 வருடம் மேல் ஆகியிருக்கும். மாமா பார்த்து பார்த்து கட்டிய வீடு. நான் தான் ஹால் டைல்ஸ் கலர் தேர்ந்தெடுத்தேன். தனக்கு பிடித்த கலரே நானும் தேர்ந்தெடுத்ததாக அம்மவிடம்  மாமா சொல்லி சொல்லி மாய்ந்தார்.
வீட்டு வழியில் தாரதப்பட்டை ஆட்கள் மரத்தடியில் கள்ளோ பதனியோ குடித்துக் கொண்டும் பீடி பற்றவைத்துக் கொண்ட்ம் இருந்தார்கள். கோபி சித்தப்பு சாவுக்கு இதே கூட்டம் தான் தப்படித்தது. இழவு விசாரித்த கையோடு என்னை திண்டல் கூட்டிப் போய் செகண்ட் ஹேண்ட் பைக்கிற்க்கு விசாரித்தார். ‘ மாமா, நாளைக்கு பாத்துக்கலாமே’ என்று சொன்ன போது ‘ நாளைக்கு எவன் போறானோ .. சாவுக்காக நாம நிக்கக் கூடாது மாப்ளே. ஒனக்கு இன்னைக்கு தான் லீவு. அட கையோட வேலைய முடிச்சு போட்டா ஆச்சு. இதுக்கினி நாளு கெளமயா  பாக்க முடியும்” என்றார்.
மாமாவோடு பேச்சு வார்த்தை நின்றாலும் அவர் கொடுத்த ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வண்டியில் தான் காலேஜ் போய் வந்து கொண்டிருந்தேன். ஒரு முறை  எதோ கல்யாணத்தில் அதை பற்றி குத்திச் சொன்னதாக பட  பெருந்துறை பட்டறையில் பைக்கை விட்டு இரண்டு வருடமாயிற்று.
மாமா வீடு வந்து சேர்ந்தேன். முன்னால் தென்னம்பந்தல் .  சிறுவன் ஒருவன் எல்லாருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தான். இதற்க்கு முன் மாமா பையன் சிவாவிற்கு பேர் வைக்கும் போது பந்தல் போட்டிருந்தது. காம்பவுண்டு  முன்னால் பவள மல்லி செடி மொத்தமாய் பூத்திருந்தது. அத்தை வைத்த செடியாய் இருக்க வேண்டும். வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் ஹால் ஓரத்தில் மாமா படம் வைத்து விளக்கேற்றி இருந்தார்கள். மின் மயானத்திற்க்கு உடல் எடுத்து கொண்டு போஇவிட்டதாக யாரோ சொன்னார்கள்.
 மாம்வின் படம் சாத்தி வைக்கப் பட்டிருந்த இடத்தில் தான் முன்பு டீ.வி இருந்தது. அப்போது மாமா வீட்டில் மட்டும் தான் டீ.வி. ஒரு கோடை விடுமுறையில் எனக்காக டெர்மினேட்டர் படம் ஈரோட்டில் வீடியோ கடையில் வாங்கி வந்து போட்டு காண்பித்தார். இருவரும் ஒரு சேரப் பார்தோம். அம்மாயி கோழிக்குழம்பும், வறுவலும் செய்திருந்தாள். அம்மாயி வைத்த குழம்பு சாப்பிட்டால் இரவு சாப்பாடு வரை அந்த மணம் விரல்களிலேயே இருக்கும். ஹாலில் எங்குமே அம்மாயி படம் தென்படவில்லை. பூஜை ரூமில் இருக்குமோ? அம்மாயி வைப்பது போல அம்மாவிற்கு கோழி குழம்பு வருவதில்லை.
