ஞாயிறு, 31 ஜனவரி, 2010

அகநிலம் -II மாமழை வீழ்ந்தென, அருவி.

காலம் காலமாய் காதலின் தவிர்க்க முடியாத அத்தியாயம் பிரிவு. பிரிவுக்கு எவ்வளவோ காரணங்கள்.
பொருள் பொருட்டு, பெற்றோர் பொருட்டு, கல்வி பொருட்டு, புது உறவின் பொருட்டு,சலிப்பின் பொருட்டு,சமுதாயத்தின் பொருட்டு என ஆயிரத்தி எட்டு காரணங்கள் எல்லாக் காலங்களிலும் மாறாமல் இருக்கிறது.
'இதெல்லாம் பொருட்டாய் தோன்றியவனுக்கு என்னை ஒரு பொருட்டாய் தோன்றவில்லையே'
எனக் கண்ணீர் விட்டுப் புலம்பும் இதயங்களால் நிரர்ம்பியது தான் இந்த உலகம்.
விடுதி அறைகளில்,ரயில்வே பிளாட்பாரம் பெஞ்சுகளில்,மொட்டை மாடிகளில், அரசுப் பேருந்து ஜன்னலோர இருக்கைகளில்,ஊர் ஓரமாய் நிற்கும் பனைமரத்தடிகளில் என எங்கேயேனும் கேட்டிருக்க முடியும் பிரிவாற்றமுடியாதவர்களின் பெருத்த விசும்பலை.

ஆர்ப்பரிக்கும் காதல் ஓய்ந்து விடுவதில்லை. பிரிவின் திரையை தன கூர் நகங்கள் கிழிக்க அலைகிறது. சிதையும் உடல், பெருகும் கண்ணீர், அடங்காமல் பொங்கும் சினம் என வெடித்து கிளம்பும்.
தன் மீதும் பிறர் மீதும் வெறுப்பை வன்முறையை வீசும். தூற்றும், பழியிடும், வஞ்சிக்கும். கழிவிரக்கத்தோடு கெஞ்சும். நிலை கொள்ளமால் தவிக்கும்.

எந்த உறவின் தொடர்பும் அவ்வளவு சீக்கிரம் அறுந்து விடுவதில்லை. அறுந்த உறவு செய்யும் ஆர்ப்பரிப்பு எளிதில் அடங்கி விடுவதும் இல்லை .
மதுக்கோப்பையாய் காதல் தீர்ந்து விடுவதில்லை. மாமழையின் பேரருவியாய் கொட்டும்.

காதலின் தொடர்பு தன் காதலியின் பெயர் கொண்ட லாரி நெடுஞ்சாலையில் கடக்கும் போது மின்னும்.
இரவில் அனலாய் வீசும் நிலவில் யாரேனும் 'நிலா அழகா இருக்கில்ல' என சொல்லும் போதும் அவனது நினைவு பொங்கி மேலெழும்.
நடு இரவில் புணர்ச்சியின் போது பல வருடம் முன் அவளுக்கு வாங்கி தர மறந்த கைக்கடிகாரம் ஞாபகம் வரும்.
'சாரி டா..'என்ற அந்த இறுதி ஒற்றை வார்த்தை ஒரு திரைப்படத்தின் இடை வெளியில் குடும்பத்தை விட்டு வந்து சிறுநீர் கழிக்கும் அந்த ஓரிரு நிமிடங்களில் சட்டென தோன்றும்.
குழந்தையின் பெயராய் மீண்டெழும்.
கணினியின் கடவுசொல்லாய் வாழும்.
மணிக்கட்டில் இருந்து நில்லாமல் பொங்கும் கருஞ்சிவப்பு ரத்தமாய் வழியும்.

நிஜமாய் சொல்லுங்கள்.. எப்போது பிரிந்து எப்படி யாரோடு வாழ்ந்து கொண்டிருந்தாலும் உங்கள் காதலின் தொடர்பு தூரத்தில் விழும் ஒரு காட்டின் மொத்த அமைதியையும் கிழிக்கும் பேரருவியின் சத்தமாய் மரணம் வரை நிகழ்ந்து கொண்டேதானே இருக்கிறது?


'காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே'


தொகுப்பு: குறுந்தொகை; பாடல் எண்: 42; பாடியவர்: கபிலர்;  திணை;குறிஞ்சி

காதல் ஒழிந்து போனாலும் ,
இரவெல்லாம் பெய்த பெருமழையை
அருவியின் சத்தம்
அறிவிக்கும் நாடனே,
நம் தொடர்பு  தேய்ந்தா போகும்??

