ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

நான் வித்யா - வாழும் புன்னகை




”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு எந்த தொந்தரவும் இருக்காதே?”

சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன் ‘ ஒன்னும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானது தான். இப்பக் கூட வர்ற வழியிலே ஆட்டோ ஸ்டாண்ட்லேர்ந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேர அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாய்த்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டு வந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கிற விதத்துல தான் சார் இருக்கு. அதயும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுகிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சுத்தான் ஆகணும்.’ என்ற என் ப்தில் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்.
‘என்னைக்கும்மா ஜாயின் பண்றீங்க?’ என்று கேட்டார்.
அந்த கணத்தை என்னால் மறக்கமுடியாது. எத்தனை காலப் போராட்டம்! ஒரு வேள்வி மாதிரி தான் வேலை தேடிக் கொண்டிருந்தேன். இதோ பலனளிக்கிற நேரம். ‘நாளைக்கே சேர்ந்துடறேன் சார்!’ என்று சந்தோஷமாகச் சொன்னேன்.... காலம்காலமாக அடிமையாக இருந்து விட்டு திடீரென்று விடுதலை பெற்றவளைப் போல் என்னை நான் உணர்ந்தேன். 

நான் சரவணன்  வித்யா - புத்தகத்திலிருந்து..

யார் நிஜமான போராளி? நிறைய உணர்ச்சிகளோடு பேசுபவனா? வன்மையோடு எழுதுபவனா? தன் மக்களை ஒரு சாராருக்கு எதிராய் தூண்டி விடுபவனா? நிறைய தத்துவச் சிக்கல்களை ஆராய்பவனா? என்னளவில் இதில் யாரும் எத்தனை உச்சத்தில் இருந்தாலும் போராளி அல்ல. எவன் தன் சுய அடையாளத்திற்காகவும் தன் இனத்தின் அடையாளதிற்காகவும்   நம்பிக்கையுடன் போராடுகின்றானோ அவன் தான் போராளி.
வித்யா ஒரு போராளி. ஆண் உடலில் தன் பெண்மையை  சுமந்து கொண்டிருக்கும் அவள் கேட்பதெல்லாம் மிக எளிய கேள்விகள். நான் ஒடுங்கி வாழ நான் செய்த தவறு என்ன? நான் ஏன் பிச்சை எடுக்க தள்ளப்படேன்? எனக்கு ஏன் குறைந்த பட்ச அங்கீகாரம் கூட இந்த அரசும் சமுதாயமும் செய்ய மறுக்கிறது?
இவளின் குரல் காலம் காலமாய் ஒடுக்கபட்ட இனத்தவரின் குரலில் இருந்து மாறுபட்டதில்லை. நீ ‘ச்சீ’ என்று ஒதுக்க, நீ வசை பாட, நீ கீழே போட்டு மிதிக்க நான்  ஒன்றும் ஒன்றுக்கும் ஆகாதவள் அல்ல.  நான் தவறு செய்யவில்லை. சமரசம் செய்யவில்லை. நான் என் சுயத்தை கழுவியவள் இல்லை. உன்னிடம் யாசகம் கேட்கவில்லை. நான் வாழ்வேன். உன் முன்னால். என் இனம் வாழும் என துணிந்து நிற்பவள் வித்யா.
அவள் வாழ்க்கை புத்தகத்தை படித்தேன்.
இலக்கியங்கள் தரும் ஒரு சங்கடத்தை வாழ்க்கையின் நிலையின்மை குறித்த பயத்தை , அதே சமயம் வாழ்க்கை ஒரு கொண்டாடப்பட வேண்டிய மகானுபவம் என்ற நம்பிக்கையை அந்த புத்தகம் தந்தது.
அது இலக்கியமா? இல்லை
பிரச்சாரமா? கிட்டத்த்ட்ட
அழகியல்? ம்ஹ்ம்ம்..
தொடக்க நிலை எழுத்தா? ஆமாம்.
ஆனால் எழுத்து இதை எல்லாம் மீறி நம்மை அசைக்கும். வடிவம், அழகு, கட்டமைப்பு, பொருள் என எல்லாம் புறவயமானவை. ஒரு படைப்பின் அகம் அதன் நேர்மையில் இருக்கிறது. அறச்சீற்றத்தில் இருக்கிறது. அது நம் மேல் எழுப்பும் அனுபவத்தில் இருக்கிறது. இந்த புத்தகத்தில் இவை எல்லாமும் உள்ளதா தெரியவில்லை. ஆனால் என்னுள் இதன் அகம் சுத்தமானது என்ற உணர்வு. அவன் (சரவணன்) அவளாய் (வித்யா) மாறி தன்னை மீட்டெடுக்கும் நாட்கள் நம் முன் விவரிக்க படும் போது இது யாரோ ஒருவரின் வாழ்க்கை அல்ல. நம் சமூகத்தின் வேறொரு முகத்தை காட்டும் கண்ணாடி என புரிகிறது.
 கூன் ,குருடு என உடல் மாறுபாடு உள்ளவர்கள் மேல் காட்டப்படும் கரிசனம் ஏன் சுயம் மாறியவர்கள் மேல் எற்படுவதில்லை. கிண்டலும் முகச்சுளிப்பும் வீசப்படுவது ஏன்? நம் கரிசனமும் பச்சாதாபமும் எத்தனை போலியானது. எத்தனை பாரபட்சமானது .
ஆனால் வித்யா சமூகம் குறித்தும் அதன் போலி முகம் குறித்தும் புலம்பவில்லை. அவளின் மூலதனம் சமூகத்தின் அழுகிய பகுதி குறித்த பயம் அல்ல. அதன் பசிய இலைகள் மேல் அவளுக்கு அபார நம்பிக்கை. ஆம். மானுடம் குறித்த நம்பிக்கை குறைந்தால், இருந்து என்ன ஆகப் போகிறது.
அவளோடு வந்தவர்கள் கிண்டல் செய்தவர்கள் அல்ல. பச்சாதாப கேஸ்கள் அல்ல. சக மனிதனை சக மனிதனாக மட்டுமே பார்க்கும் யதார்த்தவாதிகள்.
ஆம் வாழ்க்கை எத்தனை எளிமையானது தெரியுமா? உன்னோடு கூட வருபவனுக்கு அவனுக்குரிய மரியாதை, கொஞ்சமாய் அன்பு இது மட்டும் போதும் . யாரும் ஒடுங்கி வாழப்போவதில்லை.

