செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எஸ்.ராமகிருஷ்ணனின் பதில் கடிதம்

எனது யாமம் நாவல் விமர்சனத்தை எஸ்.ரா அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.பதில் எழுதி இருந்தார். சந்தோஷமாய் இருந்தது. :-)
பதில் கீழே.



”ஆழ்ந்து எழுதப்பட்ட விமர்சன்ம், நன்றாக உள்ளது, 
 
நாவல் ஒரு சேர்ந்திசை போன்றது, அதில் பல்வேறு இசைக்கருவிகள் பல்வேறு நிலைகளில் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருக்கும், மௌனமும் அதில் இசையே, சதாசிவ பண்டாரம் இந்த சேர்ந்திசையின் ஒற்றை புல்லாங்குழல்,
 
மற்றபடி பண்டாரங்களும் சாமியார்களும் ஜெமோவிற்கு மட்டுமே குத்தகை தரப்பட்டவர்களில்லை, யார் வேண்டுமானாலும் எழுதலாம் தானே,
 
உங்கள் அன்பு
 
எஸ்ரா,”

இரவுக்கு ஆயிரம் கண்கள்-- ( எஸ்.ராமகிருஷ்ணனின் - யாமம் )

”கிராமத்தில் உள்ள வீடுகளில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் சுடர்கள் இரவில் மக்கள் உறங்க துவங்கிய பிறகு யாவும் தனியே ஒரு இடத்தில் ஒன்று கூடுகின்றன ..அவை அந்தந்த வீட்டில் வாழும் மனிதர்களின் அன்றாட செயல்களை ,கோபதாபங்களை பகிர்ந்து கொண்டுவிட்டு இருட்டில் மறைந்துவிடுகின்றன ”எஸ்.ரா யாமம் முன்னுரையில்

எஸ். ராவின் யாமம் நாவல் குறித்து படித்தது முதலே எழுத வேண்டும் என்ற எண்ணம். இப்போது தான் எழுதுகிறேன்.

தமிழின் இந்த தலைமுறை முதன்மை படைப்பாளியாக நான் கருதும் எஸ்.ராவின் சமீபத்திய நாவல் யாமம் (2007).

யாமம் என்பது மிக ரகசியமான பொழுது. எஸ்.ரா கூறுவது போல மனிதன் தூங்கும் வேளையில் தான் அவனது கதைகள் வெளியே அலைகின்றன. மனிதர்கள் எல்லாருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். நறுமணம் போல காற்றில் கலைவது தான் மனிதர்கள் வாழ்க்கையும்.
 
இரவின் சுகந்தத்தை அத்தராக வடிக்க கற்ற ஒரு வம்சாவளி. ஒரு சுஃபி ஞானியின் அருளுடன் அவர்கள் வழி வழியாக இத்தொழிலை செய்து வருகிறார்கள். இந்த அத்தரின் பெயர் ‘யாமம்’.

மதராப்பட்டிணத்தின் சரித்திர பிண்ணனியுடன் ஆரம்பிக்கும் நாவல், அந்த நகரத்தின் சின்ன சின்ன சந்துகளான  கதைகளில் அலைகிறது. (நகரம் சுமக்கும் கதைகள் மீது எஸ்.ராவிற்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு) . பின்னிப் பிணையும் இந்த கதைகளில் மைய சரடு, எல்லா பேரிலக்கியங்களும் வியக்கும் பெரு மானுடத்தின் ஒட்டு மொத்த இயக்கம் குறித்த அளவிலா வியப்பும், அந்த சமுத்திரத்தின்  ஆர்பரிக்கும் அலைகள் மீண்டு சமுத்திரத்திற்க்கே சென்று விடுவதும் பின் மீண்டும்  வேறொரு நீர்த் தொகுப்பாகி பிரிதொரு அலையாகி விடுவதும் என முடிவில்லாமல் சுழலும் ஒரு அமைப்பை காட்சிப்படுத்த முயலுவதும் தான்.

அத்தர் தயாரிக்கும் கரீம் சூதில் நாட்டம் கொண்டு வீடு விட்டு வெளியேறுகிறான்.  அவனது மனைவிகள் அவனில்லாமல் வாழ்க்கையை தனித்து ஓட்ட, கடைசியில் வாழ்க்கையின் அழுத்தும் சுமையை இறக்க முடியாமல் அவர்கள் தத்தம் வழியில் பிரிந்து செல்கிறார்கள்.  கரீமின் மூன்றாம் மனைவி வெறுமனே காலத்தின் பழைய நினைவுகளுடன் அந்த இடிபாடான  அத்தர் தயாரிப்பு சாலையை பிரயோஜனமற்றுப் பார்க்கிறாள் . பரம்பரை பரம்பரையாக இரவின் சுகந்தத்தை வடித்தவர்கள் சுவடில்லாமல் காற்றில் கரைகிறார்கள்.