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அவதார்-- ஒளிரும் புல் நுனியின் அறிவியல்

இணையத்தில் எங்கு தடுக்கினாலும் 'அவதார்'   பற்றிய செய்திகள், துணுக்குகள் உண்டு. நுணுக்கங்களுக்கு காமரூன் கொடுத்துள்ள முக்கியத்துவம் படம் பார்க்கும் பொதுஹ் எல்லாருமே உணர்ந்தது. இது பற்றிய விவரங்கள் , விவாதங்கள் நிறைய தளங்களில் நிகழ்கிறது.
மீள் யதார்த்தக் (fantasy)  கதைகளில் அறிவியல் விதிகளை சுந்ததிரமை கட்டுடைக்க முடியும்  என்பது தான் அந்த படைப்பின் சுவாரஸ்யம்.அதே சமயம் புனையவு முற்றிலும் யதார்த்தத்தை புறக்கணித்தாலோ மீறினாலோ அதன் அழகு சிதறும் அபாயம் உள்ளது. காரணம் நாம் அழகை ரசிப்பதோ உள்வாங்குவதோ, நாம் இது வரை சேகரித்த அனுபவங்களை உருவ அமைப்புகளை கொண்டே. அதனால் மீள் யதார்த்தம் குறிப்பாக அறிவியல் மீள் யதார்த்தம் ஒரு பெண்டுலம் போல அறிவியல் விதிகளை மீறுவதும் அதற்குள் முடங்குவதுமாய் ஊசலாடும்.
அவதாரும் அப்படியே. கேமரூன் பண்டோராவின் நில அமைப்புகளை நாவிக்களின் மொழியை எப்படி அதீத கற்பனையாய் உருவாக்கினாரோ அதே அளவு அறிவியல் மற்றும்  பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கவும் முயன்றுள்ளார். இதன் இருக்கங்களும் தளர்வுகளும் படைப்பாளியின் சுதந்திரத்திற்கு ஏற்பவும் ஹாலிவுட் மரபிற்கு ஏற்பவும்  கூடக் குறைய நிகழ்கிறது.

ஒரு உயிரியல் மாணவனாக ஒளிரும் அந்த காடு என்னை நிச்சயம் கவர்ந்தது. அதன் பிரம்மாண்ட கொடிகள்,தொட்டாசிணுங்கி செடிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் நிற்கும் அந்த நெடிய மரம் எல்லாமே இயற்கையின் படைப்பு எனும் மாபெரும் உண்மைகள் நீரில் அலையாடும் பிம்பமாய் மிதக்கிறது.
இதற்க்கு கேமரூன் ஒரு உயிரியல் விஞ்ஞானியை கொண்டு தாவரங்களின் இயல்பு மாறாமல் அந்த காடு உருவாக முனைந்திருக்கிறார்.


ஜோடி ஹோல்ட் (Jodie Holt) என்ற தாவரவியல் விஞ்ஞானி இதற்க்காக பங்காற்றியுள்ளார்.
 காட்டின் அமைப்பு உயிரியல் விதிகளை அதிகமாய் மீறி விடாமல் இருக்க அவர் அப்படத்தின் வரைகலை நிபுணர்களுக்கு உதவியுள்ளார். முக்கியமாய்
தாவரங்களின் ஒருங்கிணைப்பு (அந்த காட்டில் உள்ள எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்ப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே) இதற்க்காக, தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இருப்பதாய் சொல்ல இயலாது. ஆனால் தாவரங்களில் இப்போது அதிகம் ஆராய்ச்சி செய்யப்படும் சமிக்ஞை பரிமாற்றம் (Signal Transduction) கூறுகளை பயன்படுத்தவது சுலபம். காரணம் இதன் கூறுகள் இன்னும் முழுவதுமாய் நிறுவப்படாதவை. ஆதலால் கற்பனையை கொண்டு நமக்கேற்ப விரித்து கொள்ளலாம். தர்க்க ரீதியில் கேள்விகள் வராது. வந்தாலும் அதன் சாத்தியங்கள் குறித்த ஈடுபாட்டை தூண்டுவதாகவே அமையும். அந்த ஈவா புனித மரம காட்டின் மூளை போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த சமிக்ஞை பரிமாற்ற கூறுகளை அடிப்படையாக கொண்டு தான். 


