திங்கள், 29 மார்ச், 2010

அங்காடித் தெரு -- யானையும் எறும்பும்


வசந்தபாலனின்  ’வெயில்’ கொடுத்த எதிர்பார்ப்பில் ஜெயமோகனின் பப்ளிசிட்டியில் :) நிச்சயம் ஒரு நல்ல படமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடனே ’அங்காடித் தெரு’ பார்க்க சென்றேன். நல்ல படமா? நிச்சயமாக.  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? கண்டிப்பாக.  ஆனால் ‘ஆனால்’ என்ற ஒரு  இழுவை  படம் முழுதும் என்னை தொற்றிக் கொண்டே தான் இருந்தது.  காரணங்களை போகிற போக்கில் சொல்கிறேன். தமிழ் சினிமா மேல் நம்பிக்கை தரும் மற்றுமொரு படமாக அங்காடித் தெருவை நான் மட்டும் இன்னும் நிறைய பேர் சொல்லத் தான் போகிறார்கள். களம், கதை மாந்தர் ,திரைக்கதை எல்லாமே முதிர்ச்சியுடன் மிகுந்த குவிப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் நிஜமான கரிசனத்துடன் வந்த சில தமிழ்ப்படங்களில் ‘அங்காடித் தெரு’ வும் ஒன்று. நாம் கடை வீதியில் மிக வேகமாக கடக்கும் போது   நம்மை  நிறுத்தி இதோ பார் இந்த மனிதர்களை இவர்கள் வாழ்க்கை எத்தனை நெருக்கடியானது, அவர்கள் வாழும் இந்த கடைத் தெரு போலவே என்று ஒவ்வொருவர் பற்றியும் கதை சொல்கிறது.  நீ ப்ளு கலர் சுரிதார் கேட்ட்யே அந்த பொண்ணு காசுல தான் அவ அப்பா மருந்து வாங்குராரு. ஸ்டோன் ஜீன்ஸ் கேட்ட பையன் காலைல இருந்து  50-60 கிலோ மூட்டைகளை குடோன்ல எறக்கிட்டு ஷிஃப்டுல வந்தான். நீ ஷிஃபான் சாரி கேட்ட பொண்ணு இந்தா பத்து நிமிஷம் முன்னாடி தான் அவ மார அவ முதலாளி தடவுனான்  இந்த ப்ளாட்பார்ம்ல  கர்ச்சீப் விக்குற பெரியவரு 15 வருஷமா இங்க தான் பொழப்பு நடத்துராரு. அவுரு பொஞ்சாதி கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியில ஊசி மாத்தி போட்டு செத்து போச்சு. கிளிப்பு விக்குற பொண்ணுக்கு போன ஜனவரில ரோட்டோரமா படுத்து இருக்கும் போது லாரி அடிச்சு ரெண்டு காலும் போயிடுச்சு என எல்லாம் நமக்கு தெரிந்த கதைகள் ஆனால் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்பவை. காசு இல்லை என்றாலும் கலர் கலராய் கனவுகள் வராமலா போய்விடும்? வ்ந்த கனவுகளுக்கு என்ன விலை தர? கனவுகளின் நிழலாய் யதார்த்தம் பயமுறுத்தும் போது எவ்வளவு சமரசங்கள் மனசாட்சியை உறுத்தாமல் நிகழும்?  என கேள்விகளை நம் முன் இறைக்கிறது இந்தப் படம்.  ரங்கனாதன் தெருவில் இறைந்து கிடக்கும் பொருட்கள் போலவே படம் நெடுகிலும் கேள்விகள். யதார்த்ததை தொலைக்காத முகங்கள் படத்தின் பெரும் பலம். அதிலும் அந்த கதாநாயகி அத்தனை உயிர்ப்பு அவளிடம்.


ஆனால்..
படம் முடியும் போது ஒரு முதிர்ந்த அழுத்தமான படம் பார்த்து விட்டு வரும் போது கிடைக்கும் அனுபவம் என்னிடம் இல்லை. காரணம் நிறைய. மிக முக்கிய காரணம்  மிகை உணர்ச்சியும் நாடகத்தனமும் படம் முழுதும் விரவியிருக்கின்றன. ‘இங்க பாத்தியா இவன் எவ்ளோ பாவம்னு இங்க பாத்தியா இவன் எவ்வளவு கஷ்டத்துலயும் நம்பிக்கயோட இருக்கானு’ என்பது போல ஒரு வித சொல்லிச் சொல்லி காண்பிக்கும் அணுகுமுறை நம்மை படத்திலிருந்து விலக்குகின்றன.  போகிற போக்கில் சொல்லப் படவேண்டிய வாழ்க்கை துணுக்குகள் கூட அத்தனை அதி உணர்ச்சியுடன் அரங்கேறுகின்றன. உ.ம் - உயரம் குறைந்த மனிதரும் அவர் மனைவியும். இதில் அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் குறைபாட்டுடன் பிறக்கிறது. அதற்க்கு அந்த பெண் தரும் விளக்கம் வேறு. குறையுடைய மனிதனுக்கு குறையுடன் குழந்தை பிறக்கும் என்ற தேவையற்ற ஒரு செய்தி தான் இந்த அதி உணர்ச்சி கதையால் கிடைக்கும் ஒரே நன்மை.  பிண்ணனி இசை பெரும் பலவீனமாக நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் இசை பின்னால். நாடகத்தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் நோக்குடன். ஹ்ம்ம்.. ரொம்பவே இளையராஜாவை மிஸ் பண்றேன் :(