பத்ரகிரி-விசாலம் குடும்பம்; அவனது தம்பி திருச்சிற்றம்பலம்- மனைவி தையல். திருசிற்றம்பலம் படிப்பிற்க்காக லண்டன் செல்கிறான். தம்பிக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பத்ரகிரி மெல்ல தையலிடம் விருப்பம் கொள்கிறான். இருவருக்கும் நிகழும் காமத்தின் பரிமளம் தையலின் நோயால் மெல்ல மறைகிறது.
லண்டன் செல்லும் சிற்றம்பலத்தின் தோழன் சற்குணம் லண்டனை போகத்த்டன் சுகிக்க வருகிறான். போகத்தை முழுமையாய் சுகிக்கும் அவன் லண்டனின் மற்றொரு பக்கம் தெரியும் போது அதை முழுமையாய் வெறுத்து அந்த மாநகரத்திற்க்கு எதிராய் ஒற்றையாய் சீறுகிறான்.

திருசிற்றம்பலம் தன் படிப்பை முடித்து கணித யந்திர கண்டுபிடிப்பிற்க்கான சாதனையின் பெருமையுடன் ஊர் திரும்பும் போது அவன் முகத்தில் அறைவது சிதறுண்ட அவன் குடும்ப நிலை.

தன்  பங்கு சொத்திற்க்காக  கோர்ட்டிற்க்கு அலையும் கிருஷ்ணப்பா , எலிசபெத் என்னும் ஆங்கிலோ-இந்திய பெண்ணின் மீது உள்ள காமத்தால் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். ஒரு சுயநல ஒப்பந்தமாக ஆரம்பிக்கும் அவர்கள் உறவு அவர்கள் வாழும் மலையின் அமைதியில் மெல்ல ஆழம் கூடிக் கொள்கிறது. வாழ்க்கையின் அர்த்தம் அதன் எளிமையில் உள்ளது என ஏதோ ஒரு கணத்தில் உணரும் கிருஷ்ணப்பா தன் சொத்துக்களை புறந்தள்ளி மலையில் தன் பிரிய எலிசபெத்துடம் வாழ்கிறார். மலையின் தேயிலை தோடத்தில் வருமானம் வருகிறது. எலிசபெத் லண்டன் பார்த்து வர ஆசைப்படுகிறாள். திரும்பி வந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவளை அனுப்பி வைக்கிறார். அவளும் அதற்க்கு உட்பட்டே செல்கிறாள். ஆனால் அவர்களது மலை விரைவில் தேயிலை வியாபரிகளின் விளைநிலமாகிவிடும் என குறிப்புடன் இந்த கதையும் முடிவுக்கு வருகிறது.

எல்லாக் கதைகளுமே கால நதி அடித்து செல்லும் திசையெல்லாம் முட்டி மோதி பின் எங்கோ யாரும் யூகிக்கா மூலையில் கரை ஒதுங்குகின்றன.
நாவல் முடியும் போது வாழ்க்கை குறித்த நம்பிக்கை தோன்றுவதில்லை. அதன் அர்த்தமின்மை குறித்த அபத்தமே தொங்கிக் கொண்டிருக்கிறது. அலையும் வாழ்க்கையின் அகத்தைஒன்றோடு ஒன்று முட்டி மோதும்  புறவயமான நிகழ்வுகள் கட்டமைக்கிறதா அல்லது புறத்தே நிகழும் சம்பவங்களும் சரித்திரமும் அகத்தின் எண்ணிலடங்கா உள்மடிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறதா  எனும் பதிலற்ற கேள்வியின் அனுபவத்தை தன் ஒவ்வொரு பக்கத்திலும் கொண்டிருக்கிறது யாமம் நாவல்.
ஆனாலும்  என் அனுபவத்தில் சில இடறுகளும் உண்டு. எஸ்.ராவின் நெடுங்குருதியில் வெயிலின் தகிப்பை உணர்ந்தது போல இன்நாவலில் இர்வின் ரகசியம் ஒரு படிமமாக என்னை எல்லாக் கணத்திலும் பின் தொடரவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாய யதார்த்ததிற்க்குள் (magical realism) புகுந்து விடக்கூடிய பரப்பு கொண்ட நாவல்.; ஆனாலும் சுஃபி ஞானியின் பகுதிகளில் மட்டுமே கொஞ்சமாய் சென்று விட்டு மீண்டுவிடுகிறது. இது படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும் இத்தனை விரிவான நாவலின் பரப்பு  மேலும் அகழப்பட்டிருக்கும் என்பது என் ஆதங்கம். பின் அந்த பண்டாரத்தின் கதை. சட்டென ஜெமோவின் நாவலுக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு. கதையின் மைய சரடு சராசரிகள் வாழ்க்கையின் கூட்டியக்கமாக இருக்கும் போது சதாசிவப் பண்டாரம் ஒரு விடுபடல் (exception)  போல வருகிறார். எஸ்.ரா ஆரம்பத்தில் ‘இந்தியாவில் சாமியாராகாமல் இருந்தால் தான் அதிசயம்’ என்று பண்டார வாழ்க்கையும் சம்சார வாழ்க்கை போல சமூகத்தின் ஒரு கூறே என குறிப்புணர்த்தினாலும் எனக்கு இக்கதை ஒட்டாமலே போகிறது கடைசிவரை.
மேலும் எஸ்.ராவின் படிமங்களும் உருவகங்களும் ஒரு வித மாதிரித்தன்மையை (template) பெற்றுவிட்டனவோ எனத் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.
குறைகளாகத் தோன்றிய இவை எல்லாமே நாவல் தரும் ஒரு முழு அனுபவத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் போகின்றன. தமிழின் முக்கிய நாவல்களுல் ஒன்றாக சொல்லக்கூடிய யாமம் இலக்கியத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)


அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில்  இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தேன்.
எலிப்பத்தாயம் என்னை மிகவும் கவர்ந்தது.