வித்யா இன்று வாழும் புன்னகையாக மலர்ந்து இருக்கிறாள். ஒரு புன்னகை மலர எத்தனை வலி என்று நான் சங்கடப்படுவதா அல்லது அவள் மலர்த்திய புன்னகை மானுடம் தோற்பதில்லை என்பதற்க்கான சான்றென நம்பிக்கை கொள்வதா? இல்லை இன்னும் ஒரு லட்சம் புன்னகைகள் ஒடுங்கி வெறும் உதட்டு சுளிப்பாக பம்பாயில் யாசகம் பெற்று வாழ்வதை நினைத்து பொருமுவதா? தெரியவில்லை.
அவள் செய்யும் புன்னகை வெறும் குறியீடு மட்டுமே. அடையாளம் அல்ல. அவள் புத்தகத்தின் கடைசி பக்க்கங்கள் இரஞ்சுவது ’வாழ விரும்புகிறேன் தன்மானத்துடன்’ என்பதே.
புத்தகத்திலிருந்து மேலும் ஒரு பகுதி.
ஒரு முறை பீல்ட் ஒர்க்கிற்க்காகச் சென்றுகொண்டிருந்த போது சில சிறுவர்கள் என்னை பார்த்து ‘ ஊரோரம் புளிய மரம்.. ‘ என்று பாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு அதிகபட்சம் இருந்தால் பத்து பதினோரு வயதுக்குள் தான் இருக்கும். யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது? என்னைப் பார்த்ததுமே கிண்டல் செய்யும் எண்ணம் எப்படி உதிக்கிறது? பிறவியிலேயே அது வருமா? ரத்தத்திலேயே இருக்குமா? இதுவும் ஒருவித ஆதிக்க மனோபாவம் இல்லையா? சாதி மத இன மொழி வித்தியாசங்களே இதில் கிடையாது. திருநங்கையா? கிண்டல் செய். சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குதல் செய். அவமானப்படுத்து. அழச் செய். அலறி ஓடச் செய். 
என்ன உலகம் இது? நான் திகைப்புடன் அந்த சிறுவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக ஒரு சிறுவன் தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாக்கெட்டைச் சடாரென்று என் மீது வீசி விட்டு ஓடினான். சற்றுத் தொலைவிலிருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சிரித்தார்கள். சில பெண்களும் கூட. 
எனக்கு புரிய வேண்டியது இது தான். நான் இவர்களுக்கு என்ன தாறு இழைத்தேன்? ... எனக்கு வாய்த்த நிறம். எனக்கு வாய்த்த உடல். எனக்கு வாய்த்த இயல்பான பெண்மை. இது ஏன் யாருக்கும் புரியவில்லை???