குறைகளை மீறி அங்காடித் தெரு என்னை கவர்ந்த படம். காரணம் அது துணிவுடன் முன் வைக்கும் முதலாளித்துவ பிரச்சினைகள் மட்டுமல்ல. அது காட்டும் சராசரிகளின் கனவுகளால் அவர்கள் சமரசஙகளால்.  இவை எல்லாவற்றையும் விட அதன் அடி நாதமாய் இருக்கும் மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. அந்த பிளாட்பார பாய் சொல்வது போல  ‘ மனுசன  நம்பி கடை போட்டு இருக்கேன், பத்து வருஷமாச்சு. இன்னும் நம்பிக்கை குறையல’ இந்த நம்பிக்கையுடன் தான் மானுடம் இயங்குகிறது. யானை வாழும் காட்டில் தான் எறும்புகளும் வாழும் ஒன்றுக்கு ஒன்று துணையாய், நம்பிக்கையுடன். இதே செய்தியுடன் படம் முடிகிறது. மிக அழகாய்.
பி.கு: அட இப்போ எல்லா படத்துலயும் நம்ம விக்கிரமாதித்தியன பாக்க முடியுது நம்ம கவிஞர் கொஞ்ச நாள்ல ஸ்டார் நடிகர் ஆகிடுவார் போல :-)

வியாழன், 25 மார்ச், 2010

பகத் சிங்கின் இறுதி முறையீடு (தமிழில்)


 கீழ்வரும் பத்தி, தூக்கிலிடும் முன் பகத் சிங் பஞ்சாப் ஆளுநருக்கு எழுதிய மனு.  எழுதப்பட்ட தேதி சரிவர நிறுவப்படவில்லை. 
 

பெறுநர்,
பஞ்சாப்  ஆளுநர்.

ஐயா,
 பெரு மதிப்புடன் கீழ்வருவனவற்றை உஙள் கவனத்திற்க்கு எடுத்துக் கொள்ளுமாறு இறைஞ்சிகிறோம்.

நாங்கள் அக்டோபர் 7,1930 அன்று ஒரு பிரிட்டிஷ் நீதி மன்றம் ,LCC தீர்ப்பாயத்தால்  (LCC Tribunal) மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இத்தண்டனை லாகூர் சதிவழக்காக இந்திய பிரிட்டிஷ் அரசின் தலைவர் மாண்புமிகு வைஸ்ராய் அவர்களால் தொடுக்கப்பட்டது. எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம்,மாண்புமிகு இங்கிலாந்து மன்னர் மேன்மைதகு ஜார்ஜ் அவர்கள் மீது போர் தொடுத்தது என்பதாகும்.  இந்த குற்றம் இரண்டு முன் அனுமானங்களின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளது.
முதலாவதாக பிரிட்டிஷ் தேசத்திற்க்கும் இந்திய தேசத்திற்க்கும் இடையே ஒரு போர் நடப்பது. இரண்டாவது நாங்கள் அதில் பங்கெடுத்து இருப்பதும் அதனாலேயே போர்க்கைதிகளாவோம் என்பதுமாகும்.