படம் ஒரு அண்ணன் மூன்று தங்கைகளை பற்றியது. குறிப்பாக அண்ணன் - இரண்டாம் தங்கை (ராஜம்மை) உறவு கதையில் விஸ்தாரமாக நிகழ்கிறது.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் இவ்விருவரது குணங்களும் கட்டமைக்கப்படுகிறது. இந்த இருவரும் ஒரே வீட்டில் வாழும்  இரு வெவ்வேறு துருவங்கள் என நமக்கு புரிய தொடங்குகிறது. ஆணை மட்டுமே மையப்படுத்திய, அவனது பலவீனங்களை சகித்து, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவனை மீறி செய்ய இயல ஒன்றும் இல்லாமல்,அவன் மட்டுமே உலகம் என கொள்ளும் பெண்கள் நிறைந்த இந்திய குடும்ப சூழலின் துல்லிய ப்ரதிபலிப்புகள்  தான் உன்னி (அண்ணன்) மற்றும் ராஜம்மை.
ஒரு ஆழமான சமூக  விரிவாய்வு செய்யும் அளவு இவ்விரு கதைமாந்தரின் பாத்திரமும் நுணுக்கமான படிமங்களோடு படைக்கப்பட்டுள்ளது.


உன்னி -- உன்னியை போல நிறைய ஆண்களை என் சமூகத்தில் பார்த்துள்ளேன். அவனது இறுக்கமும் அதிகாரமும் வெளிப்படையாய் தெரியும் அவனது சோம்பலையும், கோழைத்தனத்தயும் மறைக்க இயலுவதில்லை. அதற்க்காக அவன் கவலைப்படுவதுமில்லை. சாவகாசமாக பரம்பரை சொத்தின் மூலம் பொழுதை கழிக்கும் அவன், சொகரியங்களுக்காக எந்த நிலையிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுப்பதில்லை; பிரச்சனைகளிலிருந்து நழுவி நழுவி ஓடும் அவனிடம் இருப்பது அவனுக்கான ஆண் ஈகோ மட்டும். தன்னை சார்ந்த பெண்களில் தனக்கு சாதகமான அம்சம் கொண்டவள் ராஜம்மை மட்டுமே என உள்ளூர உணர்ந்த அவன் ஆண் மனம் அவளை தன் காரியங்கள் எல்லாம் செய்யக் கூடிய ஒரு இயந்திரம் போலவே உபயோகிக்கிறான். உன்னியின் பாத்திரம் அவளை வெறும் இயந்திரமாக உபயோகித்தாலும் அவளிடம் உணர்வு சார்ந்த பெருத்த சார்பும் கொண்டதே. தன் உத்தரவுகளை அவளிடம் அலுங்காமல் வெளிப்படுத்தும் அவன், அவளிடம் எல்லா ஆண்களுமே தேடும் தாயின் அரவணைப்பு சொகுசை பெற்றுக் கொள்கிறான். அது அவனை தன் தினசரி வாழ்க்கை அமைப்புக்கு கொஞ்சம் கூட மாறுதல் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லி அவளிடம் அதிகாரம் செய்வதில் தெரிகிறது. ஒரு பசுவை விரட்டுவதில் இருந்து , வெண்ணீர் போட்டு கொடுப்பது வரை அவனக்கு ‘ராஜம்மை ;ராஜம்மை’ மட்டும் தான்.
படம் முழுவதும் தன் தங்கையை தன் சௌகரியங்களுக்காக  ஏவுவதில் அவளிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு சுயநல சிறுவன் போலவே தெரிகிறான்.