அம்மா அத்தையருகே உட்கார்ந்திருந்தாள். அவள் கைகளை கோர்த்தபடி . என்னை பார்த்தவுடன் அத்தை கதறினாள். ‘அய்யா.. பாத்தீங்களா.. அநாதையா உட்டுப் போட்டு போய்ட்டாரே.. ரெண்டு நாள் முன்ன கூட உங்கள பத்தி தான் ஒசத்தியா பேசிக்கிடிருந்தாரு. உசுரா இருந்தாரே உங்க மேல..’ என்று கேவினாள். அவள் அழுகையில் பொய்யில்லை. எத்தனை வருடங்களாய் என்னைப் பார்த்தாலே முகம் சுளித்தவள். ‘ரெண்டு புள்ளைகளை இந்த முண்டைகிட்ட உட்டுட்டு போயிட்டாரே’ அப்போது தான் அத்தை சின்ன நீலப் பூக்கள் போட்ட வெள்ளை புடவை கட்டியிருப்பதை பார்த்தேன்.   பையன்களை ஹாலில் காணோம். மெல்ல பெட்ரூமிற்க்குள் எட்டிப் பார்த்தேன். உறவுக்காரர்கள் மத்தியில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். ‘சிவா.. இங்க வாடா..” என்றேன். பெரியவன் வந்தான். கூடவே சின்னவனும். சின்னவன் இன்னும் அழுது கொண்டிருந்தான்.  “சாப்டீங்களா” என்றேன். சிவா இல்லையென தலையாட்டினான். ‘சரி வாங்க” என்றேன். அவன் கொஞ்சம் தயங்கினான். ‘ வாங்கடா’ என்றேன். கெஞ்சலுமில்லாமல் மிரட்டலுமில்லாமல். இருவரும் கோடு பிடித்தாற் போல் பின்னால் வந்தனர். ‘மோகன்,செருப்பு தொடு டா’ என்று சிவா சொன்னவுடன் சின்னவன் அழுகையை நிறுத்து விட்டு செருப்பு போட்டுக் கொண்டு வந்தான். மெல்லிய காற்று.  இருவரையும் கூட்டிக்  கொண்டு இட்லி கடைக்கு வந்தேன். சின்னவன் முகம் அழுகையால் வீங்கியிருந்தது. கர்சீப் எடுத்து அவன் முகம் துடைத்தேன்.
மாமா எனக்கு எப்போதும் இதே கடையில் தான் இட்லியும் குருமாவும் வாங்கித் தருவார்.  ‘எத்தன இட்லி வேணும்? “ கேள்விக்கு சிவ எதுவும் சொல்லவில்லை. ‘மூனு சொல்லட்டா’ என்றேன். “ம்ம்” என்று தலையசைத்தான். இவர்களிருவரிடமும் பேசி கூட வருடங்களாயிற்று. சுடச்சுட இட்லி வந்தது. சிவா கொஞ்சம் வேகமாய் சாப்பிட்டான். மோகன் அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டு சாப்பிட்டான்.  ‘என்ன படிக்குறே? ‘ சிவாவிடம் கேட்டேன். ‘ நான் எய்ட்த்து.. இவன் ஃபிப்த்து’ என்றான் இட்லியை விழுங்கிக் கொண்டே. பெரியவனுக்கு மாமா சாயல் மூக்கு. சாப்பிட்டு முடித்தார்கள். ‘வடை எதுவும் வேணுமா?” என்றேன். வேண்டாம் என்றார்கள் இருவரும். ‘முருக்கு’ என்றான் இளையவன். இருவருக்கும் வாங்கிக் கொடுத்தேன். ‘அம்மா சாப்ப்டுச்சாடா” என்றேன். இருவரும் முழித்தனர்.கடைக்காரரிடம் ‘ஏங்க.. மூணு இட்லி பார்சல் கட்டுங்க” என்றேன். நானும் ஒரு முறுக்கை எடுத்து கடித்துக் கொண்டேன்.

