ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தமிழ் சினிமா சில அயோக்கியத்தனங்கள்..

கீழுள்ள பத்தி  ’டூரிங் டாக்கீஸ்’ என்ற ஓர்குட் குழுமத்தில் 3/10/08 அன்று நான் செய்த பதிவின் மீள்பிரசுரம்.

தமிழ் சமூகத்தில் சினிமாவின் இடம் எல்லாருக்கும் தெரிந்தது.. சினிமா செல்லாத இடம் இல்லை. ஆனால் நம் சினிமா சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது? சமூகத்தின் எண்ணங்களை வாழ்வியல் நெறிகளை பெருமளவு மாற்ற கூடிய ஆயுதமாக சினிமா உள்ளது.. ஆனால் வணிக ரீதியான வெற்றிக்காக கீழ் நிலை சமரசங்களை எடுத்தாளும் சில இயக்குனர்களை நினைக்கும் போது கோபத்தை விட வருத்தமே எனக்கு அதிகம். இவைகளை சமரசங்கள் என்று சொல்வதை விட அவர்களது மன நிலையே அப்படி தான் இருக்கிறது.. அதையே அவர்களது படைப்புகளும் பிரதிபலிக்கிறது என்றே தோன்றுகிறது.
நகைச்சுவை என்பது நம் அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய பகுதி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை எந்த நிலையில் உள்ளது? நகைச்சுவை என்ற பெயரில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றி எழுத தோன்றியது.. காரணம் நெடு நாளாகவே இது என் மனதை சங்கடப்படுத்திய ஒன்று.

ஹாலிவுடின் ஒரு படம் "shallow hal" வணிக பார்முலா நகைச்சுவை படம். ஆனால் வணிக யுக்திகள் அனைத்தும் இருந்தும் நாகரிகமான நகைச்சுவை படம். அழகான பெண் காதலியாய் கிடைக்க எண்ணும் ஒரு சராசரி இளைஞன், ஒரு மனோதத்துவ டாக்டரால் அக அழகு உள்ளவர்களையே புற அழகு உள்ளவர்களாகவும் காணும் மன நிலை அடைகிறான். ஒரு குண்டுப் பெண்ணை அழகான பெண்ணாக எண்ணி காதலிக்கிறான். அழகான குழந்தைகளை பார்க்கிறான்.. அந்த குண்டுப் பெண்ணோடு பழகும் ஒரு அழகான வாலிபனை பார்கிறான்.. இறுதியில் எல்லாம் சரியான பிறகு அந்த அழகான குழந்தைகள் தீயில் கருகிய குழந்தைகள், அழகான வாலிபன் அவ்வளவு அழகு இல்லாதவன் என்றும் தெரிகிறது, இறுதியில் அந்த குண்டுப் பெண்ணை தன் காதலோடு முழுமையாக ஏற்கிறான் (பரிதாபத்தினால் அல்ல) என படம் அழகு குறித்த நம் மனப்பான்மையை பற்றி யோசிக்க வைக்கிறது. இது ஒரு முழு நீள நகைச்சுவை வணிக படம்.. நுணுக்கமாக பார்த்தால் 'shallow hal' நிறைய குறைகள் உள்ள படம் தான், ஆனால் ஒட்டுமொத்தமாக மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மனநிலை கோளாறு பற்றி யோசிக்கும் படம்.
தமிழில் இது போன்ற படம் எதிர்பார்க்க முடியுமா? தெரியவில்லை. (நெடு நாள் முன்பு நானும் ஒரு பெண் வந்தது.. ஆனால் அதிலும் பச்சாதாபமே அதிகம் கையாளப்பட்ட உணர்வு) இது போல் வர வேண்டாம். இதற்க்கு எதிர் மறையான படங்களாவது வராமல் இருக்கலாம். 
நமது நகைச்சுவை பெரும்பாலும் சமூகத்தின் மாறுபட்ட உடல், வாழ்க்கை முறை உள்ள சிறுபான்மையினர் பற்றிய கிண்டலாகவே அமைந்து உள்ளது.. அழகு, மாறுபாடு, குறை பாடு இவற்றை ஏற்க முடியாத தன்மை இயல்பானது. ஆனால் மட்டுப் படவேண்டிய ஒரு உணர்வு.. சக மனிதனை அவனது மாறுபாடுகள் நீங்க ஏற்பது அடிப்படை மனித நெறி. இதை கிண்டல் செய்வது அயோக்கியத்தனம் அன்றி வேறென்ன??