ராஜம்மை -- பொறுமை,சகிப்பு, தீராத பணி, குடும்ப சுமை என தன்னை பற்றியே யோசிக்காத அல்லது யோசிக்க இடம் தரப்படாத பெண் தான் ராஜம்மை. காலையில் இருந்து இர்ரவு வரை அவள் செய்ய வேண்டியது எல்லாம் தன் அண்ணனுக்காக, தன் தங்கைக்காக. ஆனாலும் அவள் அதற்க்காக குறைப்பட்டுக்கொள்வதில்லை. ஒரு இடத்தில் கூட யாரிடமும் கடிந்தோ, குறை சொல்லியோ பேசுவதில்லை. வரிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த குறையும் சொல்லாமல் எத்தனை பெண்கள் இந்திய குடும்பங்களில் (நடுத்தர குடும்பங்களில் பொதுவாக)  தங்கள் புதிரற்ற மௌனத்தால் நாட்களை கடத்துகிறார்கள் என்பதற்கு ராஜம்மை ஒரு வகை மாதிரி. ஆனால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுதுவது அவர்களின் மௌனம் அல்ல. அவர்கள் குறையின்றி தங்கள் கடமையாகவே ஆண்களுக்கு பணி செய்கிறார்கள். தனக்கான மனதை அவர்கள் கிட்டதட்ட மறந்தே விடுகிறார்கள். ஆனால் ராஜம்மை ஒரு கட்டத்தில் தன் சகிப்புத்தன்மையை உடைக்கிறாள். ‘எத்தனை நாள் இந்த நரகம்’ என தன் அண்ணனிடம் கேட்கிறாள். இது வெற்றுக் குறீயிடு மட்டுமே. நம் இந்திய ராஜம்மைகளுக்கு  நிச்சயம் விதிக்கப்பட்டவைகளை தாண்டி கேள்வி கேட்டலும் கூட அது வெற்று மன ஆறுதலுக்காக மட்டுமே எனத் தெரியும். குடும்ப சட்டகத்திற்க்குள் அகப்பட்ட எலிகளாய் அடூர் அவர்களை உருவகப்படுத்துகிறார்.
ஆனால் கதை இதோடு முடிவதில்லை. ராஜம்மையின் சாவிற்க்கு பிறகு பயந்து வெளிறும் உன்னியும் ஒரு எலி தான். ஆணின் அடக்குதல் பெண்ணின் அடங்குதல் இரண்டுமே ஒரு வித ஒப்பந்தமே. அடக்குதல் மூலம் தன் பலவீனங்களை மறைக்கும் ஆண், அடங்குதல் மூலம் ஆணை திருப்திபடுத்தி தனக்கானவனாய் அவனை உருவாக்கிக் கொள்ளும் பெண் -  என இது ஒரு விளையாட்டோ எனத் தோன்றும். இந்த அடிப்படையில் ராஜம்மை ஒரு எலி என்றால் அவளின்றி தனித்து விடப்படும் உன்னியும் எலி தான். எலிப்பொறி ஆண் தன்முனைப்பா? பெண் சகிப்பா? அல்லது சமூகத்தின் குடும்ப அமைப்பா?
எதுவானாலும் எல்லா எலிகளும் ஆசைப்பட்டு பொறிக்குள் தானாகவே சென்று விழுகின்றன என்பது தான் உண்மை.

படம் ராஜம்மையின் மரணம் பின் உன்னி பித்தாகி ஒரு இரவில்  கள்ளர்களால் துரத்தப்படுவதோடு முடிகிறது. தப்பி வெளியே ஓடும்  மூன்றாவது தங்கை , சொத்தில் பங்கு கேட்க்கும் முதல் தங்கை இவ்விருவரும் கதையின் மையமாகிய உன்னி-ராஜம்மை பாத்திர வடிவமைப்பிற்க்கு ஒரு பங்கு மட்டுமே. பெரிதாய் எதுவும் சொல்ல அவர்களிடம் இல்லை.

அடூரின் இந்த படம் ஒரு நாவல் போலவே எனக்கு அனுபவம் தந்தது.
காட்சிகளிம் ஊடாகவோ, சம்பவங்களின் ஊடாகவோ நிகழாமல் ,கதை மாந்தரின் வகை மாதிரித் தன்மை (prototype) மூலம் முழுமையடயும் இந்த படம் நிச்சயம் உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று என என்னால் சொல்ல முடியும்.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

காசு.. காசு... காசு... (சுவிஸ் பேங்க் பாலன்ஸ்- பயனர் பெயர்- இந்தியா)

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் எனது இன்பாக்ஸில் வந்தது. ஃபார்வார்ட் செய்யப்பட்ட கிட்டத்தட்ட ஸ்பாம் அஞ்சல் அது. ஆனாலும் இந்தியா ஸ்விஸ் வங்கி வைப்பில் முதலிடல் வகிப்பதாக குற்றசாட்டு.
செய்தியில் கவரப்பட்டு அந்த மெயிலில் உள்ளது எந்த அளவு உட்டாலக்கடி என தெரிந்து கொள்ள கூகிளினேன். நமது தாய்திருநாட்டின் லட்சனங்கள் தெரிந்த எல்லா ஜனங்களில் அடியேனும் ஒரு பரிதாப ஜனம் தான் என்றாலும்  ’swiss bank black money india'  என்பதான தேடு பதங்களில் கூகிள் கொட்டிய செய்திகளில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அதிர்ச்சி தான்.



