சனி, 24 ஏப்ரல், 2010

அருந்ததி ராய்,ஜிந்தால்,கம்ரேடுகள், இன்ன பிற சொற்கள்....

சில நாட்களாக நிறைய குழப்பங்கள்.  எது சரி எது தவறு. நான் எங்கு இருக்கிறேன்..யாருக்கு சார்பாய் நான் இருக்க வேண்டும்? என் சக மனிதன் எப்படி இருக்கிறான்? நான் அவனுக்காக கவலை பட்டு என்ன ஆகும்? படும் கவலை, என் தயக்கம் என் பயம் இவற்றை தாண்டி எங்கு செல்லும்?
அருந்ததி ராயின் மாவோயிஸ்ட்கள் பற்றிய கட்டுரையை அவுட்லுக்கில் படித்த பிறகு தெளிவற்ற சிந்தனைகள். ராயின் கட்டுரை மிகுந்த பக்க சார்பு உள்ளது. உணர்ந்தே அவர் அதை செய்துள்ளார். ஏனெனில் இரு தரப்பில் ஒரு தரப்பை மட்டுமே ஊடகமும், அரசும் முன்னிறுத்துவதால்.  அவர்களது பக்கம் நமக்கு தெரிய வேண்டும்.. ஏன் இந்த போராட்டம்.. இந்த போரட்டத்தின் வன்முறை எதன் அடிப்படையில் நியாயப்படுத்தப் படுகிறது? இவர்கள் நிஜமாகவே நம் நாட்டின் 'அதிமுக்கியமான் பாதுகாப்பபிற்க்கு ஊறு தரும் பிரச்சனை'யா?? ஏன் இவ்வளவு பெரிதாய் வளர்ந்தார்கள்? அவர்கள் பெரும் தீவிரவாத கும்பலா அல்லது எளிய  பழங்குடியினரா?. எளிமையான கிராம மக்கள். ஏன் ஒரு அரசாங்கத்தை எதிர்க்கும் குழுவாகினர்? பெண்கள், குழந்தைகள் எல்லார் கையிலும் ஏன் துப்பாக்கி? இந்த கேள்விகள் இரு தரப்பு பற்றியும் தெரிந்து கொண்ட பிறகே அலசப்பட வேண்டியவை. தரப்புகள் குறித்து எத்தனை படித்தாலும் உண்மை அதில் ரத்தமும் துப்பாக்கியுமாய் போராடுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.  உண்மை எதுவாகவே இருந்தாலும் ஒரு எளிய பழங்குடி மக்கள் துப்பாக்கி ஏந்தி இந்த அளவு பெரும் இயக்கமாய் வளர சும்மா ‘ஒரு மணி நேர மின்சாரம் போச்சே’ பிரச்னையாக இருக்க போவதில்லை. அவர்கள் வாழ்வாதார பிரச்னையாக தான் இருக்க போகிறது.  ஏன் இது அதிகம் விவாதிக்க படவில்லை. மலையின் கனிம வளம் வன வளம் பாரம்பரியம் குறித்த பற்று அந்த பழங்குடியனருக்கு இருப்பதில் ஒரு சதவிகிதமாவது நம் அரசாங்கத்திடம் இருக்கிறதா? நம் கணிமங்கள் ரெட்டி சகோதரர்களுக்கும், வேதந்தா, ஜிண்டால் போன்ற பெரு நிறுவனங்களால் பங்கு கொடுக்க பட்டு அழிக்கப்பட்டு வருகிறதா? அடித்தட்டு மக்களின் குடிசைகளும், பெண்களின் கற்பும்,  உணவும், சொத்தும் முதலாளிகளால், ஆளுவோரால், காக்கும் படையினரால், சூரையாடப்படும் போது அவர்கள் அரிவாளோடு, துப்பாக்கியும் ஏந்துவது சரியா தவறா?
ஒரு சார்பை ஹீரோவாகவும் ஒரு சார்பை வில்லனாகவும் பார்த்து பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். உயிர் விட்ட படையினரின் சொற்ப உதவித்தொகை குறித்து கோபம் கொண்ட விகடனாரின் தலையங்கம் ஏன் சிவப்பு துணி கட்டியவர்களின் மரணத்திற்க்கு மவுனம் கொண்டு இருந்தது ஏன்? வெளிப்படையாகவே அசாம், மெகாலயா போன்ற மாநிலங்கள் பற்றி மத்திய அரசு வருடக்கணக்காக மெத்தனம் காட்டுவதும் பின் அவர்கள் கோபம் கொண்டால் தேசத்தின் பாதுகாப்பிற்க்கு ஊறாக நினைப்பது ஏன்?
பொதுவாகவே நாம் காரணங்கள் குறித்து யோசிப்பதில்லை. ஒரு கோபத்தின் நியாயத்தை அது வருடகணக்காக ஆறாமல் பொங்கி கொண்டு இருப்பதன் காரணத்தை விவாதிப்பதில்லை. வன்முறை அதற்க்கு பதிலடி பின் மேலும் வளரும் வன்முறை என ஒரு தொடர் நிகழ்வாக நீங்காத பெரும் பிரச்னையாக மாற்றிக் கொள்கிறோம்.