இது மட்டுமல்ல மேலும் ஒரு படி பொய் இந்த தாவரங்களுக்கு முறையான தாவரவியல் பெயர்களை சூடி அவற்றுக்கான  உயிரியல் தன்மைகளை ஆவணப்படுத்தியும் உள்ளனர். ஒத்த வகை தாவரங்கள் ஒரு குழுவாக தொகுக்கப்பட்டு தொகுப்பு வரைவும் (taxonomy) உருவாக்கப்பட்டுள்ளது. ப்ஸ்யூடோசைக்காஸ் அல்த்திசிம்மா (pseudocycas altisimma),ஒபிஸ்கஸ் ரோட்டண்டஸ் (obescus rottendus) என தாவரவியல் அறிஞர்களை கவரக்கூடிய பெயர்கள் தான் இந்த தாவரங்களின் பெயர்கள். 
பண்டோராவின் நிலவியல் அமைப்பின் படி தன் தாவரங்களின் உருவ அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாய் ஜோடி ஹோல்ட் கூறுகிறார். 
பண்டோராவில் புவியீர்ப்பு விசை குறைவு (பண்டோரவீர்ப்புவிசை??) ,கரியமிலம், செனான்,ஹைட்ரஜன் சல்பய்டு போன்ற வாயுக்கள் அதிகம். காந்த விசையும் அதிகம். இதனால் அதன் தாவரங்கள் அளவில் பெருத்தவையாக இருக்கும். மேலும், தண்டுகள் மேலே வேர்கள் கீழே என்ற புவியீர்ப்பு விசைக்கு உட்பட்ட விதிகளுக்கு அதன் வளர்ச்சி அடங்காது. மாறாக காந்த விசைக்கு உட்பட்டு வளரும். இவையெல்லாம் ஜோடியின் யூகங்கள். கேமரூனின் கற்பனைக்கு துணை நிற்பவை. 


என்னைஅதிகம் கவர்ந்தது அந்த காட்டின் ஒளி. உயிர் ஒளிர்வு (bio luminescence) என்பதை கொண்டு தன் கற்பனை காட்டை ஜொலிக்க விடுகிறார் கேமரூன். மின்மினிகளாய் காடே ஒளிர்வது அழகு. 
இந்த ஒளிர்வு நாவிக்களின் தோலில் கூட ஓரளவு இருப்பதை நம்மால் காண முடிகிறது. 



அனால் இதை வெறுமே அழகின அடிப்படையில் மட்டுமே ரசிக்க முடிகிறது. காரணம் உயிர் ஒளிர்வு அதிகம் நிகழ மிகுந்த இருட்டான வாழ்வியல் சூழலே காரணமாக இருக்க முடியும் 
சூரியக்கதிர்கள் எட்ட முடிய ஆழ்கடலில் உள்ள உயிர்களுக்கு (80%-90% வரையான உயிர்கள்!) இரை தேடவும் உயிர் வாழவும் ஒரு கருவி ''உயிர் ஒளிர்வு'. அனால் பண்டோரா அடர இருள் காடல்ல.
நாவிக்களின் கண்களும் இருளில் இரை தேடும் மிருங்கங்களின் (nocturnal) 
கண்கள் போல பெரிய கண்மணிகளை கொண்டவை.  ஆனாலும்  அவர்கள் இரவில் தூங்கி பகலில் வேட்டையாடும் உயிர்களே. 


ஒரு மீள் யதார்த்த கதை இத்தகு கேள்விகள் அவசியமா என்றால் இல்லை தான். ஆனால் 'Pandorapedia'என்று விக்கிபீடியா தரத்தில் ஒரு தளம் நிறுவி, பண்டோராவை ஒரு கனவை உயிர் பெற செய்ய, அதை ஒரு கலாச்சார நிகழ்வாகக, ஒரு விவாதத் தளமாக்க முயல்கிறது அவதார் படக்குழு. 
அவர்களிடம் நாம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எத்தனை அசட்டுத்தனமாய் இருந்தாலும். கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய அசட்டுத்தனம் இன்றி வேறென்ன?? 



மேலும் சுட்டிகள்:  

Inventing the plants of 'Avatar'

Shining Examples: 10 Bioluminescent Creatures that Glow in Surprising Ways



குறிப்புகள்:
இக்கட்டுரையின் பல கலைச்சொற்கள் நான் உருவாக்கியவவை. அவற்றில் பொருட்பிழையோ அல்லது அவ்வாறு விட மேலான கலைசொற்கள் புழக்கத்தில் இருந்தாலோ குறிப்பிடவும். 

செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் – கனவு காமம் குருதி


சிறு வயதில் தட்டானை நூலில் கட்டி மகிழும் குழந்தைகள் பற்றி யோசிக்கும் போது அதில் ஒரு அழகியல் இருப்பதை உணர்ந்ததுண்டு. (தட்டானாய் அதை யோசிக்காத வரை) .
எங்கள் வீட்டில் வளர்த்த பூனை எப்போதும் இரையை பிடித்த உடன் கொன்று சாப்பிட்டதில்லை. அதை ஓட விடும். பின் துரத்தும் . பிடித்து மீண்டும் ஓட விடும். மீண்டும் பிடிக்கும். பின் அதை குற்றுயிராய் அலைய விடும். பின் அதை புரட்டும். மீண்டும் மீண்டும். அது இற்ந்த பிறகும் கூட இது தொடரும். இறந்த எலியை தட்டி தட்டி விளையாட ஓய்ந்து பின் அதை சாவகாசமாய் உண்ணும்.
மனிதனுள்ளும் இதே போன்ற வன்முறைக்கான ஆசை சுடராய் ஒளிர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இதன் தேவை அல்லது தேவையின்மை பற்றி விவாதித்து கொண்டே போகலாம். ஆனால் அணயாத அந்த சுடரின் இருப்பு மறுக்க இயலாதது. அது பரப்பும் அழகியல் சுயத்தை இழந்து போதை கொள்ள செய்வது.