சில செய்திகள் :
1) இரண்டு வருடம் முன்னால் வந்த செய்திகளின் படி இந்தியா சுவிஸ் பேங்க்கில் பணம் வைத்திருக்கும் நாடுகளில் முன்னணி வகிக்கிறது.
2) ஆவரேஜாக 2002-6 இல் இந்திய பணம் 136,466 கோடி இந்திய பணம் சுவிஸ் பாங்கில் முடங்கியிருக்கிறது. இந்த கணக்கில் தற்போது 692,328 (!!!!!) கோடி முடங்கி இருக்கக் கூடும். 
3) 2002 க்கு முன்னால் எவ்வளவு பணம் என தெரியாது. (வெறும் பத்து வருடக்கணக்கு இவ்வளவு என்றால் 40 வருடகணக்கு??) கிட்டத்தட்ட எல்லாம் சேர்த்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் 71 லட்சம் கோடி (இதுக்கு எத்தினி சைபர்னு சொன்னா சூரியம் எஃப்.எம் ல உங்குளுக்கு புடிச்ச பாட்டெல்லாம் போட மாட்டங்க) 
4) ஸ்விஸ் பேங்க் போல கருப்பு பணம் ஏற்க்கும் பேங்குகள் இன்னும் கிட்டதட்ட 40 உலகில் உள்ளதாம். இங்கெல்லாம் கூட இந்தியா முன்னணி வகிக்கலாம்.
5) இந்தியா போட்டிருக்கும் இந்த பணம் உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளின் மொத்த கணக்கை விட அதிகம் (!) என நமது முன்னாள் கவர்னர் பி.சி. அலெக்ஸாண்டர் கூறுகிறார். 
6)2009 இல் யூ.எஸ் மற்ற பிற நாடுகளின் கோரிக்கை படி ஸ்விஸ் பேங்க் தனது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் கணக்குகளை தேவையின் போது வெளியிடும் என சொல்லி உள்ளது. இதை சமீபத்தில் இந்தியாவிற்க்கும் இந்த சேவையை இரக்க மனம் கொண்டு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது* (*Conditions Apply) ஆனால் இது வரை இந்தியா எதயாவது கேட்டதா. பேங்க் எதயாவது வழங்கியதா என தீபிக்கா படுகோனேவின் சமிபத்திய பார்ட்டி, எந்திரனின் மிக சமிபத்திய ஸ்டில்ஸ் இவற்றுக்காக மிக பிஸியாய் இருக்கும் நமது நிருபர்கள், டீ டைமில் சும்மங்காட்டிக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 


பின்குறிப்பு -- நேற்றுக் கூட எங்கள் கம்பெனிக்கு முன்னால் இருக்கும் மேம்பாலத்திற்க்கு அடியில் வசிக்கும் சில குடும்பத்தின் குழந்தைகள் சிரித்து கொண்டு தான் இருந்தன. வறுமை எல்லாம் நமக்கு ஒரு பிரச்னையா என்ன? 



சுட்டிகள்:
 http://election.rediff.com/interview/2009/mar/31/inter-swiss-black-money-can-take-india-to-the-top.htm

http://www.asianage.com/columnists/india-road-failure-241

http://ibnlive.in.com/news/swiss-banks-ready-to-help-india-trace-black-money/103530-7.Publish Post.html 


http://www.expressindia.com/latest-news/Swiss-banks-offer-to-tax-Indian-clients/522085/



ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

கிம் கி டுக் - இன் ’மூச்சு’ (The Breath).

கிம்  கி டுக் -  இன்  ’மூச்சு’ (The Breath).



கொரிய மொழி இயக்குநரான கிம் கி டுக் (Spring,Summer,Fall,winter.. and Spring படத்தின் இயக்குநர்) இயக்கிய ‘The Breath' படம் பார்த்தேன். அழகான படம்.
படத்தின் அழகு அதன் மௌனத்தில் இருந்த்தது. அதிகம் வசனங்கள் இல்லாமல் கிம்மின் முத்திரைகளோடு.
ஒன்றேகால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை சொல்கிறார். கணவனின் தகாத உறவு பற்றி அறியும் பெண் மரணதண்டனை கைதி ஒருவனுடன் கொள்ளும் காதல் தான் கதையின் மையச் சரடு. கணவன் - மனைவி, கைதி- காதலி, கைதி- சக கைதி என மூன்று காதல்கள். உரசல்,பொறாமை, கோபம், வருத்தம், வன்முறை என உறவுகளின் பல பரிணாமங்களோடு ஒரு மாலை நேரக் கவிதையின் போதையோடு கதை மெள்ள நகர்கிறது.

தற்கொலைக்கு பல முறை முயலும் மரணதண்டணைக் கைதியிடம் காதல் கொள்ளும் பெண் அவனை மகிழ்ச்சி கொள்ள செய்வதற்க்காக  ஒவ்வொரு முறை அவனை சந்திக்கும் போதும்,சந்திக்கும் அறையை  ஒரு பருவகாலத்தினை அடையாளப்படுத்தும் வகையில் அலங்கரிக்கிறாள்.  அந்த பருவகாலத்திற்க்கு ஏற்றாற் போல் உடை அணிகிறாள். அந்த பருவ காலத்திற்கு ஏற்ற பாடல்களை பாடுகிறாள்.

அவனுடன் தனக்குள்ள உறவை கற்பனையான பருவ மாற்றங்களோடு கழிக்கும் அவள் அந்த உறவை வேக வேகமாக முடித்து கொண்டு,தன் குடும்ப வாழ்க்கைக்கு திரும்புகிறாள்.
எத்தனை சுயநலமானவை உறவுகள். ஆனாலும் உறவுகளின் அழகே அவற்றின் சுயநலம் தான். தன்னை விட்டு செல்லும் எங்கிருந்தோ வந்த உறவு அதன் பிரிவிக்கான நியாயங்களை அவனிடம் உணர்த்தி விட்டு செல்வதாக தான் நான் நினைக்கிறேன்.
ஆனால் பிரிவில் நியாய தர்மங்கள் இல்லை. அது தரும் வலிக்கு அவை புரிவதும் இல்லை.

தன் சக கைதியின் காதல் கலந்த நட்ப்பை தன் புதிய காதலிக்காக  ஒதுக்கும் போது  ஒரு பழைய உறவு வெறி கொள்கிறது. அவனை இறுதியில் கழுத்தை நெறித்து கொல்கிறது.
கொலை ஒருவனுக்கு ஆறுதல் என்றால் கொல்லப்படுதல் மற்றொருவனுக்கு ஆறுதல்.