இந்த இரண்டாவது அனுமானம் சற்றூக் கவர்ச்சியானது போலுள்ளது. ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஈர்ப்பைக் கட்டுப்ப்படுத்த முடியவில்லை.
முதல் அனுமானத்தை பொறுத்தமட்டில், நாங்கள் அதற்கான சில விளக்கங்கள் தர வேண்டிய நிலையில் உள்ளோம். மேல் குறிப்பிட்டது போல் அப்படி எந்தப் போரும் நடப்பது போல தெரியவில்லை.
இருந்தாலும் அந்த அனுமானத்தை, அது முன்னிறுத்தும் முக்கியத்துவத்தை கொண்டு, அதன் மதிப்பை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு அனுமதி தாருங்கள்.  ஆனாலும் அது குறித்து மேலும் புரிந்து கொள்ள நாங்கள், அதனை மேலும் விளக்க வேண்டியுள்ளது.  இங்கு போர்ச்சூழல் நிலவுவதையும் , சில ஒட்டுண்ணிகள் இந்திய அடித்தட்டு மக்களையும்,இயற்கை வளத்தையும் சூறையாடும் வரை அது தொடரும் என்பதையும் பிரகடனம் செய்கிறோம்.
இந்த ஒட்டுண்ணிகள், பிரிட்டிஷ் முதலாளியோ அல்லது இந்திய பிரிட்டிஷ் கலப்போ, அல்லது சுத்த இந்தியராகவோ கூட இருக்கலாம். அவர்கள் இந்த முறையற்ற சூறையாடலை  ஒருங்கிணைந்த இந்திய-பிரிட்டிஷ் அல்லது முழுமையான இந்திய அதிகார முறைகளின் படி நடத்தக்கூடும். இவை எதுவும் ஒரு பொருட்டேயில்லை. உங்கள் அரசாங்கம், எங்கள் மேல் தட்டு வர்க்க தலைவர்களை, அற்ப சலுகைகள் மற்றும் சமரசங்கள் மூலம் வெல்ல முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்து, அதன் மூலம் எங்கள் முக்கிய சக்திகளின் ஒழுங்கை தற்காலிகமாய் சிதறடித்தாலும் பொருட்டில்லை. மேலும் இந்திய இயக்கத்தின் முதன்மையான புரட்சிக் கட்சியினர், போரின் தீவிரத்தில் தனித்து விடப்பட்டவர்களானாலும் ஒரு பொருட்டில்லை. எஙகள் மேல் காட்டிய பரிவிற்க்கும், அக்கறைக்கும் நாங்கள் மிகவும் கடன்பட்டிருக்கும் எங்கள் தலைவர்கள்....சுரணையற்றவர்களாகி , முதன்மையானவர்களாக கருதப்படும்  வீடற்ற, காசற்ற,  நட்பற்ற பெண் பணியாளர்களுக்காய் தங்கள் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் புறக்கணித்து , காலாவதியான தங்கள் புனித (உட்டோப்பிய) அஹிம்சை மார்க்கத்திற்க்கு எதிரிகளாக அவ்ர்களை பாவிக்கிறார்கள் - எந்த உள்நோக்கமும் இன்றி தியாகங்கள் செய்து அல்லது தங்கள் கணவர்களையும் அண்ணன்மார்களையும் தங்கள் நெருக்கமான அன்பிற்க்குரியவர்களையும், தங்களையும் சேர்த்து தியாகங்கள் செய்ய தாரை வார்த்த , உங்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டவர்களாய் பிரகடனப்படுத்தப்பட்ட, வணக்கத்திற்க்குரிய நாயகிகள் அவர்கள். உங்கள் தரகர்கள் , மிகக் கீழிறங்கி ,மாசற்ற அவர்கள் நடத்தையையும் அவர்கள் கட்சியின் மதிப்பையும் சீர்குலைக்க ஆதாரமற்ற இழிவுகளை ஜோடிக்கலாம். ஆனால் இவை எதுவுமே ஒரு பொருட்டே இல்லை. போர் தொடர்ந்தே தீரும்.

அது வெவ்வேறு காலகட்டத்தில வெவ்வேறு வடிவம் கொள்ளலாம். சிலசமயம் வெளிப்பபடையாக, சில சமயம் மறைமுகமாக சில சமயம் கலவரமாக சில சமயம் வாழ்வா சாவா போராட்டமாக ,எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். அது ரத்தமூறிய வன்முறையாக நிகழ்வதோ அல்லது அமைதியாக நிகழ்வதோ உஙள் கையில் தான் உள்ளது. எது வேண்டுமென உங்கள் விருப்பத்திற்க்கேற்ப முடிவு செய்யுங்கள்.  ஆனால் முக்கியத்துவமில்லாத, அர்த்தமற்ற சமூக நீதிகளைக் கணக்கில் கொள்ளாமல் இந்த போர் முடிவின்றி தொடரும். சோஷலிச குடியரசு நிறுவப்பட்டு இப்போதைய சமூக ஒழுங்கிற்க்கு பதிலாய், சமூகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட, எல்லா வகை சுரண்டல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்ற , உண்மயான, நிலையான சமாதானம் நோக்கி மானுடத்தை முன்னகர்த்தும் புதிய சமூக ஒழுங்கு ஏற்படும் வரை இந்த போர் புதிய எழுச்சியுடன், இன்னும் அதிக தீவிரத்துடன், தணியாத உக்கிரத்துடன் நிகழும்.வெகு சீக்கிரத்தில் இறுதிப்போர் நடந்து இறுதி கணக்கு முடித்துக் கொள்ளப்படும்.

உங்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த  போர் எங்களால் ஆரம்பிக்கப்படவுமில்லை. எங்களோடு முடியப் போவதுமில்லை. இப்போது நிலவும் சூழ்நிலைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத பின்விளைவுகள் இவை. எங்களின் தியாகங்கள் ,திரு தாஸ் அவர்களின் இணையற்ற தியாகம், தோழர் பகவத் சரண் அவர்களின் மேன்மை பொருந்திய தியாகம் மற்றும் எங்கள் பாசத்திற்குரிய போராளி ஆசாத் அவர்களின் உன்னத மரணம் இவற்றால் துல்லியமாக அழகுபடுத்தப்பட்ட சங்கிலித் தொடரில் ஒரு இணைப்பு மட்டுமே.

எங்கள் விதியின் படி நீங்கள் குறித்த நாளில் எங்களுக்கு மரணமளிப்பீர்கள் என்பது நிச்சயம். உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதிகாரமே இவ்வுலகின் மாபெரும் நீதி. உஙகளை வழிநடத்தும் அதிகபட்ச குறிக்கோள் ‘வலியவன் வைப்பதே நீதி’ என்பதே என்று எங்களுக்குத் தெரியும். எஙகளது வழக்கின் விசாரணை மொத்தமுமே அதற்கு சாட்சி. உஙகளுக்கு நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், உங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் படி, நாங்கள் போரில் ஈடுபட்ட போர்க்கைதிகள். அதனால் எஙகளைப் போர்க்கைதிகளாகவே பாவியுங்கள். அதாவது எங்களைத் தூக்கிலிடாதீர்கள். சுட்டுக் கொல்லுங்கள். உங்கள் நீதிமன்றம் சொன்னதை நீரூபிப்பது இனி உங்கள் கையில் உள்ளது.
உங்கள் ராணுவத்திடம், எங்களுக்குக் கொலை தண்டனை வழங்க ஒரு குழுவை அனுப்பச் சொல்லி ஆணையிடுமாறு உஙகளிடம் பணிவுடன் வேண்டிக்  கொள்கிறோம்.


