செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி


சிறு வயதில் தட்டானை நூலில் கட்டி மகிழும் குழந்தைகள் பற்றி யோசிக்கும் போது அதில் ஒரு அழகியல் இருப்பதை உணர்ந்ததுண்டு. (தட்டானாய் அதை யோசிக்காத வரை) .
எங்கள் வீட்டில் வளர்த்த பூனை எப்போதும் இரையை பிடித்த உடன் கொன்று சாப்பிட்டதில்லை. அதை ஓட விடும். பின் துரத்தும் . பிடித்து மீண்டும் ஓட விடும். மீண்டும் பிடிக்கும். பின் அதை குற்றுயிராய் அலைய விடும். பின் அதை புரட்டும். மீண்டும் மீண்டும். அது இற்ந்த பிறகும் கூட இது தொடரும். இறந்த எலியை தட்டி தட்டி விளையாட ஓய்ந்து பின் அதை சாவகாசமாய் உண்ணும்.
மனிதனுள்ளும் இதே போன்ற வன்முறைக்கான ஆசை சுடராய் ஒளிர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இதன் தேவை அல்லது தேவையின்மை பற்றி விவாதித்து கொண்டே போகலாம். ஆனால் அணயாத அந்த சுடரின் இருப்பு மறுக்க இயலாதது. அது பரப்பும் அழகியல் சுயத்தை இழந்து போதை கொள்ள செய்வது.

வன்முறையின் அழகை படைக்க முதிர்ந்த பக்குவம் வேண்டும் . அதை எல்லா சரடுகளிலும் ரத்த சிவப்பாய் மலர்த்தி ரசிக்க வைக்கும் போதே அதன் ஆதி குணம் குறித்த பயத்தையும் படர விட வேண்டும்.
தமிழ் சினிமா இது வரை வன்முறையை மிக தவறாய் காட்டி வந்து உள்ளது.  ஒரு சிலவற்றை தவிர. பாம்பே போன்ற படங்கள் வன்முறையை மனித நேய அனுகுமுறையுடன் கையாள்வதால் அதன் அழகியலை முன்வைக்க மறுப்பவை.  சமீபத்தில் வந்த சுப்ரமணியபுரம் உணர்வுகளின் வன்முறையை நிகழ்த்த முயல்கிறது. ஆனால் அதன் நாடக பின்புலம் அதன் தீவிரத்தை குறைக்கிறது. இது தவிர நினைவுக்கு வருபவை பாலாவின் சில படக்காட்சிகள், கற்றது தமிழில் கூடி வரத்தவறும் உக்கிரம். இவை அனைத்துமே உச்சம் எய்த மறுப்பவை. என்னளவில் தமிழ் சினிமாவில் வன்முறை அழகியல் உச்சம் கொள்ளும் தருணம் ‘உதிரிப்பூக்களி’ல் மட்டுமே நிகழ்ந்த்தாக உணர்கிறேன்.  அந்த கடைசி க்கட்சியின் அமைதி. அதன் பின் வரும் அந்த கொட்டிசை விஜயனின் தற்கொலையை கண் முன் பார்க்கும் ஊரார் ,மற்றும் அவனது குழந்தைகள். வன்முறை அந்த ஆற்றின் சலனமற்ற நகர்வை போல் நிகழும்.
ஆனால் உதிரிப்பூக்களில் அது ஒரு ஒற்றை நிகழ்வு. மிக பூடகமானது.  அதன் உக்கிரம் அதனுடைய அமைதியில் உள்ளது. 



இப்போது வந்துள்ள செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் இதற்க்கு நேர் மாறானது. அது வன்முறையை முகத்தில் அறைகிறது. சிவப்பையும் கருப்பையும் திரை முழுதும் பூசுகிறது.

அடங்கா காமம், தீரா பசி ,மாமிசத்தின் வீச்சு என வன்முறையின் எல்லா நிழல்களும் பார்வையாளனின் மேல் கவிகிறது. சோழன் மைதானத்தில் கைதிகள் தலை சிதறுவதை பார்த்து கை கொட்டி ரசிப்பதாகட்டும் ராணுவத்தினர் வெறியாடுவதாகட்டும்  காலம் காலமாய்
மானுடத்திற்க்கு  தீனி வன்முறையா அல்லது வன்முறைக்கு தீனி மானுடமா என்ற கேள்வியை  இறைச்சித் துண்டாய் முன்னால் வீசுகிறது.  அதை ஆசை அடங்க மோப்பம் பிடிக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் இத்தனை உக்கிரமாக வன்முறை செதுக்கப்படுள்ளத் இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.  அது மட்டும் அல்லாமல் புனிதங்களை உடைத்தது, பெண் பாத்திரங்களை சுயமுள்ள சார்பற்றவர்களாக படைத்து இருப்பது என நிறைய தமிழ் சினிமாவின் இப்போதைய முக்கிய தேவைகளை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறது இந்த படம். அந்த அளவில்  அதன் ஆயிரத்தி எட்டு குறைகளையும் மீறி ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழில் நான் பார்த்த படங்களுள் முக்கியமான ஒன்று.

2 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...