என் மனதில் அதிகம் பதியாத உறவு கணவன் நாயகியிடம் கொண்டிருக்கும் அசட்டையும், பின் உணர்ந்து தன் தகாத உறவை முறித்து கொள்வதும் தான். அவனது மற்றைய  உறவு பலமற்று காட்டப் படுகிறது (கதை அந்த உறவினை காட்சிபடுத்த தேவை இல்லை என கிம் நினைத்து இருக்கலாம்). அதே போல அந்த ஜெயிலரின் சபலம் கூட ஏதோ கதையில் ஒட்டுப் போட்டு தைத்தது போல நிகழ்கிறது. கதையின் ஆத்மாவிற்கு எந்த வகையிலும் தேவை இல்லாத சேற்க்கையாகவே அதைப் பார்க்க முடிகிறது.

 ஆனாலும்குறைகள் பெரிதும் நம்மை சங்கடப்படுத்துபவையில்லை.

இறுதியில், நாயகி தன் கணவனுடன் குளிர் காலத்திற்கான பாடலை  பாடிக் கொண்டிருக்க, அவளது காதலன் சிறையில் கண்ணீருடன் தன் கொலையை ஏற்பதாக முடியும் இந்த படம், கிம்மின் மற்றுமொரு கவிதை.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தமிழ் சினிமா - 50 முக்கிய திரைப்படங்கள் (என் பார்வையில்)

தமிழ் சினிமா தன்  பயணத்தை 1931 இல் இருந்து தொடங்கியது (பேசும் படங்கள்). அன்று முதல் இப்போது வரை சினிமா தான் நம் கலையாக, சமூக சிந்தனையை மாற்றும் சாதனமாக, கனவாக, அரசியலாக, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை எல்லாவற்றிலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிக்க முடியாமல் தன் இருப்பை அசைக்க முடியாமல் செய்துள்ளது. நான் சினிமாவில் இலக்கியம் போல அதிகம் என் கேள்விகளுக்கான பதிலை, நான் விரும்பும் அனுபவத்தை அடைந்ததில்லை. ஆனாலும் என்னையும் மீறி சினிமா என் கனவிலும் சினிமா தான் அதிகம் வந்துள்ளது. உங்களைப் போலவே.

சினிமா ரசிகன் என்ற வரையில் எனக்கு பிடித்த தமிழ் சினிமா என 50 படங்களை வரிசைப்படுத்த தோன்றியது. எனவே தான் இந்த பட்டியல். எனது அனுபவத்தோடு தமிழில் சினிமா அதன் கலை வடிவத்தை எதோ ஒரு வகையில் பூர்த்தி செய்ய முயன்ற படங்கள்,கவனிக்கதக்க படங்கள் மற்றும்  அந்தந்த காலகட்டத்தில் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்க்கு எடுத்து சென்ற படங்களை குறி வைத்து இந்த பட்டியல்.
ரசனை சார்ந்த பட்டியல் என்பதால் இத்தகு பட்டியல்கள் எப்போதும் எல்லாரையும் திருப்திப்படுத்துவதில்லை. ஆனாலும் அது சார்ந்த வசீகரம் எல்லாருக்கும் உண்டு. எனக்கும் உண்டு.