உங்கள்,
பகத் சிங்.


மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : இது ஆங்கிலம் வழி தமிழ் மொழிபெயர்ப்பு.
மூலம்: Words of Freedom  - Ideas Of a Nation Series  -- Bhagat Singh Penguin Books
ISBN:9780143068884

நான் ஒரு மொழி வல்லுனன் அல்ல. கையில் கிடைத்ததை ஆவணப்படுத்தும் ஆர்வத்தில் தான் இந்த மொழிபெயர்ப்பு. சறுக்கலான சில இடங்களை என்னால் உணர முடிந்தது. (குறிப்பாக பெண்கள் சார்ந்த கருத்துக்கள் உள்ள இடத்தில் அதன் வரலாற்றுப் பின்ணனி சரிவர பிடிபடாததால் சறுக்கியதோ என நினைக்கிறேன்)
புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்ததால்  ஆங்கில மூலத்தின் சுட்டி இல்லை.

செவ்வாய், 23 மார்ச், 2010

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

என் சுவர்களுக்கு எப்போதோ  கண்கள் முளைத்து விட்டன.  ஆமாம். இப்போதெல்லாம் எங்கும் தனிமைக்கான வெளி இருக்கிறதா என்ற சந்தேகம் முளைக்கிறது. நான் கவனிக்கபடுகிறேன் என்ற சின்ன பயம் எல்லோருக்கும் கொஞ்சமாய் இருக்கத் தான் செய்கிறது.
மற்றவர்கள் வாழ்க்கை மேல் நம் எல்லோருக்கும் அத்தனை  ஆசை. அவன் என்ன செய்கிறான்?  இவனுக்கு என்னை விட அதிக சம்பளமா? இவளது கணவன் யார்? இன்னும் இன்னும். தோண்டி தோண்டி பேசிக் கொண்டே இருக்கிறோம்.


இந்த கிசு கிசு மனப்பான்மையை ஊடகங்கள் அருமையாக ஊதி ஒரு மாபெரும் வ்ண்ண பலூனாக பறக்க விட்டுள்ளன. உள்ளே காற்றுக்கு பதில் சேறு. ஊடகம் என்பதே காமம் வன்முறை ஆசை இவற்றின் பிரதிநித்துவமோ என்று சில சமய்ம் எனக்கு தோன்றுவதுண்டு.  ஆனால் அது அப்படி மட்டும் அல்ல. ஊடகங்கள் மக்கள் பிரதிநிதியும் கூடத்தான். மக்களின் பிம்பம் அவை.

 பிரபு தேவா - நயனோடு உள்ள உறவு குறித்து நமக்கு தான் எத்தனை அக்கறை.
டைகர் வுட்ஸ் காதலிகளின் எண்ணிக்கை குறித்து எத்தனை பெரிய விசாரனை எத்தனை பேர் இரவு பகல் பாராமல் செய்தி திரட்டினர். அவர் இனி நிம்மதியாய் சிறுநீர் கழிப்பாரா என்பதே சந்தேகம் தான்.

ஒரு செய்திக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் அவனது அந்தரங்கத்திற்க்குள் எந்த அளவு நாம் நுழைய வேண்டும் இவை குறித்த எந்த முதிர்வும் நம்மிடம் இல்லை.

நம் நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறோம்.
கோடி கோடியாய் பணம் தருகிறோம்
அவர்கள் படுக்கையை யாரோடு எல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று விவாதம் செய்கிறோம்.
வேசி முத்திரை குத்த அல்லது அவரது படுக்கையறை காட்சிகளை வலையில் தேட துடிக்கிறோம்.
கோயில் கட்டுகிறோம்.
கற்பு பற்றி பேசினால் செருப்பு மாலை போடுகிறோம்.
முதல்வர் ஆக்கி விடுகிறோம்.
( ஹ்ம்ம்.. அவர்கள் நடிப்பு பற்றி மட்டும்  இதே அளவு அக்கறை கொண்டு இருந்தோமானால் உலக சினிமா நம்மை தேடி இருக்கும். )

 பிரபலமானவர்கள் சொந்த வாழ்கையில் இத்தனை அதிகாரம் நமக்கு யார்  தந்தது?