வன்முறையின் அழகை படைக்க முதிர்ந்த பக்குவம் வேண்டும் . அதை எல்லா சரடுகளிலும் ரத்த சிவப்பாய் மலர்த்தி ரசிக்க வைக்கும் போதே அதன் ஆதி குணம் குறித்த பயத்தையும் படர விட வேண்டும்.
தமிழ் சினிமா இது வரை வன்முறையை மிக தவறாய் காட்டி வந்து உள்ளது.  ஒரு சிலவற்றை தவிர. பாம்பே போன்ற படங்கள் வன்முறையை மனித நேய அனுகுமுறையுடன் கையாள்வதால் அதன் அழகியலை முன்வைக்க மறுப்பவை.  சமீபத்தில் வந்த சுப்ரமணியபுரம் உணர்வுகளின் வன்முறையை நிகழ்த்த முயல்கிறது. ஆனால் அதன் நாடக பின்புலம் அதன் தீவிரத்தை குறைக்கிறது. இது தவிர நினைவுக்கு வருபவை பாலாவின் சில படக்காட்சிகள், கற்றது தமிழில் கூடி வரத்தவறும் உக்கிரம். இவை அனைத்துமே உச்சம் எய்த மறுப்பவை. என்னளவில் தமிழ் சினிமாவில் வன்முறை அழகியல் உச்சம் கொள்ளும் தருணம் ‘உதிரிப்பூக்களி’ல் மட்டுமே நிகழ்ந்த்தாக உணர்கிறேன்.  அந்த கடைசி க்கட்சியின் அமைதி. அதன் பின் வரும் அந்த கொட்டிசை விஜயனின் தற்கொலையை கண் முன் பார்க்கும் ஊரார் ,மற்றும் அவனது குழந்தைகள். வன்முறை அந்த ஆற்றின் சலனமற்ற நகர்வை போல் நிகழும்.
ஆனால் உதிரிப்பூக்களில் அது ஒரு ஒற்றை நிகழ்வு. மிக பூடகமானது.  அதன் உக்கிரம் அதனுடைய அமைதியில் உள்ளது. 



இப்போது வந்துள்ள செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் இதற்க்கு நேர் மாறானது. அது வன்முறையை முகத்தில் அறைகிறது. சிவப்பையும் கருப்பையும் திரை முழுதும் பூசுகிறது.

அடங்கா காமம், தீரா பசி ,மாமிசத்தின் வீச்சு என வன்முறையின் எல்லா நிழல்களும் பார்வையாளனின் மேல் கவிகிறது. சோழன் மைதானத்தில் கைதிகள் தலை சிதறுவதை பார்த்து கை கொட்டி ரசிப்பதாகட்டும் ராணுவத்தினர் வெறியாடுவதாகட்டும்  காலம் காலமாய்
மானுடத்திற்க்கு  தீனி வன்முறையா அல்லது வன்முறைக்கு தீனி மானுடமா என்ற கேள்வியை  இறைச்சித் துண்டாய் முன்னால் வீசுகிறது.  அதை ஆசை அடங்க மோப்பம் பிடிக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் இத்தனை உக்கிரமாக வன்முறை செதுக்கப்படுள்ளத் இதுவே முதல் முறை என நினைக்கிறேன்.  அது மட்டும் அல்லாமல் புனிதங்களை உடைத்தது, பெண் பாத்திரங்களை சுயமுள்ள சார்பற்றவர்களாக படைத்து இருப்பது என நிறைய தமிழ் சினிமாவின் இப்போதைய முக்கிய தேவைகளை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறது இந்த படம். அந்த அளவில்  அதன் ஆயிரத்தி எட்டு குறைகளையும் மீறி ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழில் நான் பார்த்த படங்களுள் முக்கியமான ஒன்று.