1) மீரா -- 1945
படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சங்கீத முக்கியத்துவத்தை புறந்தள்ளி தமிழ் சினிமாவை பார்க்க முடியாது.
2)சந்திரலேகா -- 1948-- ஹாலிவுட் பாணி பிரம்மாண்டம். இப்போது பார்த்தலும் ’எப்படியா எடுத்தாங்க’ என தோன்றும்
3)பராசக்தி--1952 --திராவிட இயக்கத்தின் பிரச்சாரத்தை வலிமையாய் முன்வைத்த படம்.
4)அவ்வையார் -- 1953-- கே.பி. சுந்தராம்பாள் , பிரம்மாண்டம் இந்த இரண்டும் இப்படத்தின் சரித்திர முக்கியத்துவத்திற்கான காரணம்.
5) அந்த நாள் -- 1954-- குரோசவா வின் ‘ரோஷோமன்’படத்தை தழுவி எடுத்ததாக கூறப்படும் இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய பரிசோதனை முயற்சி.
6) ரத்தக்கண்ணீர் --1954--சமூக அவலங்களை தனி மனித தன்முனைப்பை ராதாவின் பகடி மூலம் வெளிப்படுத்தும் படம்.
7)மதுரை வீரன் -- 1956 -- படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் சமூக முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது.
8)சிவகங்கை சீமை -- மருது சகோதரர்கள் பற்றிய படம். film noir எனும் வகையை எங்கங்கே தொடுகிறதோ என தோன்றும். கமலாவின் நடனம், இசை, துயரம் என பல எல்லைகளில் நிரூபிக்க முயன்று பெருமளவில் கவனம் பெறாமல் போனது. காரணம் வீரபாண்டிய கட்டபொம்மன் அதே வருடம் வந்ததே. கட்டபொம்மனுக்கு கிடைத்த cult status இப்படத்திற்கும் கிடைக்காதது வருத்தம். என் தட்டில் வைத்தால் கட்டபொம்மனை விட இதை சிறந்த படமாக கூறுவேன்.
9) பாசமலர் -- 1961-- படத்தின் அதிநாடகத்தன்மையை மீறி உறவு சிக்கல்களை தமிழ் சூழலில் அழுத்தமாய் சொன்ன படம்.
10)நெஞ்சில் ஓர் ஆலயம் -- 1962 -- தமிழ் சினிமாவிற்கு வேறு பரிமாணத்தை கொடுத்த படம். மூன்றே கதை மாந்தர்கள், ஒரு கதைக்க்களம், சிறுகதை போன்ற திரைக்கதை.
11) கர்ணன் -- 1964-- மகாபாரத கதை மாந்தரில் முக்கிய ஆளுமை கர்ணன் பற்றிய காவிய நடை கொண்ட படம்.
12) காதலிக்க நேரமில்லை -- 1964-- இன்றும் இளமை துள்ளும் மனதிற்க்கு எதோ ஒரு வகையில் நெருக்கம் தரும் நகைச்சுவை படம்.
13) திருவிளையாடல் -- 1966 -- காவிய நடை பக்தியில் இசை நடிப்பு என எல்லாம் பொருந்தி வந்து அதனளவில் முழுமை அடைய முயன்ற படம்.
14) தில்லானா மோகனாம்பாள் -- 1968 -- மூல நூல் படிக்கவில்லை. ஆனாலும் படம் ஒரு நல்ல பழைய கிளாசிக் நாவல் படிக்கும் அனுபவம் தரும்.
15)முஹம்மது பின் துக்ளக் -- 1971-- அரசியல் பகடியில் இன்று வரை தமிழில் இதை மிஞ்சி படம் இல்லை என்பது என் கருத்து.
16) அரங்கேற்றம்-- 1973-- சமூக ஒழுக்க நெறிகள் குறித்து நாடகபாணியில் சாட்டயடியாய் கேள்விகளை எறிந்த படம்.
17) பதினாறு வயதினிலே--1977-- தமிழ் சினிமாவை கிராமத்திற்க்கு அழைத்து வந்த படம். வலுவான திரைக்கதைகாக இன்றும் பேச வைக்க்ம் படம்.