ஒரு நித்தியானந்தர் கதவை திற எழுதினால், காவி தரித்து பின்னால் ஒளியுடன் புன்னகை செய்து அருள் பாலித்தால் அவர் பெரும் ஞானி . காவி கட்டி முடி வளர்த்து மந்திரம் சொன்னால் அவர்  சந்தேகம் இல்லாமல்  ஞானி தானே. இப்போதைய மார்கெட் ட்ரெண்டில் ஞானிகள் கொஞசம் குண்டலினி,பிராணயாமம் எல்லாம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பணம் கொட்டும் .தெய்வமாய் வழிபடுவோம்; பூஜிப்போம்
பின் அவர் படுக்கையறையில் திருட்டு காமிராவில் பதிவான அந்தரஙகம் காண ஆலாய் பறப்போம். "நித்தியானந்தருக்கு அடுத்தபடியாய் மற்றுமொரு   சாமியாரின்  காம லீலை - படங்களுடன்" -- எத்தனை கவர்ச்சியான டைட்டில்... சும்மா கொடுத்து பாருங்கள் ! உங்கள் வலைப்பூ ஹிட்டுக்கள் லட்சத்தை தொடும். நித்தியானந்தர் படங்களோடு நம் படங்களையும் சேர்த்து கொளுத்தினால் கணக்கு சரியாய்  இருக்கும்.

சரி விடுஙகள் கண்ணாடியில் நிறைய  அழுக்கு இருந்தால் முகம் எப்படி தெரியும். ஆனால் இந்த விளையாட்டு கொஞ்சம் சலிக்கத்தான் செய்கிறது. ஆகையால்  இதோ  காமிராக்கள் இனி உங்கள் வீடுகளிலும். பிரபலமானவர்கள் பற்றி மட்டும் பேசி பேசி அலுக்காதா என்ன?



இனி ஆளப் போவது Reality Shows தான். பின் என்ன நாம் ராஜ ராஜ சோழன் எப்படி பெரிய கோவில் கட்டினான் என்றோ தமிழக காட்டு பகுதியின் நிலை பற்றியோவா பார்க்கப் போகிறோம்? எத்தனை சுவாரஸ்யம் குழந்தைகள் பந்தயக் குதிரைகளாக்கி பாட விட்டு ஆட விட்டு பின் அழ விட்டு விடுவதில்.  அவர்களும் போட்டி நிறைந்த உலகிற்கு தயாராக வேண்டாமா? இன்னும் இன்னும் சுவாரஸ்யமாக பெரியவர்களுக்கு காதல் போட்டிகள்,தனித் தீவில் அவர்கள் மட்டுமே இருந்தால் வாழுதலுக்கு என்ன செய்வார்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டினால் தாங்கும் மனம் அவர்களுக்கு உள்ளதா, அவர்கள் சொந்த வாழ்க்கை சோகங்கள் பற்றிய முழுமையான ஆவணம் என சமூக தத்துவ உளவியல் ரீதியான அர்த்த புஷ்டியான நிகழ்ச்சிகள் தான் நம் தொலைக்காட்சியின் முகம். எல்லாம் சம்மந்தப்படவர்களின் சம்மதத்துடன் தான். பிரபலங்களுக்கு என்றால் சம்மதம் தேவை இல்லை. ஆனால் சாமனியனுக்கு தேவை.
நம் சமூகத்தின் அடுத்த பரிணாம முன்னேற்றம் ஏன் சாமனியனின் சம்மதமும் தேவை இல்லை என்று நிகழ கூடாது? நமக்கு பேச எத்தனை கிடைக்கும்?  Truman Show போல.. என் பக்கத்து வீடுக்காரன் இன்று என்ன சோப் போட்டான் என்பது எனக்கு  குட்டி சுவாரஸ்யம் என்றால் அவனுக்கு என் படுக்கையறை காமிரா பற்றி தெரியாமலா போய் விடும்?

ஞாயிறு, 21 மார்ச், 2010

இவர்கள் கலைஞர்கள்!


இவர் யார்? இவர் வைத்திருக்கும் கருவியின் பெயர் என்ன? இந்தியாவின் எந்த தெருவில் இவர் தன் கலையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் ? எதுவும் எனக்கு தெரியாது.. ஆனால் நிச்சயம் இந்தியா கலைகள் வளர்க்கும் (கலைஞனையும் ) நாடு தான் இல்லையா?

இன்னும்  சில.. யூ ட்யூபில் தேடினால் இன்னும் நிறைய இருக்கிறார்கள் கலைஞர்கள்.



செவ்வாய், 16 மார்ச், 2010

அகநிலம் 3 - பூக்கள் உதிரும் இரவு

எல்லா உறவுகளுக்கும் மிக நெருக்கமான தருணங்கள் உண்டு.வாழ்க்கையை வெறும் நாட்களின் நகர்வாக மட்டும் இல்லாமல் ஒரு அனுபவ தொகுப்பாக நம் இருப்பின் சாட்சியாக மாற்றுபவை இந்த நெருக்கமான தருணங்கள் தான். மற்ற உறவுகள் போல் அல்லாமல் காதலில் மட்டும் இது நெருக்கம் என்பதை தாண்டி அந்தரங்கம் என்ற நிகழ்வாகிறது. எனக்கு மட்டுமே சொந்தமானவை அவை. சில சமயம் அது என்னவளுக்கு (என்னவனுக்கு)  கூட தெரிந்து இருக்க தேவை இல்லை.  என் ப்ளாகோ  டைரியோ அவற்றை கொண்டிருப்பதில்லை.
நான் முதுமையில் நடுங்கும் நோயுடன் படுத்திருப்பேனே அப்போது அவை சிறு எறும்புகளாய் என் மேல் ஊர்பவை. என் சிதைத் தீக்கு மட்டும் தான் அவற்றின் உஷ்ணம் தெரியும்.