இத்ற்கு மேல் நான் என்ன சொல்ல?? ஒருவரின் வாழ்வின் வலி நமக்கு பரிகாசம் என்றால் அந்த அசிங்கம் பற்றி எத்தனை பக்கம் எழுதி என்ன ஆகப் போகிறது.
http://livingsmile.blogspot.com/

புத்தக விவரங்கள்:
Naan, Vidya,
'Living Smile' Vidya Copyright
216 Pages, Rs100
ISBN: 978-81-8368-578-8
Kizhakku Pathippagam.

8 கருத்துகள்:

  1. இந்த புத்தகத்தை எப்படியும் வாங்கி விட வேண்டும் என்று, போன முறை இந்தியா வந்த போது நினைத்தேன். ஆனால் சொந்த பிரச்சனைகளால் மறந்து விட்டேன். திருநங்கைகள் இன்றளவும், அருவருக்கத்தக்கவர்களாகவே சமூகம் கருதி வரும் சூழலில் இத்தகைய புத்தகம் ஒரு Eye opener என்றே தான் சொல்ல வேண்டும். எதையும் மிகைபடுத்தாமல், ரொமாண்டிசைஸ் செய்யாமல் அப்படியே கொடுத்தல் தான் தற்போதைய புத்தகங்களின் தொனி.

    ஜோதி நரசிம்மனின் ‘அடியாள்’ கூட இதே போன்று தான் உள்ளதை உள்ளபடியே உரைத்தது. உண்மையில் கிழக்கு பதிப்பகத்தின் இது போன்ற முயற்சிகளை பாராட்ட வேண்டும். நல்ல பதிவு தல. இந்த புத்தகத்தை படிக்கும் ஆவலை மேலும் தூண்டி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  2. >பிரசன்னா..
    நிச்சயம் eye opener தான். படிப்பவர்கள் நிச்சயம் யோசிக்கவாவது செய்வார்கள். நான் புத்தகம் பற்றி கேள்விப்படவில்லை. உடுமலை.காம் கடைக்கு சென்றிருந்த போது தற்செயலாக பார்த்து எடுத்தது.
    ‘அடியாள்’ எதைப் பற்றியது? (பெயர் சொல்வது போல் கூலிப் படை பற்றியதா? அடுத்த முறை சென்னை போனால் வாங்குகிறேன்)
    வித்யாவின் ப்ளாக் படிக்கிறியா? விஜய் டீவியின் ரோஸ் பற்றி காட்டமாய் சமீபத்தில் எழுதி இருக்கிறார். இது அவர் குறிப்பிட்டது போல தனிமனித காழ்ப்பு இல்லை என்றால் சரி. இருந்தாலும் கொஞ்சம் குழப்பம் தரும் பதிவாக நான் உணர்ந்தேன்; மேலும் எழுதுகிறேன் எனச் சொல்லி உள்ளார்.. பார்ப்போம். எப்படியும் பொதுவாக ரோஸின் அந்த டாக் ஷோ பற்றி எனக்கும் சில விமர்சனங்கள் உண்டு. கணினி வாங்க பொருளாதார உதவி கேட்டும் வித்யா எழுதி உள்ளார். உதவுவது குறித்து யோசனை செய்து உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. இந்த திறனாய்வுக்கு நன்றி. சில தவறுகளுக்கு காலத்திடம் மட்டுமே பதிலை எதிர் பார்த்து கொண்டிருக்கும் இந்த வேடிக்கை சமூகத்தின் செயல் பாடுகள் இவை. சொந்த நாட்டில் அகதிகளாக இறக்கும் இவர்களின் வாழ்க்கை நம்முடைய செயல்பாடுகளில் தான். இவர்களுக்காக நான் முன்பு எழுதிய கவிதையை இங்கே உங்கள் அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்

    திருநங்கைகள்
    " நாங்கள் என்ன 33% கேட்டோம்
    1% தானே உங்கள் அன்பை மட்டும் "

    பதிலளிநீக்கு
  4. >நன்றி குட்டிசாத்தான்..
    கவிதை நன்றாக இருந்தது. நான் சொல்வதும் அது தான் அது திருநங்கை அல்லது யாராக இருந்தாலும் சக மனிதனிடம் ஒரு 1% அன்பு போதும். வேறென்ன தேவை எல்லாரும் இன்புற்றிருக்க? (உத்தோப்பியக் கனவுகள்?? )

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு, வெண்ணிற இரவுகளில் உங்கள் பின்னூட்டத்தை அருமையாக எழுத பட்டு இருந்தது.

    பதிலளிநீக்கு

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...