செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கடவுளின் நகரம் (City of God)



நகரங்கள் என்பவை என்ன? அவை வெறும் வாழ்விடங்கள் மட்டும் அல்ல. அவை மனித நாகரிகத்தின் சாட்சி. அவனது ஆசையின் சாட்சியாய் உருக்கொண்டு அவனது தேவைகளை தாண்டிய இச்சைகள் இயங்கும் இடம் தான் நகரம். இச்சைகளுக்கு விதிகள் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் விதிகளே இச்சைகளால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. நியாயங்கள் உருவாக்கி அழித்துக்கொள்ளப் படுகின்றன.

இந்த விதிகள் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும் . அது சென்னை ஆனாலும் சரி, அல்லது ரியோ டி ஜெனிரோ வாக இருந்தாலும் சரி.
'City of God' ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் கதை. இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் கதை. உண்மை கதை அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். முகத்தில் அறைவதை போல பட ஆரம்பம் முதலே அப்படி ஒரு வேகம்.

கதையில் நிறைய கதைகள். நிறைய கதை மாந்தர். ஒரு கதை சொல்லி. இவர்களை இணைப்பது அவர்களின் சேரி. மற்றும் அவர்களது இச்சைகள். முக்கியமான கதைகள்


1) ஷேகி (Shaggy), கூஸ் (Goose),கிளிப்பர் (Clipper) மூவரும் சிறு திருடர்கள். லில் -சே எனும் சிறுவன் ஒரு ஹோட்டலை கொள்ளை அடிக்க செல்லும் போது அவர்களுடன் செல்கிறான். அவர்கள் கொள்ளை அடிக்கும் போது வெளியில் நிற்கும் லில் சே அவர்கள் போன பின் சும்மா தன் சந்தோஷத்திற்க்காக ஹோட்டலில் உள்ள எல்லோரயும் கொன்று குவிக்கிறான். இதனால் மற்ற மூவரும் போலிசால் தேடப்படுகின்றனர். இதில் க்ளிப்பர் சர்ச்சில் சேர்ந்து விடுகிறான். ஷேகி தன் காதலியுடன் அமைதியாய் வாழ செல்லும் போது போலிசால் சுடப்பட்டு சாகிறான். கூஸ் லில் சேயால் கொல்லப்படுகிறான்.



2) வன்முறை மீது தீராத ஆசை கொண்ட லில்-சே, அவனது நண்பன் பென்னி. பென்னி மனிதர்களின் மீது அக்கறை கொண்டவன். அதனாலேயே அவன் எல்லாருக்கும் பிடித்தவன் ஆகிறான். ஒரு கட்டத்திற்க்கு மேல் அவனால் லில்லுடன் கூட்டாய் இருக்க முடியாமல் கிளம்ப யத்தனிக்கிறான். ஆனால் லில்லை கொல்ல வந்த ஒருவன் தவறி பென்னியை கொன்று விடுகிறான். நண்பனின் சாவால் மேலும் வெறி கொள்கிறான். கொலை கற்பழிப்பு,கொள்ளை என தொடர்கிறான்.
3) நாக் ஒட் நெட்- லில்லின் வெறியில் குடும்பத்தை இழக்கும் இந்த பஸ் கண்டக்டர் அவனை பழி வாங்க மனமில்லாமல் எதிர் கும்பலுடன் சேர்கிறான்.  (கேரட் என்ற போதை வியாபாரி)  . அப்பாவிகளை கொல்லக் கூடாது என்ற ஒப்பந்ததுடன் கேரட்டுடன் சேரும் அவன், பின் அவனே அப்பாவிகளை கொல்லும் சூழலுக்கு செல்கிறான்.வெறும் பழி வாங்கும் போட்டியாக ஆரம்பிக்கும் சண்டை பெரும் கோஷ்டி மோதல் ஆகிறது. அந்த குப்பமே பிணங்களாகின்றன.

4) ராக்கெட் - இவன் தான் படத்தின் கதை சொல்லி , கதாநாயகனும் கூட. இவன் கொள்ளை அடிக்க முடியாமல், காதல் செய்ய முடியாமல் பெரும் பாலும் தோல்வி  மட்டுமே சந்திப்பவன். சட்டென ஒரு நாள் அவன் லில்லை  எடுக்கும் புகைப்படங்கள் பேப்பரில் வர அவன் புகைப்படக் கலைஞன் ஆகிறான். லில்லை அவனது சேரி சிறுவர்கள் அவன் கொடுத்த துப்பாக்கிகளால் கொல்வது, நாக் அவுட் நெட் அவன் கும்பல் சிறுவனை காப்பாற்ற போகும் போது அந்த சிறுவனே கொல்வது (நாக் அவுட் நெட் அந்த சிறுவனின் அப்பவை கொன்றதால் பழி வாங்கல்)  இந்த சம்பவங்கள் எல்லாமே உடனுடனெ ஒரு மணி நேரத்திற்க்குள் நடந்து முடிகிறது. இதை எல்லாம் ராக்கெட் புகைப்படம் எடுக்கிறான். இதோடு படம் முடிகிறது. 