18) அழியாத கோலங்கள் -- 1979 -- நாடகத்தன்மை இல்லாமல்  விடலை பருவ கனவுகளை சொன்ன படம்.
19) பசி -- 1979 -- படம் பார்க்கவில்லை; ஆனாலும் சமூக அக்கறையில் தட்டிக்கழிக்க முடியாத படமாகிறது.
20)உதிரிப்பூக்கள் --1979-- வசனங்கள் குறைந்த அமைதியில் கூட தீயாய் சுட முடியும் என domestic violence குறித்து வந்த முக்கியமானபடம்.
21) நண்டு-- 1981-- நெடு நாள் முன் பார்த்தது. சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொல்ல்ம் படம்.
22) தில்லு முல்லு -- 1981-- எத்தனை முறை பார்த்தாலு சலிக்காமல் சிரிக்க வைக்கும் படம்.
23) சலங்கை ஒலி-- 1983-- மறக்க முடியாத இசை, வலுவான திரைக்கதை.
24)ஆண்பாவம் -- 1985 -- இயல்பான மிக எளிமையான நகைச்சுவை மூலம் மற்ற பல படங்களை தாண்டி செல்லும் படம்.
25) சிந்து பைரவி -- 1985 -- விடுகதை போல் உறவு சிக்கல்களில் விளையாடும் படம். மறக்க முடியாத இசை.
26) சம்சாரம் அது மின்சாரம்--1986 -- மேடை நாடகபாணி படமென்றாலும், நல்ல திரைக்கதை மூலம் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்காத படம்.
27)நாயகன் -- 1987-- Godfather தழுவலாய் கூறப்படும் நாயகன், வேறுபட்ட  கதைக்களம், கதை மாந்தர் மூலம் கவனத்தை பெரிதும் ஈர்த்த படம்.
28) வேதம் புதிது -- 1987 -- முக்கியமான சமூக கேள்விகளை வீசி எறிந்த படம்.
29) வீடு-- 1987-- நடுத்தட்டு மக்களின் கனவுகளையும் அது எவ்வளவு சாதரணமாக வீசி எறியப்படக்கூடும் என்பதையும் அழுத்தமாய் சொன்ன படம்.
30) சந்தியா ராகம் -- 1989-- தியேட்டரில் ரிலீஸானதா என்று கூடஎனக்கு  தெரியாது. ஆனாலும் யதார்த்த பாணி நடுத்தர மக்கள் பிரச்னையை சொன்ன முக்கியமான படம். அசோகமித்திரன் சிறுகதை படித்த உணர்வு ஏற்படுத்திய படம்.
31) வருஷம் 16--1989-- ஒரு அழகான குடும்பம் உறவு சிக்கல்களால் சிதறுவதை வலுவான திரைக்கதை மூலம் சொன்ன படம்.
32) ஒரு வீடு இரு வாசல் -- 1990-- அனுராதா ரமணனின் சிறுகதையின் திரைப்பட ஆக்கம். கதை சொல்லலில் இரு கதைகளை ஒரு கோட்டில் கட்டும் யுத்தியை கையாண்ட படம்.
33)ரோஜா -- 1992-- இந்திய அளவில் கவனம் ஈர்த்த படம். கதை களம், புது வகை இசை என தமிழ் சினிமாவின் முக்கிய முயற்சி.
34) கருத்தம்மா--1994--பெண் சிசுக் கொலை பிரச்னையை பிரச்சார நெடி இல்லாமல் நல்ல திரைக்கதை மூலம் சொன்ன படம்.
35) இருவர் --1996 -- தமிழின் மிக குறைவான அரசியல் வரலாற்றுப் படங்களுல் ஒன்று. திரைக்கதையில் இன்னும் தெளிவு இருந்திருந்தால் மிக சிறப்பான படமாகி இருக்கும்.
36) ஹே ராம்-- 2000- கோட்சேவின் உளவியல், காந்தியின் விமர்சனம் பற்றிய கதையை  சில புதிய சினிமா உத்திகளோடு சொன்ன படம்.
37) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் -- 2000-- தமிழ் கதை முறையில் ‘sense and sensibility' நாவலின் திரைப்பட ஆக்கம்.
38) பாரதி-- 2000 -- தமிழின் முக்கிய கவிஞரான பாரதியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
39)அழகி-- 2002-- வாழ்க்கை எங்கு சென்றாலும் முள்ளாய் அப்பபோது தைக்கும் முதல் காதலை மையமாய் கொண்ட படம்.
40) கன்னத்தில் முத்தமிட்டால்-2002-- ஈழ பிரச்னையை கையாண்ட  மிக சொற்ப படங்களுல் ஒன்று.
41) அன்பே சிவம் -- 2003 -- Planes Trains and Automobiles படத்தை போல் கதைப்போக்கு கொண்ட படம். மனிதாபிமானம்,மதம், கமியூனிசம் இவற்றோடு விவாதம் நிகழ்த்தும் படம்.
42) இயற்கை-- 2003-- நெய்தல் நிலத்தில் நிகழும் கதை. ஒரு சங்கப்பாடலை போல, ஒரு பழைய classic novel போல கதை சொன்ன படம்.
43)காதல்-- 2004-- யதார்த்த பாணியில் காதல் அது சார்ந்த சமூக சிக்கல்களை காட்டிய படம்.
44) விருமாண்டி -- 2004 -- தூக்கு தண்டனை குறித்த விமர்சனம் கொண்ட படம். ஒரு சம்பவம் ஒவ்வொருவர் நோக்கில் வேறுபட்ட சித்திரங்களாய் பதிவதை கதை சொல்லும் முறையாகக் கொண்டது.
45) ஆட்டோகிராஃப் --2004-- காதல் வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் நிகழக்கூடும் என்பதை மையமாக்கிய படம்.
45)புதுப்பேட்டை-- 2006 -- 'City of Gods' படத்தின் சாயல் கொண்டகூலிப்படை வாழ்க்கையை கதைக்களமாய் கொண்ட படம்.
46) வெயில் --   2006 --  வீடுகளில் நிகழும் வன்முறை ஒருவனது வாழ்க்கையை சிதறடிக்கும் கதை.
47)இம்சை அரசன் 23ஆம் புலிகேசி -- 2006 -- காமிக்ஸ் கதை முறையில் சரித்திர கதை. சமகால அரசியலை நகைச்சுவையில் விமர்சனம் செய்த படம்.
48) சுப்ரமணியபுரம் -- 2008-- உறவுகளை  துரோகத்தின், சந்தர்ப்பத்தின் கூரிய கத்தி குத்தி கிழிப்பதை சொல்லும் படம்.
49) ஈரம் -- 2009 -- தமிழில் வந்த பேய்ப்படங்களில் நல்ல திரைக்கதையுடன் வந்த ஒரே படம்.
50)  நான் கடவுள் -- 2009--  ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலின் சாயலுடன் வந்த படம். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட,கவனிக்கப்படாத  உலகத்தை காட்டிய படம்.

பின்னிணைப்பு -- இதில் நான் பட்டியலில் இருந்து 50 படங்கள் என்று குறுக்கிக் கொண்டதால்  நீக்கிய படங்களும் உண்டு ;

சபாபதி (1941),மிஸியம்மா (1955),வீரபாண்டியக்கட்டபொம்மன் (1959),தேன் நிலவு (1961),ஆயிரத்தில் ஒருவன் (1965), பாமா விஜயம் (1967),ஞான ஒளி ( 1972), உயர்ந்த மனிதன் (1968),அவள் ஒரு தொடர்கதை (1974),அவள் அப்படித்தான் (1978), நிழல் நிஜமாகிறது ( 1978), கன்னிப் பருவத்திலே (1979), இன்று போய் நாளை வா ( 1981),மண்வாசனை (1983),முந்தானை முடிச்சு (1983),புரியாத புதிர் (1990),மகளிர் மட்டும்(1994),கற்றது தமிழ்(2007),பசங்க(2009) , ஆயிரத்தில் ஒருவன் (2010)

இன்னும் பார்க்காததால் சேர்க்காத படங்களும் சில  உண்டு.

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...