ரொம்ப நாடகத்தனமான உணர்ச்சிகள் கொண்டதாய் தெரியும் வரிகள் இல்லையா?
ஆம். மறுப்பதற்கில்லை. காதல் மட்டுமே அத்தனை உணர்ச்சிமயமானது. பிறரிடம் அதை சொல்லும் போது அது அர்த்தம் இழக்கிறது. புரிந்து கொள்ள முடியாததாகிறது. உலகியல் யதார்த்தங்களை போட்டு குழப்பப்படுகிறது.

'உனக்கு தெரியாதுடா .. அவ மத்தவங்க மாதிரி இல்ல. ரொம்ப ஸ்பெஷல் டா.. '
என்று சொல்லாத காதலன் உண்டா? அதற்க்கு உள்ளூர நமட்டு சிரிப்பு சிரிக்காத நண்பன் தான் உண்டா?

சொல்லப்படும் போது காதல் வெறும் உளறலாகிறது. அது உணரப்பட மட்டுமே கூடியது. பிரிவின் போது காதலின் வலியை யாராலும் பகிர்ந்து கொள்ளவே முடிவதில்லை.

'சரி விடுடா.. அவளுக்கு என்ன பிரச்சனையோ?'

'இல்லடி.. கொஞ்சம் ப்ராக்டிகலா தின்க் பண்ணி பாரு'

'கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாய் போய்டும்'

சரி தான். எல்லா வியாக்கானங்களும் அடுத்தவருக்கு ரொம்ப நியாயமானவை தான். ஆனால் தனக்கு வலிக்கும் போது.,உணர்வுகள் ஊசியாய் குத்தும் போது தர்க்கத்தை மனம் கண்டு கொள்வதே இல்லை.
அங்கு நண்பர்கள் மெல்ல அன்னியம் ஆகி விடுகிறார்கள். பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆகிறார்கள். உலகம் முழுதும் மனிதர்கள் இருந்தும் தனிமை சொந்தமாகிறது. அப்போதைய ஒரே துணை தனிமை மட்டும் தான்.
கவியும் இருட்டில் மிதக்கும் இரவு மட்டுமே தான் தோழி.
அவள் மட்டுமே எல்லாவற்றையும் ஏற்கிறாள். நம் கண்ணீர் மொத்தத்தையும் இரகசியமாய் வாங்கி கொள்கிறாள்.

காதலில் உருகும் எந்த ஒருவரையும் பாருங்கள். இரவுக்காக ஏங்குவார்கள்.
பிரிவின் போது இரவில் உங்கள் அறையில் அருகில் படுத்து இருக்கும்   உங்கள் நண்பன் நிச்சயம்  தூங்கி கொண்டு இருக்க மாட்டான். தனக்கு மட்டுமே புரியக்கூடியவற்றை  சுழலும் மின் விசிறியை வெறித்து கொண்டே  அசை போட்டு கொண்டிருப்பான்.


 ஆம்.. பகலை விட மிக நீண்டதாய்,இம்சிப்பதாய், கதை கேட்பதாய், சாய்ந்து கொள்ளும் தோளாய் நிகழ்கிறது காதலின் இரவுகள்.

இரவு வெறும் தூக்கத்திற்கும் புணர்ச்சிக்கும் மட்டுமான பொழுதல்ல என்று காதல் சொல்லித் தருகிறது.  இரவுக்கு உயிர் இருப்பதை அடையாளம் காட்டுகிறது. இரவின் பெரும் மௌனத்தை முறிக்கும் ஓசைகள் துல்லியமாய் காதில் விழுகின்றன.
பல்லியின் விட்டில் தின்னும் ஓசை, சமையலறையில் எதன் மேலோ ஏறி ஊரும் கரப்புகள், சாலையில் BPO ஆட்களை ஏற்றி விரையும் sumo வின் அதிர்வு ,மின்விசிறியின் சீரான ஓசையை சிதறடிக்கும் சிள்வண்டு
என தனக்கான எல்லா ஓசைகளையும் உங்கள் முன்னாள் கொட்டும் இரவு.

உங்கள் மனதின் புலம்பல்களுக்கு இரவின் சத்தங்கள் மட்டுமே தாளம். அது வெறுமனே உங்கள் பாத்ரூமில் சொட்டிகொண்டு இருக்கும் ஒரு குழாயின் ஓசையாகக் கூட இருக்கலாம்.

நீங்கள் காதலிப்பவரானால் இரவுகள் எல்லாமே  உங்களுக்கு மட்டுமேயானது. இரவில் உதிரும் ஒரு பூ கூட உங்கள் காதலுக்கு மட்டுமே சொந்தமானது...!


சங்க இலக்கியங்கள் காதலை கொண்டாடுகிறது. அதனால் அதன் அனேக பாடல்கள் இரவைக் கொண்டாடுகின்றன.  இரவில் கசியும் காதலின்  வலியை பாடும் கவிதைகள் ஏராளம்.