படம் முழுதும் மள மள எனக் கதைகள் சொல்லப்படுகின்றன. சிறு திருட்டுக்களாக ஆரம்பித்து அடுத்தடுத்து  தனி மனிதர்களின் ஆசைகளாலும், வெறிகளாலும்  கொள்ளை, போதை வியாபரம், கொலை, பழி வாங்கல் அழித்தொழிப்பு என படிப்படியாக உச்சம் கொள்கிறது  கதை.

வன்முறையின் அகல ஆழங்களை சம்பவங்களின் தடையற்ற நகர்வினால் நம் முன் நிறுத்தும் இந்த படம், அதே சமயம் அந்த வேகத்திலேயே  மனிதர்களின் உளவியல் கூறுகள் எவ்வாறு அந்த சம்பவங்களின் போக்கை தீர்மானிக்கின்றன என சொல்லி கொண்டே வருகிறது.

உளவியல் ஒரு பக்கம் இருந்தாலும், எந்த  தொடர்புகளும் காரணங்களும் இல்லாமல் வாழ்க்கை போக்கு விதியே என  நிர்ணயிக்கபடுவது நிறைய இடங்களில் உணர்த்தப்படுகிறது.

உதாரணமாக கதை சொல்லி ராகெட்டின் மீது பாயவிருக்கும் தோட்டா வேறேங்கோ யதேச்சயாக சென்று விடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ராக்கெட் கடைசி வரை தன் குருட்டு அதிர்ஷ்டத்தினாலேயே சாகாமல் இருக்கிறான்.


கதையின் ஆரம்பத்தில்  இறைச்சிக்காக ஒரு கோழியை துரத்துகிறார்கள். கதை முடிவில் அதே காட்சி மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. கோழி இறுதி வரை பிடிக்கப்படுவதில்லை. அந்த கோழியின் விதி சாகாமல் போவது தான் போல.
கதையில் வரும் கதை மாந்தர்கள் எல்லாருமே எந்த நொடியில் வேண்டுமானாலும் சாவை தொடக்கூடியவர்கள். சிலர் சாகிறார்கள். சிலர் வாழ்கிறார்கள். சிலர் படம்  முடிந்த பின் கூட சாகலாம். ( உலகின் கதைகள் எல்லாம்  முடிவுக்கு வந்த பிறகும்   கதை மாந்தர்கள் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்குமோ? )
City of God ஒரு சேரியின் தெருக்களில் மூச்சிறைக்க பயந்து ஓடும் ஒரு தெரு நாய் போல அங்கும் இங்குமாய் அலைகிறது. மீண்டும் மீண்டும் அதே தெருக்களின் முக்கிற்கே வந்து நின்று பின் மீண்டும் சுற்றுகிறது. வாழ்க்கை எனும் முடிவில்லா வட்டத்தை ஒரு ரங்க ராட்டினம் போல சுற்றி விட்டு வேடிக்கை காட்டுகிறது.
City of God இன் மற்றுமொர் முக்கியமான விஷயம் வன்முறை.  வன்முறை நம்மை சுற்றி பிணைந்து நெளிகிறது.  பொதுவாய் வன்முறையை ஒரு style , status போல காண்பிக்கும் படங்கள் எனக்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த படம் ஒரு விதிவிலக்கு. என்னையும் தாண்டி அதன் அழகியல் எனக்கு பிடித்திருந்தது. படம் மானுடத்தின் எண்ணிலடங்கா மனக்கூறுகளை, வாழ்வின் அபத்தத்தை, இச்சைகளின் நடனத்தை, வன்முறையின் வழியில் முன்வைக்கிறது.


இந்த எல்லாவற்றையும் விட ‘city of gods' மற்ற எந்த படைப்பையும் விட வேறுபடும் இடம் என்று நான் உணர்வது. குழந்தைகளை அது காண்பித்த முறை. வன்முறைக்காக ஏங்கும் குழந்தைகள் கொலை கொள்ளை,போதை என தங்களையும் தங்கள் பெரியவர்களை போல வார்த்து கொள்கிறார்கள்.  ஆம், பெரும் படைப்புகள் எல்லாம் ஒரு நம்பிக்கையுடன் முடியும். அடுத்த தலைமுறையின் மேல் உள்ள நம்பிக்கையை கோடிடும். ஆனால் ‘city of gods' அதை அழிக்கிறது. அவநம்பிக்கையை முன் வைக்கிறது. இனி குழந்தைகளிடம் பொம்மைகளோ ரோஜாக்களோ கொடுத்து போரடிக்காமல் துப்பாக்கி கொடுத்து ஜாலியாய் கொலை செய்ய பழக்கி விடும் இந்த உலகம் என ரத்தசிவப்பாய் கொடிட்டு அடையாளப்படுத்துகிறது.

4 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...