சனி, 16 ஜனவரி, 2010

அக நிலம் I



வாழ்கையின் வேட்கை எதில் அடங்குகிறது? ஒரு உயிரியல் மாணவனாக என்னை கேட்டால் வாழ்கையின்  அர்த்தம் உண்ணுவதும் இனத்தை பெருக்குவதும் மட்டுமே..
ஆனால் மானுடம் இதையும் மீறி தன இருத்தலுக்கு அர்த்தம் கற்பிக்க காலம் தோறும் முயன்று வருகிறது.. உண்பது புணர்வது இதையும் மீறி அல்லது இதன் நீட்சிகளை தன் வாழ்தலுக்கான வேட்கையை எடுத்து  புதுப்பித்து வருகிறது.
அர்த்தங்கள் வேட்கைகள் இவற்றின் சட்டகங்கள் மாறினாலும் காலத்தின் தூசி படாமல் அவற்றின் ஆதாரம் எப்போதும் அப்படியே தான் உள்ளது.. அகம் தன்னை நிறுவ, தன்னை மகிழ்விக்க, தான் சோர்ந்து விடாமல் இருக்க, தன்னை பெருக்க ஓயாமல் முயன்று கொண்டே இருக்கிறது..
அகத்தின் விதிகள் இயற்கையின் ஆதி விதிகளுக்கு மாறுபட்டவை அல்ல.
கட்டுக்கடங்காத சுயநலமும் குரூரமும் கொண்டது அது. எத்தனை சமூக ஒழுக்க நியதிகள் புனிதங்கள் மதங்கள் முயன்றாலும் அவற்றை உடைத்து மீறி திமிறி செல்வது அகம். காடும் மலையும் விலங்கும் மணலும் சூறைக்காற்றும் என அலைக்கழியும் மனம் மனிதனின் இருத்தலின் சான்று. அவனது அர்த்தம்.
காலம் தோறும் கலைகள் அகத்தை ஆசுவாசப்படுத்த அதன் ப்ரதி பிம்பத்தை தேடி அலைந்தன. அகம் பக்தியானது,கவிதையானது, nநிறமானது, நடனமானது..
தில்லையில் ஆடும் சிவன் ப்ரபஞ்சத்தின் உருவம் மட்டும் அல்ல அவன் என் அகத்தின் உருவமும் கூட.
அகத்தை அதன் போக்கில் வெளிப்படுத்த தமிழிலக்கியம் நிலத்தை உருவகமாக்கியது. நிலம் நிகழ்வுகளின் மாபெரும் வெளி. மோதும் காற்றுக்கு பொங்கும் கடலுக்கு  பாயும் காட்டாற்றுக்கு அலையும் விலங்கிற்க்கு நிலம் வெளி.



என் அகம் நிலமன்றி வேறென்ன?  சங்க இலக்கியம் நிலமாய் அகத்தை கட்டமைத்தது. அகத்தின் தனிமையை அது தேம்பி அழும் விசும்பலின்  வலியை ஆயிரம் வார்த்தைகளை கொண்டு நிரப்பவில்லை.  இரவின் இருளில் கொல்லையில் எருதின் சலிப்பான கழுத்தசைவில் சிணுங்கும் மணியோசை போதும் அதை சொல்ல.. ஒரு முழு நிசப்தத்தை அறுக்கும் அந்த மெல்லிய ஒலி தனிமையில் தவிப்பவன் மட்டுமே கேட்கும் ஒலி. இது போதும் ஒரு உன்னத கவிதைக்கு.
சங்கப் பாடல்கள் அனைத்தும் இத்தகு குறீயீடுகள் நிரம்பியவை. மனிதன் இயற்கையின் ஒரு துண்டு என்று குறியீடுகளால் மீண்டும் மீண்டும் சலிக்காமல் வலியுறுத்தி வாசிப்பவனை அதை தரிசித்து ஏற்றுக் கொள்ள நிர்பந்திப்பவை.
ஆம்.. சங்க இலக்கியம் முழுதும் படிக்கவில்லை நான்.  அகம் சார்ந்த கவிதைகள் குறிப்பாக குறுந்தொகை தொகுப்பு மட்டுமே படித்துக்கொண்டு இருக்கிறேன். பேரிலக்கியங்கள் மட்டுமே தரக் கூடிய மௌனம், தவிப்பு அகம் சார்ந்த இக்கவிதைகள் என்னுள் நிரப்பின.

இரவு முழுவதும் விழித்து தவித்து முனகிய எந்த ஒரு எளிய ஜீவனும் சங்கப்பாடல்களை ஒதுக்க முடியாது. அவை அத்தனை நெருக்கமானவை, அந்தரங்கமானவை.
நல்ல இலக்கியம் ஒரு வாசகனுள் மாபெரும் அனுபவமாய் மலரும் .
சங்க இலக்கியம் என்னுள் மலர்த்திய அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர ஆசை.
தொடர்ந்து எழுதுவேன். 

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

புத்தகக்கண்காட்சி சில குறிப்புகள்..