கீழே உள்ள இரண்டு கவிதைகளும் காதலில் நிகழும் இரவை அத்தனை துல்லியமாக அதன் ஒலியின் மூலம் நிகழ்த்துகின்றன.
கவிதை உச்சம் அடையும் தருணம் இந்த இரு கவிதைகளிலும் உண்டு என நம்புகிறேன்.
1)  " சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண் 
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி 
பிறரும் கேட்குநர் உளர்கொல் கூதிர் யாமத்து 
ஆன் நுளம்பு உலம்புதொறு  உளம்பும் 
நா நவில் கொடு நல்கூர் குரலே. "

குறுந்தொகை பாடல்:86;  திணை : குறிஞ்சி; தலைவி கூற்று.

துளித்துளியாய் கண்ணீருடன் நான் காமமெனும் நோயோடு
புலம்புவதை கேட்க வேறு யாரும் உளரோ?
மழைதூரலில் வாடைக்காற்று வீசும்
குளிர் காலத்தில்
ஈயின் தொந்தரவு தாங்காமல்
எருது தலையசைக்க
அதன் கழுத்து மணி சத்தம் கேட்க்கும்
நள்ளிரவில்!

2) "கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சிலமே 
எம் இயல் அயலது ஏழில் உம்பர் ,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி 
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த 
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. "

குறுந்தொகை பாடல்:138;  திணை : குறிஞ்சி; தோழி  கூற்று. 

ஊரே தூங்கியும், நான் தூங்கவில்லை.
எங்கள் வீட்டுக்கு வெளியே
மயிலின் காலடி போன்ற இலைகளை கொண்ட
நொச்சியின் கொம்பிலிருந்து
மலர்கள் உதிர்வது கூட
கேட்கிறது.

திங்கள், 15 மார்ச், 2010

கேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes - தமிழில் )


        படத்தை க்ளிக்கி பெரிதாக்கவும்.. :(

மூலம்: http://dlazechk.dl.funpic.org/weekdaylogicbyhobbes3.html
மூலம் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது..


பொதுவாகவே தமிழில் கேலிசித்திரங்கள் குறைவு. இருந்தாலும் அவை குழந்தைகளுக்கு மட்டும் என்ற நினைப்பு உண்டு. அல்லது அரசியல் சார் சித்திரங்கள் . மதன் மற்றும் சிம்புதேவன் இதை  கொஞ்சம் மாற்றியவர்கள்.கொஞ்சம் மட்டுமே.


நான் மிக ரசிக்கும் சித்திரக்கதைகளில் ஒன்று calvin and hobbes. சில முறை அக்கதை மாந்தன் கேல்வின்  மனச்சித்திரத்தில்  கொஞ்சம் மாறுபட்டாலும் அதையும் மீறி அக்கதைகளை மிகவும் விரும்பியதுண்டு.


தத்துவம், அறிவியல் ஆன்மிகம் உலகியல் கற்பனை நட்பு என எல்லா தளத்திலும் இந்த கதை சித்திரம் நிகழ்வதுண்டு. 
இரு முக்கிய கதாபாத்திரங்கள் .
1) கேல்வின் -- சிறுவன்... நிறைய கற்பனை நிறைய குறும்பு மழலைக்கே உரிய தனி உலகை உருவாக்கி கொள்பவன். 
2) ஹாப்ஸ் -- கேல்வினின் புலி பொம்மை. பொம்மை என்பதை மீறி அவன் கற்பனையால்  உயிர் பெற்று அவனோடு உறவாடுவது. இருவரும் அவ்வளவு நெருக்கம். 
மேலும் அவனது பெற்றோர் ,தோழி மற்றும் ஆசிரியை ஆகியோரும் அதிகம் வருவதுண்டு.


என் வலைப்பூவில் இவர்களது சித்திரக்கதைகள் தமிழில் மாற்றி தர விருப்பம். 
Bill Waterson காப்புரிமை கேட்காத வரை, எனக்கு சலிப்போ பொறுப்பின்மையோ ஏற்படாத வரை இவர்கள் அவப்போது வருவார்கள். 

ஞாயிறு, 7 மார்ச், 2010

வினவு..வசை பாடு.. (லீனா மணிமேகலை கவிதை அரசியல்)

 வினவு தளத்தில் லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளின் போக்கை விமர்சனம் செய்தது கண்டு கிட்டத்தட்ட அதிர்ந்து தான் போனேன்.

பெண்ணியம் குறித்து பேசும் போதெல்லாம் சிலவருடங்கள் முன்பு நிறைய எரிச்சல் பட்டிருக்கிறேன். ஏன் இத்தனை அலப்பறை என்பது தான் ஏன் எண்ணம..
ஆனால் மெல்ல எனது எண்ணங்கள் மாறின.. நிச்சயம் பெண்ணுக்கான இடம் இந்த சமூகத்தில் சரிவர வழங்கப்படவில்லை என்ற எண்ணம் மிக உறுதி பெற்றது.  திரைப்படங்கள், நண்பர்கள், உறவினர், பொது இடம் மட்டுமல்ல நான் மிக ரசிக்கும் இலக்கியவாதிகள் சிந்தனையாளர்களிடம் கூட ஆண் சார்ந்த விழுமியங்கள் சமூக பார்வை இருப்பது தெளிவாய் இருந்தது.