கவுண்டமணி செந்தில் எப்போதும் மாறு கண் உள்ள பெண்கள், கறுப்பு பெண்கள் இவர்களை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார்கள். அடுத்து உயரம் குறைவானவர்கள் இவர்கள் எப்போதும் நகைச்சுவை பகுதிக்கு தான்.. 
பேரழகன் படத்தில் சூர்யா காதலுக்கு ஜோதிகா தான். ஒரு உயரம் குறைந்த பெண்ணை அவர் அவமதிக்கிறார். அந்த பெண்ணும் ஒரு நகைச்சுவை பாத்திரமாக கோமாளி போல வந்து போகிறார்.. . இந்த நியாய தர்மங்கள் எனக்கு புரிவதே இல்லை. காது கேளாதவர்களும் கிண்டலுக்கு பாத்திரமானவர்களே.... முன்பு இத்தகைய பல நகைச்சுவை காட்சிகளை ரசித்து உள்ளேன்.. இப்போது அதை நினைத்து வெட்கப்படுகிறேன். இவற்றை எல்லாம் வெறும் நகைச்சுவையாக மட்டுமே எடுத்து கொள்ளும் பரந்த மனப்பான்மை இப்போது எனக்கு போய் விட்டது.. சமிபத்தில் ஒரு திருமங்கையின் blog படித்த போது இந்த கேலியும் கிண்டலும் அவர்களை எந்த அளவு வேதனை படுத்தும் என உணர முடிந்தது. அரவாணிகளை நாம் எதோ கிண்டல் செய்ய மட்டுமே பிறந்தவர்களை போல் கையாளும் கையவாளித்தனம் என்று ஒழியும்? எத்தனை படங்கள் எத்தனை பாடல்கள் ?

அரசியல் கன்றாவிகளை அம்பலமாகும் காட்சிகளை நறுக்க தவறாத சென்சார் போர்ட் இதையெல்லாம் ஒரு விஷயமாகவே கருதுவதில்லை.. எல்லாவற்றையும் ஏற்று கொண்டு செல்லும் மனபோக்கு நம்மிடம் தாராளமாக உள்ளது.. just ஜோக் தானே, சினிமா தானே... இதெல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது .. ரொம்ப யோசிக்க கூடாது.. இது தான் நம் மனநிலை.. மாறுபாட்டை கிண்டல் செய்வது நமக்கு ஜோக் அவர்களுக்கு உயிர் வேதனை என்று எப்போது உணரப் போகிறோம்??

இது போன்ற காட்சிகளை உதாரணம் சொல்ல எத்தனையோ படங்கள் உள்ளன. எடுத்துக்காட்ட நினைத்தால் ஏகப்பட்ட காட்சிகள் மனதில் வருகின்றன.. சமிபத்தில் ஓர் பால் விழைவு உள்ளவர்கள் பற்றி கிண்டல் ஆரம்பித்து உள்ளது.. மொழி போன்ற தரமான படமாக கருதப்படும் படங்களும் இதில் விதி விலக்கல்ல. இவை நகைச்சுவையா ? 

சமூகத்தின் அங்கிகாரம் அற்ற சாராரை, சற்று மாறுபட்ட புற லட்சணங்கள் உள்ளவர்களை கிண்டல் செய்ய மட்டும் தான் தோன்றுமா?

23 ஆம் புலிகேசி போன்ற பொறுப்புள்ள சில நகைச்சுவை படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் எந்த உணர்வுகளை தூண்ட வேண்டும் தூண்ட கூடாது என்ற பொறுப்பு கடமை படைப்பாளிக்கு உள்ளது. (23 ஆம் புலிகேசியில் கூட அரவாணி ஒருவர் அந்தப்புர அழகிகளின் மேற்பார்வையாளராக காட்ட படுகிறார். யதார்த்தத்தில் எப்படி இருக்கிறது /இருந்தது என்பது முக்கியம் அல்ல. ஒரு சமூகத்தின் மன நிலை மாற வேண்டி இருக்கும் போது இப்படி காண்பிப்பது தேவையா? வடிவேலு அவருக்கு பணம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பும் போது ஒரு கீழ் நிலை ஆளாகவே அவரை நடத்துகிறார்.. இதை சிம்பு தேவன் போன்ற படைப்பாளி வேறு விதமாக கையாண்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்து இருக்கும்!)

காது கேளாதோர், வாய் பேசாதோர், மாறு கண் உள்ளோர், கறுப்பான பெண்கள், மாறுகண் உள்ளவர்கள், குண்டானவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், தொழு நோய் உள்ளவர்கள், உயரம் குறைந்தவர்கள்,வயதானவர்கள்,அரவாணிகள்,ஓர் பால் விழைவு உள்ளவர்கள், எல்லாரையும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள், மக்களும் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்!!
நமது ஹீரோக்கள் ஆனால் பெண்களின் பாகங்கள் பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள், அவர்கள் கற்பு பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசுபவர்கள், ரவுடிகள்,கொலை செய்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள்,இரு தாரம் கட்டியவர்கள், புகை பிடிப்பவர்கள், சோகம் வந்தால் தண்ணி அடிப்பவர்கள்.. உண்மையில் இந்த பண்புகளே கிண்டல் செய்ய படவேண்டிய பண்புகள். ஆனால் இவை இன்றைய heroism..

ஒரு பொறுப்பான சமூகம் யாரே எல்லாம் அக்கறையுடன் அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.. யாரை எல்லாம் மறுக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் கதாநாயகர்களாக வரித்து கொண்டு உள்ளோம்.
இந்த அநியாயம் ஓயும் வரை நமது கலை ஒரு நோயாளிக் கலையே. நமது சமூகம் இதை பார்த்து சிரித்து மகிழும் வரை ஒரு நோயாளி சமூகமே..