 சென்னை புத்தககண்காட்சி போயிடு வர ஒவ்வொரு வருஷமும் ஆசைபடுவேன் (ஆசை மட்டும் தன)
இந்த வருஷமும் அப்படியே தான்.. அம்மாவிடம் ப்ளைட்டில் போயிட்டு வரேன் என்று சொன்னப்ப  இது ஆர்வமா இல்ல ஆர்வ கோளாறா  என்று கேட்டார்கள்.. 
எது எப்படியோ இந்த வருடமும் போகவில்லை (பயண செலவு லீவு இல்லை என காரணங்கள் சொல்லும் போது அறையில் இறைந்து கிடக்கும் இன்னும் படிக்காத புத்தகங்கள் கை கொட்டி சிரிக்கின்றன) 
சரி அப்படி வலை மேய்ந்து இந்த வருடம் என்ன புதுசு 
சாரு யாருடன் சண்டை கட்டினார்
குட்டி ரேவதி எஸ். ரா இருக்கும் ஸ்டாலுக்கு போனாரா?
ஜெயமோகன் விசிறிகள் சாரு விசிறிகள் மோதல் 
இப்டி எதாச்சும் சுவாரஸ்யமான  விஷயம் இருக்கிறத என்று வலை மேய்ந்தேன்..
தமிழ் இலக்கிய உலகில் சுவாரஸ்யங்களுக்கா பஞ்சம்.. நிறைய வலை பதிவர்கள், எழுத்தாளர்கள், பதிப்பகத்தார், கூட கொஞ்சம் வாசகர்கள் என களை கட்டி தான் இருக்கும் போல..
சந்திப்புகள், வம்பிழுப்புகள்,ரசனை பரிமாற்றங்கள், ஆதர்ச எழுத்தாளர்கள், புதிய தலைப்புகள் என சுற்றிலும் புத்தகங்களுடன்... இதை விட ஒரு வாசகனுக்கு வேறு என்ன வேண்டும்.. நிஜமாவகவே  ஒரு சின்ன திருவிழாவாக புத்தககண்காட்சி மாறி கொண்டு வருவதை உணர முடிகிறது..
வலை மேய்ந்ததில் கிடைத்த குரிப்புகுளை கொஞ்சமும் ஒழுங்கு இல்லாமல் இங்கே பதிவு செய்கிறேன் (இது அழகியல் காரனமாய் இல்லை சோம்பேறி தனத்தால் தான் என நீங்கள் நினைத்தாள் அது எப்படி ஏன் தப்பு ஆகும்)


 
 
புத்தகக்கண்காட்சி  சில குறிப்புகள்..

http://navinavirutcham.blogspot.com/2009/01/23-2.html
நவீன விருட்சம்..

மூணு புத்தகம் போடவே விழி பிதுங்கும் பொது உயிர்மை  65 புத்தகங்கள் வெளியிடு..
தன் கடை என்  147  என்பதையே அவ்வபோது மறந்து தொலைப்பவர் (என்னை போல)
ஒரு புத்தகமும் விற்காவிட்டால்  வரும் நஷ்டம் பற்றி முதலிலேயே சமாதானம் ஆகி கொள்கிறார்.
(நவீன விருட்சம் மூன்று புத்தகங்கள்: ஸ்டெல்லா ப்ரூஸ் கட்டுரைகள், அசோகமித்திரன் உரையாடல்கள், காசியபனின் 'அசடு')

வெளி ரங்கராஜன் கூட கொஞ்சம்சண்டை போட்டு இருக்கிறார் ( வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது கிடைததர்க்கான பாராட்டு கூடம் எந்த விளம்பரமும் இல்லாமல் நடந்தது குறித்து வருந்துகிறார்)


http://mykitchenpitch.wordpress.com

அவ்ளோ கூட்டத்துல ஒரு செகுரிட்டி செக்கும் இல்ல..

ஞானி ரொம்ப கூல்..  தன கருத்துக்களோடு மாறுபடும் இளைஞர்களோடு நிறைய நேரம் பேசினார்.
ரிசஷன் புலம்பல் இங்கும் உண்டு...



வெளி ரங்கராஜன் கூட கொஞ்சம்சண்டை போட்டு இருக்கிறார் ( வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது கிடைததர்க்கான பாராட்டு கூடம் எந்த விளம்பரமும் இல்லாமல் நடந்தது குறித்து வருந்துகிறார்)

பெரும்பாலான பதிப்பகங்களில் காணக்கிடைத்த ஒரு விஷயம், அங்கே salesல் இருப்பவர்கள் பலருக்கு புத்தகங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.








 வந்த சில பிரபலங்கள்:
ஜி கே மணி ராமதாஸ்
கமலஹாசன்
வைரமுத்து
நீயா நானா கோபி
கருணாநிதி
வைகோ
நடிகர் ராஜேஷ்
நடிகை சங்கீதா
விஜய் ஆனந்த் – உலக சினிமா பற்றி மக்கள் டிவியில் தொடர் செய்கிறாராம்.
வராதவங்க:
ஜெயமோகன்.. கொஞ்ச நாள் முன்னாடி தான் சென்னை வந்துட்டு போனாராம்.. தன் தளத்துல சொல்லி இருக்கார்..