ஞாயிறு, 20 ஜூன், 2010

ராவணன் - கம்பன் எங்கு போனான்?



ராவணன் பார்த்தேன் - பார்த்தேன் என்பதை தவிர்த்து எந்த பெரிய அனுபவப் பகிர்தலும் தரவில்லை.

ராமாயணம் , மகாபாரதம் இந்த இரு இந்திய காவியங்களும் இன்று வரை நம் அறம், கலாச்சாரம், வாழ்வியல் என எல்லாவற்றிலும் பங்கு கொண்டிருப்பவை.
இவை இரண்டுமே ஒட்டு மொத்த பாரதத்தின் மனசாட்சியின் ஒரு கூறு. அதனாலயே இவை மேலும் மேலும் அகழப்படுகின்றன,விவாதம், விமர்சனம், தத்துவ தரிசனம் என இவ்விரு மாபெரும் கதைக்களங்கள் முடிவில்லாமல் இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

அதில் ஒரு மிக வலுவற்ற முயற்சி மணிரத்னத்தின் ராவணன். ராவணனின் நிலையை பற்றி இந்த நவீன யுகத்தில் அவனது நியாயங்களை முன்வைக்கிறது. மனிதர்கள் கருப்பு வெள்ளை இல்லை. அவர்கள் ஒற்றை தலைக்குள் பத்து தலைகள் இருக்கும் என சொல்கிறது.

இதில் நவீன அரசியலும் உள் நுழைந்து நாம் நம்பிக் கொண்டு இருப்பவை எல்லாம் நமக்கு சொல்லித்தரப்படிருப்பவை என எச்சரிக்க முயல்கிறது. நமக்கு ஹீரோக்களாகத் தெரியும் ராணுவம், போலிஸ் மாவோயிஸ்டுகளுக்கு, வீரப்பனுக்கு,பூலான் தேவிக்கு, சில சமூகப் போராளிகளுக்கு, சில ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வில்லன்களாக தெரிகிறார்கள் ஏன்? அவர்கள் பார்வை கோளாறா? நமதா? அல்லது நாம் ஒரு பகுதி உண்மைக்கு மட்டுமே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமா? ராமாயணம் மூலம் முக்கிய சமூக  கேள்விகளை எழுப்ப முயல்கிறது.

ஆனால் சொல்ல வந்த தத்துவத்தில் முழுமை அடையாமல், சொல்லும் மனிதர்களை தட்டையான  கருப்பு வெள்ளை சாயத்தோடு சொல்லி, எந்த வகையிலும் மூலக் காவியத்தை மீள் வாசிக்கும் திறன் இல்லாமல், சமூக கேள்விகளை அறச்சீற்றம் அற்ற சவசவத்தனதுடன், காதலின் தீவிரம் கைகூடாமல் என எந்த வகையிலும் தன்னை உருவாக்கி கொள்ள திராணியற்ற ஒரு திரைப்படமாக உள்ளது ’ராவணன்’.

மற்றபடி காட்டின் ஆன்மாவை காமிரா மட்டுமே உள்வாங்கி கதை தவறவிடுவதால் பயனற்றுப் போகும் அழகியல் குறித்த வருத்தம் , மிக மோசமான வசனங்கள், கேட்டுப் பழகிய இசை-- என திரையரங்கு விட்டு வெளி வந்த அடுத்த வினாடி   ‘ராத்திரிக்கு என்ன டிஃபன், ஷாப்பிங் போக ஆட்டோ பிடிக்கனும் ’ என சட்டென மறைந்து போனது ஒரு பெருங்காவியத்தின் மீள் பதிவு.
-

புதன், 9 ஜூன், 2010

பழைய பரண்-- கவிதை 2.


அலுவலக வேலையாய் இந்தப் பக்கம் வர
எட்டிப் பார்த்து விட்டு சென்றவன்
ரயில் வர தாமதமானதும் என் ஞாபகம் வந்து
காபி குடித்துக் கிளம்பியவன்
கூட்டமொன்று முடிந்து கடைசி பேருந்து விட்டதில்
என் படுக்கையருகில் அயர்ந்து தூங்குபவன்
யாரையும் அழைக்க மறந்தால் வம்பென
பத்திரிக்கை தர வந்தவன்
என யார் யாரோ எது எதற்கோ வர
எனக்காக மட்டுமே வருபவனுக்காக
காத்திருந்து சோர்ந்திருக்கும் முன் வாசல்..

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...