நகைச்சுவை செய்ய தெரியவில்லை என்றால் "shallow hal" பார்க்க வேண்டாம் .. நமது nsk, தங்கவேலு, சந்திரபாபு இவர்களது நகைச்சுவையை பாருங்கள்.. போதும் போதும் எனும் அளவு அவர்களிடம் கற்று கொள்ளலாம் சிரிக்க வைக்க..

8 கருத்துகள்:

  1. உண்மையில் வருத்தப் பட வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... ‘டூரிங் டாக்கீஸ்’ ஒனர் (வேற யாரு நாந்தேன்) அனுமதியில்லாமல் நீங்கள் எவ்வாறு இங்கு பதிவிடலாம்...

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான் தல. மாற்று திறன் கொண்டவர்களை எப்போதும் இழிவு படுத்தி வந்து இருக்கிறது தமிழ் சினிமா. இந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது. காரணம் படைப்பாளிகளுக்கு கொஞ்சம் சொரனை இருக்கிறது. மேலும் ‘பேரழகன்’ படத்தில் மாற்று திறன் உடையவர்களை அத்தனை கொச்சை படுத்தியிருக்க மாட்டார்கள். மாறாக, ஒரு கம்பி மேல் நடப்பதை போல் அந்த பக்கம் போகாமல், இந்த பக்கம் போகாமல் கொஞ்சம் நாசூக்காக சொல்லியிருப்பர் ‘Shallow Hal' மாதிரி...

    பதிலளிநீக்கு
  4. உடல் சவால் உள்ளவர்களை கிண்டல் செய்வது போல தமிழ் சினிமாவில் அழகு பற்றி வாய் கிழிய நிறைய பேசுகிறார்கள். இவர்கள் தலையில் வைத்து கொண்டு ஆடும் பாலசந்தர், வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் s.v. சேகர் அழகு பற்றியும் உன்னால் முடியும் தம்பி படத்தில் மனோரமா அழகு பற்றியும் பேசுவது அழகு பற்றிய அவரது அசிங்கமான தத்துவத்தை காட்டும். சித்தாந்த ரீதியாக தெளிவாக படமெடுக்கும் படைப்பாளிகள் இங்கே ரொம்ப குறைவு.

    பதிலளிநீக்கு
  5. >பிரசன்னா..இன்னிக்கு காலையில நியூஸ் பாக்கலயா நீ.. முன்னாள் பாரதிதாசன் பொறியியற் மாணவர்களால் லட்சிய நோக்குடன் நடதப்பட்ட பிரபல ஓர்குட் குழுமம் டூரிங் டாக்கீஸ் உரிமையாளர் (பிரசன்னா) மற்றும் சக-உரிமையாளர் (பிரசன்னாவால் தேர்ந்தெடுக்கபட்ட ராஜரத்தினம்) ஆகியோரைடய ஏற்பட்ட மனப்பூசல் காரணமாக குழும அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. தமிழ் அறிவு ஜீவிகள் சமீப காலமாக இத்தகு குழு போட்டிகளால் அறுவறுக்கத்தக்க சண்டைகளில் ஈடுபடுவது தெரிந்ததே.. இப்படி போகுது.. (இத பத்தி பிரபல ப்ளாக்கர்ஸ் அன்லக்கி லூக், பொங்கல் வடை வருத்தம் தெரிவிச்சு எழுதிய பதிவுக்கு வந்த பின்னூட்ட எண்ணிக்கை மட்டும் 2010. அனாமதேய கெட்ட வார்த்தை பின்னுட்டங்கள் அதில 2009)

    பதிலளிநீக்கு
  6. >மீண்டும் பிரசன்னா :)..
    உண்மை தான் பிரசன்னா.. தமிழ் சினிமா நிலை கொஞ்சம் மாறி உள்ளது போலவே தோன்றுகிறது..(உ.ம். தனுஷின் ’குட்டி’ படத்தில் வரும் அவனது தோழி..) ஆனால் இப்போதைக்கு எந்த முடிவுக்கும் செல்ல இயலாது.
    மற்றபடி பேரழகன் படம் மேல் எனக்கு அத்தனை அபிப்ராயம் இல்லை. :( (அது குறித்து விரிவா எழுதினா நீ இந்த ஆளு பின்னூட்டம் கூட வள வளனு தான் எழுதுவாரானு யோச்சிப்ப.. அதனால வேணாம்)

    பதிலளிநீக்கு
  7. >> ஜான்.. வறுமையின்.. உன்னால் முடியும்.. ரெண்டுமே நான் என் பதின் பருவத்துல பாத்தது..(பல தடவைகள்) அப்போ அவ்வளவு கூர்மையா நீங்க சொன்ன இடங்கள பாக்கல.. :( அதனால அதிலுள்ள தத்துவ சிக்கல் குறித்து உணர முடியல.
    உங்க தனுஷ்கோடி படங்கள் பாத்தேன். கலக்குறீங்க..

    பதிலளிநீக்கு
  8. >>ராமலிங்கம்.. பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...