கிழக்கு பதிப்பகம் இம்முறை 100 புத்தகங்களுக்கும் மேல் (அடேங்கப்பா!!) வெளியிட இருக்கிறது. அவர்களுடைய பல்வேறு இம்பிரிண்ட்களில் புத்தம் புதிய புத்தகங்கள் வருகின்றன. வழக்கமாக சரித்திரம், வாழ்க்கை வரலாறு போன்ற துறைகளில் புத்தகங்கள் இருக்கப் போகின்றன.

சாருவின் தளத்தில் இருந்து:
நான்  தினமும்  உயிர்மை  பதிப்பக  அரங்கில் மாலை 5 மணி முதல்  வாசகர்களையும்  நண்பர்களையும்  சந்திக்க இருக்கிறேன். உயிர்மை  கடை  எண்: p 12

வாருங்கள்; இந்தப் புத்தகக் கண்காட்சியை  கொண்டாடலாம்.
பின் குறிப்பு: இளையராஜா பற்றி மட்டும் தயவு செய்து கேள்விகள் கேட்க வேண்டாம். அப்படியும் கேட்பதற்கு விருப்பப்பட்டால் அந்த உரையாடலுக்கு மட்டும் விசேஷ கட்டணம்: 750 ரூ. (ஒரு முழு அப்சொலூட் வோட்காவின் விலை).
http://www.ularal.com/ (கொஞ்சம் பெரிய சுட்டிய இருந்ததால மூலதளத்தின் சுட்டி மட்டும் .. ரவி மன்னிப்பாராக.. :(  )

1. பாதி கடைகளில் கடன் அட்டை, பண அட்டைகளை வாங்கவில்லை. கையில் காசாக இல்லாததால் வாங்க எண்ணிச் சென்ற நூல்களையும் வாங்க வில்லை. அட்டைகள் மூலம் பணம் செலுத்த மொத்த புத்தக காட்சிக்கும் சேர்த்து ஒரு ஏற்பாடு செய்யலாம்
2. அரங்க வரைபடம் கண்காட்சி வரவேற்பரையில் கிடைக்கவில்லை. அரங்க எண்கள் வரிசையில் எந்த logicம் இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து இருக்குமாறு அரங்க எண்கள் வரிசை இருக்க வேண்டும்.
3. நான் வாங்க நினைத்த புத்தகம் எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியவில்லை. தேடிக் களைத்தேன். இந்த நூல் இந்த இந்த கடைகளில் கிடைக்கும் என்று ஒரு அச்சடித்த பட்டியல் அல்லது ஒரு தொடுதிரைக் கணினி / உதவி மையம்.
4. ஒவ்வொரு கடைக்கும், முடிந்தால் மொத்த கண்காட்சிக்கும் ஒரு “அதிகம் விற்ற நூல்கள்” பட்டியல்.
5. அரங்கிற்கு வந்து செல்ல முக்கிய இடங்கள் வழியாக வாடகைப் பேருந்துகளை இயக்கலாம்.
(நம்ம சொல்றதெல்லாம் கேக்கவா போறாங்க ரவி !!)
நிறைய தாடி வளர்த்தவர்கள், சே குவாரா ஹோ சி மின்  டி ஷர்ட் போட்டவர்கள்  புத்தகம் பற்றி கேட்டல் மட்டும் திரு திரு என முழிப்பவர்கள் பற்றி தமிழ் புத்தககண்காட்சியில் ' boy in striped pyjamas'  ஆங்கில புத்தகம் வாங்க போனவர் pulambukirar (அதை அடுத்த நாள் landmark இல் வாங்கினாராம்.. மொத  நாளே அங்க போய் இருக்கலாம்)  --


Agnikunju.blogspot.com
மிக தோழமையான பதிவர் சந்திப்புகளும் நிகழ்ந்துள்ளன.. இணையம் நிச்சயமாக தமிழ் புத்தக வாசிப்பு குறித்த ஈர்ப்பு உள்ளவர்களை அடுத்தடுத்த படிகளில் கொண்டு போய் விடும் சூழ்நிலையை கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது..

நட்சத்திர பதிவர் (!)  லக்கி லூக் 
எனக்கும் கூட புலிநகக்கொன்றை, விஷ்ணுபுரம், பிரமிளின் முழுத்தொகுப்பு, சுந்தரராமசாமி சிறுகதைகள், நகுலன் கவிதைகள், அ.மார்க்ஸ், துருக்கித் தொப்பி என்றெல்லாம் பட்டியலிட ஆசையாக இருந்தாலும், வாங்கித் தொலைத்தவற்றையே பட்டியலிட வேண்டும் என்ற நேர்மையும், அறமும் இருப்பதால் இப்பட்டியலை வெளிப்படையாக நீதிபதி சொத்துக் கணக்கு வெளியிடுவது மாதிரி வெளியிடுகிறேன்.
என்று புத்தக பட்டியல் வெளியிட்டுள்ளார் (அதை அவர் வலைப்பூவுலையே போய் பாருங்க) http://www.luckylookonline.com/

இன்னும் நிறைய பேர் எழுதி இருக்காங்க.. மும்பைல இருந்துட்டு சென்னைக்கு ஓசி டிக்கெட் குடுத்த வலைப்பதிவர்களுக்கு நன்றி...