வினவு கட்டுரை அப்படியான நமது ஒட்டுமொத்த சமூக பார்வையில் இருந்து பெருமளவு வித்யாசப்படவில்லை. சாவகாசமாய் சேற்றை வாரி இறைத்து உள்ளார்கள்.
லீனாவின் கவிதை மொழி மீது கோபமா அவரது செயல்பாட்டின் மீது கோபமா என்று புரியாத அளவு கட்டுரை அவரது எல்லா செயல்பாடுகளையும் இரு கவிதைகளின் அடிப்படையில் வினவுகிறது. அக்கவிதைகளை மஞ்சள் பத்திரிக்கை எழுத்து என குற்றம் சாட்டுகிறது.

அதிகார மையத்தை ஆண் குறியாக பாவிக்கும் சற்று காட்டமான கவிதைகள் அவை.

ஆண் என்பவனை அதிகார மையத்தின் உச்சமாக ஒரு பெண் உணர்வது நெடுங்காலமாய் தனக்கென்ற தனிப்பட்ட ஒழுக்க விதிகள், தனிப்பட்ட  சமூக நியாயங்கள் கொண்ட ஒரு பாலினத்தின் நியாயமான உணர்வாகவே தோன்றுகிறது.




அது மட்டுமே அல்லமால் அது ஒட்டு மொத்த ஆண்களை சாடும் கவிதையா என்றால் இல்லை ஆணின் அதிகார பிம்பத்தை உலகின் அதிகார பீடத்தோடு ஒப்பிடும் கவிதை. கவிதையின் அம்சம் நிச்சயமாய் ஒரு மஞ்சள் பத்திரிக்கை மரபின் கவிதை அல்ல. அது வினவு கட்டுரையாளரும் அறிவார்.


கவிதையின்  பொருளில்சார்பு தன்மை இருந்தால் நிச்சயம் கேட்கலாம். ஏன் சிங்கள அதிகாரம் இவர் கண்ணுக்கு தெரியவில்லை என்பதுவிவாதிக்க பட வேண்டிய ஒன்று. அதன் பின்எது அரசியல் உள்ளதாஎன்று கேட்கலாம்..
அல்லது லீனா அவரது குறும்பட தயாரிப்பு பிரச்சனை அதிலிருந்து வெளிவந்த முறை பற்றிய விமர்சனம் தான் அந்த கட்டுரை என்றால் அந்தகவிதை சார்ந்து அப்பிரச்சனையை முன் வைப்பது தேவையா?அச்சம்பவம் முழுக்க உண்மை என்று ஊர்ஜிதம் ஆகிருந்தால் (அக்கட்டுரை அப்படி ஏதும் அச்சம்பவத்தின் முழுமையான நிலை பற்றி ஆராய்ந்து கருத்து உருவாக்கியதாய் தோன்றவில்லை) இந்த கவிதையின் காட்டமான  போக்கிற்கும் லீனாவின் செயல்பாட்டிற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று விமர்சனம் செய்யலாம்.
ஆனால் வினவு அதையும் தாண்டி அவரது மொழியிலேயே கேட்கிறேன் என்று சொல்லி கொண்டு வசை பாடி உள்ளார்கள்.

.  சிநேகன் குட்டி ரேவதியிடம் கொண்டிருந்த அதே  பிரச்சனை தான் இந்த கட்டுரையிலும் இருப்பதாய் தோன்றுகிறது. லீனாவின் செயல்பாடுகளில் உள்ள இரட்டை நிலை பற்றிய விமர்சனம்  என்பதை தாண்டி அந்த கட்டுரை பொதுவாக பெண்கவிதை மொழி பற்றிய வசையாக இலக்கிய கோட்பாடுகளுக்கு பின்னோக்கு சிந்தனை உள்ளவர்கள் விதிக்கும் தடைகளாக  பெண்ணின்  ஒழுக்க வரைமுறைகளை சட்டமிடுவதாக (லீனா ஒரு portfolio வைத்து இருக்கிறார் என்பதை கூட ஒரு குற்றமாக முன் வைக்கிறது  ) மட்டுமே அக்கட்டுரையை பார்க்க முடிக்கிறது..
வினவின் இக்கட்டுரை மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

பின்னூட்டத்தில் பெண்ணின் உடல் அரசியல் குறித்த தெளிவான பார்வை நம்மிடம் இல்லை என்கிறார்கள். அது அப்படி தான் என்றால் அது குறித்து முழுமையாக விவாதித்து  இருக்க வேண்டும். கட்டுரை பெண்ணின் உடல் அரசியல் அல்லது பெண் மொழியின் தெளிவின்மை குறித்த நியாயமான நிதானமான பால் சார்பற்ற விவாதமாக எனக்கு தோன்றவில்லை .


தமிழச்சியின் கட்டுரையும் படிக்க நேர்ந்தது,.. அவரிடம் இருந்து நிறைய வேறுபட்டாலும் அக்கட்டுரை மேலும் விவாதங்களுக்கு எடுத்து செல்ல கூடிய மரபில் இருப்பதே போதுமானது.

http://www.vinavu.com/2010/01/11/leena-cocktail-thevathai/

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/03/blog-post.html#comment-form

http://tamizachi.com/index.php?page=date&date=2009-12-06

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...