பாதுகாப்பு ஊறு.

இப்படி யோசனைகள் இந்த வாரம் முழுவதும் இருக்க, இதே சமயத்தில் குஜராத்தில் காந்திதாம் என்ற இடத்திற்க்கு  நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன் அங்கு இரும்பு உருக்கு ஆலை ஒன்றில் தர கட்டுப்பாடு சான்று தர சென்று இருந்தான். காலையில் அந்த ஆலை இருந்த இடம் தெரியவே இல்லை. காற்று முழுதும் கருப்பு துகள்கள். இரும்பு துகள்கள் மலை மலையாய். ஆலையின் உள்ளே உருக்கும் சூடு. இரும்பு தகதகத்து உருகி ஓடுகிறது. 5 அடி அருகில் பணியாள்ர்கள் சிரித்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்.  பல பேர் 12 மணி நேர ஷிப்டில் வேலை என நண்பன் சொன்னான். சில நாள் முன்னால் அவர்களது பதுகாப்பு குறித்தெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். சில நாள் முன்னால் கிரேனில் இருந்து இரும்பு குழாய்கள் நழுவி விழுந்ததாகவும் நல்ல வேளையாக யாரும் கீழே இல்லை எனவும் நண்பன் சொன்னான். ஜிந்தாலில்  *(அல்லது ஏதோ ஒரு பெரு நிறுவனத்தில்) எங்கோ ஒரு சுரஙத்தில் மண் சரிந்து சில பணியாளர்கள் இறந்ததாகவும்  அது வெறுமனே வட்டார செய்தித்தாளில் ஒரு சிறிய பெட்டி செய்தியாக வந்ததாகவும் சொன்னான். இரண்டு நாள் முன்னால் தினகரன் பெங்களூரு பதிப்பில் சில வருடங்கள் முன் வான்வழி தூவப்பட்ட Endosulfan  பூச்சிகொல்லிகளால் கிரமத்து மக்கள் பலரும் பக்கவாதம், ஆண்மைக்குறைவு போல் பிரச்சனைகளால் பாதிக்கபட்டு இருப்பதாக பகிரங்கமாக அரசு ஒப்புக்கொண்டதாகவும் குடும்பத்திற்க்கு நஷ்ட ஈடு தர ஒப்புகொண்டதாகவும் படித்தேன். துண்டு துண்டான இந்த செய்திகளால்  நாட்டின் பாதுகாப்பு ஊறு யார் என்ற கேள்வி மீண்டும் என்னுள் எழுந்தது.

காசர்கோட்டில் Endosulfanஆல் பாதிக்கபட்டவர்


ஆனாலும் விதர்பா தற்கொலைகள், மாவோயிஸ்ட் பிரச்சனைகள், போலி மருந்துகள் போன்றவையோடு நித்யானந்தர்-ரஞ்சிதா, ஐ.பி.எல் இறுதி போட்டிகள், விஜய் அரசியல் என எல்லாம் தாங்கி நம் ஊடகங்கள் சொற்களை மக்கள் விருப்பிற்கேற்ப உற்பத்தி செய்து சந்தையில் தள்ளுகின்றன. குவிந்து கிடக்கும் சொற்களில் நாமும் கொஞ்ச நேரம் மாவோயிஸ்டுகள், காம்ரேடுகள், நித்யா, டெண்டுல்கர், சுறா, சஷி தரூர்ர் எல்லாம் பேசி முடித்து விடுவோம். கவலை படாதீர்கள் அடுத்த சீசனிலும் கொஞ்சம் கம்ரேடுகளோ - போலிசோ இறப்பார்கள், கொஞ்சம் விவசாயிகள் தற்கொலை செய்வார்கள், அதை விட முக்கியமாய் 20-20 உலக கோப்பை நடைபெறும், ரஞ்சிதா பேட்டியை எதோ ஒரு பத்திரிக்கை வாங்கி இருக்கும், சுறா ஓடி முடிந்து எறா, எந்திரன் எல்லாம் வரும். அதனாலே மக்களே நாட்டில்  நெல்லுக்கு பஞ்சம் வந்தாலும் சொல்லுக்கு பஞ்சம் வராது.. பேசினோம்.. பேசுகிறோம், இன்னும் பேசுவோம்.....

சுட்டிகள்:
அருந்ததி ராய் அவுட்லுக் கட்டுரை

Endosulfan பிரச்னைகள்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...