திங்கள், 4 ஜனவரி, 2010

என் இப்போதைய தேவை.



எனக்கு வேறுபாடுகளில் எப்போதும் நம்பிக்கை இல்லை. அது இனம் சார்ந்த மொழி சார்ந்த பால் சார்ந்த நாடு சார்ந்த நிறம் சார்ந்த எந்த வேறுபாடை இருந்தாலும்.

ஆனால் நம்மையும் மீறி சில சார்புகள் நம்முள் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றை மீறி வர பல சமயம் முடிவதில்லை.என்னளவில்  சிலவற்றை நான் விரும்பி ஏற்றும் கொண்டுள்ளேன்.  அது நான் தமிழன் என்பது.
 காரணம்? தமிழ் சமூகம் பிற சமூகங்களை காட்டிலும் உயர்குணங்கள் கொண்டதா? (அப்படியா என்ன?) இல்லை  அதன் பழமையா? இல்லை என் பிறப்பா? எது எப்படி ஆகினும் என்னை நான் எப்போது தமிழ் பேசும் ஒருவனாக மட்டுமே அடையாளம் காண்கிறேன்.
அதன் பின் தான் எனது எல்லா அடையாளங்களும் வந்து ஒட்டி கொள்கின்றன.

தமிழ் சமூகத்திற்கு   நீண்ட நெடிய மரபு உண்டு. அது எல்லாருக்குள்ளும்  ஒரு அடையாளத்தை பச்சை குத்தி விடுகிறது. வலிய விலக முயற்சிப்பவர்களிடம் கூட.

மும்பை செம்பூரில் ஒரு மளிகை கடையில் சக்தி சாம்பார் பொடி  பொட்டலத்தை  பார்க்கும் போது சட்டென ஒரு சந்தோசம் வரும். இது எனக்கான இடம் என்ற எண்ணம். ஊரெல்லாம் சுத்தி விட்டு வீட்டுக்குள் வரும் போது அம்மா சமையல்கட்டில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்கும் போது ஒரு அன்யோன்ய உணர்வு ஏற்படுமே.. அது போன்ற மிக அகவயமான உணர்வு. அத்தகைய அன்யோன்யம் எனக்கு எப்போதும் தமிழ் சார்ந்த நிலைகளில் நிகழ்வதுண்டு. இது எனக்கானது என்று நான் கற்ப்பித்து கொண்டுள்ள சிலவற்றுள் முதன்மை என் மொழி தான் என்றே தோன்றுகிறது,

என்னை வெளிப்படுத்த எனக்கு தமிழ் தவிர வேறு எதுவும் அந்நிய மொழி தான். என் ஆங்கில வலைப்பூ சிலசமயங்களில் வெறும் சொற்குவியல் என்று தோன்றும். அதிலுள்ள பெரும் பங்கு  என் மொழி திறமை இன்மையை மறைக்க முயன்றதே. சரி, தமிழில் நான் பெரும் மொழி வல்லுநனா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால், மொழி வெறுமனே தொடர்புக்கான  கருவி என்னும் உபயோகத்தை தாண்டி என் இனம் என் பாரம்பரியம் என் அகம் இவற்றின் சான்றாக அமையும் போது 'அட' என்று மனம் பெருமிதம் கொள்ளும். இதை  தவிர தமிழில் என் வலைப்பூவிற்கு  எந்த பெரிய நோக்கமும் இல்லை.

நான் சற்று ஆசுவாசமாய் நடமாட ஒரு வெளி. இது தான் என் இப்போதைய தேவை.

எதையாவது செய்



எழுத என்ன இருக்கிறது?
ஆயிரம பூக்களுக்கு பின்
ஆயிரத்து ஒன்றாம் அரும்பு

எல்லாம் முடிந்து விட்டது என சலிக்கும் போது
ஒரு ஊர்க்குருவி கீச் ஒலி எழுப்பி
சட்டென பறக்கிறது..
அதை என்ன செய்ய?

தின்னத் தின்னப் பசி.
கோப்பை தீரத் தீர தாகம்.

எழுது
படி
அழு
சிரி
ஆடு
அலை
தேடு
புணர்
காண்
கொள்
உணர்

எதையாவது செய்
கொஞ்ச நாள் தானே
இருந்து விட்டு தான் போயேன்..

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நாளை மற்றுமொரு நாளே..



இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டி இருக்ககூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்து இருக்கக்கூடிய அவமானங்கள், இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலரை போலவே -- நாளை மற்றுமொரு நாளே. .
(ஜி. நாகராஜன் -- 'நாளை மற்றுமொரு நாளே' புதினத்தில் )

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...